வால்காவிலிருந்து கங்கை வரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/volgavilirunthu-gangai-varai-tamil-puththakaalayam


சிறையில் மலர்ந்த வரலாற்று, சிந்தனைக் களஞ்சியம்

1949முதல் இந்த 58 ஆண்டுகளில் 27 பதிப்புகள் கண்ட அரிய அறிவுப்புதையலான இந்தப் புத்தகம் தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட குறிப்பிடத்தகுந்த நூலாகும்.

ராகுல்ஜி தமது சிறை வாசத்தில், 1942ல் ஹஜாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் "வால்காவிலிருந்து கங்கை வரை" மூல நூலை எழுதி முடித்தார்.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையில் தான் பூத்தது. 1945-46ல் பர்மாவில் யுத்தக் கைதியாக சிறையிலிருந்த கண. முத்தையா, ராகுல்ஜியிடம் அனுமதி பெற்று அவரது "பொதுவுடமைதான் என்ன?" நூலையும் இந்த 'வால்காவிலிருந்து கங்கை வரை” நூலையும் தமிழில் மொழிபெயர்த்தார்.

சிறை அதிகாரியாக இருந்த ஒரு பிரிட்டிஷ் காப்டனின் உதவியால் கையெழுத்துப் பிரதிகளைச் சேதமின்றி இந்தியா கொண்டு வந்தார் கண.மு.

பல நூலகங்களில் பல ஆதாரங்களைத் தேடி , சில வடமொழிப் பேராசிரியர்களின் உதவியைப் பெற்று இரண்டு வருடங்களில் வால்கா மொழிபெயர்ப்பு வேலையை திருப்தியுடன் முடித்தார். 1949 ஆகஸ்டில் "வால்காவிலிருந்து கங்கை வரை" முதற்பதிப்பைத் தமது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிட்டார் கண. முத்தையா.

''பொதுவுடமைதான் என்ன?' நூல் வெளிவந்தபோது சென்னை மாநிலத்தில் பிரகாசம் ஆட்சி. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பெற்றிருந்தது. சட்டசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் இந்நூல் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் டாக்டர். சுப்பராயன் (மோகன் குமார மங்கலத்தின் தந்தை - ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தாத்தா) "அந்த நூல் வெளிவந்ததுமே நான் அதை வாங்கிப் படித்துவிட்டேன். அது கட்சிப் பிரச்சார நூலல்ல; ஒரு நல்ல தத்துவ விளக்க நூல்; தத்துவ விளக்கங்களைத் தடை செய்யக் கூடாது" என்று பதிலளித்தார்.

''வால்கா” வெளிவந்த சில தினங்களுக்குப் பின் அறிஞர் அண்ணா, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டம் ஒன்றில், ''ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்; நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிறது" என்று பாராட்டி இந்நூலை அறிமுகம் செய்திருந்தார்.

சில மதவாதிகளால் எதிர்க்கப்பட்டும் வருகிறது இந்நூல்.

இந்திய வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் மனித சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதியான ஹிந்து - ஐரோப்பிய ஜாதியின் வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளிவை..

மனித நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ள விழையும் யாவரும் வாங்கி, விரும்பிப் படித்து, பாதுகாத்து, பரிசளித்து, மற்றவருக்குப் படிக்கக் கொடுத்துத் திரும்பப் பெற முடியாது தவித்து, வாஞ்சையுடன் வாங்கி இப்புத்தகத்தைப் பொக்கிஷம் மாகப் பாவிக்கும் மனவளம் வளர்த்த பெருமைக்குரிய இந்தப் புத்தகத்தை தமிழ்ப்புத்தகாலயம் தமிழ் வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கிவருகிறது.

இதோ, இந்த 27ம் பதிப்பு அழகிய செம்பதிப்பாக வெளி வந்துள்ளது.

நடையையோ, மொழியையோ எந்த மாற்றமும் செய்யாது அப்படியே பதிப்பித்து உள்ளோம்.

இந்நூலுக்கு அழகுமுகம் தந்து உருவாக்கி உள்படங்களையும் வடிவமைத்த ஓவியர் செல்வி உமாவிற்கு எமது நன்றி.

தங்களது உற்ற தோழனாய் இந்த "வால்காவை" தாம் உள்வாங்கிக் கொள்வதோடு தம் உறவுக்கும், நட்பு வட்டத் திற்கும் அறிமுகம் செய்யும் உங்கட்கும் எமது நன்றி.

- தமிழ்ப் புத்தகாலயம்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு

வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி

வால்காவிலிருந்து கங்கை வரை - உள்ளே

Back to blog