இன்று நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், படித்தவர்கள் பலரும் விஞ்ஞான யுகத்தின் முற்காலத்திய காலாவதியான கருத்துக்களையே சிக்கெனப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்களுக்கும் போதுமான விஞ்ஞான நூல்கள் இந்தி மொழியில் இல்லை என்பதும் இதற்கொரு காரணமாகும். இரண்டாண்டு களுக்கு முன்பு முதன் முறையாக ஹஜாரிபாக் சிறையில் நான் அடைக்கப்பட்டபோது, இக்குறையைப் போக்க வேண்டுமென்று முடிவு செய்து, காரியமும் தொடங்கினேன். அதற்கான விஷயங்களை சேகரிக்க ஆரம்பித்தபோது, விஞ்ஞானம், தத்துவ இயல், சமூகவியல் ஆகிய நூல்களையும் வாசகர்களுக்கு அளிக்காமல், பயனுள்ள முறையில் பணியாற்ற முடியாதென்பதைத் தெரிந்து கொண்டேன். ஹஜாரிபாக் சிறையில் எழுதிய நூறு பக்கங்கள் பயனற்றவை என்று கருதி, தேவ்லியில் 'விஞ்ஞான லோகாயதவாதம்' குறித்து எழுத ஆரம்பித்தபோது, ஒரே நூலில் எல்லா விஷயங்களையும் சொல்லிவிடலா மென்று எண்ணினேன். ஆனால் பல்வேறு விஷயங்களைப் பற்றி 1500, 1750 பக்கங்களிலும் ஒரு பெரிய நூல் எழுதுவதைவிட ஒவ்வொரு விஷயத்தின்மீதும் ஒவ்வொரு தனி நூல் எழுதுவதே சிறந்ததென்னும் முடிவிற்கு வந்தேன். இதனால் ஒரு நூலுக்குப் பதிலாக நான்கு நூல்கள் எழுத நேரிட்டது.
1. உலக வரிவடிவம் (விஞ்ஞானம்)
2. மனித சமுதாயம் (சமூகவியல்)
3. தத்துவ திசைகாட்டி (தத்துவ இயல்)
4. விஞ்ஞான லோகாயத வாதம்
இவற்றில் 'விஞ்ஞான லோகாயத வாதமே' எல்லாவற்றைவிட சிறிய நூலாகும்; காரணம், இதில் வரும் பல விஷயங்கள் மற்ற நூல்களில் வந்துவிட்டன. உண்மையில் மற்ற மூன்று நூல்கள் 'விஞ்ஞான லோகாயத வாதத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவையே!
நூலில் வரும் கம்பீரமான விஷயத்தை சுலப முறையிலும் தெளிவாகவும் கூற ஆனவரையில் நான் முயற்சித்துள்ளேன்; இம்முயற்சியில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளேன் என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
நான் கூறவந்த விஷயத்தை வலியுறுத்த எதிர்வாதங்களைத் தீவிரமாக விமர்சிக்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளானேன். இதனால் சிலருக்கு மனவருத்தமேற்படலாம், அது எனக்கும் வருத்தமளிக்கக் கூடியது தான்! ஆனால் பல்வேறு வாதங்களை மோத விட்டால் தான் உண்மைத் தத்துவம் வெளிப்படும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன்.
இந்நூல் எழுதுவதில் எனக்கு பேருதவி புரிந்த துணை நூல்களின் பட்டியலை இறுதியில் தந்திருக்கிறேன். இதனாலேயே அந்நூலாசிரியர் களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகி விடாது. இந்நூலின் பெருமையனைத்தும் மேற்படி நூலாசிரியர்களுக்கே சேர வேண்டும். நான் தேனீயைப்போல் மட்டுமே அந்நூல்களிலிருந்து விஷயங்களை சேகரித்துக் கொண்டேன்.
மூன்றாவது நூலான 'தத்துவ திசைகாட்டி'யை எழுதி முடிப்பதே பெரும் காரியமென்று முதலில் நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால் அந்த நூல் எழுதி முடித்ததுமே, இந்த நூலை எழுதவாரம்பித்து விடவேண்டுமென்று எண்ணி இன்று முடித்தும் விட்டேன்.
- ராகுல் சாங்கிருத்யாயன்
ஹஜாரிபாக் சிறை
(பீகார்)
24-3-1942