இப்போதுதான் இந்த நாவலை இன்னொரு தரமும் படித்துவிட்டு வெளியே வந்தேன். எனக்கு நெருக்கமான ஒருவரின் டைரியைப் படித்தது மாதிரி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனதில் வெவ்வேறு வடிவம் கொண்டு இப்போது தாளில் இறக்கி வைத்துவிட்ட பின்பு கைவிட்டுப் போனது போல் ஏக்கம் சூழ்கிறது.
எனக்கு நன்கு பரிச்சயமான பலரும் இந்த நாவலில் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நானே வருவது போலவும் பிரமைதட்டுகிறது. ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்த மாதிரி இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் நிறைய யோசனையும் தயக்கமும் ஏற்படத் தொடங் கியது.
ஒரு கூட்டுக் குடும்பப் பெரியவரின் இறுதித் தருணத்தில் குடும்பத்தின் நாற்பது ஐம்பது உறுப்பினர்களுக்கும் பாகம் பிரிக்கும் போது ஏற்படும் மனக்கசப்புகளைப் போன்றது அது. ஒருவரோ பெரியவர் போய்ச் சேரட்டும் அப்புறம் நம் பிரிவினைகளைப் பார்ப்போம் என்றார். மற்றொருவரோ பெரியவர் இருக்கும்போதே பிரித்துக் கொள்ளலாம் என்கிறார். வெள்ளைக்காரனைக் குடும்பத்தலைவர் என்று உவமித்ததை அப்படியே நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உதார ணங்கள் நூறு சதவீதம் பொருத்தமானவையாக இருப்பதில்லை.
மராட்டியத்தில் ஜோதிராவ் புலே பத்தொன்பதாம் நூற்றாண்டி லேயே 'நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானது. பிரிட்டாஷார் மட்டும் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியா வுக்கு சாபவிமோசனமே ஏற்பட்டிருக்காது. அவர்கள் இந்தியாவுக்குக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள்' என்று கூறியிருக்கிறார். பார்ப் பனர்களிடமிருந்து விடுதலை அடைவதுதான் முதல் கடமை என்பது அவருடைய வாழ்நாள் பிரசாரமாகக் கொண்டிருந்தார். தமிழகத்தில்
அயோத்திதாச பண்டிதரும் வெள்ளையரை இதே காரணத்துக்காக கருணை மிக்கவர்கள் என்று கூறியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயல்பட ஆரம்பித்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்கும் ஏறத்தாழ அதே போன்ற நோக்கம்தான்.
பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது போல திராவிட நாடு என்று பிரித்துக் கொள்வதற்கும் சிலர் ஆசைப்பட்டனர். பாகிஸ்தான் பிரிந்து போனது போலவே அதுவும் மோசமான முடிவாக மாறியிருக்கக்கூடும். ஆனால் அந்த யோசனையை தகுந்த நியாயங்களோடு பிரிவதற்கு ஆசைப்பட்டவர்கள் முன் மொழிந்தனர். வழி நடத்த சிலர் நிஜமாகவே ஆசைப்பட்டனர். பலர் சத்தியாவசத்தோடு தியாகம் செய்தனர்.
இந்திய சுதந்திர தாகத்தை பொறுத்தவரை வேறு மதத்தவன் நம்மை ஆளுவதா என்ற கோபம் சிலருக்கு. வேறு நாட்டவன் நம்மை ஆளுவதா என்பது இன்னும் சிலருக்கு.
பார்ப்பனர்கள் வேறு நாட்டினர் என்றும், இந்தியாவில் குடியேறிய வேறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்கள் என்றும் வலியுறுத்தியவர் களுக்கு முதல் விடுதலை ஆரியர்களிடமிருந்து தேவைப்பட்டது. கிருஸ்தவர்கள் வந்தார்கள், அதற்கு முன்னர் இஸ்லாமியர் வந்தார்கள், அதற்கும் முன்னர் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வந்தார்கள். எங்களுக்கு முதல் விடுதலை ஆரியர்களிடமிருந்து... என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.
வரலாற்று உண்மைகள்.. அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது.
"ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவனை இவ்வளவு தாமத மாக எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. "இல்லை, புத்தரே பிரா மண கருத்துகளுக்கு எதிராக எழுந்தவர்தான். சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு புத்த தத்துவத்தைத் தழுவியர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது..."
"ஆனாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில் லையா?” என்ற இயல்பான இன்னொரு கேள்வி..
"சங்கரரும் ராமாநுஜரும் மீண்டும் இந்து தத்துவங்களைத் தழைக்கச் செய்துவிட்டனர்”
"அட இந்தியா முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த ராஜாங் கத்தை இவர்கள் எப்படி அழிக்க முடியும்..?" - இது அடுத்த சந்தேகம்.
"சிந்து சமவெளி நாகரீகமே ஆரியர் படையெடுப்பால்தானே அழிந் தது? மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் வசித்தவர்களை தென்னிந்தியா நோக்கி விரட்டி அடித்தவர்கள் அவர்கள்தானே? ஆயிரம் ஆண்டுகளில் எல்லாம் அவர்களை அழித்துவிட முடியாது. அவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.''
"அவ்வளவு எதிர்ப்பு சக்தி கொண்டவர்களா அவர்கள்..?"
"ஆலகால விஷங்கள்... அழிக்கவே முடியாதவர்கள்.”
"இந்திய ஒற்றுமையைக் குலைக்க காலனி ஆதிக்கத்தின் போது கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிகள் இவையாவும். இந்தியா வேதங்களின் நாடு, உலகத் தத்துவங்களுக்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடு. இதன் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கலாமா? அரசியல் ஆதாயத்துக்காக அபாண்டமான கருத்துகளைச் சொல்லும் இந்தப் பாவிகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும்? வானியல் சூத்திரங்கள், கணிதக் கோட்பாடுகள், ஆழ்ந்த இதிகாசங்கள்... அடடா இதையெல்லாம் இடக்கையால் புறம்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு வால் பிடிக்கும் அக்கிரமக்காரர்களை வருங்காலம் மன்னிக்காது."
"நீ சூத்திரனாகப் பிறந்ததற்கு உன் விதிதான் காரணம்... எல்லாம் அவன் செயல்... என்கிற பிற்போக்குச் சிந்தனைகள் தான் வேதங்கள். ஒவ்வொருத்தனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் வைத்திருக்கும் மடத்தனம்தான் இதிகாசங்கள். காட்டு மிராண்டியாக இருந்த மனிதர் களுக்குச் சொன்ன கதைகளைக் கண்டு மலைக்காதே... அவை காலத் துக்கு ஒப்பாதவை...''
"இந்தியத் தத்துவ தரிசனங்களை அறியாத மூடர்கள் ஒட்டு மொத்த மாக இப்படி ஒதுக்கித் தள்ளுகிறார்கள். இப்படி வேறு மதத்தின் தத்துவங்களை இவர்களால் விமர்சிக்க முடியுமா? கொன்றுவிடுவார்கள். இந்திய மதங்கள் சகிப்புத் தன்மை மிக்கவை.”
"அயோத்தியில் மசூதியை இடித்தபோதும் குஜராத்தில் உயிரோடு கொளுத்தியபோதும் தெரிந்துவிட்டதே இவர்களின் சகிப்புத்தன்மை...”
"மாற்று மதத்தினர் இந்து மதத்தை அழிக்க ஆண்டுக்கு எத்தனை கோடிகள் செலவிடுகிறார்கள் என்று தெரியுமா?”
- கருத்து மோதல்கள். அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப சத்தியா வேசங்கள்...
இது போன்ற சில ' சத்தியாவேசங்களுக்குத் தடையாக இருந்ததாகக் கருதப்பட்டதால் மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்கள் இன்னுயிரை பலி கொடுக்க நேரிட்டது.
கிராமராஜ்ஜியம், ராட்டை, கிராமங்களின் தன்னிறைவு என்று மகாத்மா காந்தி கனவு கண்டு கொண்டிருந்தபோது, டெஸ்ட் ட்யூப் பேபி, ஒரு குடியிருப்புப் பகுதிக்கு ஒரே ஒரு சமையலறை என்று பரவலான எல்லைகளைத் தொட்டார் பெரியார் ஈ.வே.ரா.
நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்தரம் என்றார் காந்தி. பெண்கள் நகைகள் அணியாமல் - அலங் காரம் செய்யாமல் - ஆண்கள் போல் கிராப் வெட்டிக் கொள்ள வேண் டும் என்றார் ஈ.வே.ரா. மகாத்மா இங்கிலாந்து அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். பெரியார் இந்திய அரசினரால் சிறை வைக்கப்பட் டவர். காந்திக்கும் பெரியாருக்குமான முக்கியப் புள்ளி இது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேவையில்லாமல் காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுவவதாகவே தோன்றும். தென் துருவத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் வடதுருவம் என்ற ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. காந்தத் துண்டு ஒன்றுதான். ஒரு துருவம் இல்லாமல் இன்னொரு துருவம் இல்லை.
காந்தியை ஹீரோ என்பவர்களுக்குப் பெரியார் வில்லன். பெரியாரை ஹீரோ என்பவர்களுக்கு காந்தி வில்லன். சரியாகப் புரிந்து கொண்டால் இருவருமே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோக்கள் என்பது புரியும்.
சுதந்தரத்துக்காகப் போராடிய காந்தி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்தரத்தை வரவேற்கவில்லை. சுதந்தரத்துக்கு இப்போது அவசரமில்லை என்று அவர் கருதினார். பெரியார் அதையே கொஞ்சம் முன்னாடி சொன்னார்.
காந்திக்கு எல்லா மதமும் ஒற்றுமையாக இருக்கும் நாளில் சுதந்தரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. பெரியாருக்கு எல்லா சாதியும் சமமாக இருக்கும் நாளில் சுதந்தரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.
இப்படியாக ஒரு மாற்று அரசியல் சிந்தனை இந்தியா முழுக்க இருந்தது போலவே சென்னை, செங்கல்பட்டு பிராந்தியத்தையும் தழுவிக் கொண் டிருந்தது. திராவிட பின்னணியில் சில குடும்பங்கள் செயல்பட்டன. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகம் இருந் தது. திராவிட கட்சிகளின் அரசாட்சியும் சேர்ந்து கொள்ள அவர்களில் தீவிரமான சிலர் எந்தவித பலனுமின்றியே அந்த இயக்கங்களுக்கு வேராக இருந்து மடிந்தனர். வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்.
வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதை இந்த நாவலின் அடிச்சரடு. முடிந்த அளவுக்கு அது ஒரு உண்மைக்கதைதான். தீப்பெட்டியின் மேல் இருக்கும் படம். கடந்த முக்கால் நூற்றாண்டு திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மவுன சாட்சியாக இருக்கிறது. இந்த மூன்றையுமே தொடர்புபடுத்த முடிந்திருப்பது இதை ஒரு படைப்பிலக்கியமாக்க உதவியிருக்கிறது.
பூண்டி அணைக்கட்டுக்குப் போய் 'தீப்பெட்டி' சிறுத்தையை வெட்டியவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டதும் "சரி வா” என்று அடுத்த நொடி என்னை அழைத்துச் சென்றவர் என் மைத்துனர் விவேகானந்தன். அவர் உதவி இல்லையென்றால் இந்த நாவலை நான் இப்படித் தொடங்கியிருக்கமுடியாது.
நிகழ்கால சரித்திரக் கதையாக இருப்பதால் முடிந்த அளவு ஜாக்கி ரதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது. முதல் வாசகராக இருந்து அபிப்ராயங்கள் சொன்ன கோவை க.ரகுநாதனுக்கு என் முக்கியமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல தயக்கங் களுக்கு அவர் விடையாக இருந்தார்.
நண்பர்கள் கடற்கரய், ரெங்கையா முருகன், த.அரவிந்தன், மரக் காணம் பாலா போன்றவர்கள் வெட்டுப்புலி பின்னணியை வெகுவாக உற்சாகப் படுத்தியவர்கள்.
நாவலின் காலகட்டத்தைத் தவறில்லாமல் சித்திரிக்க "தினத்தந்தி' ஐ.சண்முகநாதன், 'ராணி' அ.மா.சாமி, அண்ணாவோடு நெருங்கிப் பழகிய ஜே.வி.கண்ண ன், மா.சு.சம்பந்தன், 'சிந்தனையாளன்' வே.ஆனை முத்து, பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர், தினமணி கதிர் எஸ். சிவகுமார், வரலாற்று அறிஞர் பெ.சு.மணி, நடிகர் எஸ்.எஸ். ஆர். ஆகியோரிடம் பேசும்போது கிடைத்த பல தகவல்களைப் பயன் படுத்திக் கொண்டேன். நாவலில் ஒரு வரியாகவோ, ஒரு சம்பவமாகவோ அவை உருமாறியிருக்கின்றன. அவர்களுக்கு என் நன்றிகள். என் மனைவி திலகவதி நாவலில் இடம் பெறும் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பேசும் வழக்கு மொழியும் நாவலுக்கு மிகவும் பயன்பட்டது. ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையாக இருந்தது. இன்னொரு பத்தாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
இங்கிருந்து இந்த இடத்துக்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர்? என்ன உடை உடுத்தினர்? எதற்காகச் சென்றனர்? என்னவிதமான பொருளீட்டினர்? எப்படி சேமித்தனர்? என்ன நாணயம் இருந்தது? என்ன பேச்சு இருந்தது? யார் ஆண்டனர்? எப்படி வரி வசூலித்தனர்? யார் மூலமாக வசூலித்தனர்? சினிமா இருந்ததா? பேப்பர் இருந்ததா? என்ன முறையில் அச்சடித்தனர்? எப்படி பேசினர்? யாரை எதிர்த்துப் பேசினர்? யாருடைய பேச்சைக் கேட்டனர்? என்ன உண்டனர்? எப்படி உழைத்தனர், என்ன சிகிச்சை, கிராமம் எப்படி இருந்தது, நகரம் எப்படி இருந்தது... என்ன கோயிலில் என்ன சாமி. எப்படி வழிபட்டனர். குடுமி வைத்திருந்தவர் எத்தனை சதவீதம், யாரெல்லாம் ஓட்டு போட் டனர், எப்படியெல்லாம் வீடு கட்டினர். எதற்கெல்லாம் கோபப்பட் டனர், எதற்கெல்லாம் சந்தோஷப்பட்டனர், அந்த சந்தோஷம் எந்த மாதிரியானது?....என எல்லாவற்றிலும் சந்தேகம் கிளைத்தது.
போன தலைமுறை சந்தோஷங்களும் துக்கங்களும் வேறு மாதிரி இருந்தன. ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. கிராமத்தில் குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது. பத்து இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் அப்படி எங்கு தொலைந்துவிட முடியும்? நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை. நீரில்லாத கொசஸ்தலை ஆற்றில் இறங்கி விளையாடப் போயிருக்கலாம் என்று சந்தேகித்தனர். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. எல்லோரும் பதறிக் கொண்டிருக்க, வீட்டின் பெரியவர் சொன்னார்: "நரி சாப்பிட்டுட்டு இருக்கும்மா.. பெசாம படுங்க... காலைல பாத்துக்கலாம்”
குழந்தையைக் கொஞ்சுவதிலெல்லாம் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பார் அவர். திடீரென்று இல்லாமல் போய்விட்டால் தாங்கிக் கொள்வீர்களா? என்பார். குழந்தைகள் சிறிய சீக்கு வந்தாலும் இறந்து விடக் கூடியவை என்பது அவர் நம்பிக்கை. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாகப் பிரியம் வைப்பதே அவருக்கு வியப்பாக இருந்தது. அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசம் வெளியில் தெரியாத ரகசியமாக இருந்ததை நான் அறிவேன். என் மகனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த நேரத்தில் அவர் சொன்னார்: "இன்னும் நாலு வருஷம் சமாளிச்சு வளத்துட்டியானா பையன் தருப்தி ஆயுடுவான்"
தருப்தி ஆயுடுவான் என்பதின் பொருள்... உலகின் ஒரு நபராக கணக்கில் வந்துவிடுவான் என்பது. அவருடைய உலக மக்கள் தொகை யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கணக்கில் வருவார்கள்.
டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் கொஞ்சிக் கொள்வது புதிதாக கற்பித்த உணர்வாக இருக்கிறது. டி.வி. மூலமாக புதுவிதமான பாசத்தைக் கற்றுக் கொண்டு வருவது தெரிகிறது. கண வனும் மனைவியும் கூலி வேலைக்குச் சென்றுவிட, இரண்டு வயதுகூட நிரம்பாத குழந்தை தனியாக வீட்டில் கிடக்கும். பசி எடுக்கும் வேளை யில் கூழ் பானையில் கையைவிட்டு எடுத்து உடம்பெல்லாம் பூசிச் சாப்பிட்டுக் கொள்ளும். மாட்டுக்கு வைத்த தண்ணீரைக் குடித்துக் கொள்ளும். முப்பது ஆண்டுகளில் அதே கிராமம் மாறிப் போய்விட்டது. 'மம்மி சொல்லு, மம்மி சொல்லு என்று கொஞ்சுகிறார்கள். கான்வென்ட் வேனில் ஏற்றிவிட்டு "இன்னும் ஒழுங்கா டை கட்ட தெரியலை.” என்று இரண்டாம் கிளாஸ் பையனை நொந்தபடி செல்கிறார் தாய்.
தி.மு.க.வுக்கு முன் தி.மு.க.வுக்குப் பின்.. சினிமாவுக்கு முன் சினிமா வுக்குப் பின்.. சன் டி.வி.க்கு முன்.. சன் டிவிக்குப் பின் என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சிலர் நினைவுகூரும் சம்பவங்கள் இதில் இருந்தாலும் முப்பதுகளில் இருந்துதான் கதை நகர ஆரம்பிக்கிறது. பெரியார், அண்ணா , எஸ்.எம். உமர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, பிரபாகரன், எம் ஆர் ராதா, அசாஞா , கலைஞர், பெரியார்தாசன், சுப.வீ., போன்ற பலர் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். தூர்தர்ஷன், சன் டி.வி., தமிழ்நாடு மின்சார வாரியம், ஏவி.எம். ஸ்டூடியோ போன்ற பலதும் இந்நாவலின் சரித்திர முக்கியத்துவத்துக்கு உதவும். வஜ்ரவேலு முதலியார், சினிடோன் நாராயணன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், பாஸ்கர் போன்ற பலரும் நூறு சதவீதம் நிஜமனிதர்கள். செங்கல்பட்டை காசி வரை இணைத்த சாலை எங்கோ மறைந்து போய் அருகிலேயே புதிய தங்க நாற்கர சாலை உருவானதும் பத்தடி ஆழத்தில் கவளை ஒட்டி நீர் இறைத்துக் கொண்டிருந்த கிணறு இப்போது நூற்றி ஐம்பது அடி ஆழ ஆழ்துளை கிணறாக மாறிப்போய்விட்டதும் சமூக மாற்றத்தின் நீள ஆழத்தைச் சொல்லும் முக்கிய காரணிகள். சமூக, அரசியல் நிலை களை சார்புத்தன்மை இல்லாமல் பார்க்க முடிவதில்லை. காந்தியையும் சோனியா காந்தியையும் காங்கிரஸ்வாதி என்பதும் பெரியாரையும் ஜெயலலிதாவையும் திராவிட இயக்கத்தினர் என்பதும் ஒரு சுவையான முரண்பாடு.
என்னுடைய சிறுவயதில் ஒருவரை இப்போதும் நடுக்கத்தோடு நினைத்துப் பார்க்க முடிகிறது. அவர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குடித்துவிட்டு, தெருவில் 'கலைஞர் வாழ்க' என்று சாக் பீஸால் எழுதுவார். பக்கத்தில் இருக்கும் அதிமுக மன்றத்திற்கு அருகே போய் நின்று கொண்டு 'கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க' என்று உயிர் போகிற வரை கத்துவார். கோபத்தில் அந்த மன்றத்து ஆள்கள் அவரை அடித்து நொறுக்குவார்கள். இன்று மாலைக்குள் அவர் இறந்து விடுவார் என்று பதறுவேன். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் அப்படித்தான் கத்திக் கத்தி உதைபட்டுக் கொண்டிருந்தார்.
அரசியலில் எல்லாம் சகஜமாகிவிட்டது. காங்கிரஸும் திமுகவும் கூட்டணி வைத்தபோது அதிர்ச்சி அடைந்த திமுக தொண்டன், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்தபோது அரசியலில் எல்லாம் சகஜம் என்பதன் பொருள் புரியாமல் விழித்தான்.
நிகழ்காலத்தை உரசி நிற்கும் இந்தச் சரித்திரத்தில் ஏறத்தாழ அத்தனைச் சம்பவங்களும் அதே காலகட்டச் சூழலோடு சொல்லப் பட்டிருக்கின்றன. சரித்திரச் சீட்டுக்கட்டு கோபுரத்தில் சில புனைவுச் சீட்டுகளை அலுங்காமல் சொருகியிருக்கிறேன்.
1910 - 2010... இதுதான் கதை நடக்கும் காலகட்டம். படைப்பின் தர் மத்தை மீறாமல் இந்தக் காலக்கட்டத்துக்குள் கதையைச் சொல்லி யிருக்கிறேன்.
நாவலோடு தொடர்புடைய ஒரே ஒரு விஷயத்தை இங்கே சொல்லி விடுகிறேன். இது கொஞ்சம் புனைவு கலந்த குறிப்புதான்.
சிறுத்தையால் தாக்கப்பட்ட சின்னா ரெட்டி ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கே மருத்துவ உதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் மருத்துவமனையின் வாசலில் இருந்த ஒரு கல் திண்டில் படுத்துக் கொண்டு தானே தனக்கு வைத் தியம் பார்த்துக் கொண்டார். எந்த மருத்துவ முறையை பிறருக்குச் சொன்னால் பலிக்காது என்று
அவர் கருதினாரோ அதை அவர் ஒரு சிறிய சபலத்துக்காக மீற வேண்டிய தாகிவிட்டது. பக்கத்தில் சென்ரல் சினிமா தியேட்டரில் சினிமா படம் ஓடுவதாக ஒரு முஸ்லிம் பெரியவர் தகவல் சொன்னார். ஏற்கெனவே ஆறுமுக முதலி சினிமா எடுப்பதற்கு மூங்கில் கேட்டுவிட்டுப் போன சம்பவம் சின்னா ரெட்டிக்கு நினைவு வந்தது. தம் மகன் வருகிற வரை பொறுத்திருக்க அவருக்கு முடியவில்லை. ஓர் அணா இருந்தால் படம் பார்த்துவிட முடியும் என்ற நிலையில் தம் ரண சிகிச்சை மருத்துவத் துக்கான மூலிகை இதுவென்று அந்த பாயிடம் சொல்லி இரண்டணா பெற்றுக் கொண்டார். அவருடனேயே சென்று படம் பார்த்தார். சினிமா உற்சாகம் வேறு சில மருத்துவ உத்திகளையும் அவரிடம் சொல்லுவ தற்குக் காரணமாகிவிட்டது. அணையில் ஏற்பட்ட சிறுவெடிப்பு இத் தனை நாள் பாதுகாக்கப்பட்ட மொத்த நீரையும் வெளியேற்றுவதற்குக் காரணமாக இருந்துவிடுவதில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது.
அதன் பிறகு சின்னா ரெட்டிக்கு தம் மருத்துவத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. இனி அது பலிக்காது என்று நம்ப ஆரம்பித்தார். சிறுத்தை அடித்துப் பிழைத்தவர் சிறிய வண்டு கடித்து இறந்து போனதற்கும் அவருடைய பிடிமானம் கைநழுவிவிட்டதுதான் காரணம். அந்த முஸ்லிம்தான் பின்னாளில் மஞ்சள் காமாலைக்கும் எலும்பு முறிவுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை செய்பவராக மாறி, ஏராளமான பணம் சம்பாதித்து மும்பையில் குடியேறிவிட்டவர்.
நாவலில் இந்தப் பகுதியை எங்கே சேர்ப்பதென்று எனக்குப் புலப்பட வில்லை. நாவலுக்கு இது அத்தனை முக்கியமா என்பதும் தெரிய வில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இது நாவலை முடித்து அச்சுக்குக் கொடுக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது. இதை எங்காவது புகுத்தப் போய் ஏடாகூடமாய் தொக்கி நிற்குமோ என்றுவிட்டுவிட் டேன். வாசகர்கள் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் பொருத்த மான இடத்தில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வாசித்துக் கொள்ளலாம்.
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனின் அன்பும் ஆதரவும் இல்லா மல் இந்த நாவலை நான் முழு மூச்சில் எழுதி முடித்திருக்க முடியாது. நான் எழுதிய கதைகளைப் படித்துவிட்டு நடுராத்திரியில் எழுப்பிப் பாராட்டியிருக்கிறார். மாஸ்கோ போயிருந்தபோது ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம் என்ற என் நாவலைப் படித்துவிட்டு அங்கிருந்து பாராட்டுப் பத்திரம் வாசித்தார். படைப்பாளனுக்கு வேறென்ன வேண்டும்? எனக்கு நல்ல ஆலோசனைகள் தந்து வழி நடத்தும் என் மகன் மாக்ஸிம், மக்கள் அஞ்சலி ஆகியோருக்கும் தன் அன்பு மிரட்டல் களால் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு செய்து கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
மற்றபடி, ஒன்றுமில்லை .
தமிழ்மகன் 09.10.2009