Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - அணிந்துரை-1

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - அணிந்துரை-1

தலைப்பு

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு

எழுத்தாளர் அ.வேலுச்சாமி
பதிப்பாளர்

சீதை பதிப்பகம்

பக்கங்கள் 488
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.500/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/veezhchiyuratra-thamizhinam-ezhuchipettra-varalaru.html

 

அணிந்துரை-1

"வீழ்ச்சியுற்ற தமிழினம், எழுச்சி பெற்ற வரலாறு'' என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை பல்வேறு நூல்களை ஆதாரமாகக் கொண்டு இருதொகுதிகளாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. அ. வேலுச்சாமி அவர்கள் எழுதியிருப்பது இன்றைய இளைய தலைமுறைக்கு திராவிட இயக்கம் பற்றியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு பற்றியும் தெளிவுப்படுத்தும் தேவையான முயற்சி என்றே கருதகிறேன்.

திராவிட இயக்கம் துவங்கப்பட்டதிலிருந்து, வரலாற்று சிறப்பு மிக்க செங்கல்பட்டு மாவட்ட தீர்மானங்கள், நீதிக்கட்சியின் சாதனைகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்கம், தமிழ் மொழியை பாதுகாக்க நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் என திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிகளையும் பட்டிய லிட்டிருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலும், கட்சியிலும் செய்த சாதனைகளையும் - நடத்திய போராட்டங்களையும் - இந்த மாபெரும் மக்கள் இயக்கம் சந்தித்த சோதனைகளையும் விளக்கியிருக்கும் விதம் திரு. வேலுச்சாமி அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தலைமை ஆசிரியர் பணியில் தொடருகிறார் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிப் போராட்ட வரலாறு, கழக மாநாடுகளின் வரலாறு, பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த இயக்கத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் வரலாறு, ஒவ்வொரு முறை ஆட்சியிலிருந்த போதும் கழக அரசு கொண்டு வந்த சமூக நீதி திட்டங்கள், தொழில் வளர்ச்சி திட்டங்கள், சமுதாய சீர்திருத்த திட்டங்கள் என்று அத்தனை விவரங்களையும் அருமையாக தொகுத்துள்ள இந்த நூல் திராவிட இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் "கையேடாகவும்” திராவிட இயக்கம் என்ன செய்தது என்று பொய் பிரச்சாரம் செய்வோருக்கு ஒரு “விளக்க ஏடாகவும்" அமைந்திருப்பதை எண்ணி பெருமையடைகிறேன்.

நூற்றாண்டு கொண்டாடியிருக்கும் திராவிட இயக்கம் - குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திற்கு எந்நாளும் தேவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தகவல்கள் நிரம்பியுள்ள இந்நூலைக் கொண்டு வரும் திரு. வேலுச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் இடம்பெற்றுள்ள கழகத்தின் சாதனைகளை - வரலாறுகளை படிப்பவர்கள், திராவிட இயக்கம் தமிழ்நாட்டுடனும் - ஏன் இந்திய திருநாட்டுடனும் பிரிக்க முடியாமல் ஒட்டிப் பிறந்துள்ள மாபெரும் இயக்கம் என்பதை உணர்வர். அது மட்டுமின்றி, திராவிட இயக்கம் தமிழக மக்களின் இதயங்களில் என்றைக்கும் குடி கொண்டிருக்கும் மாபெரும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் "தகவல் களஞ்சியமாக'' இந்த நூல் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

 

நாள்: 25-9-2018

                                                                                                                          அன்புடன்,

                                                                                                              (மு.க. ஸ்டாலின்)

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு