வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - முகவுரை

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - முகவுரை

தலைப்பு

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு

எழுத்தாளர் அ.வேலுச்சாமி
பதிப்பாளர்

சீதை பதிப்பகம்

பக்கங்கள் 488
பதிப்பு முதற் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.500/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/veezhchiyuratra-thamizhinam-ezhuchipettra-varalaru.html

 

முகவுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழகத்தின் எதிர்கால விடிவெள்ளியு மான மதிப்பிற்குரிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கழக முன்னணியினருக்கும், செயல் வீரர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில் ஊராட்சிகள் தோறும் நூலகங்களைத் திறக்க வேண்டுமென்றும், அவற்றில் திராவிட இயக்க வரலாறுகள் பற்றிய நூல்கள் இடம்பெற வேண்டுமென்றும், திராவிட இயக்கங்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகள் குறித்த செய்திகள் அடங்கிய நூல்கள் இடம்பெற வேண்டுமென்ற ஆவலை வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞர்கள், திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர்களின் தன்னலங்கருதாத செயல்பாடுகள், இயக்கத்தை வளர்க்க எதிர்கொண்ட இன்னல்கள் குறித்து அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சாதியின் பெயரால் சமூகம் பிளவுப்பட்டிருந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி கிடைக்காமல் தமிழினம் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்தது. வீழ்ச்சியடைந்த தமிழினம் எவ்வாறு எழுச்சி பெற்றது? அதற்காக இயக்கங்கள் கண்டவர்கள் யார்? என்பன போன்றவற்றை பல்வேறு அனுபவம் வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்துக்களை சேகரித்து நூல் ஒன்றைத் தொகுக்க முற்பட்டேன்.

திராவிட இயக்கம் துவக்கப்பட்ட 1912ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட முயற்சி மேற்கொண்டேன். தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி என்று அழைக்கப்பட்ட திரு. முரசொலி மாறன், எம்.ஏ. அவர்களால் விரிவாக எழுதி 2012ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட்ட "திராவிட இயக்க வரலாறு" (1912 1921) என்ற நூலை எடுத்துக் கொண்டேன். இந்நூல் திரு. முரசொலி மாறன் அவர்கள் 1976ஆம் ஆண்டு சிறைச்சாலையில் 'மிசா' கைதியாக இருந்தபோது, பல்வேறு இன்னல்கள், இடையூறுகள், அடக்குமுறைகளுக்கிடையே எழுதிய நூலாகும்.

1912 ஆம் ஆண்டு 'மெட்ராஸ் யுனைடெட் லீக்' என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு 1913ஆம் ஆண்டு 'திராவிடர் சங்கம்' என்று மாற்றப்பட்டது.

1916ஆம் ஆண்டு 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்றும், பிறகு நீதிக்கட்சி என்றும் மாற்றம் பெற்றது.

1920ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் நீதிக்கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1921 ஜனவரி 8ஆம் நாள் சட்டசபைக் கூட்டத்தில் நீதிக்கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இவ்வாறு 1912 முதல் 1921 வரை நடந்த நிகழ்வுகளை யெல்லாம் திரு. முரசொலி மாறன் அவர்கள் பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டி "திராவிட இயக்க வரலாறு'' (1912-1921) என்ற நூலை எழுதியுள்ளார். திராவிட இயக்கத்தின் வரலாற்றைத் தொகுப்பதற்கு இந்நூலை முதல் நூலாகப் பயன்படுத்தியுள்ளேன்.

1994, 1995ஆம் ஆண்டுகளில் "திராவிட மறுமலர்ச்சி மாமன்றம் அஞ்சல் வழிக் கல்லூரி" திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செயல்படத் துவங்கியது. கல்லூரியின் தலைவராக தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும், துணைத் தலைவராக இனமானப் பேராசிரியர் அவர்களும், செயலாளர் இயக்குநராக முரசொலி மாறன் அவர்களும், கல்லூரியின் முதல்வராக டாக்டர் மா.நன்னன் அவர்களும் பொறுப்பேற்றுக் கல்லூரி செயல்பாட்டிற்கு வந்தது. அஞ்சல் வழிக் கல்லூரியில் நானும் ஒரு மாணவனாகச் சேர்ந்து பயின்றேன்.

திராவிடர்களின் மாண்புகள் சீரழியா வண்ணம் பாதுகாத்து, அவற்றின் மறுமலர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கர்த்தாவாக இருந்து அவை எக்காலத்திலும் நீடித்து மணம் வீசி இந்நாட்டிற்கும், உலகிற்கும் ஆக்கம் தேட வேண்டும் என்ற குறிக்கோளுடன் துவங்கப்பட்ட திராவிட மறுமலர்ச்சி மாமன்றம் அஞ்சல் வழிக் கல்லூரி ''அண்ணா அறிவாலயம்" என்ற திங்கள் இதழை வெளியிட்டது. அவ்விதழ்கள் தான் கல்லூரி வெளியிட்ட பாடப் புத்தகங்கள் ஆகும். அப்புத்தகங்களில் பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் வெளிவந்தன.

அவற்றில் திராவிட இயக்கம் தோன்றிய வரலாறு, இயக்கத்தை தோற்றுவித்தவர்கள், இயக்கத்தின் வளர்ச்சி போன்றவையும் வெளிவந்தன. திராவிட இயக்க வரலாற்றில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கங்கள் தோன்றிப் படிப்படியாக வளர்ச்சி அடைந்த விதம் குறித்து ''அண்ணா அறிவாலயம்” நூலில் வெளிவந்தன. இவற்றில் வந்த செய்திகளை நான் தொகுத்துள்ள "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு" நூலில் தொகுத்திருக்கின்றேன்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், பேரறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களுடனும், இயக்க முன்னோடிகளுடனும் ஆரம்பகாலம் தொட்டே பின்னிப் பிணைந்து இருந்தவர் திரு. டி.எம்.பார்த்த சாரதி அவர்கள். அவர் எழுதிய ''தி.மு.க. வரலாறு" என்ற நூலில் இயக்க நிகழ்ச்சிகள் எதுவும் விடுபடாமல் அப்படியே சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன. திராவிட இயக்கத் தோற்றம் முதல், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 1967ஆம் ஆண்டு மற்றும் 1969இல் அண்ணா அவர்களின் மறைவு வரையும் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இயக்கங்களால் நடத்தப்பட்ட மாநில செயற்குழுக் கூட்டம், பொதுக்குழுக்கூட்டம், பொதுக்கூட்டங்கள் மாவட்ட மற்றும் மாநில மாநாடுகள் பற்றியும், மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் அவற்றின் எதிரொலியாகக் கிடைத்த சிறை தண்டனைகள் ஆகியவைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் "தி.மு.க. வரலாறு'' நூலில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பேரறிஞர் அண்ணா அவர்களின் மேடைப் பேச்சு கழக முன்னணியினரின் கருத்துரைகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

மேலும் மகளிர் பங்காக சீர்திருத்தச் செம்மல்களான மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி, டாக்டர் தர்மாம்பாள் ஆகியோரின் சேவைகள், மொழிப்போர் தியாகிகள் பற்றிய விவரங்கள், தமிழ்நாடு எங்கும் இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டோர் பட்டியல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நமது இயக்கத்தை நமது இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் என்ற நோக்குடன் மேற்கண்டவற்றை தொகுத்திருக்கின்றேன்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1967 - 1969, 1969-1977, 1971 - 1976, 1989-1991, 1996 - 2001, 2006 - 2011 ஆகிய காலங்க ளில் தி.மு.க. ஆட்சி செய்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் கழக வரலாறாயிற்று. அவை பற்றிய விளக்கங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டப் பேரவை தேர்தல்

அறிக்கையாக 2011இல் வெளியிட்ட விவரங்களைத் தொகுத்தும், கவிஞர் தமிழ்தாசன் அவர்கள் தொகுத்த "தலைவர் கலைஞர் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் 2016"லிருந்து தொகுத்தும், அத்தொகுப்பில் ''கலைஞரின் நெஞ்சுக்கு நீதி" என்ற நூலில் கூறியுள்ளவற்றையும் ''வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சியுற்ற வரலாறு'' என்ற நூலில் தொகுத்துள்ளேன்.

இறுதியாக தி.மு.கழகம் வெளியிட்ட "தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம் 1974" என்ற நூலின் சுருக்கத்தையும் தொகுத்துள்ளேன்.

நான் தொகுத்துள்ள "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சியுற்ற வரலாறு" நூலின் மேற்கோள் நூல்களின் மூலகர்த்தாக்களான திரு.முரசொலி மாறன், எம்.ஏ. திரு.டி.எம். பார்த்தசாரதி, திரு. டாக்டர். மா. நன்னன் ஆகியோரின் மொழிநடையை அப்படியே பயன்படுத்தி யிருக்கின்றேன். இன்றைய இளைஞர்களும், திராவிட இயக்கத்தின் பால் ஆர்வம் உள்ளோரும் இந்நூலை படித்துணர்ந்து திராவிடக் கருத்தியலை உள்வாங்கி பயன்பெற வேண்டுகின்றேன்.

இந்நூல் வெளிவர பெரிதும் உதவிய நண்பர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

அ. வேலுச்சாமி

தொகுப்பாசிரியர்

தலைமை ஆசிரியர் (ஓய்வு)

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog