வானம் வசப்படும் - வரலாறு விடுதலை செய்யும்
தலைப்பு |
வானம் வசப்படும் |
---|---|
எழுத்தாளர் | பிரபஞ்சன் |
பதிப்பாளர் | நற்றிணை பதிப்பகம் |
பக்கங்கள் | 496 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.400/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/vaanam-vasappadum.html
வரலாறு விடுதலை செய்யும்
சாரங்கபாணி வைத்திலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபஞ்சன், புதுச்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தார்.
1961இல் இருந்து எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 300 சிறுகதைகள், 6 நாவல்கள், 22 நெடுங்கதைகள், 6 கட்டுரைத் தொகுதிகள், இரண்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார்.
இவர் சிறுகதைகள் அனைத்தையும் பத்துத் தனித்தனித் தொகுதிகளாக செம்பதிப்பாக நற்றிணை வெளி யிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, தமிழக அரசுப் பரிசுகள் இருமுறையும், இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் விருது, மேற்கு வங்க பாரதிய பாஷா பரிஷத் பரிசு, சாகித்திய அகாதெமி பரிசு முதலான பல பரிசுகள், விருதுகள் பெற்றவர்.
மனைவி பிரமிளா ராணி. பிள்ளைகள் கௌதமன், கௌரி சங்கர், சதீஷ் ஆகியோர்.
சீரான தரத்துடன் கலைத்தன்மையும் இனிமையும் கொண்டவை பிரபஞ்சனின் படைப்புகள். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு ஊரிலே ஒரு ராஜா என்றுதான் நமக்குக் கதைகள் கற்பிக்கப் பட்டன. ராஜாவைச் சுற்றித்தான் உலகம். ராஜா என்கிற மையப் புள்ளியில் இருந்துதான் ஒரு காலத்து வாழ்க்கை அமைந்திருந்தது. ராஜாக்கள் என்போர், அரண்மனைகள் கட்டி அந்தப்புரத்தில் வாழ்ந்தார்கள். மக்கள் என்போர், தமக்கு வரி கட்டப் பிறப்பிக்கப்பட்டுள்ள உயிர்கள் என்று மட்டும் ராஜாக்கள் கருதினார்கள். பின் வந்த விவசாய வர்க்கமும், புரோகித வர்க்கமும் காலனி துரைமார்களும் கூட அப்படித்தான் கருதினார்கள்.
எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாம் குடி அரசில் வாழ்கிறோம். அநீதிமயமான வாழ்க்கைக்குள் நமக்கு மூச்சு முட்டினாலும், நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது என்பது எவ்வளவு பெருத்த ஆறுதல். எவ்வளவு பெரிய இடத்து ஆள்களையும், (அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்) பெண்களையும் சிறைக்குள் தள்ள நம் நீதிமன்றங்கள் தயாராகவே இருக்கின்றன. ஆனால், எத்தனை பேருக்குத் தண்டனை கிடைக்கிறது. ஆகப் பெரிய மனிதர்களையும் நீதிக்குள்ளாக்கும் அமைப்புகள் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்பது குடி அரசின் பேறுகள் என்பதை மறுக்கமுடியாதுதானே?
ஜனநாயகம் என்ற ஒன்று, இருபதாம் நூற்றாண்டு நமக்களித்த மாபெரும் பேறு என்றே நான் கருதுகிறேன். சோழ அரசர்கள், வீதிக்கு உலா வரும் போதெல்லாம் ஏழு பருவப் பெண்களும் அவர்களை வேடிக்கை பார்ப்பது அல்லாமலும் மன்னர்களைக் காதலிக்கிற சீழ்பிடித்த இலக்கியம், இன்று வெளிப்படையாகத் தோன்றவில்லை என்பது எத்தனை பெரிய ஆறுதல்.
ஆனால் ரகசியத்தில் இந்த தொழும் மனோபாவம் நீடிக்கவே செய்கிறது. ஆட்சியாளர்களைத் தொழுவது என்பது அறிவாளிகளின் முழு நேர வேலைப்பட்டியலில் முதல் வரியில் இருக்கிறது. ஒரு பெரிய பதவியில் இருக்கிற ஒருவரைப் பற்றி, ஒரு கவிஞர், 'எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே அவர் எழுத்து' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் வகுப்பில் இருந்து பத்து வகுப்பு வரை அவரது தமிழாசிரியர்கள் அவருக்கு எதைத்தான் கற்றுக்கொடுத்தார்கள்?
காலனியாதிக்கம் நேரிடையாக அகன்ற பிறகும், மறைமுகமாக அது நீடிக்கவே செய்கிறது. ஆதிக்க சக்திகளைப் புகழ்பாடிப் பசப்பும் போக்கும் அதற்கு எதிரான ஒரு மக்கள் சார் போக்கும் இலக்கியத்துக்கு வந்திருக்கின்றன. இந்த மக்கள் சார் போக்கையே உலக வரலாற்று ஆசிரியர்கள், வரலாறு என்கிறார்கள்.
இன்று மக்களின் காலால் உலகம் நடக்கிறது. நேற்றுவரை வரலாற்றுக் கதைகளில் விதந்து பேசப்பட்ட அரசர்கள், அரசிகள், அவர்கள் காதல்கள், கடத்தல்கள் எல்லாம் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. நியாயமாகவே, ஒடுக்கப்பட்டவர்கள், உழைப்பாளர்கள், அரவாணிகள், பாலியல் தொழிலாளர்கள், ஒருபால் காதலர்கள் எல்லோரும் இலக்கியத்துக்குள் வர வேண்டிய ஜனநாயகத் தன்மை உலக அளவில் இலக்கியப் படுத்தல்களாக மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் மக்கள் என்ற சொல் முழு அர்த்தத்தில் அண்மையில் தான் புரிந்து செயல்படுத்தப்படுகிறது.
வரலாறு என்பது, பழமை பற்றியது அல்ல. அது ஒரு வகை விஞ்ஞானம். ஏன், கடந்த காலத்தை, இறந்த காலத்தை மெனக்கெட்டு ஆராயவேண்டும்? ஏன் என்றால், வரலாறு, எப்போதும் நிகழ்காலத்துக்கும் வரும் காலத்துக்கும் சொல்வதற்கு நிறைய செய்திகளை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. நேற்று பெட்டிக்குள் போட்டு வைத்த பொருளை இன்று எடுப்பது போல, அது இன்றைய பயன்பாட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு, இன்றைய மனித முகத்தை இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் பார்க்க முடிகிறது.
வரலாறு என்பது, ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் என்கிற பிறப்புப் பட்டியல் அல்ல. அல்லது அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய தலைகளின் பட்டியல் அல்ல. மாறாக, வரலாறு என்பது, ஒரு காலத்தின் மனோபாவம். ஒரு குறிப்பிட்ட காலம் பற்றிய, மற்றும் மனோபாவம் பற்றிய புரிதல்களின் தொகுப்பு அது.
வரலாறு என்பது இரண்டு முரண்களை எதிர் எதிராக நிறுத்துவது அல்ல. ஆரியம் x திராவிடம், சிவப்பு x கறுப்பு, வெள்ளை X கறுப்பு, முதலாக எதிர் எதிர் நிலைகளில் உண்மை களை நிறுத்தி சார்பு எடுப்பது அல்ல. சமூக உறவு என்கிற நிகழ்வில், இயல்பாகவே நிகழும் கொண்டு கொடுத்தல் பற்றிய விளக்கமும் அறிவு கொளுத்தலுமே வரலாறாக இருக்கிறது. காலம் காலமாக, வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து நடக்கும் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மேல் எடுத்துச் சொல்வதும் வரலாற்றின் கடமையாக இருக்கிறது. எந்தச் சூழலின் கையில் சாட்டை இருந்தது என்பதையும் பம்பரம் யாராக இருந்தார்கள் என்பதையும் வரலாறு அக்கறை கொள்கிறது. புறாவுக்குத் தன் சதையை அறுத்துக் கொடுத்த பரம்பரையாக்கும் எங்கள் பரம்பரை என்பதற்கோ, தப்பாகக் கதவைத் தட்டிய தவறுக்காகக் கையை வெட்டிக் கொண்ட கனவான் எங்கள் பரம்பரை என்று புராணங்களை உருவாக்கிக் கொள்வதற்கோ, நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும் என்று பொய்ப் புகழ் சூட்டிக்கொள்வதற்கோ, வரலாற்றைப் பூனைக் குட்டியாக்கிக் கொள்ளும் போக்கு - அபாயகரமான போக்கு சமீப காலங்களில் தோன்றி இருப்பதற்கும் எதிராகவே சரியாக அமைக்கப்பட்ட வரலாறு தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது. சாதி, மத, இனப் புகழ் பரப்பும் பரப்புச் செயலூக்கி அல்ல வரலாறு. ஆள்வோர், ஸ்தாபனங்கள், விரும்புபவைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படுபவையும் அல்ல, வரலாறு. ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு, சிறைப்பட்ட ஒரு வீரன் சொன்னது, இப்போது நினைவுக்கு வருகிறது.
'வரலாறு என்னை விடுதலை செய்யும்.'
வரலாற்றின் பணி என்னவாக இருக்கும் என்பதற்கு மேற் சொன்ன வாக்கியம் அழகிய புரிதலாக இருக்கும்.
ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்யமாக எனக்கு இருந்தது.
நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள். அவர்களின் மொழி எனக்குக் கை வந்திருக்கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று.
தோழமையுடன்,
பிரபஞ்சன்