உங்கள் மனிதம் ஜாதியற்றதா
ஓர் ஊடகவியலாளராக, கட்டுரையாளராக எழுதக் கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் சாதி ஒழிப்புக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்லக் கிடைக்கும் அரிய தருணமாகவே கருதுகிறேன். என் எழுத்துகள் நான் நம்பும் கருத்தியலைத் தாண்டி வேறெதையாவது பேசினால் அதை விரயம் என எண்ணும் அளவிற்கு இன்றைய சூழல் எப்போதும் போல மிக மோசமானதாகவே இருக்கிறது. சாதியால் நொடிக்கு நொடி இச்சமூகத்தில் பிரச்னைகள் எழுந்து கொண்டே இருக்கும் போது, சாதி எதிர்ப்பு எழுத்துகள் ஆகப் பெருந்தேவையாக இருக்கின்றன. சாதி பற்றி விவாதிப்பதற்கான சூழல் பெருமளவில் உருவாகிவிட்டதைப் போன்ற தோற்றம் நிலவினாலும் உண்மையில், சமரசமற்ற, எந்தப் பூச்சும் இல்லாத சாதி ஒழிப்புக் கருத்தியலை முன்னெடுப்பதற்கான ஜனநாயக வெளி எப்போதும் போல சுருங்கியே கிடக்கிறது.
அன்றாட நிகழ்வுகளால் இச்சமூகம் எப்போதும் பரபரப்பில் மிதக்க வைக்கப்பட்டுள்ளது. அதைக் கேள்விப்பட்டீர்களா?' 'இது தெரியுமா?' 'இந்த விவாதம் பார்த்தீர்களா?' 'முகநூல் முழுக்க ஒரே பேச்சு என யாரைப் பார்த்தாலும் பரபரப்புகளை விசாரிக்கிறார்கள்.
இவ்வாறே நம் சிந்தனை நசுக்கப்பட்டுக் கிடக்கிறது. ஒன்றிற்குத் தீர்வு காணும் முன்பே மற்றொன்று தோற்றுவிக்கப்பட்டு, அதிலிருந்து மடைமாற்ற வேறொன்று உருவாக்கப்பட்டு என நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். தினம் தினம் வெடிக்காத ஓர் அணுகுண்டைத் தயாரித்து இந்த ஊடகங்கள் நம் மீது வீசுகின்றன. அடுத்த அணுகுண்டு தயாரிக்கப்படும் வரை நாம் அதை வைத்து உருட்டி விளையாடியாக வேண்டும் - போராட்டமாக, விவாதமாக, சாலை மறியலாக, பிரேக்கிங், எக்ஸ்க்ளுசிவ், ஹாஷ்டேக், டிரெண்டிங் ஆக. மெய் உலகிலும் மெய்நிகர் (Virtual) உலகிலும் நடக்கும் எல்லாமே இத்தலைமுறைக்கு ஒரு பொழுதுபோக்குதான். சாதாரண பிரச்னை என்றால் உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்கு. சமூகப் பிரச்னை என்றால் அறிவு சார்ந்த பொழுதுபோக்கு !
ஒரு பதிவைப் (Status) போட்டுவிட்டால், ஒரு விவாதத்தில் பங்கெடுத்துவிட்டால், ஒரு போராட்டத்தை நடத்தி அது ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டுவிட்டால் பிரச்சினையே தீர்ந்துவிட்டதாக நம்பி அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். கொடூரமான உண்மை என்னவென்றால் எல்லா பிரச்சினைகளும் அதே வீரியத்தோடு, எப்போதும் உயிர்த்திருக்கின்றன என்பதுவே. இந்தத் தலைமுறை நிழற் சண்டையில் (Virtual Protest) கைதேர்ந்திருக்கிறது. சக மனிதரை இழிவுபடுத்தும், சக மனிதரின் உயிரையும் மாண்பையும் கொல்லும் அநீதிகள் நிஜமானதாக சமூகத்தில் நடந்து கொண்டிருக்கையில் நிழல் போராட்டங்களால்/வாதங்களால் அவற்றைத் தீர்த்து வைக்க முடியாது என்ற உண்மை அதற்குப் புரியவில்லை .
நாம் மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் இருப்பதாக நாம் எல்லோருமே சொல்லிக் கொள்கிறோம். பா.ஜ.க. ஆட்சியிலிருந்து கொண்டு கிளப்பும் ஒவ்வொரு பிரச்னையும் நம்மை அப்படிச் சொல்ல வைக்கிறது. ஆனால் நாம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் மிகப் புதியவையா? இதற்கு முன் இவற்றை நாம் அனுபவிக்கவே இல்லையா? வரலாற்றிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பான சமகாலத்திலும் பார்ப்பனியத்தின், இந்து மதத்தின், சாதியத்தின் வெறியாட்டத்திற்கு நாம் பலியாகவே இல்லையா? நரேந்திர மோடி, அமித்ஷா, ஆதித்யநாத் எனப் பெயர்கள் தான் மாறியிருக்கின்றன; ஆனால் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்படும் கொடுமைகளும் குற்றங்களும் மிகப் பழையவை இன்று நாம் அனுபவிக்கும் அத் தனை சமூக அநீதிகளும் இந்த மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளாக
உயிர்ப்போடு இருப்பவைதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சில பெயர்களை மட்டும் எதிரியாக்கி, ஏதோ அவர்களால் மட்டுமே அந்த அநீதிகள் நிகழ்த்தப்படுவதாக ஒரு பொய்யைக் கட்டமைத்து பின் அதையே நம்பத் தொடங்கி, பின் அதற்கெதிராக மூர்க்கமாகப் போராடவும் தொடங்கி விடுகிறோம். நாம் போராடுவது நாமே உருவாக்கிய பொய்யை எதிர்த்து என்பது நமக்கு மறந்தே போகிறது.
இந்தியாவில் என்ன பிரச்சனை நிகழ்ந்தாலும் 99 சதவிகிதம் அவற்றுக்குப் பின்னணியில் இயங்குவது சாதி ஆதிக்கவாதமே என்ற தெளிவு இப்போதும் கூட நமக்கு உருவாகவில்லை . கல்வி , பொருளாதாரம், சமூகம், அரசியல், பண்பாடு என வெவ்வேறு பெயர்களில் இழைக்கப்படும் அநீதிகளை சாதிக் கொடுமையாகக் கண்டுணர மறுக்கிறோம். சாதிக் கொடுமை என்றால் அது தலித்துகள் மீது மட்டுமே நடக்கக் கூடியது என இடைநிலைச் சாதிகள் நினைக்கின்றன. ஒடுக்குவதற்கு தாழ்த்தப்பட்டப் பிரிவினர் இருப்பதாலேயே அவைதம்மை ஆதிக்க சாதிகளாகக் கருதுகின்றன. உண்மையில் தாழ்த்தப்பட்டவர்களை விட சாதி இழிவில் சூத்திரச் சமூகமே உழல்கிறது.
உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர்களோடு ஒப்பிட்டும் இந்து மதத்தின் சாதிய விதிமுறைகளின்படியும் தமக்கு அளிக்கப்பட்ட இடம் என்ன என்பதை அகச்சான்றோடு அணுகி, தாம் அடிமையா? ஆதிக்கவாதியா? என்பதில் அவை தெளிவு பெற வேண்டும். தமக்கு இல்லாத சாதிப் பெருமையை, ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தி பார்ப்பனியத்திற்கு காலந்தோறும் அவை கைக்கூலிகளாக செயல்படுகின்றன. கருவறைக்குள் நுழைய முடியாது, பூணூல் அணிய முடியாது, துறவறம் பூணமுடியாது, ஆளும் வகுப்பினராக (Ruling Class) முடியாது எனப் பல இழிவுகளை இன்றளவிலும் சூத்திர ஜாதிகள் அனுபவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இந்து மத விதிப்படி சூத்திரராகப் பிறப்பவர் 'வேசி மகன்' என்ற அவமானம் இன்றும் சட்டப்படியே நீடிக்கிறது. ஆனால், இவர்கள் தமக்கு சாதி இழிவே இல்லை என நம்புவதோடு, அவ்வாறு நிகழும் சாதியப் பாகுபாடுகளை கல்வியுரிமை பறிக்கப்படுவதாக, பண்பாட்டு உரிமை மறுக்கப்படுவதாக, பொருளாதார உரிமை நசுக்கப்படுவதாக வெவ்வேறு பெயர்களிட்டு திரித்துக் கூப்பாடு போடுகின்றனர்.
ஜல்லிக்கட்டு எனும் சாதி உரிமையைப் பண்பாட்டு உரிமை என்றே அவை அழைத்துக் கொண்டன. தாமும் இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கிறோம் என்பதை மறைத்து கல்வி/வேலை வாய்ப்புகளில் தலித் மக்கள் மட்டுமே பயன்பெறுவதாகச் சொல்லி அதற்கெதிராக முழங்கின. நீட் தேர்வு என்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவப்படிப்புக் கனவைச் சிதைக்கும் பார்ப்பனியக் கூராயுதம் என்றாலும் அதை சாதிப் பிரச்சனை என்று சொல்லக் கூசி கிராமப்புற ஏழை மாணவர்களின் பாதிப்பு என்றன. 'நீட்' தேர்வைசாதிப்பிரச்சனை என்று சொல்லாதீர்கள்; நாங்களும்தான் அதில் பாதிக்கப்படுகிறோம்' என அனிதா மரணத்தின் போது போராடிய தலித்துகளை நோக்கி சமூக வலைத்தளங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பொங்கினர். சாதி பற்றிய அவர்களின் புரிதல் குறைபாடு இவ்வளவு மோசமானதாகத்தான் இன்றும் இருக்கிறது. பொருளாதார ரீதியாக ஏற்கனவே நசுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களான தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மேலும் சூரையாடியது இந்த அரசு. ஆனால் அதை கீழ் த்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரைப் பாடாய்ப்படுத்திய பொருளாதார சீர்கேடு என்று சொல்லத் தான் நமக்கு வாய் வந்ததே ஒழிய, சூத்திர மட்டும் பஞ்சமர்களின் சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக் கொள்ள குறிவைத்த சாதிப் போர் என அழைக்கும் அறிவில்லாமல் போனது.
சம காலத்தில் இப்படி ஒவ்வொரு பிரச்னையையும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்திய மண்ணில் அநீதி என ஏதேனும் ஒன்று நிகழுமானால் அதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும்: 1. பார்ப்ப னியம் 2. இந்து மதம் 3. சாதியம். இருபத்து நான்கு மணி நேரமும் பயங்கரமான பின்னணி இசையுடன் புதிய செய்திகளை 'பிரேக்' செய்யும் ஊடகங்களில் அல்லது ஒரு நூற்றாண்டு கால அனுபவம் கொண்ட பத்திரிகைகளில் எவை, எத்தனை முறை இம்மூன்று தலைப்புகளில் முக்கியச் செய்திகளை வெளியிட்டுள்ளன?
இன்றைய ஊடகங்கள் 'சாதிக் கொடுமை' என இப்போது புதிதாக நிகழ்வுகளைப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றன. காரணம், பத்தோடு பதினொன்றாவது பரபரப்பாக அதுவும் டி.ஆர்.பி.க்கு உதவக்கூடும் என்பதால். மறந்தும் அவை அத் தகைய வன்கொடுமைகளின் ஊற்றாக இருக்கும் இந்து மதம் மற்றும் பார்ப்பனியம் பற்றிப் பேசுவதில்லை. சாதிக் கொடுமை மாறும் பிரச்னையை அலசி ஆராயத் தயாராக இருக்கும் அவை, சாதி ஒழிப்பு எனும் தீர்வை நோக்கி ஒருநாளும் நகர்வதில்லை. அவ்வாறு தீர்வை பற்றி பேசப் போனால் தேவையில்லாமல் இந்து மதம், பார்ப்பனியம், மதமாற்றம் என எல்லாவற்றையும் விவாதிக்க (வண்டி வரும். அவர்களைப் பொருத்தவரை, அது நாட்டிற்கு நல்லதல்ல.
உண்மையில், இந்தியாவில் உள்ள இயக்கங்களுக்கு, கட்சிகளுக்கு, அமைப்புகளுக்கு, அரசுகளுக்கு, தொண்டு நிறுவனங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு, நீதித்துறைகளுக்கு ஊடகங்களுக்கு..... சாதி ஒழிப்பைத் தவிர, சாதி பிரிவினைவாதம் ஆள்கிற இச்சமூகத்தில் ( ஆற்றுவதற்கு வேறு கடமையே இல்லை எனலாம். அதுதான் முதன்மையானது. அதுதான் வேறு எப்பணியை விடவும் மேன்மையானது. ஆனால், 'என்னுடைய முதன்மைப் பணி சாதி ஒழிப்புதான்' என்று இயங்குவோர் சொற்பசிலராகவே இருக்கின்றனர். இது, இந்நாட்டில் அறவிழுமியமும் உண்மைத்தன்மையும் எந்தளவிற்கு செத்துக் கிடக்கிறது என்பதற்கான சான்று! ஒவ்வொரு முறை வன்கொடுமை, சாதிய வல்லுறவு, ஆணவக் கொலைகள் நிகழும் போதும் முற்போக்கு அமைப்புகள் விழித்துக் கொள்கின்றன.
சாதிக் கொடுமை என ஏதாவது நடக்க வேண்டும், அவற்றுக்கு. சாதியே கொடுமைதான் என்ற புரிதலுக்கு அவை இன்னும் வரவில்லை. அதனால்தான் சாதிக் கொடுமைக்கெதிராகப் போராடும் அவை சாதிக்கு எதிராகப் போராட மறுக்கின்றன. வல்லுறவு செய்யாமல், ஆணவக் கொலை நிகழ்த்தாமல், வன்கொடுமைகளை அரங்கேற்றாமல் இருந்து விட்டால், சாதி எனும் அமைப்பு வாழ்க்கைக்கு உகந்ததாகிவிடுமா? அணுக்களில் பதிந்து கிடக்கும் ஆயிரமாண்டு வன்மத்தைச் சுரண்டி அப்புறப்படுத்தி சமூகக் கலப்பையும் சக மனிதரை நேசிக்கும் பண்பையும் கற்றுத் தர வேண்டியது இயக்கங்களின் வேலை இல்லையா?
ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள் அதனால் அட்டூழியம் செய்கிறார்கள் என்றுதான் நாம் திரும்பத் திரும்ப குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நரேந்திர மோடி, இந்த அமித்ஷா, இந்த ஆதித்யநாத் மட்டுமா இங்கே நல்லிணக்கத்தை சீர்கெடுக்கின்றனர்? இந்திய மண்ணில் ஒவ்வொரு சாமானியருக்கும் கட்டுங்கடங்காத
சர்வாதிகாரத்தை வழங்கி இருக்கிறது இந்த சாதி அமைப்பு. பிறப்பால் யாராக இருந்தாலும் அவர்களின் இடத்திற்கேற்ப அந்த சர்வாதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 'உங்களின் காலுக்கு கீழே உள்ளவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் மிதித்து நசுக்கிக் கொல்லுங்கள்' என திருத்தி எழுத முடியாத ஓர் ஆணையை கட்டற்ற சுதந்திரமாக அது வழங்கியுள்ளது.
இடைநிலைச் சாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் தாழ்த்தப் பட்டவர்கள் படிநிலையில் கீழே இருக்கும் உட்சாதியினர் மீதும் ஒரே மாதிரியான சர்வாதிகாரத்தையே ஏவுகின்றனர். இங்கே கல்வி, பொருளாதாரம், அரசியல் என எந்த அதிகாரத்தையும் விட எந்த சாதியில் பிறக்கிறார் என்பதால் கிடைக்கும் பிறப்பு அதிகாரமே' எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. சக மனிதர்களை வன்மத்தால் வதைத்து, வெறுப்புணர்வால் வேரறுக்கும் இந்த சாமானியர்களின் சர்வாதிகாரம் தான் மிகவும் ஆபத்தானது. அமைப்பு ரீதியான, கருத்தியல் ரீதியான எந்த ஒருங்கிணைவும் ஓர்மையும் இல்லாத சாமானிய இந்தியர்கள் மிக இயல்பாக இந்த சர்வாதிகாரத்துக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
எல்லா சாதிக்கும் சம அதிகாரம் கிடைத்தால் பிரச்னை தீர்ந்து விடும், தமிழ்த் தேசியம் மலர்ந்தால் சாதி ஒழிந்துவிடும், தனித்தமிழ்நாடு கிடைக்கப் பெற்றால் மாற்றம் வந்துவிடும், தீண்டாமையை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும், பட்டாளிகள் ஒன்றிணைந்தால் புரட்சி வெடித்துவிடும், அரசியல் அதிகாரம் கிடைத்தால் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என ஆளாளுக்கு தமக்கு ஆதாயம் தரும் தீர்வுகளை வைத்துக் கொண்டு சாதியை அணுகுகின்றனர். இவர்கள் யாருமே இந்து மதத்தைப் பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை . சாதியம் குறித்து மிக மோசமான புரிதல் குறைபாடும் அறியாமையும் நிலவும் போது, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் எல்லோருமே கள்ளத் தனம் காக்கும் போது, இந்த மண்ணிலிருந்து சாதியை ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது.
இந்திய சமூகத்தில் சாதியை வேரறுக்கும் சரியான வழியைக் கண்டறிந்து அதை நிகழ்த்தியும் காட்டிய புத்தர், அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் வழிமுறைகள் இங்கே யாருக்கும் உவப்புடையதாக இல்லை. இந்தியாவில் சாதியை ஒழிக்கும்
பண்பாட்டுப் புரட்சியை சாத்தியப்படுத்தும் அவ்வழிமுறைகள் நெடுங்காலமாகப் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றை யார், எப்போது மீட்டெடுப்பது? இங்கே சாதி இன்னும் பயிர்த்திருக்கிறதெனில் நமது திரிபுவாதங்களும் சமரசங்களும் நேர்மைக்குறைவும் அறச்சிதைவுமே அதற்குக் காரணமாகும். அதனால் தான் நம்மால் சாமானியர்களின் சர்வாதிகாரத்தை அசைத்துப் பார்க்கவும் முடியவில்லை. சாமானியரையே நம்மால் மாற்றவும் திருத்தவும் முடியாத அவல நிலையில் சர்வாதிகாரிகளின் சர்வாதிகாரத்தை நம்மால் என்ன செய்துவிட முடியும்? இந்த உண்மையை இங்குள்ள சமூகப் போராளிகள், அறிவாளிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் பேராசை.
இங்கே எத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர்? ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் போன்ற விருதுகளை எழுத்தாளர்கள் வாங்குகின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாதியம் பற்றிய நேர்மையான பதிவைச் செய்துள்ளனர்? சாதிக்கு ஆதரவாக இயங்குவது மட்டுமல்ல; சாதிக்கு எதிராக இயங்காமல் தவிர்ப்பதும் சாதியவாதமே. இங்கே எழுத்தாளர்களே சாதிக் குழுக்களாகச் செயல்படுகின்றனர். ஒன்று சாதியின் தடயமே இல்லாமல் எழுதுவது அல்லது சாதியைப் பற்றி பெருமையாக எழுதுவது இந்த இரண்டே நிலைப்பாடுதான் செயல்பாட்டில் இருக்கிறது. இத்தகைய அறச்சிதைவு கொண்ட எழுத்தாளர்களைப் பெற்ற சமூகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் எழுதப்பட்டவை. மய்ய நீரோட்ட ஊடகங்களில் உண்மையை சாயம் நீக்கி, வேறொரு தோற்றத்தில் தான் அளிக்க வேண்டிவரும். ஆனால், இக்காலகட்டங்களில் ஆனந்த விகடனில் கருத்தியல் ரீதியான சில விஷயங்களை வெளிப்படையாக எழுத முடிந்தது. 'நிமிர்வோம்', 'பூவுலகு ' இதழ்களுக்கு எழுதப்பட்ட நீண்ட கட்டுரைகளை அவ்விதழ்கள் அப்படியே வெளியிட்டன. இந்த தொகுப்பில் வெவ்வேறு சூழல்களில் பேசப்பட்டு, பின்னர் வெளியிடப்பட்ட உரைகளும் அதன் தேவை கருதி சேர்க்கப்பட்டுள்ளன.
சாதி ஒழிப்புக் கருத்துகளை சமரசமின்றி எழுதவும் பேச வும் கிடைக்கும் வாய்ப்புதான் ஓர் எழுத்தாளராக என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது. அப்படியான வாய்ப்புகளை வழங்கிய இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வெளியிட்ட அத்தனை இதழ்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணிந்துரை எழுதச் சொல்லி தோழர் அழகிய பெரியவனிடம் கேட்ட போது, மிக உற்சாகமாக அடுத்த சில நாட்களிலேயே எழுதிக் கொடுத்து வியப்பூட்டினார். அவருக்கு என் சிறப்பான நன்றி. நூலை வடிவமைத்துத் தந்த ஆனந்தன், அட்டையை வடிவமைத்துத் தந்த மாரீஸ், இந்நூலை ஆர்வத்துடன் வெளியிடும் 'எதிர் வெளியீட்டகத்திற்கு என் நன்றி. அன்பும் புரிதலுமாய் நீங்காமல் அரவணைத்திருக்கும் மகள் நேயா மற்றும் குடும்பத்தினருக்கு என் பேரன்பு.
மார்ச் 8, 2018
ஜெயராணி
தொடர்புடைய மற்ற பதிவுகள்: