Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அணிந்துரை

தோழர் ஜெயராணியின் கட்டுரைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்கு அறிமுகமானவை. 'தலித் முரசு' இதழில்தான் முதன் முதலில் அவருடைய கட்டுரைகளை வாசித்தேன். அப்போதிலிருந்து தொடர்ந்து அவர்கட்டுரைகளைத் தேடி வாசிக்கிறவர்களில் ஒருவராக நான் இருக்கிறேன்.

தமிழில் பரவலான வாசகர் தளத்தைக் கொண்ட இதழ்கள் தொடங்கி, கருத்தியல் பிடிமானம் கொண்ட சிறு சிறு வட்டங்களால் வாசிக்கப்படும் சிற்றிதழ்கள் வரை அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

எதில் எழுதினாலும் அவரின் கட்டுரைகள் குன்றாத தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. சமகால தமிழ் அச்சு ஊடகத்தில் அவரைப் போன்ற நுண்ணிய பார்வையும், சமரசமற்ற கருத்தியல் தீவிரமும் கொண்ட பிறிதொரு எழுத்தாளுமையை என்னால் பார்க்க முடியவில்லை.

எனது இந்தக் கூற்றை மெய்பித்திடும் வகையில் இத்தொகுப்பின் கட்டுரைகள் இருப்பதை வாசிக்கும் உங்களால் நிச்சயமாக உணர முடியும். மிகப்பரவலான கவனத்தைப் பெற்ற அவரின் முந்தைய கட்டுரைத் தொகுப்பாகிய 'ஜாதியற்றவளின் குரல்' போலவே இத்தொகுப்பும் உக்கிரமான கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.

இன்று தமிழகத்தில் கொடும் வன்மம் தெறித்திடும் தனிமனித மோதல் ஒன்றை கட்டுரை எனும் வடிவம் உருவாக்கியிருக்கிறது. ஒரு வகையில் மிதவாத அல்லது சந்தர்ப்பவாத இந்து குரலுக்கும், தீவிரவாத இந்து குரலுக்கும் இடையே நிகழும் மோதல் இது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் இன்று நிலவும் தமக்குச் சாதகமான அதிகார சூழலினால் தீவிர இந்து குரல், சந்தர்ப்பவாத இந்து குரலை திராவிட மற்றும் தமிழ்த்தேசிய வாதத்தின் பக்கம் திருப்பிவிட்டு மேல் கையெடுக்க நினைக்கிறது. இது தமது அதிகார மற்றும் கருத்தியல் உறுதிப்பாட்டுக்கும், அரசியல் அறுவடைக்கும் உதவும் என்பது அவர்களின் கணக்கு.

கட்டுரைகள் ஆயுதங்களாக மாறக்கூடியவை!

தீவிரத்தன்மையோடு எழுதப்படும் கட்டுரைகள் எப்போதுமே சிறந்தவை. அவை கருத்தியல் மாற்றத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் தொடர்ந்த பொது வெளி உரையாடலுக்கும் உதவி செய்கின்றன. உலக மாமேதைகளின் ஆயுதம் கட்டுரையே.

நிகழ்காலச் சமூகத்தின் நிலையையும் அதன் செம்மைகளையும், இழிமைகளையும் சொல்வதற்கேற்ற சிறந்த எழுத்து வடிவம் கட்டுரைகளே என்பது என் கருத்து. சில கருத்தியல் தன்மைகளை முன்வைத்துச் சொல்வதென்றால் புனைகதைகளையும் கவிதைகளையும் விடவும் கட்டுரைகள் சிறந்தவை. கட்டுரைகள் வாசிப்பவரின் மனதுக்குள் நேரடியாக செய்திகளைக் கொண்டு சேர்த்து விடுகின்றன. ஒரு நோயாளியின் ரத்தக்குழாயில் நேரடியாக செலுத்தப்படும் மருந்துகளைப் போன்றவை கட்டுரைகள் என்றால் மிகையில்லை.

ஆனால் கட்டுரைகளுக்குத் தேவைப்படுபவையோ உண்மைகள். அந்த உண்மைகளைப் பகுப்பாய்வு செய்திடும் ஆய்வு குணம். அவற்றுள் ஊடுறுவும் திறன். இவை அனைத்தையும் விடவும் தேவையானது தான் கண்டடைந்த உண்மைகளை முன்வைத்திடும் அறச்சீற்றம்.

தோழர் ஜெயராணியிடம் உண்மைகளைத் தேடிச் செல்லும் அயராத முயற்சியும் அவற்றைப் பகுப்பாய்வு செய்திடும் குணமும் அவற்றைத் தேர்ந்த மொழியில் வெம்மை குறையாமல் முன்வைத் இடும் துணிவும் நிறையவே உள்ளன. ஜெயராணியின் பலம் அவரின் புதுப்பார்வையும் துல்லியமான மொழியும் என்பேன். அவரின் இந்தக் கூற்றைப் பாருங்கள்:

'நேர்மையான சிந்தனை இங்கு மாற்றுச் சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்றுச் சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை (இங்கே மாற்று ஊடகங்களாகிவிட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும் பொழுது போக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக, பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும் தானே!''

மாற்றுச்சிந்தனை என்ற சொல்லுக்கு ஜெயராணி முன்பு ஒரு கட்டுரையில் கொடுத்திருந்த இந்த விளக்கம் என்னை ஆழமாக யோசிக்கச் செய்தது.

ஜெயராணி தனது ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதாவது ஓரிடத்தில் நம்மை நிறுத்தி இப்படி யோசிக்க விடுகிறார். புதுச் சாளரம் ஒன்றை நமக்கு முன்பாகத் திறந்து வைக்கிறார்.

புனைகதைகளும், கவிதைகளும் பகிர்வு சுதந்திரத்தையும் கற்பனையின் அளவற்ற சாத்தியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. அது மட்டுமின்றி மொழியின் பலத்தையும் அழகியலையும் இலக்கணத்தையும் துணையாகக் கொண்டு உருப்பெறுகின்றன.

ஆழிப்பேரலை அழிம்புகளோ, சென்னையை மூழ்கடித்த செயற்கைப் பேரழிவோ, தானே புயலோ, ரோஹித் வெமுலாவின் மரணமோ... அவர் பார்க்கும் ஒவ்வொன்றும் நமக்கு அவற்றின் வேறொரு பக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. அது இந்தச் சமூகம் பார்க்க விரும்பாத, மறைக்க நினைக்கிற, மறந்துபோன பக்கம்.

ஜெயராணியின் எழுத்துகள் பொதுச் சமூகத்தின் சாதி வெறியை, ஆணாதிக்கத்தை, மதவாதத்தை, தொடர்ந்து தோலுரித்தபடியே உள்ளன. 'உங்கள் மனிதம் ஜாதியற்றதா?', 'எல்லோருக்கும் பெய்கிறது மழை; எல்லாருக்கும் கிடைப்பதில்லை நீதி', பேரிடரிலும் மனிதத்தை வழிமறிக்கும் ஜாதி' என்கிற மழைப் பேரிடர் குறித்து எழுதப்பட்ட மூன்று தொடர் கட்டுரைகளில், பெருவெள்ளத்தில் அடித்துப்போய்விடாமல் காப்பாற்றி நம் முன் ஜெயராணி வைத் திடும் உண்மை மனிதமுள்ளவரைவிடவும் மானமுள்ளவரை உலுக்குபவை.

மனிதம் மனிதம் என்று பசப்பும் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதியின் முகத்தை இக்கட்டுரைகளில் நாம் சந்திக்கிறோம். சென்னையின் மேட்டுக்குடி மீட்புப் பணிகளால் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்களையும், குறிப்பாக அம்மக்களில் அரச அடக்குமுறையால் வஞ்சிக்கப்பட்ட அருந்ததிய மக்களையும் ஜெயராணி மிகுந்த வலியோடு பதிவு செய்கிறார்.

இயற்கைச் சீற்றமோ, பேரிடரோ, போரோ, வறட்சியோ, நோயோ எதுவாயிருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது தலித் மக்களாகவே இருக்கின்றனர் என்ற சமூகவியல் உண்மையை இக்கட்டுரைகள் உரக்கச் சொல்கின்றன. மேல் கீழாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய சாதிய சமூகத்தில் அதிகாரமும் சுகபோகமும் மேலிருந்து கீழிறங்குபவையாக உள்ளன. துன்பமும் துயரமும் கீழிருந்து மேலேறுபவையாக உள்ளன. இந்த எதார்த்தத்தை இக்கட்டுரைகள் மிகக் கூர்மையாக மெய்ப்பிக்கின்றன.

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்தும் பெண் ஊடகவியலாளர்கள் குறித்தும் அவர் எழுதியிருப்பவையும், ஓர் ஊடகவியலாளராகத்தன் அனுபவத்தை முன்வைப்பவையும் அப்பட்டமான உண்மைகளைச் சொல்பவை. ஜனநாயகத்தின் நான்காவது தூண் சாதிக்கரையானால் செல்லரித்துக் கிடப்பதை அவரின் சொந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன. 'முப்பத்து மூன்று சதவிகித அரசியல் புரட்சி, நூறு சதவிகித கல்விப் புரட்சி, அய்ம்பது சதவிகித பொருளாதாரப் புரட்சி என பெண்கள் முன்னேற்றத்துக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூகப்புரட்சியில் ஒரு சதவிகித புரட்சிக்கான இலக்கையேனும் நாம் கொண்டிருக்கிறோமா?'' என்று அவர் கேட்பது நம்மை நெளியச் செய்கிறது. எத்தனை எத்தனை மாற்றங்கள் வரினும் வீட்டில் பெண் பெண்ணாகத்தான் இருக்க வைக்கப்படுகிறார். மதமும் சாதியமும் ஆணாதிக்கமும் அதை கட்டிக் காப்பாற்றுகின்ற அடியாள் வேலையை செய்துகொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் இலக்கியச் சூழலில் உடல் மொழி எனும் வெளிப்பாட்டு வாடிவம், பெண்ணெழுத்தின் புதுத்தன்மையாக ஓர் அலைபோல் எழுந்து உரக்கப் பேசப்பட்டது. இன்றளவும் கூட அது பேசு பொருளாகவே இருந்து வருகின்றது. பெண் எழுத்துகளை விமர்ச நாம் செய்யும்படி எனக்குக் கிடைத்த அரங்க மற்றும் எழுத்து வாய்ப்புகளில் அந்தக் கூறுமுறையில் இருக்கும் போதாமைகளை நான் பேசிவந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மிகச்சரியான கருத்துடன் வாதத்தை முன்வைக்க முடியாத போதாமை எனக்கு இருந்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் பெரியாராகும்போது ' கட்டுரையில் பெரியாரை துணை கொண்டு மிகக் கூர்மையாக 'உடல் மொழியின் உள்ளிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜெயராணி. என்னளவில் மிகச்சரியானதொரு புரிதலை எனக்குக் கொடுத்தக் கட்டுரை இது.

'மன்னித்துவிடு ரோஹித், தற்கொலை ஓர் அம்பேத்கரியவாதியின் செயலல்ல!' - இத்தொகுப்பில் எனக்கு மிக மிகப் பிடித்தமானதொரு கட்டுரையாக இது இருக்கிறது. ஜெயராணி அம்பேத்கரியலை எவ்வளவு ஆழமாகவும் நுட்பமாகவும் உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு இக்கட்டுரை சான்று பகர்கிறது. இந்தியாவில் நிகழ்த்தப்படும் தற்கொலைகளில் பெரும்பாலானவை தலித் மக்கள் மத்தியிலேயே நடக்கின்றன.

சமூகக் கேட்டை எதிர்ப்பதென்றாலும் சரி, நீட் டை எதிர்ப்பதென்றாலும் சரி, இங்கே ஒரு தலித்தான் தற்கொலை செய்து கொள்கிறார். தமிழ் மொழிக்காக தற்கொலை செய்து கொண்ட நடராசன் தொடங்கி கல்வி நிறுவன அடக்குமுறைக்காக தற்கொலை செய்து கொண்ட வேலூர் பிரகாஷ் வரை. ஏன் இப்படி?

நீண்ட வாசிப்பு அனுபவம் கொண்ட வேலூர் லிங்கம் ஒருமுறை என்னிடம், இந்திரா காந்தி கொலையுண்ட போது நாடு முழுக்கத் தற்கொலை செய்துகொண்டவர்களில் தமிழர்களே அதிகம். அதிலும் கூட, வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களிலும் தமிழர்களே அதிகமாக இருந்தனர். தமிழர்கள் எங்கு சென்றாலும் நாயக வழிபாட்டு நோயிலிருந்து குணம் பெறாதவர்களாகவே வாழ்கின்றனர்' என்று நேர் பேச்சில் சொன்னார். நான் அவரின் கூற்றை அடிக்கடி அசை போட்டபடியே இருக்கிறேன். அப்படி தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருவேளை தலித்துகள் அதிகமாக இருந்திருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறேன்.

ஏன் இந்த மரணங்கள் பிற சாதிகளில் குறைவாக இருக்கின்றன?கடவுளுக்கு நரபலி, போருக்கு களபலி, நீருக்கு கொடைபலி என ஏன் தலித் மக்களின் உயிர் மட்டுமே இருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எப்போதும் எனக்கு எழுவதுண்டு. இக்கேள்விகளுக்கு பதிலாக அம்பேத்கரிய கருத்தியலை தூக்கிப் பிடிக்காததே அல்லது உள்வாங்காததே என்கிறார் ஜெயராணி. இக்கருத்தோடு நான் முற்றிலுமாக உடன்படுகிறேன். தற்கொலைக்கு எவ்வளவுதான் தத்துவ முலாம்களைப் பூசினாலும் அது கோழைத்தனத்தின் வெளிப்பாடுதானே ?தலித் பார்வையில் சொல்வதென்றால் அது எதிர்ப்புணர்வற்ற சாதி அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. அவ்வளவே. ஆனால் எனக்கு வேறொரு காரணமும் கூட தோன்றுகிறது.

இந்திய தலித் மக்களிலேயே தமிழ் தலித் மக்கள் முற்றிலும் வேறானவர்கள். தமிழ் மண்ணில் முன்வைக்கப்படும் வீரம் சாதிவீரம் என்பதையும், இங்கு இன்றுவரை கொண்டாடப்படும் தனிமனித நாயக வழிபாடு தமிழரால் பெருமிதமாகச் சித்தரிக்கப்படும் நடுகல் வழிபாட்டின் நீட்சி.

தமிழர்கள் அம்பேத்கரியத்தை பெரியாரியலோடு சேர்த்து உள்வாங்காமல் திராவிடத்தோடு மட்டும் உள்வாங்கி குழம்பிப் போனவர்கள். இந்தப் பின்னணியில் பொதுவெளியில் நிகழும் தலித் தற்கொலைகள் கொண்டாடப்படும்போது அதற்கு தலித் மக்கள் இணங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அம்பேத்கரியம் அப்படியான கருத்தியல் அல்ல. எதிர்ப்புணர்வுதான் அதன் அடிப்படை. 'அம்பேத்கரிடமிருந்து அம்பேத்கரியவாதிகள் கற்கவேண்டிய முதல் பாடமே சோர்வின்மையும் நேர்மறை அணுகுமுறையும்தான். தன் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மரித்திருக்க வேண்டுமெனில் அம்பேத்கர் எத்தனை முறை மரித்திருக்க வேண்டும்?' - இது ஜெயராணி எழுப்பிடும் கேள்வி.

அம்பேத்கரின் குழந்தைமை தொடங்கி இறப்பு வரை அவரை ஒடுக்குமுறைகள் தொடர்ந்தபடியே இருந்தன. அவர் இறப்புக்குப் பின்னும் அவை தொடர்கின்றன. ஓர் அய்ந்தாண்டுகள் ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் போது நமது அரசியல்வாதிகள் சொல்லிக்கொள்ளும் 'நெருப்பாற்றில் நீந்தி பீனிக்ஸ் பறவையாக எழுந்தேன்' என்பன போன்ற வார்த்தை விளையாட்டல்ல அவரின் மீண்டெழல். அவரின் போராட்டங்களே உண்மையான போராட்டங்கள். மரணத்தை விடவும் கொடியது சக மனிதனின் ஒடுக்குமுறையே என்பதை உணர்ந்தவரால் இதை நிச்சயம் ஒப்புக்கொள்ள முடியும்.

ரோஹித் வெமுலா பற்றிய ஜெயராணியின் கட்டுரையை தமிழக தலித் மாணவர்கள் அத்தனை பேரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என விரும்புகிறேன் நான்.

'ஜெயலலிதா: இனி எதைப்பற்றி பேசவேண்டும் நாம்?' கட்டுரை ஜெயராணியின் துணிச்சலுக்கு உதாரணமான ஒன்று. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் நடத்திய தி.மு.க.வினர் கூட இப்படி ஒரு கட்டுரையை எழுதியதில்லை என்பேன்.

'ஆண்பால் பெண்பால் அன்பால் கட்டுரையில் ஆணும் பெண்ணும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற அம்பேத்கரிய அணுகுமுறையினூடனானதொரு அன்பு வாழ்க்கையை வாழ வழி சொல்கிறார். இது முற்றிலும் புதிய பெண்ணியம்.

'இந்திய ஊடகங்களில் சாதியம் நான் எதைப்பற்றி பேசவேண்டும்?' இத்தொகுப்பினுடைய மற்றொரு சிறந்த கட்டுரையாகும். ஒரு தலித்தாகவும் ஒரு பெண்ணாகவும் ஊடகத்துறையில் அவர் எதிர்கொள்ளும் தடைகளும் சவால்களும் சாதிய ஆணாதிக்க கோர முகத்தை காட்டுகின்றன. மய்ய நீரோட்ட காட்சி/அச்சு ஊடகங்களின் உரிமையாளர்களாக 95 சதவிகிதம் ஆதிக்கச் சாதியினரே உள்ளனர். 70- 80 சதவிகிதம் முக்கிய பொறுப்புகள் ஆதிக்கச் சாதி ஆண்களிடத் தில் உள்ளன என்பது ஜெயராணி காட்டும் அதிர்ச்சி தரத்தக்க புள்ளிவிவரம். பொறுப்புள்ள ஊடகவியலாளருக்குத் தேவையான இன்றியமையாத தகுதி, சாதி துறப்பே என்பது ஜெயராணியின் பரிந்துரை மட்டுமல்ல; அவர் கண்டடைந்திடும் உண்மை . உயர் சாதி ஊடகங்கள் அப்பட்டமாக மதவாதத்துக்கு துணை போகின்றன. இன்று இப்போக்கு மிகவும் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் காட்சி/அச்சு ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தல், எதிர்க்கருத்தை உருவாக்குதல் என்ற இரு நோக்கில்தான் தலித் செய்திகளை கையாண்டு வருகின்றன. இது அம்பேத்கர் காலத்திலிருந்தே நடந்து வருகின்ற ஒன்று. அம்பேத்கர் செல்கின்ற கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் எண்ணிக்கையை குறைத்தும் காந்தி, நேரு உள்ளிட்டோரின் கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் எழுதின. அம்பேத்கர் இந்திய சாதிய பெரு முதலாளிய பத்திரிக்கைகளை கடுமையாகச் சாடியிருக்கிறார். இன்று அவரைப் பற்றி நமக்குக் கிடைத்திடும் செய்திகளில் பெரும்பான்மையானவை நூல்கள், வெள்ளை அரசாங்க உளவு அறிக்கைகள், வெளிநாட்டு ஊடகங்கள் ஆகியவற்றின் வழியாகக் கிடைப்பவையே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊடகங்களின் சாதிய மனோபாவத்துக்கு மிக முக்கியமான அண்மைக்கால எடுத்துக்காட்டு, 'Dalit outreach with Ilayaraja's Padma Award' என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட செய்தி. அந்த நாளேடு மறுநாளே அப்படி ஒரு தலைப்பில் செய்தியை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. என்றாலும் அப்படி ஒரு தலைப்பில், கொஞ்சம் கூடத்தயங்காமல் செய்தியை வெளிடுவதற்கான மனத்துணிவை அப்பத்திரிகைக்குத் தருவது எது? சாதிய மனோபாவம் தானே?

தமிழ் நாளேடுகள் சாதி மோதல்களை இன்னமும் கூட 'இரு பிரிவினர் மோதல்', 'இரு சமூகத்தவர் மோதல்' என்றுதானே செய்திகளாய் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

எனக்கு கீழ்மட்ட செய்தியாளர்கள் பலருடன் அதிகமான நட்பும் அனுபவமும் உண்டு. இந்த சாதிய மனோபாவம் கீழ்மட்டத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. சிறிய நகரங்களிலிருந்து பெருநகரங்கள் வரை இருக்கும் செய்தியாளர்கள், செய்தி முகவர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினர் சாதி இந்துக்கள் தான் அப்படியே தலித்துகள் இருந்தாலும் யாருக்கும் தெரியாத லெட்டர்பேட் பத்திரிகைகளிலேயே இருக்கின்றனர்). அவர்கள் தொடக்கத்திலேயே தலித் வன்கொடுமைச் செய்திகளை வெளி வராதபடி தடுத்துவிடுகின்றனர் அல்லது திரித்து விடுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர் ஒருவர் தலித் மாணவர்களை கழிவறைகளைச் சுத்தம் செய்யும்படியும், தனது காலணிகளைத் துடைக்கும்படியும் கட்டாயப்படுத்துகிறார் என்று ஒரு தகவல் வந்தது. நான் உடனே மாவட்டத்திலிருக்கும் சில பத்திரிகை நண்பர்களுக்குச் சொன்னேன்.

அடுத்த நாளே செய்தி முகவர்கள், நிருபர்கள், கல்வி அதிகாரிகள் என ஒரு பெரும் கூட்டம் அப்பள்ளிக்குச் சென்றது. ஆனால் மறுநாள் ஒரு செய்தித் தாளில் கூட வன்கொடுமை செய்தி வரவில்லை. மாறாக, அந்தத் தலைமை ஆசிரியருக்கும் வேறொரு ஆசிரியருக்கும் இருந்த பிரச்சனை செய்தியாகியிருந்தது. அதுவும் கூட அந்த ஆசிரியர்களுடைய பெயர்களோ, பள்ளியின் பெயரோ வராதபடி மிகக் கவனமாக ஒரு பெட்டிச் செய்தியாக ஆக்கியிருந்தனர். குற்றமிழைத்தவரால் பெரும் தொகை ஒன்று எல்லோருக்கும் பங்கிட்டுத் தரப்பட்டது என அறிந்தேன். எனக்கு அதை அப்படியே விட்டு விட மனமில்லை . தமிழகத்தின் பிரபலமானதொரு கம்யூனிஸ்ட் நாளேட்டுக்கு அந்த நாளேட்டின் உள்ளூர் நிருபரிடம் செய்தி ஒன்றை அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். அவர் தலித் என்பதால் அதை உணர்வுப்பூர்வமாக செய்தார். ஆனால் அந்த தாளேடோ செய்தியின் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும் என்று கட்சியின் நகர பொறுப்பாளர்களை கிராமத்துக்கு நேரில் அனுப்பியது. அவர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லி அந்தச் செய்தியை நிறுத்தியதோடல்லாமல் அந்தச் செய்தியை எழுதியனுப்பிய உள்ளுர் தலித் நிருபரையும் வேலையிலிருந்து நீக்கும்படிச் செய்து தங்கள் சாதி அபிமானத்தை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டனர் (சாதிய வன்கொடுமை புரிந்த அந்த ஆசிரியர் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தில் உறுப்பினர். தங்கள் சங்க உறுப்பினரைக் காப்பாற்ற வேண்டியது சாதி ஒழிப்பைக் காட்டிலும் கட்சியின் சங்கத்தின் மேலான கடமையல்லவா?!). வெகுசன நாளேடுகளில் தான் இப்படி என்றால் கருத்தியலின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கும் நாளேடுகள் சிலவற்றிலும் கூட இந்தப் போக்கு உள்ளது என்பதை அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.

வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு அடுக்குகளில் இதைப்போன்று நடக்கின்றன. காட்சி ஊடக விவாதங்களில் தலித் சிக்கல்கள் விவாதிக்கப்படுவதில்லை. அப்படியே விவாதிக்கப்பட்டாலும் அவ்விவாதத்தில் எதிர்க் கருத்து கூறுபவர்களுக்கே அதிக நேரம் வழங்கப்படுகிறது. தலித் கொடுமைகள் தலைப்புச் செய்தியாகவோ, 'பிரேக்கிங் நியூஸ்' ஆகவோ வருவதேயில்லை . அச்சு ஊடகங்களிலும் இதே நிலை தான்.

நாம் இதைச் சுட்டிக்காட்டும்போது, கருப்பினத் தலைவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே வெள்ளையின நாளேடுகளும், வெள்ளையின செய்தியாளர்களும்தானே? என்று அமெரிக்க பத்திரிகைகளில் நிலவும் நிறவெறியைப் புறந்தள்ளி அங்கே சிலர் கூப்பாடு போட்டது போல் இங்கேயும் கூட போடுவார்கள் - நாங்கள் தான் அம்பேத்கரை பற்றி எழுதுகிறோம், அயோத்திதாசரைப்பற்றி எழுதுகிறோம் என்று.

இந்த சாதிய கொக்கரிப்பு எங்கிருந்து வருகிறது? அவர்களின் உடைமை மனோபாவத்திலிருந்துதானே? இந்த இடத்தில் தான் தலித் சார்பு ஊடகத்தோடு சேர்த்து, தலித் உரிமை ஊடகம் குறித்தும் நாம் வலுவாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

'தி இந்து'வுக்கு முன்னால் வெளிவந்த 'பறையனோ', 'தமிழனோ', 'உதயசூரியனோ', 'மூக்நாயக்கோ', அண்மையில் வந்து நின்றிருக்கும் 'தலித் முரசோ' ஏன் தொடர்ந்து வரவில்லை? வர முடியவில்லை?

இதற்கு தலித் மக்களின் சுரணையின்மை, ஆதரவின்மை என பல காரணங்கள் உள்ளன. தலித் உரிமைகளைப் பேசும் அரசியல் அமைப்புகளால் கவனம் செலுத்தப்படாத ஒன்றாக இது உள்ளது. இன்று சில தலித் அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் முரசொலியைப் போன்ற ஒரு கட்சிப் பத்திரிகையன்றி வேறல்ல. ஆனால் நமக்குத் தேவை அனைத்து தலித்துகளையும் உட்சாதி வேறுபாடின்றி இணைக்கிற - பிரதிநித்துவம் செய்கின்ற தலித் பத்திரிகை.

தலித் இலக்கிய நூல்களை வெளியிட ஆண்டுக்கு மூன்று பேருக்கு சுமார் இருபது ஆயிரம் வீதம் அரசு தற்போது கொஞ்சம் பணம் தருவது போல், ஏன் தலித் ஊடகத்துக்கும் பத்திரிகைக்கும் கொஞ்சம் கூடுதலாக நிதி தரக்கூடாது? இது குறித்து நாம் பரிசீலனை செய்திட வேண்டும்.

மதவாதம், குடி சீரழிவு என எதையும் ஜெயராணி தன் எழுத்து களில் தொடாமல் இல்லை. பொதுப் புத்தியில் ஊறிய, போலி சமத்துவம் பேசுகின்ற, சாதிய மதவாத ஆணாதிக்க மூளைகளுக்கு ஜெயராணியின் எழுத்துகள் எரிச்சலை உண்டுபண்ணலாம். ஆனால் அதுதான் அவர் வெற்றியும் பலமும். அவரே ஒரு கட்டுரையில் சொல்வதைப்போல, 'இவர்கள் எழுதினால் இப்படித்தான்' என்றும் கூட அவர்கள் சொல்லக்கூடும். ஆனால் தொடர்ந்து ஜெயராணி அப்படித்தான் எழுதவேண்டும்; எழுதுவார். ஏனெனில் அவர் அம்பேத்கரிய, பெரியாரிய பார்வையுடன் இருக்கிறார். இந்தியாவை புரிந்து கொள்வதற்கு இவ்விரண்டு ஆளுமைகளைவிடவும் சிறந்தவர்கள் எவருமில்லை என்பது என் துணிபு. ஜெயராணியின் கட்டுரைகள் காட்டும் சிக்கல்கள் இந்தியாவின் தேசியச் சிக்கல்கள். எத்தனை வல்லரசுக் கனவை ஊட்டினாலும் எவ்வளவுதான் அடி வயிற்றிலிருந்து தொண்டை கிழியக் கத்தினாலும் போலி மதச் சார்பின்மையைப் பேசினாலும் இந்த சிக்கல்களைத் தீர்க்காதவரை இந்தியாவுக்கு விடிவே இல்லை.

இது போன்றதொரு சிறப்பானதும் கூர்மையானதுமான கட்டுரை நூலை வழங்கியுள்ள தோழர் ஜெயராணிக்கு என் வாழ்த்துகள்.

அழகிய பெரியவன்
11,01.2018
பேரணாம்பட்டு

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு