வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/vaguppuvari-prathinithiththuvam-thru-v-ka-periyar-arikkai-por 
முன்னுரை

தந்தை பெரியாரை கண்விழிக்கச் செய்த காஞ்சிபுரம் மாநாடு

சு. ஒளிச்செங்கோ

தந்தை பெரியார் காங்கிரசில் 1919ல் சேர்ந்ததிலிருந்து 1925 வரையிலும் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாடுகளிலும் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு போனார். பார்ப்பனர்கள் திட்டமிட்டே நிறைவேறச் செய்யாமல் தடுத்தே வந்தனர். ஆனால் பெரியார் வகுப்புரிமையை பெற்றே ஆக வேண்டுமென்று மிக உறுதியாகவும் மிக வலிமையாகவும் போராடி வந்தார். பின்னாளில் அதில் வெற்றியும் பெற்றார்.

பெரியார், 'என்று சமுதாய அரசியல் வாழ்வு என்பது வகுப்புரிமைக்குப் பாடுபடும் வாழ்வாகவே அமைந்துவிட்டது' என்கிறார். காஞ்சீபுரம் மாநாட்டில் பெரியார் கொண்டுபோன வகுப்புரிமைத் தீர்மானத்தை நிறைவேறச் செய்து பெரியாரைப் பார்ப்பனர்கள் மகிழ்ச்சியுறச் செய்திருந்தால், தமிழ்நாடு என்னவா யிருக்கும்? தமிழ்நாடு மொட்டையாகிப் போயிருக்கும்.

தமிழர்களை நெகிழ்ச்சியுறச் செய்த சுயமரியாதை இயக்கமும் தோன்றியிருக்கமுடியாது. காஞ்சீபுரம் மாநாட்டிலிருந்து தாம் வெளியேறியது குறித்துப் பெரியார் 26.09.1926 குடியரசில் தற்கால நிலையும் நமது கடமையும் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ள வரலாற்று வைரவரிகளைக் காண்போம்:

'காஞ்சீபுரம் மாநாட்டு சம்பவங்கள் நன்மைக்கு ஏற்பட்டது என்றேதான் கொள்ளவேண்டும். அப்பொழுது நடந்த சம்பவங்கள் அம்மாதிரி நடந்திருக்கவில்லையானால் நாம் எவ்வளவோ ஏமாந்து போய் இருப்போம். அச்சம்பவமே நம் எல்லோரையும் கண்விழிக்கச் செய்தது. அம்மாநாட்டில் அம்மாதிரி நடை பெறாதிருந்தால் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி, சுயராஜ்ய உரிமை ஆகிய வார்த்தைகள் நம்மை ஏமாற்றி நாம் என்றென்றும் தலையெடுக்கமுடியாமல் நமது பார்ப்பனர்களால் அமுக்கப்பட்டுக் கிடக்க நேரிட்டு இருக்கும்.''

நான் பார்ப்பன நண்பனாக இருந்திருந்தால், இன்று தமிழ் நாட்டின் நிலை வேறாயிருக்கும், என் நிலையும் வேறாயிருக்கும். இன்றைய அரசியலின் 'டெட்லாக்' கூட இருந்திருக்க முடியாது. காஞ்சீபுரம் மாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்திய தேசத்திலேயே அரசியலிலும் சமுதாய இயல்களிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

ஒடுங்கியிருந்து உள்ளியது முடிக்கும் கொடுங்கால் கொக்குகளான பார்ப்பனர்கள், நீதிக் கட்சிக்கு எதிர்வினை ஆற்றல்களாக பெரியார், டாக்டர் நாயுடு, திரு.வி.க. ஆகிய மூவரையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ராஜ்மோகன் காந்தி எழுதிய ராஜாஜி வரலாற்று ஆங்கில நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இராஜாஜி பார்ப்பனரல்லாதார் வெறுப்பிலிருந்து தங்களைக் காக்கும் பொருட்டே நட்பு கொண்டார் என்றும் ஆனால் ராஜாஜியின் நட்பின் உள்வட்டத்தில் மூவரும் இல்லை என்று குறித்துள்ளார்; இது அரிய வரலாற்றுப் பதிவாகும்.

காங்கிரஸ் பார்ப்பனரால்லாதாருக்குள்ள பற்றுதலுக்கும் காங்கிரசைப் பார்ப்பனரல்லாதார் ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் ஆவோம் என்றும், வண்டிக்கு முன் பாரம் அதிகமானால் பின்புறம் கற்களைத் தூக்கி வைப்பது என்பது போல் எங்களை உபயோகித்துக்கொண்டனர் என்கிறார் பெரியார்.

காங்கிரஸிலிருந்து திரு.வி.க. விலகல்

காஞ்சீபுரம் மாநாடு 1925ல் நடந்த அடுத்த ஆகஸ்டு 1926ல் காங்கிரசிலிருந்து வெளியேறி - எனக்கினிய தொண்டு சன்மார்க்கத் தொண்டு புரிவேன் என்று விலகல்' அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.வி.க.வின் பிற்கால வாழ்க்கையில் தடுமாற்றமில்லாத மாற்றம் ஏற்பட்டு ஈரோட்டுப் பாதையில் நடைபயின்றார். சுயமரியாதை இயக்கம், தி.க கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொண்டு பேசிவந்தார். ஈரோட்டில் 1948 அக்டோபரில் மூன்று நாட்கள் நடந்த 19வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு திராவிட நாடு படத்தை திறந்து வைத்து திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று முழக்கமிட்டார்.

'சமஉரிமையும், வகுப்புச் சுதந்திரமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு காங்கிரஸ் போன்ற அரசியல் இயக்கம் இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடையோர் கடமை ஆகும்" என்று திரு.வி.க. குறிப்பிட்டிருக்கிறார்.

கையறு நிலையில் இருந்தேன்

ராஜாஜி ஏற்படுத்திய தடைகளை முறியடித்து காமராசர் 13.4.1954இல் முதல்வரானார். முதல்வர் காமராசரை நேரில் வாழ்த்திவர திரு.வி.க. அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு நீங்கள் எவ்வளவு பெரிய தடைகளைத் தாண்டி வந்திருக்கிறீர்கள். எந்த சக்தி இன்று நீங்கள் மேலே வர்றதுக்கு தடையாக இருந்ததோ, அதே சக்தி தான் எங்களுக்குத் தடையாக இருந்தது. இதே ஆச்சாரியாரை எதிர்த்துதான் நாங்கள் இன்று கட்சிக்குள்ளேயே போராடினோம். இவருடைய தொல்லை தாங்க முடியாததால் தானே பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.

காஞ்சீபுரம் மாநாட்டில் நானும் எதுவும் செய்ய முடியாதவனாக கையறுநிலையில் உட்கார்ந்து இருந்தேன் என்று முதல்வர் காமராசரிடம் கூறினார். கையறு நிலை என்றால் வருந்தி செயலற்று இருந்திடும் நிலை. இதிலிருந்து என்ன தெரிகிறது. திரு.வி.க. - எஸ். சீனிவாச அய்யங்கார், ஆச்சாரியார் ஆகியோரின் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது அல்லவா கைப்பாவை என்றால் அடுத்தவர் இயக்க, தான் இயங்கும் நிலை.

காஞ்சீபுரம் மாநாடு நிகழ்வுகள்

காஞ்சீபுரம் காமாட்சி நாடக அரங்கில் 31வது மாகாண காங்கிரஸ் மாநாடு 1925 நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. வை அலங்கரிக்கப்பட்ட குதிரை சாரட்டு வண்டியில் அமரவைத்து ஊர்வலம் புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது. எம். சிங்காரவேலு செட்டியார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முதல் நாள் மாநாடு பிற்பகல் 1-3 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அதில் முக்கியமானவர்களின் பெயர் விவரம் வருமாறு:

  • எஸ். சீனிவாச அய்யங்கார்
  • ஏ. ரெங்கசாமி அய்யங்கார்
  • டி.வி. வெங்கடராமையர்
  • சி.வி. வெங்கடரமண அய்யங்கார்
  • எம். கே. ஆச்சாரியார்
  • எஸ். சத்தியமூர்த்தி அய்யர்
  • ஆச்சாரியார் (ராஜாஜி)
  • ஈ. வெ. ராமசாமி நாயக்கர்
  • டாக்டர் வரதராஜுலு நாயுடு
  • சி.ஆர். ரெட்டியார்
  • ஓ. கந்தசாமி செட்டியார்
  • ஆர். கே. சண்முகம் செட்டியார்
  • டி.ஏ. இராமலிங்கம் செட்டியார்
  • எம். சிங்காரவேலு செட்டியார்
  • வி, சக்கரைச் செட்டியார்
  • கே. பாஸ்யம்
  • எஸ். முத்தையா முதலியார்
  • ஹமீது கான்
  • ஷாபி முகம்மது
  • எஸ். இராமநாதன்
  • கே. சந்தானம்
  • ஏ. இராமசாமி முதலியார்
  • குருசாமி நாயுடு
  • கண்ணப்பர்

மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் முத்துரங்க முதலியார் முன்பே எழுதிவைத்திருந்த நீண்ட வரவேற்புரையைப் படித்தார். அதில் நீதிக் கட்சியை மிக இழிவாக சாடி இருப்பதை பிரதிநிதியில் சிலர் ஆட்சேபித்தனர். வரவேற்புரை முடிந்ததும் பி.வி. நாயுடு தலைவர் பதவிக்கு திரு.வி.க. பெயரை முன்மொழிந்ததை எஸ். சீனிவாசய்யங்கார், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆதரித்துப் பேசினார்கள்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. முன்பே எழுதி வைத்திருந்த விரிவான தலைமையுரையைப் படித்து நிறைவு செய்து முடிந்ததும் இரங்கல் தீர்மானத்தைப் படித்தார். அதில் தேசபந்துதாஸ், வ.வே.சு அய்யர், கிருஷ்ணசாமி சர்மா, சுப்பிரமணிய சிவாம் - சர்.பி. தியாகராயர் நாகை நாயகம், பக்கிரிசாமி பிள்ளை ஆகியோர் மறைவுக்கு மாநாட்டினர் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

1. தேசிய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருள்ளும் பற்பல சாதியாருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கையும், துவேஷமின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜீய சபைகளிலும், பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என்ற இம்மூன்று பிரிவினருக்கும், தனித் தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டு மென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

2. தேசிய ஒற்றுமையையும் பற்பல சமூகத்தாரின் தன்மைகளையும் உத்தேசித்து, கான்பூர் காங்கிரசில் சட்டசபைத் தேர்தல்களை காங்கிரஸ் நடத்தும்படி தீர்மானித்த பிறகு நமது மாநிலத்தில் அத்தேர்தல்களை நடத்தும் பொருட்டு ஒரு தேர்ந்தெடுக்கும் கமிட்டியை நியமித்து நடத்தி வைப்பது அவசியமாகும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

முதல் தீர்மானத்தை ஈ. வெ. இராமசாமி நாயக்கரும் எஸ். இராமநாதனும் கொண்டுவருவதாக இருந்தனர். மற்றது விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு டாக்டர் வரதராஜுலு நாயுடு வழிமொழியப்பட்டிருந்தது. முதல் தீர்மானம் விஷயாலோசனைக் கமிட்டியில் அடிபட்டுப்போனது. இரண்டு தீர்மானங்களும் ஒழுங்குக்கு மாறானவையாதலால் அவற்றைப் பிரேபிக்க அனுமதிக்க முடியாதென்று தலைவர் திரு.வி.க. தெரிவித்தார்.

ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தீர்ப்பை ஆட்சேபித்தார். தீர்ப்புக்குக் காரணம் உண்டா? தலைவரின் யதேச்சதிகாரந்தான் காரணமென்று அவர் வினவினார். சபையோர் தலைவர் தீர்ப்புக்கு உட்பட வேண்டு மென்று கூக்குரலிட்டனர்.

நான் தலைவரிடம் பேசுகிறேன், அவர் என்னை வெளிப் படுத்தவும் அடக்கவும் உரிமையுடையவர். அவர் உத்தரவின்றி மற்றவர் கலவரம் செய்தால் நாம் சும்மாயிருக்க முடியாதென எச்சரிக்கை செய்தார். அப்போது தலைவர் திரு.வி.க. எழுந்து, தாம் எவ்வித அடக்குமுறையும் கையாளவில்லையென்றும், தலைவர் என்ற முறையில் தமது கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும், சட்டசபை வேலையை காங்கிரஸ் மேற்கொள்ளவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறாத படியாலும், அவ்வேலையை நடத்த சுயராஜ்யக் கட்சிக்கே அதிகாரம் கொடுத்திருப்பதாலும், சட்டசபை வேலைக்கே உரிய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பற்றி யோசிக்க உரிமையில்லை என்றும் சுயராஜ்யக் கட்சிக் கூட்டத்திலேயே இதைப் பற்றி ஆலோசித்தல் வேண்டுமென்றும், ஆதலால்தான் தாம் தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.

உடனே பெரியார், எஸ். இராமநாதன், சுரேந்திரநாத ஆரியா, சக்கரைச் செட்டியார் மாநாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்ட னர்.

மாநாட்டிலிருந்து பெரியார் அவரது நண்பர்களுடன் வெளியேறிய பின்பு தலைவர் திரு. வி.க தனது முடிவுரையில், என் மனத்தை மட்டும் ஒன்று வருத்துகிறது. என் அரிய நண்பர்கள் என்மீது பழி கூறிவிட்டு வெளிச் சென்றார்கள். அப்பழி என்னைச் சாராது அவர்கள் கருதுமாறு எவர் தூண்டுதலால், அதிகாரத்தால் - வகுப்புத் தீர்மானத்தை யான் வீழ்த்தவில்லை. மனச்சாட்சி வழிநின்று நியாயவரம்புக்கு உட்பட்டே என்று கடனாற்றுவேன். எனது விருப்பத்திற்கு யான் கட்டுப்பட்டவனல்லன். யான் கூறிய காரணம் நியாயமானதே.

நான் கலாசாலையை விட்டு நீங்கி தேசியத் தொண்டில் தீவிரமாக இறங்கிய பிறகு இரண்டு முக்கிய காரணம் உண்டு. முதலாவது யான் பெரிதும் போற்றி வந்த பெஸண்ட் அம்மையார் சார்பில் வைக்கப்பட்டதாகும். இரண்டாவது காரணம் அப்போது தோன்றிய ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்துத் தேசத்தில் ஒற்றுமை நாட்ட வேண்டு

மென்ற விருப்பமாகும். பிராமணர் - பிராமணரல்லாதார் வேற்றுமை முழுவதும் ஒழிந்த பின்னரே சுயராஜ்யத்திற்காக உழைக்க வேண்டு மென்று சொன்னால், யான் அதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவ்வாறு குறிப்பிட்டார்

தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் தோல்வியடைந்த வகுப்புரிமைத் தீர்மானம், அதனைத் தொடர்ந்து திரு.வி.க - பெரியார் இருவருக்கும் நடந்த அறிக்கைப் போர் குறித்த இந்த நூலை வெளியிடுவதில் பேரார்வமும் பெருமிதமும் கொண்ட சந்தியா நடராஜன் அவர்களுக்கும், நூலைத் தொகுப்பதில் உதவியாக இருந்த என் மகன் சுந்தரபுத்தன் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும்.

நவசக்தி இதழ்களிலிருந்து திரு.வி.க அறிக்கைகளையும், திராவிடர் கழகம் வெளியிட்ட குடியரசு இதழ்த் தொகுப்புகளிலிருந்து பெரியார் அறிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.

இந்த இதழ்களுக்கும் குறிப்பாக 'பெரியார் விருது' அளித்து என்னை கௌரவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்கொடுத்தவனிதம்

09.07.2019

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog