திருச்சி வெ.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/trichy-ve-aanaimuthu-karuthu-karuvoolam
 
முன்னுரை

அறிவுலகில் பேராளுமை செய்த அய்யா தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் முடிந்த வரை தொகுத்து, முதன்முதலில் முப்பெரும் தொகுதிகளாக்கித் தமிழர்க்குத் தந்தவர் பெரியாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ஆவார். 2010 இல் விடுபட்ட பெரியாரின் பிற படைப்புகளையும் சேர்த்து 20தொகுதிகளாக அவர் வெளியிட்டார்.

90 அகவையைத் தொடும் நிலையிலும் 20 அகவை இளைஞரைப்போல இன்றும் இவர் இயங்கிவருகிறார். 1950 முதலே பெரியாரின் அணுக்கத் தொண்டர் ஆனார். 1963 முதல் பெரியாருடன் அன்றாடம் கலந்து பேசிக் கொள்கைகள் பற்றி அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். 1950இல் ‘குறள்மலர்’ இத ழையும், 1957 முதல் ‘குறள்முரசு’ ஏட்டையும் நடத்தினார். 1974 முதல் இன்றுவரை ‘சிந்தனையாளன்’ ஏட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

1946-1948இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலைக் கல்வி வரை பயின்றவர். அடங்காத அறிவு வேட்கையினரான தோழர் ஆனைமுத்து, சமூகம், சட்டம், அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு செலுத்தித் தாமே கற்றுத் தலைசிறந்த சிந்தனையாளர் ஆனார்.அவரின் அறிவுத்தெறிப்பில் 16 நூல்களாக இப்போது வெளிவந்துள்ளவையே ‘திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’என்கிற உயரிய தொகுப்பாகும்.இத்துடன் பிற ஐந்து நூல்களையும் சேர்த்துப் பதிப்பித்து 21 தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

1. அறிவுநெறி அடிக்கற்கள்

1950 முதல் வெளிவந்த குறள்மலர் ஏட்டில் 47 கட்டுரைகளும், 1957 முதல் வெளிவந்த குறள்முரசு ஏட்டில் 36கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையான ஆழமான பல அரிய செய்திகள் இப்படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.1947இல் குமரன் இதழுக்கு இவர் எழுதிய ‘சாதி தொலைந்ததெனச் சாற்று’ என்கிற ஈற்றடி வெண்பா, அண்ணா நடத்திய திராவிட நாடு 1947 மே மலரில் தடித்த எழுத்தில் இடம்பெற்றது என்கிற புதிய தகவலை இந்நூல் கொண்டுள்ளது.

2. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி

இந்நூல் ‘சிந்தனையாளன்’ஏட்டில் தொடராக வந்தபோது தமிழ்நாட்டில் கற்றவர் நடுவில் பெரிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியதொரு படைப்பாகும்.ஆனைமுத்து அவர்களின் ஆழ்ந்த இலக்கண-இலக்கியப் புலமைக்கும், தமிழரின் வாழ்வியல் நெறி பற்றிய கறாரான கருதுகோளுக்கும் மிகப்பெரிய கருத்துப் பெட்டகமாக இந்நூலைக் கருதலாம்.தமிழர்தம் இல்லங்கள் தோறும் கட்டாயம் இடம்பெற வேண்டிய ஒப்பற்ற படைப்பு இது.

3. இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி

பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புக் கல்வி மட்டுமே பெற்ற வே.ஆனைமுத்து உழைப்பின் ஒளி யாய் நின்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆழ்ந்துகற்றார்.உலகின் பல்வேறு நாடுகளின் சட்டப் புத்தகங்களையும் தேடித் தேடிப்படித்தார்.தம் தேடுதலில் கிடைத்த பட்டறிவைக் கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடியான சட்டமே; இந்நாட்டின் உழைக் கும் மக்களுக்கு எதிரான சட்டமே என்பதை அசைக்க இயலாத சான்றுகளுடன் இந்நூலில் எண்பித்துள்ளார்.

4. விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு

இந்தியாவின் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீட்டு வரலாற்றில் அழிக்க முடியாத பெயராய் விளங்கு வது தோழர் வே. ஆனைமுத்துவின் பெயராகும். அரசமைப்புச் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு பெற இவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களாய் மின்னுபவை ஆகும்.இன்றும் எல்லாப் பிரிவார்க்கும் 100 விழுக்காடும் உரிய முறையில் பங்கிடப் பெறத் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நூல் அப்போராட்டம் பற்றிய விரிவான வரலாற்று ஆவணம்.

5. நாத்திகர் போர்வாள்

இந்நூலும் சிந்தனையாளன் ஏட்டில் தொடர் கட்டு ரையாக இடம்பெற்றது. ‘நாத்திகம்’ ஒரு வாழ்க்கைநெறி.அறிவு விடுதலையின் திறவுகோல்.பெரியார் தொண்டர்கள், பொதுவுடைமைத் தோழர்கள், மக்கள் விடுதலை அவாவும் அனைத்துத் தோழர்கள் என எல்லோரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.

6. மார்க்சியப் பெரியாரியம்

1976இல் தோற்றங்கண்ட மா.பெ.பொ.க. “இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதருமக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்”என்கிற உயரிய குறிக்கோளோடு செயலாற்றி வருகிறது.ஒரு கொள்கை ஆவணம் போல் திகழும் இந்த நூலில் மார்க்சியம் பெரியாரியம்,மார்க்சியப் பெரியாரியம் ஆகியவற்றுக்கான விளக்கம், பெரியார் கொள்கை வெற்றிக்குப் பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டிய பணி போன்றவை குறித்து மிகத்தெளிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.மக்கள் விடுதலையை நாடுவோர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த படைப்பு இது.

7. இயக்கம்

பெரியாரின் அணுக்கத் தொண்டராய்-அவரின் உயரிய நம்பிக்கையைப் பெற்றவராய் விளங்கித் திராவிடர் கழகத்தில் பணியாற்றிவந்த தோழர் ஆனைமுத்து,பெரியாரின் மறைவுக்குப்பின் அந்த அமைப்பி லிருந்து வெளியேற்றப்பட்டார்.1976-இல் பெரியார் சம உரிமைக் கழகம் என்கிற தனி அமைப்பைத் தோற்றுவித்தார்.அதுவே மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாய்ப் பெயர் மாற்றம் பெற்றது.மா.பெ.பொ.க.யும், அதன் சார்பு அமைப்பான அனைத் திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும்,தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மேற்கொண்ட கிளர்ச்சி கள், பரப்புரைகள் அரசியல் சமுதாயத் தளத்தில் ஆற்றிவரும் பணிகள் ஆகியவை பல்வேறு தலைப்பு களில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

8. அரசியல்-தமிழ்நாடு

‘சுயமரியாதை இயக்கத்தின் இறுதி இலக்கு பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதே’ என 1931இலேயே உறுதிபட உரைத்தார் பெரியார்.பெரியாரியத்தை ஏற்றுக்கொண்ட ஆனைமுத்து இச்சிந்தனைப் போக்கில் தமிழக அரசியலை உள்வாங்கி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.இதில் இடம்பெற்றுள்ள ‘தமிழால் ஏய்க்கும் தமிழர்கள்’ எனும் தொடர் கட்டுரைத் தனிநூலாகவும் வெளிவந்துள்ளது.

9. அரசியல்

இந்தியா, உலகம் இந்திராவின் நெருக்கடிகால ஆட்சி, விவசாயிகள் நிலை, தனியார் சொத்துரிமைச் சட்டம் உள்ளிட்ட இந்திய அரசியல், பொருளியல், சமூகவியல் பற்றிய விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், மூன்றாம் உலகப் போர் மூளுமா? சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சி போன்ற உலக அரசியல் செய்திகளையும் இந்நூற் கட்டுரைகள் விவாதிக்கின்றன.

10. தேசிய இன விடுலை

‘தேசிய இனப்பிரச்சினை: தேசவிரோதம் ஆகுமா?’, ‘சுதந்தரத் தமிழ்நாடு: ஒரு சிந்தனை’, ‘இந்திய தேசிய இனங்களின் விடுதலை நம் கடமை என்ன?’, ‘தமிழ்த் தேசத் தன்னுரிமை’, ‘தமிழ்த் தேசியமும் கூட்டாட் சியும்’ உள்ளிட்ட அறிவுகொளுத்தும் ஆழமான கட்டு ரைகள் இடம்பெற்ற நூல் இது.தேசிய இனங்களின் விடுதலை ஒளியில் தாய்மொழிக் கல்வியின் தேவை, தூக்குத் தண்டனை ஒழிப்பு, பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சிக்கல்களுக்கான தீர்வுகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

11. ஒடுக்கப்பட்டோர் விடுதலை

உலகில் பிற நாட்டு மக்களுக்கிடையே இல்லாத பெருங்கேடு, இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே வாய்த்துவிட்ட கழுவ முடியாத கறை என்பது சாதி, தீண்டாமைக் கொடுமையாகும். ஆளும் வகுப்பார், அரசியல்வாதிகள், காவல்துறை, நீதிமன்றம், உயர் அதிகார வர்க்கம் போன்ற அனைத்துமே இங்குள்ள வெகுமக்களுக்கு எதிராகவே நடந்துகொள்ளும் போக்கி னையும், இதற்கான தீர்வையும் முன்வைக்கும் அரிய கட்டுரைகளின் தொகுப்பு.

12. தமிழீழ விடுதலை

இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கு முனையில் கடல் நடுவே கண்ணீர் துளியாய்த் தத்தளிக்கிறது தமிழீழம். தமிழீழ மக்களின் போராட்டம் நெடியது. வரலாற்றில் அம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வஞ்சம் கொடியது. இன்றுவரை ஈழச்சிக்கலில் இந்திய ஆட்சி யாளர்கள் செய்துவரும் இரண்டகம் மன்னிக்கவே முடியாதது. வே. ஆனைமுத்து பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழ மக்களின் தாளமுடியாத துயர்களை எண்ணிக் கண்ணீர் வடிப்பவர். நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்த்துத் திரும்பியவர்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், சுபதமிழ்ச் செல்வன் ஆகியோரை நேரில் கண்டு உரையாடியவர்.ஈழச் சிக்கலுக்குத் தீர்வாக அவர்முன் வைக்கும் அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய மிகமிக இன்றியமையாத நூல்.

13. காலப்பதிவுகள்

காலம் என்பது காட்டாறு போல ஓடிக்கொண்டே இருப்பது. ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’என மனித வாழ்வின் நிலையாமையை மணிச்சுருக்கமாய்ச் சொன்னார் குறளாசான்.இந்நூலில் வே.ஆனைமுத்து தமக்கு அணுக்கமாய்த் திகழ்ந்த, தாமறிந்த தோழர்களின் மறைவுகள் குறித்து எழுதிய இரங்கற் செய்திகள், பிறர்க்கு வழங்கிய நூல் மதிப்புரைகள், பல்வேறு ஏடு களில் வந்த அவரின் நேர்காணல்கள் உள்ளிட்டவற்றைத் தொகுத்துக் காலப்பதிவுகளாகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். வருங்காலத் தலைமுறையோர்க்கும் இஃது வழிகாட்டும்.

14 & 15 பெரியாரியல் - பகுதி 1, பகுதி 2

தொண்டுசெய்து பழுத்த பழமாய் விளங்கிய தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்வின் பன்முகப் பண்புக்கூறுகளை நுணுகி நுணுகி ஆராய்ந்த மதி நலச் சிறப்புடையார் தோழர் வே. ஆனைமுத்து. இந்நூல் பெரியாரின் தனித்தன்மைகள் குறித்து மிக எளிதில் எல்லாத் தரப்பாரும் புரிந்துகொள்ளும் தன்மை யில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் என்கிற ஆகச்சிறந்த ஆளுமையைப் பற்றி மணிச்சுருக்காய் அறிந்திட இதனி னும் சிறந்த நூல் வேறில்லை என்றே சொல்லலாம்.

16. பெரியார் ஈ.வெ.ரா. பயணக் காலக் கண்ணாடி

‘ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ தொகுப்பில் இந்நூல் பலவகையிலும் தனித்தன்மை வாய்ந்தது. தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே உழைத்த மாபெரும் தலை வர் பெரியார் ஆவார்.செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளை யாய்ப் பிறந்தும் ஒரு துறவியைப் போன்ற தூய-எளிய-ஈக வாழ்வு வாழ்ந்த அந்த மக்கள் தலைவரின் வாழ்க்கைச் சுவடுகளை -அன்றாட வாழ்வின் நிகழ்வு களை -காலக் கண்ணாடியாய்க் காட்டும் வரலாற்று ஆவணம்.மிகுந்த பொறுமையும், அரிய தேடலும் கொண்டு, ஒப்பரிய தம் உழைப்பை ஈந்து தோழர் ஆனைமுத்து நமக்கு வழங்கியுள்ள வித்தகம் மிக்க புத்தகச் சொத்து இது.

ஆனைமுத்து பதிப்பித்துள்ள 5 நூல்கள்

1, 2 - தத்துவ விவேசினி தொகுதி 1, தொகுதி 2:

19ஆம் நூற்றாண்டைய பகுத்தறிவுக் கிழமை இதழாகிய தத்துவ விவேசினி, பு. முனிசுவாமி நாயக ரால் 1882 முதல், 1888 வரை நடத்தப்பட்டதாகும். ‘தத்துவ விவேசினி என்பதற்கு உண்மையை விளங் கச் செய்யும் பத்திரிகை என்பது பொருள்’என மிகச் சுருக்கமான விளக்கம் இந்நூலுக்குத் தரப்பட்டுள்ளது.19ஆம் நூற்றாண்டிலேயே நாம் எண்ணி எண்ணி வியக்கத்தக்க நாத்திகக் கருத்துகளை, அறிவியல் செய்தி களை, மிக முற்போக்கான உலக நடப்புகளை வெளி யிட்ட இதழ். இவ்விரு தொகுப்புக்கும் வே. ஆனைமுத்து வழங்கியுள்ள ஆராய்ச்சி முன்னுரை மிக ஆழமானது. படிப்போரை மலைக்கச் செய்வது. இவ்விரு தொகுதி களும் பதிப்புலகில் ஒரு சாதனை.

3. The Thinker:

தத்துவ விவேசினியை நடத்திய முனிசாமி நாயகர் ஆங்கிலத்தில் நடத்திய இதழ். இவ்விதழ்களில் அய்ரோப்பிய எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை மிகச் சிறந்த தருக்க ஆற்றலுடன் அழகிய சிறந்த ஆங்கிலப் புலமையுடன் படைத்தளித்துள்ளது வியக்கத்தக்கதாகும்.தத்துவ விவேசினி நூலுக்குரிய அத்தனை சிறப்புகளும் இதற்கும் உண்டு.

4. மத விசாரணை:

இந்நூலாசிரியர் சுவாமி சிவானந்த சரசுவதி என்பவர்தான் பெரியாரால் வெளி யிடப்பட்ட ‘ஞானசூரியன்’ என்னும் நூலுக்கும் ஆசிரியர். ‘பணம் பிடுங்கிப் பார்ப்பனர்கள்’, ‘கைவல்யம் கலைக்கியானம்’போன்ற நூல்களும் இவரால் எழுதப் பட்டவையாகும்.மதவிசாரணை நூலில் வேதம், இதிகாசம் போன்றவை பற்றி மிகமிக ஆழமாக எழுதப் பட்டுள்ள செய்திகள், அறியாமை இருள்நீக்கும் ஒளிச் சுடர்களாகும்.

5. நானும் என் தமிழும்:

தோழர் சங்கமித்ரா ஆனைமுத்து அவர்கள் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். ஆனைமுத்துவின் அத்தனை எழுத்துக் களும் அச்சாக்கம் பெற வேண்டும்என்னும் பெரு விருப்போடு இரண்டு இலக்கம் ரூபாயைத் தோழர் களிடம் நன்கொடையாகத் திரட்டித் தந்தவர். அவரின் இறுதிமுறி இந்நூல் என்றால் அது மிகையில்லை. 75 பக்கங்களே கொண்ட இக்குறுநூல் தமிழ் மேம்பாடு தொடர்பான ஏராளமான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

நம் காலத்தின் அருமருந்தாய் வெளிவந்துள்ள தோழர் வே.ஆனைமுத்துவின் இந்த அரிய கருத்துக் கருவூலம் உள்ளிட்ட 21 நூல்களின் மொத்த விலை ரூ.6260 ஆகும். தமிழ் மக்களின் நலன் பொருட்டு ரூ.4500/- விலைக்கே கிடைக்கிறது.

நன்றி:கீற்று

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog