தொல்காப்பியப் பூங்கா - முன்னுரை

தொல்காப்பியப் பூங்கா - முன்னுரை

தலைப்பு

தொல்காப்பியப் பூங்கா

எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி
பதிப்பாளர்

பூம்புகார் பதிப்பகம்

பக்கங்கள் 560
பதிப்பு NO
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.450/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/tholkapiya-poonga.html

 

முன்னுரை

அண்மையில் கருணாநிதி அவர்கள் அடையாற்றில் அமைய உள்ள பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என்று பெயர் சூட்டினார். தமிழில் பெரும் புலமை வாய்க்கப் பெற்ற அவர் தொல்காப்பிய பூங்கா என்ற பெயரில் ஒரு நூலும் எழுதியுள்ளார். தொல்காப்பியத்தைப், படித்து அதில் மூழ்கிப் போன அவர் அந்த நூலின் விலை 500 ரூ என்று வைத்து தமிழ் கூறும் நல்லுலகில் யாரும் எளிதில் அதைப் படித்து விடாதபடி பார்த்துக் கொண்டார்.

அத்துடன் நில்லாமல் தொல்காப்பியர் தமிழர், வள்ளுவருக்கும் மூத்த தமிழர் முதல் தமிழர் என்ற புகழாரம் வேறு சூட்டியுள்ளார். தொல்காப்பியர் தமிழரா என்ற செய்தி ஒருபுறம் கிடக்கட்டும்; அவர் வள்ளூவரோடு ஒப்பிடத் தகுதி வாய்ந்தவர்தானா? குறோளோவியம் தீட்டி 133 அடி உயர சிலை அமைத்த கருணாநிதி அவர்களுக்கு அது தெரியாதா? மனுநீதியின் மறுபதிப்பு தொல்காப்பியம். அடுத்து மனுநீதி நூலைப் படித்து விட்டு அதற்கு ஒரு உரை எழுதி மனிதநேய மனுமணி மண்டபம் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

தொல்காப்பியரைப் பற்றி பெரியார் கூறியதை கருணாநிதி அவர்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

"தொல்காப்பியன் ஒரு ஆரியக் கைக்கூலி. ஆரிய தருமத்தையே தமிழருக்கு இலக்கணமாகச் செய்துவிட்டுப் போனவன்". ஒரு வேலை இதைக் கருத்தில் கொண்டுதான் கருணாநிதி தொல்காப்பிய பூங்கா என்று பெயர் வைத்தாரோ என்னவோ! அது செல்க

கருணாநிதி கொட்டாவி விட்டாலும் கூப்பாடு போடும் தமிழ்த்தேசியர்கள் இதைக்குறித்து அமைதி காப்பது ஏன்? அவர்கள் எப்படி எதிர்ப்பார்கள்? தொல்காப்பியத்தின் ஒரு நுனியைக் கருணாநிதி பிடித்திருகிறார் என்றால் அதன் மறுநுனியைத் தாங்கி நிற்பவர்கள் அல்லவா அவர்கள்?

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்". பெருமை அதிகாரம் குறள் எண் 2

இதன் பொருள், எல்லா உயிர்களும் பிறப்பின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று நிகரானவையே. செய்யும் தொழிலில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் சிறிது ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம். ஆனால், பிறப்பினால் அனைவரும் ஒன்றே என்று கூறுவது வள்ளுவர் கருத்தாகும்.

ஆனால், தொல்காப்பியர் தமிழர் சமுதாயத்தை அரசர், அந்தணர், வைசியர், வேளாளர் என்று நான்காகப் பகிர்ந்து வைத்துள்ளார். மேலும், இவற்றை பிறப்பின் அடிப்படையிலேயே செய்துள்ளார்.

உயர்ந்தோர்க்குரியன ஒத்தினான [அகத்திணை 39]

வழக்கெனப்படுவதுஉயர்ந்தோர் கூற்றே, நிகழ்ச்சி

அவர் சுட்டு ஆதலும் [மரபியல் 94]

"இங்கு வழக்கெனப்படுவது உயர்ந்தோர் வழக்கு, இழிந்தோர் வழக்கு வழக்கெனப்படாது" என்று இளம்பூரணார் தெளிவுபடுத்துகிறார். இனி உயர்ந்தோர் என்பவர் யார் என்பதையும் அவரே தெளிவுபடுத்துகிறார்

"அந்தணரும் அவர்போல் அறிவுடையோரும்” [இளம்பூரணார் உரை பக்647 பொருளதிகாரம் சாரதா பதிப்பகம் 3ஆம் பதிப்பு 2006]

"ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேலேன”

அதாவது, கல்விக் கற்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரிந்து வேற்றூர் செல்வதற்கான தகுதி அரசர்க்கும், அந்தணர்க்கும் மட்டுமே உரியது. மற்றவர்களுக்கு அது கிடையாது.

"வைசியன் பெறுமே வணிக வாழ்க்கை"

இதன் பொருள் வணிக குலத்தில் பிறந்தவர்க்கு வணிகத்தைத் தவிர வேறு தொழில் கிடையாது

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"தொல் மரபியல் பக் 607 [தொல்காப்பியம் தெளிவுரை முனைவர் ச. வே. சுப்பிரமணியன் மணிவாசகர் பதிப்பகம் 2006]

அதாவது வேளாளர்க்கு உழுது உண்பதைத் தவிர வேறு தொழில் இல்லை. பிற வகை வாழ்வு இல்லை. அவர்களுக்கு கல்வி பெறும் தகுதியும் இல்லை. அப்படியே கல்வியிருந்தாலும், அது வேதம் ஒழிந்த கல்வியே அன்று வேதத்தைப் படிக்கும் தகுதி வேளாளருக்குக் கிடையாது.

இவ்வாறாக, கல்வி, வேலை ஆகியவற்றை பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்வதை தமிழருக்குரிய இலக்கணமாக செய்து வைத்த தொல்காப்பியர் மகளிருக்கும் அநீதி செய்துள்ளார். மகளிரை ஆணைவிட மிகக்குறைவான சமுக நிலையில் வைத்து பார்க்கும்முறையை தொல்காப்பியர்தான் ஆரம்பித்து வைத்திருப்பார் போலத் தோன்றுகிறது.

மகளிரும் தொல்காப்பியரும்

எ.கா. முந்தீர் வழக்கம் மகடூவோடு இல்லை.

அதாவது கடல் கடந்து செல்லும்போது பெண்களை அழைத்துச் செல்வது என்பது எக்காலத்திலும் இல்லை. [தொல்காப்பியம் தெளிவுரை முனைவர் ச. வே. சுப்பிரமணியன் மணிவாசகர் பதிப்பகம் 2006 பக்கம் 365]

பெருமையும் உரனும் ஆடூஉ மேலன

அறிவும் பெருமையும் ஆண்மகனின் இயல்பு [அதாவது பெண்ணிற்கு இவை கிடையாது] களவியல் 95

பின்பு பெண்ணின் இயல்பு யாது?

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.

அச்சம், நாணம், மடம் என்று முப்பண்புகளும் முந்தி நிற்பவை. எக்காலத்தும் பெண்டிர்க்கு உரியவை என்று கூறுவர். (ச.வே.சு. பக்கம் 405)

கணவனை இழந்தோர் நிலை

தொல்காப்பியம் காஞ்சித்திணையில் கணவனை இழந்த பெண் தன்னுடைய உயிரை எந்த வகையிலெல்லாம் மாய்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு பட்டியலாகவே இட்டுக் காட்டுகிறார். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

1 இறந்த கணவன், இறந்த வேலினால் தன்னையும் மாய்த்துக் கொள்ளுதல்

2 இறந்த கணவன் தலையோடு தன்முகத்தையும் மார்பையும் மோதி மாய்த்துக் கொள்ளுதல்

3 இறந்த கணவனின் ஈமம் ஏறி (பாடையில் ஏறி) தீயில் வெந்து மடிதல் இவையெல்லாம் கணவனை இழந்த பெண்டிர்க்கு தொல்காப்பியர் காட்டும் வழியாகும். உடன்கட்டை ஏறுவதை தமிழருக்கு இலக்கணமாக செய்து வைத்தவர் தொல்காப்பியர். இதற்கு மாறாக, மனைவியை இழந்த கணவன் உயிர்விட வேண்டும் என்ற கருத்து தொல்காப்பியத்தில் ஓர் இடத்தில் கூட வரவில்லை. கணவன் நிலை தபுதார நிலை என்று மட்டும் குறிப்பிடப்படுகிறது. அதில் காணப்படுவது நீராடல், தரையில் படுத்து உறங்குதல், சடையை வளர்த்துக்கொள்ளுதல், துணி அணியாமல் தோல் ஆடையை உடுத்துதல், காட்டிலுள்ள உணவுகளை உண்ணுதல், தெய்வப்பூசையும், அதிதி பூசையும் செய்தல் இவையே மனைவியை இழந்த கணவன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களாகும். உயிரை மாய்த்துக்கொள்ளுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும், தொல்காப்பியர் தன் மனைவியை விட்டு பரத்தையிடம் சென்று சுகம் காண்பதை தலைவனுக்குரிய இலக்கணமாகவே செய்து வைத்துள்ளார். நால்வகைப் பிரிவினரும் பரத்தை வாயிற்பிரிவில் தலைவியை விட்டு பிரிந்து விலைமகளிருடன் இன்பம் துய்க்க செல்லலாம் என்பது தொல்காப்பியருடைய இலக்கணமாகும்.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்

என் - எனின் மேலதற்கொரு புறனடை உணர்த்திற்று.

(இ-ள்.) எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்தி வரு விருப்பத்தையுடைத்து என்றவாறு. எனவே, மனம் பொருந்திய வழிப்பரத்தையர் மாட்டும் இன்பமுளதாகும் எனவும், பொருந்தாத வழி மனைவியர் மாட்டும் இன்ப மின்றாம் எனவும் கொள்க. (27)

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்

என் - எனின் பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) பரத்தையர்மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து; அவ்வழிப்பிரியும் பிரிவு நிலம் பெயர்தல் இல்லை என்றவாறு.

விலை மகளிர் வரைவின் மகளிர், காமக்கெழுத்தியர், ஊர் பரத்தையர், சேரிப் பரத்தையர் என்று விதவிதமாக பரத்தையரை அனுபவிக்கும் உரிமை தலைவனுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு, சென்று வருவதே தலைவனுக்கு உரிய இலக்கணமாகவும் செய்யப்பட்டுள்ளது. ஆண் மனம் விரும்பினால், மனைவியுடன் சேர்ந்து இருப்பான். இல்லாவிடில், வேறு பெண்ணிடத்தில் செல்வான். அவனுடைய மனவிருப்பப்படி நடந்துகொள்வதற்கு உரிமை உண்டு. ஏனெனில், எல்லா உயிர்களுக்கும் இன்பம் என்பது மனம் பொருந்தி வரும் விருப்பத்தைப் பொறுத்தது என்று தொல்காப்பியர் இதனை உறுதிப்படுத்துகிறார்.

திருவள்ளுவர் பரத்தைகளிடம் சென்று சுகம் காண்பதை கண்டித்தே தம்முடைய நூலில் எழுதியுள்ளார். அவ்வாறு செய்தல் இருட்டறையில் முன்பின் அறியாத பிணத்தை தழுவியது போலாகும் என்பது வள்ளுவரின் கூற்று. [வரைவின் மகளிர் அதிகாரம் 92]

"பொருள் பெண்டிர் பொய்மெய் முயக்கம் இருட்டறையில்

ஏதல் பிணம் தழிழீஇ யற்று" என்பது வள்ளுவர் வாக்கு.

"அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்".

அன்பை கொஞ்சம் கூடக்கொள்ளாமல் பொருளையே விரும்பிடும் பொது மகளிரும் வாய்ச்சொல் இனியதாகவே இருந்தால் கேட்டையே தருவதாகும்.

"வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு”

வரையறையே இல்லாத விலைமகளின் தோல்களின் சேர்க்கையானது உயர்வற்ற கீழ்மக்கள் வீழ்ந்து கிடக்கும் பாழும் நரகமாகும்.

இவ்வாறெல்லாம் பரத்தையர் தொடர்பாக‌ கடுமையான வார்த்தைகளால் கண்டித்தும் வள்ளுவர் காட்டும் வாழ்வு நெறி உயர்ந்ததா? அல்லது தொல்காப்பியரின் வரைவு இலக்கணம் சிறந்ததா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நன்றி:கீற்று

Back to blog