திருக்குறளும் திராவிட இயக்கமும் - நன்றியுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thirukuralum-dravida-iyakamum 
நன்றியுரை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவராகச் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை எனது முன்னேற்றத்திற்குப் பலவகையிலும் உதவியவர் சென்னைப் பல்கலைக்கழக முன்னால் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள். இந்த நூலின் தலைப்பு, சிந்தனை, வடிவம் என அனைத்தும் அவர் கொடுத்தது. அவரது தெளிவான அணிந்துரை நூலின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்துகிறது. அவர் தான் இந்த நூல் வெளிவருவதற்கு முதன்மையான காரணம். இந்த நூலினை வெளியிடச் சொல்லி பலமுறை அன்பாகவும் சில நேரம் கடிந்தும், நேரடியாகவும் எனது நண்பர்கள் மூலமாகவும் என்னை வற்புறுத்தியவர். மிகப்பெரும் ஆளுமை என்மீது அக்கறை கொள்வதை நான் பெற்ற பேற்றுள் பெரும் பேராகக் கருதுகிறேன். அவருக்கு எனது முதல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர்பட்ட ஆய்வை மேற்கொள்ள என்னை மாணவராகத் தேர்ந்தெடுத்து சேர்ந்த நாள் முதல் அன்போடு அறிவையும் வளர்த்து ஆய்வு செம்மையாக அமைவதற்குப் பல்வேறு வழிகளில் என்னை நெறிப்படுத்தியவர் நெறியாளர், முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள். இன்று நான் சில மாணவர்களுக்கு நெறியாளராக இருக்கிறேன். அவர்களை நெறிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் எனது நெறியாளர் நினைவுக்கு வருவார். ஒரு நெறியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. குடும்ப நிகழ்வுகளில் உறவோடு உறவாக கலந்து கொண்டு எங்களை சிறப்பு செய்வார். இப்போது இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்துள்ளார். அவருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பார்க்கும்போதெல்லாம் ஆய்வைப்பற்றியே கேட்டறிந்து அவ்வப்போது ஆலோசனைகளை அளித்த முனைவர்ய. மணிகண்டன் அவர்களுக்கும் முனைவர் கோ. பழனி அவர்களுக்கும் எனது நன்றி.

பள்ளிப் பருவம் முதல் எனது அறிவுக்குத் தூண்டுகோளாக இருந்து முனைவர் பட்ட ஆய்வுக்கும் பல ஆலோசனைகளைக் கூறிய எனது நண்பர் முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றி. ஆய்வு செய்யத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை ஆய்வுக்குத் தேவையான நூல்களைப் பல இடங்களிலிருந்து தேடித் தொகுத்துக் கொடுத்து ஆய்வுக்குப் பல நிலைகளிலும் உதவியாக இருந்த சக ஆய்வாளர் முனைவர் த. தனஞ்செயன் அவர்களுக்கும் எனது நன்றி.

ஆய்வாளர் அறையில் உடன் தங்கியிருப்போர் பொதுவாகவே நன்றிக்குரியோர் ஆவர். ஆனால் என்னுடன் தங்கியோர் பலர் தமிழ் ஆய்வாளராகவே அமைந்திருந்தனர். அந்த வகையில் இளங்கலை முதல் அறை நண்பராக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்த ஆய்வாளர் கோ.வீரராகவன் அவர்களுக்கு எனது நன்றி. அறை நண்பர் முனைவர் பி. பொன்னுசாமி அவர்களுக்கும் எனது நன்றி.

ஆய்வுக்குத் தேவையான பல நூல்களை அறிமுகப்படுத்தி சில கருத்துகளைப் பகிர்ந்து உதவிய பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்களுக்கும் எனது நன்றி.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த நாள் முதல் என்னை ஊக்கப்படுத்தி ஆலோசனை தந்து உதவி, நூலுக்குப் பிழைப்பார்த்துக் கொடுத்த முனைவர் ஸ்ரீ பிரேம்குமார் அவர்களுக்கும் எனது நன்றி.

திருக்குறள் பற்றி வெளிவந்த விடுதலை இதழ்களைத் தொகுத்துக் கொடுத்த பெரியார் ஆய்வக நூலக நூலகர் திரு கோவிந்தன் அவர்களுக்கும் எனது நன்றி.

தமிழ் மக்களின் சிந்தனைகளைத் தூண்டி எழுப்பக்கூடிய பல நூல்களை வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் மூலமாக இந்நூல் வெளிவருவது பெரும் மகிழ்ச்சி. சிறந்த முறையில் வடிவமைத்து நூலாக வெளிவருவதற்கு உதவிய பாரதி புத்தகாலயத்திற்கும் எனது நன்றி.

 

பா. குப்புசாமி

Back to blog