திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama
முன்னுரை

"ThirukkuralAn Abridgement of Sastras (திருக்குறள் சாஸ்திரங்க ளின் சாரம்)" என்னும் நூலை ஆங்கிலத்தில் டாக்டர் ஆர்.நாகசாமி என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த நூல், சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கும்பல், திட்டமிட்டு உருவாக்கிய ஒரு மோசடித் தயாரிப்பு.

டாக்டர் நாகசாமி தமிழர்களின் பெருமைகள் எல்லாம் இந்து சாஸ்திரங்களில் இருந்து பெறப்பட்டவை; தமிழுக்கென்று எந்தச் சிறப்பும் இல்லை. சமஸ்கிருதத்திலிருந்தே தமிழுக்குப் பலவும் பெறப்பட்டன என்று மோசடியாகப் பிரச்சாரம் செய்வதையே தன் வாழ்நாள் இலக்காக - பணியாகக் கொண்டு செயல்படக் கூடியவர். உளச் சான்று என்பதே கிஞ்சிற்றும் இல்லா வஞ்சக வடிவம். ஆரிய சூழ்ச்சியின் அசல் உருவம்.

ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதையே அடிப்படைச் சித்தாந்தமாகக் கொண்ட பாசிச வெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின், திட்டமிட்டு திருக்குறளின் பெருமையைச் சிதைக்க, அழிக்க இந்த நாகசாமியைத் தேர்வு செய்து இந்நூலை எழுதச் செய்துள்ளனர்.

GIRI Trading Agency Private Limited இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் பதிவு பெற்ற அலுவலகம் Modi Nivas, opp. Post office, Matunga, Mumbai-19.

இதிலிருந்தே இந்த நூல் எந்தப் பின்புலத்தில் உருவானது என்பது உறுதியாகும். ராஜீவ் மல்கோத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா பரப்புரையாளரின் பின்புலம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Modi Nivas என்பது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆள்களின் தொடர்பை அய்யத்திற்கிடமின்றி அறிவிக்கும் அடையாளம். மேலும், இந்நூலில் முதல் பக்கத்தில் காஞ்சி பெரிய சங்கராச்சாரியின் வண்ணப்படம் அச்சிடப்பட்டிருப்பது அதை அப்பட்டமாக உறுதி செய்கிறது.

ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிப்படையே பொய், பித்தலாட்டம், களவு, அபகரித்தல், மோசடி, திரிபு போன்றவையே!

இந்த நூலும் அந்த அடிப்படையிலே, திட்டமிட்ட சதியின் முடிவாய் உருவாக்கப்பட்டுள்ள அதை இந்த நூலில் ஆங்காங்கே உறுதி செய்துள்ளேன்.

திருக்குறளுக்கு உலக அளவில் ஏற்பும், சிறப்பும் இருப்பதால், அப்படி எந்த நூலுக்கும் உலக ஏற்பும் சிறப்பும் இல்லாததால், அச்சிறப்பு ஒரு தமிழனுக்கும், தமிழுக்கும் உரியதாவதால், ஆரிய பார்ப்பனர்களால் அதை ஏற்க முடியவில்லை.

அதனால், திருக்குறளின் பெருமையைச் சிதைப்பதை பல நூற்றாண்டுகளாய் ஆரிய பார்ப்பனர்கள் செய்து வருகின்றனர்.

பரிமேலழகர் உரை எழுதி, திருக்குறளுக்கு ஆரிய சனாதன முலாம் பூச முற்பட்டார்.

"திருவள்ளுவர் ஆரிய பார்ப்பானுக்கும் பறைச்சிக்கும் பிறந்தவர். ஆரியர் விந்துக்குப் பிறந்ததால்தான் அவர் இப்படி ஒரு நூலை எழுதும் அறிவு வந்தது" என்று வள்ளுவரின் பிறப்பையும், திறத்தையும் கொச்சைப்படுத்தியதோடு, ஆரியர் அல்லாதவர்களுக்கு அறிவே கிடையாது என்றும் கேவலப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாய் இப்பொழுது திருக்குறளின் பெருமையை, தனித்தன்மையை, திருவள்ளுவரின் அறிவு, அனுபவம், ஆற்றலை அறவே சிதைத்து ஒழிக்க இந்நூலை நாகசாமியைக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர்.

இந்த நூலின் வழி, தமிழ்நாட்டிற்கு அப்பால், உலக அளவில் வாழ்வோரிடம் திருக்குறள் ஒரு வழி நூல், இந்து சாஸ்திரக் கருத்துகளின் சாரம். திருக்குறளில் உள்ள சிறந்த கருத்துகள் திருவள்ளுவர் கூறியவை அல்ல, அவை இந்து சாஸ்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்று ஒரு மோசடிக் கருத்தைப் பரப்ப முயற்சி செய்துள்ளனர்.

நாகசாமியின் இந்த ஆங்கில நூல் வெளிவந்தவுடனே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் திடலில் அதற்கான மறுப்பை, எதிர்ப்பை பொதுக்கூட்டத்தின் மூலம் உடனடியாகத் தெரிவித்தார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகசாமியின் மோசடிப் பிரச்சாரத்திற்கும், அவருக்கு அளிக்கப்பட்ட உயர் பதவிக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பிற்கு பதில் அளித்த நாகசாமி, தனது ஆங்கில நூலை நன்றாகப் படித்துப் பார்த்து மு.க.ஸ்டாலின் பேசவேண்டும் என்றார். அதன்வழி தனது நூல் சரியானது; ஆதாரபூர்வமானது என்று நிலைநாட்ட முற்பட்டார்.

உடனே நான் எனது முகநூலில் நாகசாமிக்கு கீழ்க்கண்ட சவாலை விடுத்தேன்.

"நாகசாமியே நாள் குறித்து விவாதிக்கத் தயாரா?

ஆய்வு என்பது உண்மை காணும் பெரும்பணி. விருப்பு வெறுப்பு இன்றி தரவுகளை, தடயங்களைக் கூர்ந்தாய்ந்து நிறுவப்படுவது.

ஆய்வாளன் என்பவன், முன் முடிவுகள் ஏதும் இன்றி எது உண்மையோ அதை உளச் சான்றோடு உலகிற்கு உறுதி செய்ய வேண்டியவன்.

இந்த இலக்கணப்படி நோக்கின் நாகசாமி ஆய்வாளரும் அல்லர்; அவருடையவை ஆய்வுகளும் அல்ல.

முன்கூட்டியே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அதை நிலைநாட்ட, எல்லாவற்றையும் மாற்றி, மறைத்து, திரித்து, தில்லுமுல்லு செய்து, பொய்கூறி, புனைந்துரைத்து எழுதுவது இவரது வழக்கம்.

சமஸ்கிருதம் தமிழின் பிச்சை. இதை உறுதிசெய்ய ஆதாரங்கள் ஆயிரமாயிரம். அது பின்னாளில் உருவாக்கப்பட்டது. அதை செம்மொழி என்பது பித்தலாட்டம்.

சாஸ்திரங்கள் என்பவை ஆரிய ஆதிக்கம், கலாச்சாரத்தின் கொள்கலன். தமிழ் உலக மொழிகளுக்கு மூலம். திருக்குறள் தமிழர் பண்பாட்டின் அடையாளம். தமிழர் பண்பாடும் ஆரிய கலாச்சாரமும் எதிர் எதிர் நிற்பவை.

ஆம், உலகிலுள்ள பல மொழிகளும் தமிழிலிருந்து வந்தவை. ஆங்கில, சப்பானிய மொழி அறிஞர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

திருக்குறள் உலகளாவிய நெறிநூல். அது இன்னொன்றிலிருந்து கருத்துகளைப் பெற்றது அல்ல. அதற்கு இணையான ஒரு நூல் உலகிலே எதுவும் இல்லை. இது உலகே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க இந்த நயவஞ்சக நாகசாமி, ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்தி நிறுத்தி, தமிழை இழிவு செய்ய, மோசடியான கருத்துகளை, பொய்களைக் கூறி ஆய்வு என்று காட்டுகிறார்.

உண்மையிலே இந்த நாகசாமிக்கு அறிவு நாணயம் இருக்குமானால், தன் ஆய்வு சரியானது என்கிற உறுதி இருக்குமானால், நாள் குறித்து விவாதிக்க வரவேண்டும். பல அமர்வுகளாக நாங்கள் அவருடன் விவாதிக்கத் தயார். அப்படி வரவில்லையென்றால், தனது மோசடியான ஆய்வு முடிவுக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! தவறினால் அவரது மோசடிகளை அவரே ஏற்றுக் கொண்டதாக ஆகும். அவரது தோல்வியையும் அவரே ஒப்புக்கொண்டதாகும்!” என்று அதில் கூறியிருந்தேன்.

ஆனால், இன்றுவரை அந்த 'அறிஞர் பெருமக்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதன் அடுத்த நிலையாகத் தான் அவரது ஆங்கில நூலுக்கு மறுப்பாக இந்த நூலை, ஆணித்தரமான ஆதாரங்களோடும் விளக்கங்களோடும் எழுதியுள்ளேன்.

எனது 24ஆவது வயதில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு மறுப்பு எழுதி, நேரில் அவரைச் சந்தித்து எனது மறுப்பு நூலுக்கு மறுப்புக் கூறத் தயாரா என்று சவால் விட்டேன். அவர் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

எனது 54 வயதில் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று பெங்களூர் குணா எழுதிய நூலுக்கு "ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம்” என்று மறுப்பு எழுதி நூல் வெளியிட்டு, குணாவிற்கு சவால் விட்டேன். அந்தக் கைக்கூலி இன்றுவரை என் நூலுக்குப் பதில் சொல்லவில்லை.

அந்த வகையில் இந்த நாகசாமி நான் சவால் விட்டு மறுப்பு எழுதும் மூன்றாவது ஆள். முடிந்தால் நாகசாமி மட்டுமல்ல; அவரை எழுத வைத்த அந்த ஆரிய பார்ப்பனர்கள் யார் வேண்டுமானாலும் எனது இந்த நூலுக்கு பதில் சொல்லட்டும்! சொல்லத் தயார் என்றால் அவர்களோடு வாதிடத் தயார்! என்பதையும் இந்நூலின் வழி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலை எழுதியதன் மூலம் வள்ளுவத்திற்கும் தமிழுக்கும் எதிரான சதியை முறியடித்த உள நிறைவைப் பெறுகிறேன்!

இந்த நூலைப் பரப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை! இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டியது தமிழ் அமைப்புகளின் கடமை!

Back to blog