தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - முன்னுரை

தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - முன்னுரை

தலைப்பு

தந்தை பெரியார் - முழுமையான வரலாறு

எழுத்தாளர் கவிஞர் கருணானந்தம்
பதிப்பாளர் வ.உ.சி.நூலகம்
பக்கங்கள் 703
பதிப்பு நான்காம் பதிப்பு - 2013
அட்டை தடிமனான அட்டை
விலை Rs.500/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thanthai-periyaar-muzhumaiyaana-varalaaru.html

 

முன்னுரையாக... முதல்வர் கலைஞர் அவர்களின் கவிதை

பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த

சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் – ராம

சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம், பெரியார்

ராமசாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம்,

கவியரங்கம் பாடவந்த, காணவந்த பெருமக்காள்!

திருவரங்கப் பெருமாள் போல் படுத்திருந்த தமிழ்

உணர்வைத்

திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்து

தீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?

தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம், திரையரங்கம்,

எல்லாமே ''அம்மாமி அத்திம்பேர்?''

ஜலதரங்கம்! அது மாற்றித்

தமிழ் அரங்கம், தனி அரங்கம் கண்டவர்க்குக்

கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ? அதனால் தான்

பயிர் போன்றார் உழவருக்குப் பால் போன்றார்

குழந்தைகட்குப் பசுப்பால் கட்டித்

தயிர்போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார்

ஏழையர்க்குத் தகுந்தவர்க்குச்

செயிர் தீர்ந்த தவம் போன்றார் செந்தமிழ்

நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம்

உயிர் போன்றார்'' என்று

பாரதிதாசப் பாவேந்தன் பாடிச் சென்றான் அவரை!

"வீடு கட்டி அதற்குள்ளே வைக்கோலைத் திணிப்பதுவோ?

வீடுகட்டாமலே வைக்கோற்போர் போடலாமே

எனச்சொன்ன ஈ.வே. ரா. நாத்திகரா?

இல்லை இல்லை!

அவர்,

இயற்கையின் புதல்வர்- இந்த மண்ணை மணந்த மணாளர்

எதிர்காலத் தமிழகத்துப் பெருமைக்குத் தூதர்'' என்று

அக்ரகாரத்து அதிசய மாமனிதர் வ.ரா. முன்பு

அழகாக வரைந்தார் ஒரு கட்டுரைதான்!

தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போலச்

செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடப்

பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக் காளைகள் கோடி

உறுதியாய்க் கூறி நின்றார் குருதிதான் பணயமென்று!

அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம்,

உயிர்பிழைக்கப்

பங்கமுறு சாதிமதப் பேதங்களால் அல்லலுறும் – மனித

சங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம் சரிதானா?

எனக் கேட்டார்

அந்தச்

சிங்கத்தின் குரல் கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்ட

கதைதானே நடந்ததிங்கே!

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு – வெண்

சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு – அதில்

சாகும் வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் – இவரோ

படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார். இன்றைக்கோ

இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.

மதுவிலக்குத் தேவை என்று மகாத்மாகாந்தி

சொன்னவுடன்

மதுக்கலயம் கட்டாமல் இருப்பதற்குத் தோட்டத்தில்

மண்டி நின்ற தென்னைகளை வெட்டிச் சாய்த்தார்

வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்?

''வை கத்தி! தீண்டாமைக் கழுத்தில்'' என்று

வரிப்புலியாய்க் களம் சென்று வாகைசூடி

வையத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்

காங்கிரசுக் கட்சிக்கு மீகாமனாய்க்

கதர் இயக்க வெற்றிக்குத் தளபதியாய்க்

காந்தி வழி நின்றிட்ட கர்மவீரன்

கட்சிக்குள் போராடக் காலம் வந்து

காஞ்சிபுரம் மாநாட்டில் வெளி நடந்தார்

வ.வே.சு.அய்யர் என்பார் வடிகட்டிய தேசபக்தர்

வகுப்புவாத உணர்வாலே வம்புக்கு அழைப்புத்

தந்தார்.

சேரன்மாதேவி ஊரில் சிறந்ததொரு குருகுலத்தில்

ஒரு குலத்துக்கொரு நீதி கடைப்பிடித்தால்

சகிக்குமா பெரியார் மனம்? சமருக்கு வில்வளைத்தார்

சரித்திரம் படைக்கலுற்றார். அதன் விளைவாய்த்

தன்மான இயக்கத்தின் தந்தையாகத்

தமிழர் இனப் பாதுகாப்புத் தலைவராகப்

பெரியார் ஆனார்- புது

நெறியார் ஆனார்!

பிற்பட்டோர் நலனுக்கென்று நீதிக்கட்சி

பெரும் பணிகள் இயற்றிடவே முனைந்தபோதும் – அது

பித்தாபுரம் பனகல் என்று பிரபுக்கள் காலடியில்

வற்றாத செல்வர் கைத்தடியில் இருந்ததாலே அதை மாற்றி

மாளிகையில் இருந்தகட்சி மக்களிடை வருவதற்கு

மாமேதை அண்ணாவின் துணையுடனே வெற்றி கண்டார்.

மந்தி கை மாலையென

இந்தி கைத் தமிழர், ஆக

வஞ்சகச் சூழ்ச்சிகள் வலையாக விரிந்தபோது

அஞ்சிடா நெஞ்சுகொண்டு அறுத்தவர் பெரியார்தாமே?

அவர்,

பாதம் படாத பட்டி தொட்டி உண்டோ - அவர் பேர்

கேட்டுக்

காதம் ஓடுகின்ற ஆத்திகரும் (அவர்) பேசக்கேட்டால்

தமிழ்க்

கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப்போவர்,

அறிவு மழை பொழியும் எழில்

வழியும் - இருள் கழியும்

தெளிவுமிகு உரைகள் பல

ஒளிரும் திறன் மிளிரும்

கடலின் மடை அலையின் ஒலி - மலையின் முடி,

தழுவும் முகில் வழியும்!

அறிவு மழை பொழியும்!

ஆணவங்கள் அழியும்!

அடிமை முறை ஒழியும்!

அய்யாவின் பேச்சென்றால்

அதிரசம் தின்பது போல் கழகத்தவர்க்கு,

அணுக்குண்டு வெடித்தது போல் கயவர்கட்கு!

அவர் தலைமை ஏற்று நானும் அவருடனே

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில்

ஆரூரில் மாணவனாய் இருந்தபோதே

இணைந்துவிட்டேன்

அதன்பிறகு புதுவையில் நான் தாக்குண்டபோது

அய்யாவின் கையாலே மருந்திட்டார், என் காயத்திற்கு!

குடியரசு அலுவலகக் குருகுலத்தில்

கொள்கை வழிப்பாடங்கள் பயின்றகாலை - நான்

தமிழரசுத் தலைவனாக வருவேன் என்றும், எனை

வளர்த்த

தந்தைக்கு அரசு மரியாதையுடன்

இறுதி வணக்கம் செய்வேன் என்றும்

எண்ணியும் பார்த்ததில்லை;

"பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!

ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்

அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் – அவர்

வெண்தாடி அசைந்தால் போதும்.

கண்ஜாடை தெரிந்தால் போதும் –

கறுப்புடை தரித்தோர் உண்டு – கொடுமையை

நறுக்கியே திரும்பும் வாள்கள்''

ஈரோட்டுக் குருகுலத்தில் நான் இயற்றியது இப்பாடல்!

இன்றைக்கும் நினைக்கின்றேன் – பெரியார்

இளவயதில் மறையவில்லை

நிறைவயது வாழ்ந்துவிட்டே ஓய்வு கொண்டார்

எனினும்,

தாஜ்மகால் திடுமெனத் தரைக்குள்ளே போய்விட்டால்

அதனைக் கட்டி: ஆண்டு பல ஆயிற்றே என்று

ஆறுதல் தான் பெறுவோமா?

தஞ்சைக் கோபுரம் சாய்ந்துவிட்டால் அதற்கு

வயது அதிகமென்று சொல்லித்

தாங்குதல் தான் எளிதாமோ? இவரோ,

தஞ்சைக் கோபுரம் போல் உயர்ந்தவர்

தாஜ்மகால் போல் சரிதம் படைத்தவர் –

அவர் வாழ்வார் வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்.

Back to blog