தந்தை பெரியார் - முழுமையான வரலாறு - பதிப்புரை
தலைப்பு |
தந்தை பெரியார் - முழுமையான வரலாறு |
---|---|
எழுத்தாளர் | கவிஞர் கருணானந்தம் |
பதிப்பாளர் | வ.உ.சி.நூலகம் |
பக்கங்கள் | 703 |
பதிப்பு | நான்காம் பதிப்பு - 2013 |
அட்டை | தடிமனான அட்டை |
விலை | Rs.500/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thanthai-periyaar-muzhumaiyaana-varalaaru.html
பதிப்புரை
இந்தப் பதிப்புரையை எழுத நேர்கிற வேளையில் நம் மனதில் ஒரு மின்னல் வெட்டாய் தோன்றுகின்ற ஒரு வாசகம். தந்தை பெரியார் அவர்கள் காலமானபோது தலைவர் கலைஞர் அவர்கள் தன் இரங்கல் உரையில் "தந்தை பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்”. இப்படி கவித்துவமாக சொல்லியிருப்பார்.
சுற்றி வருகின்ற பூமியையே தான் சுற்றிவந்துவிடும் ஆவேசத்தோடு ஒரு நீண்ட சுயமரியாதை பயணத்தை நடத்தியவர் தந்தை பெரியார். அதனால் தான் அவரைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய அற்புதமான கவிதை ஒன்றில் இப்படி எழுதியிருப்பார்.
"பம்பரமும் சுற்றிய பின் ஓய்வு பெறும்
இவரோ படுகிழமாய் போன பின்னும்
பம்பரமாய் சுற்றி வந்தார்” என்று.
பொல்லாத சாதி மதங்களை வேரோடு வீழ்த்த தன் தள்ளாத வயதிலும் தமிழகத்தையே சுற்றிச்சுற்றி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மாதங்கள், 7 நாட்கள். அதாவது 4 ஆயிரத்து 4 நாட்களாகும். இப்போது போல வசதியான போக்குவரத்து வாகனங்கள், சாலை வசதிகள் அந்த நாட்களில் இல்லை. அப்படிப்பட்ட துன்பமான நாட்களில் தமது கொள்கைப் பரப்புதலுக்காக சுமார் 8600 நாட்கள் சுற்றுப் பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தாயிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும். இந்த சொற்பொழிலை ஒலிநாடாவில் பதிவு செய்து அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.
இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும், இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியது இல்லை என்று கூறலாம். அதனால்தான் தந்தை பெரியாரின் தன்னமில்லாத பொதுத் தொண்டின் மேன்மையை உலக நாடுகள் சபையின் உலக நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழக மன்றம் வியந்து தந்த பாராட்டு பின்வருமாறு.
பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கட்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி. இந்தப் பட்டயம் பெரியார் அவர்களுக்கு 27.06.1970 இல் வழங்கப்பட்டது. இதுபோல வேறு எவருக்கும் பட்டயம் வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட பெரியாரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே இந்நூலில் வெளியிடப்படுகிறது. உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று என்பர் சான்றோர்.
1) உலகத்தினர் அவர்மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டும்.
2) அவர் கொள்கைகள் எங்கும் கண்டனத்துக்கு ஆளாக வேண்டும்.
3) அவர் பிறரால் கடுமையான நிந்திக்கப்படுவும் வேண்டும்.
பெரியாருக்கு இந்த மூன்று குணங்களும் இருந்தன.
அந்த தந்தை பெரியாரின் முழு முதல் வரலாற்று நூலை வ.உ.சி. நூலகம் உங்களுக்கு வழங்குகிறது. இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்வதற்கு காரணமானவர் பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை எடுத்த பெருமகன், பிள்ளையில்லா பெரியாருக்கு அவர் பெயர் சொல்ல பிள்ளையாய் வந்து உதித்த பெருமகன், ஐந்தாவது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்கிற முத்தமிழ் அறிஞர் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவர் ஆட்சி செய்கின்ற காலத்தில் தான் தமிழ் ஏற்றம் பெறுகிறது. தமிழன் ஏற்றம் பெறுகின்றான். தமிழ்த் தொண்டாகள் ஏற்றம் பெறுகிறார்கள். அவருடைய காலக்கட்டத்தில் தான் அழியாத அமர இலக்கியங்கள் எல்லாம் நாட்டுடமையாக்கப் படுகின்றன. அந்த வரிசையில் கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய இந்த தந்தை பெரியார் என்ற நூலையும் தலைவர் அவர்கள் நாட்டுடமையாக்கியதால் தான் இந்த நூலை நாம் வெளியிடுகிற நல்ல வாய்ப்பை பெற்றோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல் இப்போது ஏன் வரவேண்டும்?
ஒரு முறை தந்தை பெரியாரின் முன்னிலையிலேயே அவருடைய சிலை திறக்கப்பட்டபோது தந்தை பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? "என்னுடைய சிலைகளை நிறைய திறக்க வேண்டும். ஏன் திறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால், இப்படிப்பட்ட கொள்கைகளுக்காக வாழ்ந்த ஒருவன் இருந்தான். அவன் காலத்தால் பிரிக்கப்பட்டான் என்பதைக் கூற மாத்திரமல்லாமல் அவன் எதற்காக வாழ்ந்தான்? எப்படி வாழ்ந்தான்? என்ன கொள்கைகளைச் சிந்தித்தான்? அதை எப்படிச் செயல்படுத்தினான்? என்பதை நாடு புரிந்துகொண்டு, இந்த நாடு காடாகாமல் இருக்க அந்தச் சிலைகள் பயன்படும். எனவே, என்னுடைய சிலைகளை இன்னும் ஏராளமாகத் திறுவங்கள் என்றார்.
இந்தப் புத்தகம் பேசுகிற தந்தை பெரியாரின் சிலை. இதன் பக்கங்களை நீங்கள் திறந்தால் பெரியாருடைய வாழ்க்கையோடு நீங்கள் உரையாட முடியும். பெரியாரோடு நீங்கள் உரையாடுவது என்பது பகுத்தறிவோடு உரையாடுவதாகும். சமத்துவத்தோடு உரையாடுவ தாகும். சக மனிதனை மதித்து பெரியாரை வியத்தலும் இலமே, சிறியோரை அதனினும் இகழ்தலும் இலமே, என்ற இரண்டாயிரம் வருட மானுட உணர்வோடு உரையாடுவதாகும். ஐம்பதுகளில் தொகுக்கப்பட்ட தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற சின்னஞ்சிறிய நூல் அந்த காலக் கட்டத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியால் தடை செய்யப்பட்டது. தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பொன்மொழிகளுக்கு சிறைத் தண்டனை என்றால் அவருடைய புரட்சிகரமான வாழ்வு எத்தனை உக்கிரமானதாக இருக்கும். தான் கூறியதைப் போலவே வாழ்ந்து வழிகாட்டிய அந்த மாமனிதனின் வாழ்க்கை வரலாற்றை மறுபடியும் பதிப்பித்து உங்கள் கைகளில் சேர்க்கின்ற இந்த வேளையில், எங்களுடைய இந்த எளிய பதிப்பை எங்கள் உயிராய் நாங்கள் நேசிக்கும் அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் பெரியாரிய உணர்வுகளுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
வ.உ.சி.நூலகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: