தமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் - ஆசிரியர் உரை
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் - (1850-1950)" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்து நிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். - தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு, - சாதியப் பண்பாட்டில் குலங்களும் கோத்திரங்களும், - தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை, - 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், - மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு, - தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும், - இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர், - தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள், - பழமொழித் தொகுப்புகள்: 1840-2000, ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆளுகின்றவர்கள் உதவியோடு உயர்குடிகள் என்று தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட மேன்மையோடு இடைநிலைச் சாதியினரிடம் வரலாற்றுக் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் தங்களை ஆண்ட பரம்பரைகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிற பெருமிதம் வளர்ந்து போனது. ஆளப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விக்கு விடை அறியாதவர்கள் ஊர்களின் புறத்தே உழைப்புச் சக்தியை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இலக்காயினர். தங்களின் வன்மங்களை அவர்கள் மீது திருப்பினர். தாங்கள் இன்னொரு பிரிவினருக்கு அடிமையாக இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே அவர்களை அடிமைப்படுத்தி மகிழ்ந்தனர்.
- மயிலை பாலு