சிலை செதுக்கி முடித்த பிறகு சுற்றி விழும் சிதறல்களில்கூட சில சமயங்களில் கலைப் பொருள் தென்படும். அப்படித்தான் "நிழல்தரா மரம்" நாவல் எழுதி முடித்ததும் மிஞ்சி நின்ற தத்துவப் பொருள் இந்த நூலை எழுதத் தூண்டியது.
அந்த நாவலுக்காக சமண - புத்த தத்துவங்களைக் கற்கத் தொடங்கினேன். அவற்றைப் புரிந்து கொள்ள அந்தக் காலத்திய இதர தத்துவங்களையும் படித்தேன். ஒரு நாவலுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டுமே அங்கே பயன்படுத்த முடிந்தது. நாவலை எழுதி முடித்த பிறகு மனமெல்லாம் தத்துவமயமாகி நின்றது. அதையே இங்கு கொட்டித் தீர்த்திருக்கிறேன்.
தமிழில் அனைத்து வகை இலக்கியங்களும் இருக்கின்றன. வீரயுகத் தனிப் பாடல்களிலிருந்து மாபெரும் காவியங்கள் வரை இருக்கின்றன. அந்த வகையில் சமஸ்கிருதத்திற்கு சிறிதும் சளைத்ததல்ல தமிழ். ஆனாலும், அந்த மொழியில் உள்ளது போலத் தத்துவ நூல்கள் தமிழில் இல்லை எனும் பேச்சை நான் கேட்டதுண்டு. மணிமேகலையைப் படித்த போதே அந்தச் சந்தேகம் கட்டவிழத் துவங்கியது என்றால், நீலகேசியைப் படித்து முடித்த போது அது முற்றிலுமாகத் தகர்ந்து போனது.
நீலகேசியை ஏனோ காவியங்களின் பட்டியலில் சேர்த்து விட்டுத் தமிழுக்கு மிகப் பெரிய கேட்டைச் செய்துவிட்டார்கள். அது காவியமே அல்ல. அது முழுக்க முழுக்கத் தத்துவ நூல். அந்தக் காலத்தில் தமிழகத்தில் எத்தனை வகைத் தத்துவங்கள் - சமயங்கள் என்கிற பெயரில் - இருந்தன, அவற்றிற்கிடையே எத்தகைய கருத்து மோதல்கள் நிகழ்ந்தன என்பதையெல்லாம் அற்புதமாக அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலை எழுதுவதற்கு அந்த நூலே எனக்கு உந்து சக்தியாக இருந்தது. அதனாலேயே அந்த நூலின் பெயர் தெரியாத ஆசிரியருக்கு இதைக் காணிக்கை ஆக்கியிருக்கிறேன்.
தமிழகத்தில் நிலவிய பல்வேறு தத்துவங்களை எடுத்துரைக்க இங்கே ஒரு வகை முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அந்தத் தத்துவம், அதன் சாரம் களங்கமில்லாமல் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூல நூல்களிலிருந்தே பல பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அனேகமாக, அவற்றில் பல இப்போதுதான் தமிழில் தரப்படுகின்றன என்று நினைக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து அவற்றைத் தமிழில் பெயர்த்து எழுதுவதில் நிரம்பச் சிரமப்பட்டாலும், அதுவே அவற்றைப் புரிந்து கொள்வதற்கான செயல்முறைப் பயிற்சியாகவும் அமைந்தது. இப்படித் தந்துவிட்டு, இந்தத் தத்துவங்கள் தமிழில் எப்படி முன்வைக்கப்பட்டுள்ளன என்று அடுத்துச் சென்றுள்ளேன். பிறகு, அவற்றின் நிறைகுறை பற்றிய ஒரு மதிப்பீட்டையும் தந்துள்ளேன்.
அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கான நூல்களை வேட்டையாடினேன். சில நூல்கள் கிடைக்காத போது எழுதுவதையே நிறுத்தி வைத்தேன். கால வரிசைப்படி எழுதிக் கொண்டு போகும்போதே அதன் பின்புலம் சரியாகப் புரிபட்டு அது பற்றிய சரியான மதிப்பீட்டைத் தர முடிந்தது.
மதுரை - காமராசர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் நூலகம் இதற்கான ஆதாரச் சுரங்கமாக இருந்தது. அதில் புகுந்து புகுந்து வந்து கொண்டே இருந்தேன். ஒரு நாள் கண்ணில் படாதது இன்னொரு நாள் கையில் கிடைக்கவே செய்தது. அத்தகைய நூலகத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“நிழல்தரா மரம்” நாவலைப் படிப்போருக்கு உள்ளூற சில ஐயப்பாடுகள் வந்திருக்கும். இந்த நூலைப் படித்தால் அவை மறையக்கூடும். நான் எழுதியுள்ள “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்: இரு நூற்றாண்டு வரலாறு" அண்மைக் காலச் செயல்பாட்டு வரலாறு என்றால், இது ஆதிகாலம் துவங்கி இன்று வரையிலான சிந்தனை வரலாறு. இரண்டையும் படித்து முடித்தால் தமிழகம் குறித்து ஒரு முழு பிம்பம் உங்கள் மனதில் எழலாம். அப்படி எழுந்தால் இந்த நூலின் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.
அருணன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: