Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தமிழாற்றுப்படை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
        
ஆதி உண்டு அந்தம் இல்லை

 

தொன்மை என்பதை ஓர் இனத்தின் வரலாறு என்பதா? உரிமை என்பதா? பெருமிதம் என்பதா? மூன்றையும் தாண்டி அந்த இனத்தின் அதிகாரம் என்பதா? திராவிட இனம் தொன்மையில் தோய்ந்தது. அதன் வேர்களில் வரலாற்றின் ஆதிமண் ஒட்டியிருக்கிறது. ஆனால், திராவிடத்தின் தொன்மையை ஐரோப்பிய அறிவுலகம் கடந்த நூற்றாண்டு வரை அங்கீகரிக்கவில்லை; அறிவுத்துறையினர் பலரும் அதை அறிந்திருக்கவுமில்லை .

 

இந்த நாட்டின் மேட்டுக்குடி மேதைகளால் மேற்குலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாறு வேறு. இந்தியாவில் நிலவிவந்த அத்துணை இனக்குழுக்களின் பண்பாடுகளுக்கும் ஆதிப்பண்பாடு ஆரியப் பண்பாடே என்றும், இந்த நிலப்பரப்பில் வழங்கி வந்த அத்துணை மொழிகளுக்கும் ஆதி மொழி சமஸ்கிருதமே என்றும் ஐரோப்பியக் கல்வி உலகத்திற்கு அடிக்கோடிட்டுச் சொல்லப்பட்டிருந்தது. அப்படிப் பிம்பப்படுத்தப்பட்ட கருத்தே நம்பப்பட்டும் வந்தது.

 

மொகஞ்சதாரோ - ஹரப்பா நிலவெளிகளை ஜான் மார்ஷல் ஆழப் பிளந்து அகழாய்வு செய்த பிறகுதான் உண்மையின் நாகரிகம் புதையுண்ட பூமியிலிருந்து புறப்பட்டு வந்தது.

 

சிந்துவெளி மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் ஆரியர் வருகைக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டார்கள் என்றும் அதன்பிறகு ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாகரிகமே சிந்துவெளியின் சிதிலங்களில் காணக்கிடைக்கிறது என்றும், 1900 ஆண்டுகளில் ஆர்.சி.தத் போன்றவர்கள் லண்டனில் எழுதிய ஆய்வுக் கற்பனைகள் போதுமான புன்சிரிப்புக்கு ஆளாயின.

 

இந்தப் பொருத்தமான தளத்தில் திருத்தமான ஒரு கருத்தைச் சத்தியத்தின் சார்பாய்ப் பதிவுசெய்கிறேன். இது என் கருத்தாயின் தமிழ்க் காதலால் விழைந்த தனிப்பட்ட கருத்தென்று அறிவுலகம் புறந்தள்ளிப் போய்விடக்கூடும். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்த ஹீராஸ் பாதிரியாரின் ஒருபாற்கோடாத கருத்தை இவ்விடத்தில் பதியமிடுகிறேன் :

 

"சுமேரிய நாகரிகம் கண்டறியப்படும் வரை எகிப்திய நாகரிகமே உலகின் பழைய நாகரிகம் என்று நம்பப்பட்டு வந்தது. சிந்துவெளி அகழ்ந்தெடுக்கப்பட்ட பின் திராவிட நாகரிகமே தொன்மையுடைத்து என்று உணரப்பட்டது”.

 

ஆயின், சிந்துவெளி மக்கள் திராவிடர் தாமா? அவர்கள் பேசிய மொழி யாது?

 

இந்தியாவில் வழங்கும் மொழிகளை நான்கு குடும்பங்களாகப் பிரிக்கிறது மொழியியல்.

 

1. இந்தோ ஆரிய மொழிக் குடும்பம்

 

2. திராவிட மொழிக் குடும்பம்

 

3. ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக் குடும்பம்

 

4. திபெத்திய பர்மன் மொழிக் குடும்பம்

 

ஆரியர்கள் இந்நாடு போந்தது கி.மு 1500 - 2000 ஆண்டுகளில் என்று வரையறுக்கப்படுகிறது. அவர்கள் வருகைக்கு முன்பே சிந்துவெளி நாகரிகம் ஆகாயம் தொட்டு அழிந்துபட்டது. எனவே ஆரியர் வருகைக்கு (முற்பட்டதே சிந்துவெளி நாகரிகம் என்பதை ஆதாரங்கள் அறைந்து (சொல்கின்றன.

 

இலத்தீன் - கிரீக் போன்ற ஐரோப்பிய மொழிகளின் வேர்களோடு 1) றவுகொண்ட இந்தோ ஆரிய மொழிகள் இந்தியா வந்தடைவதற்கு (முன்னால், இந்த மண்ணின் ஆதி மக்கள் பேசிவந்த மொழிதான் திராவிடக் குடும்ப மொழி என்பது வரலாறு தரும் நம்பிக்கையாகும். அந்தத் திராவிடத்தின் மூலமொழி தமிழ்தான் என்பதற்கு ஆய்வறிஞர்களின் உலக ஒப்புதல் இருக்கிறது.

 

"திராவிட மொழிகளுள் பழைமையானது தமிழே. அதுவே முதல் (மொழியாகவும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்” - இது பேராசிரியர் மெய்ல் (Meil) கொண்ட நம்பிக்கை.

 

“திராவிட மொழிகளுள் தமிழே தொன்மை வாய்ந்தது. அளவிடவொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்று வருவது” என்பது மொழியறிஞர் கிரியர்சன் கருத்து.

 

"தமிழ் மொழி பண்பட்டது. இயல்பாக வளர்ந்த இலக்கிய வளம் கொண்டது” என்பது மாக்ஸ் முல்லர் கூற்று.

 

இந்தியாவின் தொன்மொழி தமிழே என்றும், பரந்துபட்ட இந்தியா முழுக்கப் பேசப்பட்ட ஒரு மொழியாகிய திருமொழி என்றும் ஆராய்ச்சி உலகின் ஒரு பிரிவு ஆழ்ந்து நம்புகிறது.

 

'கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளம் துளுவும்' தமிழின் உதரத்திலிருந்து உதித்தெழுந்தவை. இது தொன்மையின் மேன்மை கருதிச் சொல்லப்பட்டதன்று; உண்மையின் நேர்மை கருதிச் சொல்லப்பட்டது.

 

தமிழ் பெற்ற பிள்ளைகளின் தொன்மை குறித்துச் சொன்னாலே தமிழின் தொன்மை புலப்படும். ரிக் வேதத்தின் 'அயித்ரேய பிராமணம்' ஆந்திரர் என்ற சொல்லை ஆள்கிறது. கி.மு - வில் இயற்றப்பெற்ற ரோமானிய நாடகமொன்றில் கன்னட மொழிச் சொற்கள் பயின்றுவரும் காட்சி ஒன்று காணப்படுகிறது. பிரிந்துபோன பிள்ளை மொழிகளுக்கே இத்துணை தொன்மை உள்ளதென்றால் அவற்றின் தாய்மொழி என்று நம்பப்பெறும் தமிழின் தொன்மை குறித்துச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

ஐரோப்பிய நாகரிகத்துக்குக் கிரேக்க நாகரிகமே மூலமாவதுபோல், திராவிட நாகரிகத்துக்குச் சிந்துவெளி நாகரிகமே மூலமாகலாம். அது தரவுகளோடும் சான்றுகளோடும் இன்னும் முற்றிலும் மெய்ப்பிக்கப்படவில்லையெனினும் ஆய்வறிஞர்களின் கருதுகோள் திராவிடத்துக்குச் சார்பாகவே விளங்குகிறது.

 

ரஷ்ய அறிஞர் 'யூரி நோரோசோவ் சிந்துவெளிக் குறியீடுகளைக் கணினிப் பகுப்பாய்வு செய்தபிறகு அவற்றுக்கு அடிப்படை, ஒட்டுநிலைத் திராவிட மொழியாக இருக்கலாம் என்ற முடிவை முன்வைக்கிறார்.

 

பின்லாந்து அறிஞர் 'ஆஸ்கோ பர்ப்போலா'வும் சிந்துவெளி எழுத்துக்களும் ஹரப்பாவின் மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதுகிறார்.

 

1920இல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளும். 2007இல் பூம்புகார் மேலப்பெரும்பள்ளத்தின் அகழ்வாய்வில் கண்டெடுத்த பானையின் அம்புக்குறிகளும் ஒத்துப் போவதால் சிந்துவெளி - தமிழ்நிலம் இரண்டின் பண்பாட்டுத் தொடர்புகளைப் புறந்தள்ளவியலாது.

 

கீழடி அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பெற்று அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் விளங்கும் பீட்டா அனாலிடிக் நிறுவனத்தில் கரிமச் (சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சில மாதிரிகள் 2200 ஆண்டுகள் பழைமையானவை என்று காட்டுகின்றன. தொன்மை அகழ்வுகளோடு அண்மை அகழ்வு(2018)களும் ஒத்துப்போகின்றன.

 

தமிழின் தொன்மை உணரவேண்டுமெனில் உலக மொழிகளின் காலவரிசையோடு தமிழை உறழ்ந்து பார்க்கவேண்டும்.

 

இன்று நாகரிகத்தைக் கட்டி ஆளக் கருதும் மொழிகளெல்லாம் காலக் கணக்கில் இளையவை. தமிழின் காவியங்களும் கோபுரங்களும் 'ஆகாயம் தொட்ட நாற்றாண்டுகளில்தான் அந்த மொழிகள் எழுத்துருவடே பெற்றன.

 

  • இன்று உலக மொழியென்று பேசப்பெறும் ஆங்கிலத்தின் முதல் எழுத்துரு கி.பி 7ஆம் நூற்றாண்டில்தான் அறியப்பெற்றது
  • இன்று தொழில்நுட்ப மொழியாக உயர்ந்து நிற்கும் ஜெர்மானிய மொழியின் எழுத்து வடிவம் கி.பி 8ஆம் நூற்றாண்டில்தான் எட்டப்பட்டது
  • பண்பாட்டு மொழியென்று கருதப்படும் பிரெஞ்ச் மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி 9 ஆம் நூற்றாண்டை ஒட்டியதாகும்
  • இன்று அறிவியல் மொழியாக வளர்ந்து நிற்கும் ரஷ்ய மொழியின் முதல் எழுத்துச் சான்று கி.பி 10 ஆம் நூற்றாண்டில்தான் பார்க்கப்பட்டது
  • லத்தீனின் பேச்சு மொழியிலிருந்து பிறந்து இன்று இசைமொழியென்று இசைபட வாழும் இத்தாலி எழுத்து வடிவில் அறியப்பெற்றது கி.பி 10 ஆம் நூற்றாண்டில்தான்

 

ஆனால், தமிழ் மொழியின் ஆதி இலக்கணம் என்று அறியப்பெற்ற தொல்காப்பியம், கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது அறிவுலகத்தால் மெய்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை.

 

இன்று வெற்றிபெற்ற மொழிகளெல்லாம் எழுத்துக் கூட்டிக்கொண்டிருந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அகம், புறம், அறம், இகம், பரம் என்ற எல்லாக் கருத்தியல்களுக்கும் கலைவடிவம் தந்து நிலைவடிவம் கொண்டிருந்தது தமிழ்.

 

இப்படி மொழிப்பரப்பில் மட்டுமன்றி, கடல் கொள்ளப்படும் முன்னே நிலப்பரப்பிலும் நீள அகலம் கொண்டிருந்தது தமிழ் வழங்கிய பெருவெளி. தமிழினப் பெருந்தொகுதியில் உச்சகட்ட எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்வது இதோ இந்த நூற்றாண்டில்தான். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டுத் தமிழர் எண்ணிக்கை ஏழு கோடியே இருபத்தொரு லட்சத்து முப்பத்து எட்டாயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு. உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்று கூட்டினால் சற்றொப்ப எட்டுக் கோடி என்று எண்ணலாம்.

 

தமிழ் தோன்றிய காலத்திலிருந்து அதிகமான நாடுகளில் தமிழ் பேசும் தமிழர்கள் உறைவதும் இந்த நூற்றாண்டில்தான். 57 நாடுகளில் தமிழ் இன்று பேசப்படுகிறது எனில் அதற்கு நாம் இலங்கைத் தமிழர்களைத்தாம் பொன்போல் போற்ற வேண்டும். ஆனால், வரலாற்றில் தமிழ் பேசும் வெளியின் நிலப்பரப்பு குறுகிப் போயிருப்பதும் இதோ இந்த நூற்றாண்டில்தான். இன்று தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஒரு லட்சத்து முப்பதாயிரத்து ஐம்பத்தெட்டுச் சதுர கிலோமீட்டர் மட்டும்தான். ஆனால், முன்னொரு காலத்தின் தமிழ் வழங்கிய நிலவெளியின் நீள்பரப்பு இதுவன்று.

 

'தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் பரிதிமாற் கலைஞர் எழுதிச் செல்லும் ஒரு பெருஞ்செய்தி ஒருமுறைக்கு இருமுறை பயிலத்தக்கது.

 

''எழுநூற்றுக் காவதம் அகன்று கிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கடல் கொள்ளப்பட்டன. இக்காலத்து அளவின்படி ஒருகாவதமென்பது பத்து மைலாக எழுநூறு காவதமும் ஏழாயிர மைலெல்லை அளவாம். இந்துமகா சமுத்திரம் இருநூற்றைம்பது லட்சம் சதுர மைலுள்ளது. இதில் பதினாறு லட்சம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலமாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி மோரீசுத் தீவுக்கும் பம்பாய் நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத் தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள கெர்க்யூலன் என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனையிலிருந்து கெர்க்யூலன் தீவின் தெற்கு வரையிலும் அகலத்தில் மடகாசிகர் தீவு முதல் சுமத்ரா ஜாவா முதலியவற்றையுள்ளடக்கிய சந்தாத் தீவுகள் அளவும் விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்டதென்பது போதரும்".

 

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டிருக்கலாம் என்ற கூற்றுக்கு இந்த நிலப்பரப்பின் நீட்சியும் ஒரு சாட்சி. இத்துணை நீண்ட கால வரலாறும் நிலவரலாறும் இலக்கியச் செழுமையும் கொண்டது தமிழ்.

 

தமிழர்களும், பிற மொழியாளர்களும் ஏன் தமிழ் பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தீன், கிரேக்க, ஐரோப்பிய, ஆரிய நாகரிகங்களுக்கிணையான அல்லது சற்றே மேம்பட்ட திராவிட நாகரிகம் தெளிவதற்கும், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மூதாதையரோடு உரையாடுதற்கும், இந்த பூமியின் பழைய காற்றையும் வெப்பத்தையும் உள்ளும் புறமும் உணர்வதற்கும், கருத்துக்கருவியாகிய மொழியை ஓர் இனம் கலைக்கருவியாக்கிய கலாசாரம் காண்பதற்கும், ஒரு தென்னாட்டு இனக்குழு கிறித்துவுக்கு முன்பே உலகப்பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்த அறிவுக்கொடை துய்ப்பதற்கும், மனித குலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியை நம் தொப்புள் பள்ளம் உணர்வதற்கும், அந்தப் பெருமிதத்தில் நிகழ்காலம் நிமிர்வதற்கும் எதிர்காலம் நிலைப்பதற்கும் ஒரு மாந்தன் தமிழ் கற்கலாம்.

 

இந்த முன்னுரையில் நீட்டி முழக்கப்பட்டிருக்கும் தொன்மையே தமிழ் மொழியின் பெருமை என்று கற்போர் கருதலாம். தமிழ் மொழியின் சிறுமையும் அதுதான் என்று செப்ப விழைகிறேன். பழைய பெருமிதம் என்ற சூழ்மேகம் தமிழின் நிகழ்காலத்தை மறைக்கிறது. 'எல்லாப் பொருளும் இதன்பால் உள்' என்ற மூடநம்பிக்கையால் பேரண்டத்தில் நாளும் வளரும் பேரறிவை உள் நுழையவொட்டாமல் கதவுகளையும் சுவர்களாக்கிக்கொண்டோம். ஆதி நூற்றாண்டுகளில் பல இனங்களைப் பல நூற்றாண்டுகள் முந்தி நின்ற நாம், நிகழ் நூற்றாண்டில் சில நூற்றாண்டுகள் பின்தங்கி நிற்கின்றோம். எவரோ கண்டறிந்த பொருளுக்குச் சொல் தேடுகின்றாரேயன்றி, தாமே கண்டறிந்த ஒரு பொருளுக்குப் பெயர் சூட்டி உலக நீரோட்டத்தில் செலுத்துமிடத்தில் தமிழர் இல்லை .

 

தொன்மையினாலேயே ஒரு மொழிக்கு நன்மை விளைந்துவிடும் என்ற கூற்று மூடநம்பிக்கை என்று வரலாறு முகஞ்சுழிக்கிறது,

 

  • சாக்ரடீஸ் பேசிய கிரேக்கம் 16ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்து தேய்ந்து மறைந்து போனது
  • ஏசு பேசிய ஹீப்ரு மொழி 4000 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி 2ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து வெறும் எழுத்து மொழியாய் இறுகிவிட்டது
  • 4000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகப் பதிவுகொண்ட சுமேரிய மொழி இன்று சுவடற்றுப் போனது
  • கி.மு 6ஆம் நூற்றாண்டின் கல்வெட்டிலேயே காணப்பட்ட மொழி - சீசர் பேசிய இலத்தீன் மொழி - இன்று பேச்சு வழக்கிலிருந்து செத்தொழிந்தது  
  • காளிதாசன் கவிதை புனைந்ததும் வேத உபநிடதங்கள் ஒதியதும், இந்தோ ஆரிய மொழிகளைத் தோற்றுவித்ததுமான சமஸ்கிருதம் இன்று மக்கள் மொழியாக மாண்புறவில்லை

 

ஆனால், காலம் கடந்தும் காலமாகாத உலகத்தின் சில மொழிகளுள் ஒன்றாக அன்று முதல் இன்றுவரை தமிழ் நின்று துலங்குகிறது. அதைக் காலத்தின் விளிம்புவரை அழைத்துச் செல்வது தமிழர்களின் கையிலிருக்கிறது; அரசின் கையிலிருக்கிறது; அதிகாரத்தின் கையிலிருக்கிறது.

 

லூயிஸ் கிரே எழுதிய மொழிகளின் அடிப்படை (Foundation of Languages) என்ற நூலில் குறித்துள்ள கணக்கின்படி உலகெங்கும் வழங்கப்படுவதாக அறியப்பட்ட மொழிகள் 2796. இவற்றுள் இந்தியப் பரப்பில் வழங்கப்படுவன 1652. இந்திய அரசியலமைப்பின் அட்டவணையில் இடம் பெறும் 22 மொழிகளுள் அகர வரிசைப்படி 20 ஆம் இடத்தில் இலங்குகிறது தமிழ்; ஆனால் காலவரிசைப்படி முதல் இடத்தில் துலங்க வேண்டும் தமிழ்.

 

2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்திய மக்கள் மொழியியல் கணக்கீடு (Peoples Linguistic Survey of India) நிகழ்த்திய ஆய்வு அதிர்ச்சி தருகிறது. 1961 ஆம் ஆண்டில் பேசப்பட்ட 1650 மொழிகளுள் ஆண்டுக்குப் பத்து மொழிகள் இறந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்தால் இன்னும் ஒரே நூற்றாண்டில் இந்த எண்ணிக்கை 500க்கும் குறைவாக ஆகிவிடும் என்று மொழியே மூர்ச்சையடையும் ஒரு செய்தியை முன்வைக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதுதான் இனப் பேராசை.

 

போர்க்கால நடவடிக்கையாக மொழிகாக்கும் வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மொழியைத் தமிழர்கள் பேண வேண்டுமென்றால் தமிழர்க்குத் தமிழ்மொழியைத் தகுதியாக்க வேண்டும்; உலகப் போட்டிக்கான கருவியாக்க வேண்டும்.

 

'தமிழுக்குள் உலகம்; உலகுக்குள் தமிழ்' என்று இரண்டு பேரியக்கங்கள் நாட்டில் நடைபெற வேண்டும்.

 

மொழி - இனம் - நிலம் என்ற பெருமிதங்களைத் தமிழர்களின் மரபணுக்களுக்குள் ஊட்ட வேண்டும்.

 

அந்தப் பெரும்பணிகளுள் ஒரு சிறுபணிதான் இந்தத் தமிழாற்றுப்படை. இது என் வாழ்நாள் ஆவணம். 3000 ஆண்டு நீளமுள்ள தமிழ்ப் பெருங்காட்டில் பறந்து பறந்து, திரிந்து திரிந்து, பார்த்துப் பார்த்துப், பறித்துப் பறித்துத் தொடுக்கப்பட்ட உயிர்ப்பூக்களின் ஒரு தனி மாலை. இலக்கியத்தின் புதிய கலாசாரமாக - இதன் பெரும்பாலான கட்டுரைகளைத் தமிழ்நாட்டின் பெருநகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆரவாரத்தோடு அரங்கேற்றினேன். கொட்டிக்கிடக்கின்றன தமிழ் முத்துக்கள். என் இரு கைகளால் அள்ள முடிந்தவை இவைமட்டும்தாம். தகுதிமிக்க பல ஆளுமைகள் இலக்கிய வெளியில் இன்னும் இருக்கிறார்கள். காலம் என்னை ஆற்றுப்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்களும் பதிவுசெய்யப்பெறுவார்கள்.

 

இது தமிழ் சேமித்த ஆதிஅறிவு. இதற்கு ஆதியுண்டு; அந்தமில்லை .

 

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்நூல் இருந்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் தமிழ் கடத்தப்படும்.

 

என் படைப்புகளுள் என் வாழ்நாளின் நான்காண்டுகளை உறிஞ்சிக் கொண்ட ஒரேநூல் இதுதான்.

 

இதனை எழுதி முடிக்கும் காலம் வரை இற்றுப்போகாதிருந்த என் உடலுக்கும், அற்றுப் போகாதிருந்த என் உயிருக்கும் நன்றி தெரிவிப்பதே நன்றாகும்.

 

பிள்ளைகளுக்குத் தமிழுட்டி வளர்க்கும் தமிழர்களின் தொடர்பரம்பரைக்குக் காணிக்கையாகிறது "தமிழாற்றுப்படை".

 

களைப்பை மீறிய
களிப்போடு
வைரமுத்து
சென்னை
ஒரு ஜூலை மாலை
2019

 

தமிழாற்றுப்படை

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

தமிழாற்றுப்படை - உள்ளடக்கம்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு