தமிழர் திருமணமும் இனமானமும் - அணிந்துரை

தமிழர் திருமணமும் இனமானமும் - அணிந்துரை

தலைப்பு

தமிழர் திருமணமும் இனமானமும்

எழுத்தாளர் க.அன்பழகன்
பதிப்பாளர்

பூம்புகார் பதிப்பகம்

பக்கங்கள் 493
பதிப்பு நான்காம் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.300/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thamizhar-thirumanamum-inamaanamum-poompukar.html

 

அணிந்துரை

பேராசிரியர் அவர்களால் எழுதப்பட்ட "தமிழர் திருமணமும் இனமானமும்'' எனும் இந்தப் பெரும் நூலைப் படித்து மகிழ்ந்தேன்.

ஒரு தங்கச் சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானவர் இறங்கிப் பாடுபட்டு, கல்லோடும் மண்ணோடும் கலந்திருக்கும் தங்கத்துகள்களை மேலே கொண்டுவந்து சேர்ப்பர், கண்டிருக்கிறோம் நாம். ஆனால் நமது பேராசிரியர் அவர்கள் தன்னந்தனியாகத் தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்துகள்களை எடுத்துவரத் தன்னைப் பெரிதும் வருத்திக் கொண்டு, தமிழர்களுக்கு எக்காலமும் பயன்தரத்தக்க அந்தப் பணியை முடித்து, எடுத்த தங்கம் கொண்டு அணிகலனையும் உருவாக்கி வழங்கியுள்ளார். அதுவே இந்த நூல்.

படிக்கும் நாம் மலைத்துப்போகிற அளவுக்குப் பழங்காலந் தொட்டு இக்காலம் வரையில்; பலாப் பழத்தைக் கீறி அதற்குள் இருக்கும் இனிய சுளைகளை எடுத்தளிப்பதுபோல் பல்வேறு அறிஞர் பெருமக்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களை யெல்லாம் திரட்டி - அந்தக் கருத்து வைரங்களுக்குத் தனது அறிவாற்றல் கொண்டு பட்டைதீட்டி ஒளியுமிழச் செய்திருக்கும் விந்தையைச் செய்துள்ளார் இந்நூலில் பேராசிரியர்!

இனஉணர்வு, மொழியுணர்வு, அழுத்தமான கொள்கை உணர்வு, இவையனைத்தையும் நெஞ்சில் பதித்து - அவற்றைப் பரப்பிட உறுதி பூண்டு, அந்த உறுதி எந்த நிலையிலும் ஓர் ஊசி முனையளவும் குறையாமல், தனது பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு தமிழர்க்குத் தொண்டாற்றும் பேராசிரியர் அவர்கள், இந்த நூலுக்கான தலைப்பை ஒரு வாய்ப்பாக மட்டுமே ஆக்கிக் கொண்டு, தமிழர்களின் இல்லத் திருமணங்களில் எந்த முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்க்கைமுறை, தன்மானம் போற்றும் முறை, ஆரிய ஆதிக்கத்திற்கு அடிபணியாது வீறுகொண்டு நின்றிட ஏற்றிட வேண்டிய மூடநம்பிக்கை யொழிந்த பகுத்தறிவு முறை, ஆண்பெண் சமத்துவத்தை நிலைநாட்டும் முற் போக்குக் கொள்கை முறை என இப்படி அவர் தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொல்லவேண்டுமென்று விரும்பிய அனைத்தையும் அழகுபடச் சொல்லியிருக்கிறார்.

வாழ்ந்த தமிழ் இனம் வீழ்ந்து பட்டதை எண்ணிக் கலங்கும் அவரது உள்ளத்தின் ஏக்கப்பெருமூச்சாக, நூலின் தொடக்கத்திலேயே அவர் எழுதியுள்ள சில வரிகளைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது! கண்கள் பனிக்கின்றன!

"முப்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தங்க ளிடையே பேசும் மொழியாக வளர்த்து, இருபதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாட்டுப்பா செய்யும் நாவினராய் இலக்கியம் வடித்து, பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே எழுத்து வடிவும் முறையும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைகண்டு வளர்த்து, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வரையப்பட்ட ஐந்திற இலக்கணமாம் தொல் காப்பியத்தையும் பெற்று, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னே பிறந்த இணையற்ற வாழ்வியல் விளக்கும் அறநூலாம் திருக்குறளையும் கொண்டு, அக்காலத்தை ஒட்டிப் பிறந்த சங்கத் தமிழ்த்தொகை நூல்களாம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கண்டு, தொடர்ந்து செந்தமிழ் வளர்க்கும் முத்தமிழ்க் காப்பியமாம் சிலம்பினையும், புத்தம் பரப்பும் மணிமேகலையையும் பெற்று; அடுத்து திருமூலர் திருமந்திரத்தையும், மணி வாசகர் திருவாசகத்தையும், மூவர் தேவாரத்தையும் ஆழ்வார்கள் பாசுரத்தையும், திருத்தக்க தேவரையும், கம்பரையும், சேக்கிழாரையும், கச்சியப்பரையும், செயங்கொண்டாரையும், வில்லிப்புத்தூராரையும், அருணகிரியாரையும், தாயுமானவரையும், வடலூர் வள்ளலாரையும், பாரதியாரையும், பாரதிதாசனாரையும் காலத்தின் கருவூலங்களாகப் பெற்றுள்ள பெருமைக்குரிய தமிழ் இனத்தாரின் வாழ்வில்தான், திருமணங்கூடத் தமிழில் நடைபெறவில்லை. நம்மை வாழ்விக்கும் தமிழுக்கு அந்தத் தகுதிகூட இல்லையென்று, தமிழரே நடைமுறையில் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றால் அதை என்னவென்று கூறலாகும்? இப்படிப்பட்ட இழிவான நிலை உலகில் எந்த இனத்திற்கேனும் ஏற்பட்டுள்ளதா? ஏற்படவுங் கூடுமோ?''.

பேராசிரியர் விடுக்கும் இந்த வினா, மையில் தோய்ந்த அவரின் எழுதுகோலால் தீட்டப்பட்டதல்ல. இதயத்தில் கசியும் குருதித் துளிகளில் குளித்தெழுந்த பேனா முள்ளினால் எழுதப்பட்டது. அவர் கேட்கும் இந்தக் கேள்வியை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழச்சியும் சிந்தித்தால் - தமிழர் இனம் நாளைக்கே தலைதூக்கி நின்று, அன்று தரணியாண்ட பெரும்புகழுக்குரிய இனம் இதுதான் என்ற உண்மையை நிலைநாட்ட முற்பட்டுவிடுமே!

மநுவின் மொழி அறமான தொருநாள் அதை

மாற்றுநாளே தமிழர் திருநாள்!

எனப் புரட்சிக் கவிஞர் செய்த முழக்கத்தைப் பெரியார் தலைமையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் செயல்படுத்திக் காட்ட, பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்து வெளிவந்த சிறுத்தையாம் தன்மானத் தமிழ் இளைஞர் ஒவ்வொருவர் கையிலும் இருந்திட வேண்டிய ஒரு படைக்கலனைப் படைத்துத் தந்திருக்கிறார் பேராசிரியர் என்பதே இந்த நூலை ஆழ்ந்து படித்த பிறகு நான் கண்ட உண்மையாகும்.

"இல்லறம் என்பது ஆண்பெண் இருவரும்

ஒருமனப்பட்டுப் பயிலும் கல்விக்கூடம்,

திருமண வாழ்க்கையைவிட உயர்ந்த கல்வி

உலகில் மானிட குலத்துக்கு இல்லை ''

எனும் பேரறிஞர் பெர்னாட்ஷாவின் கருத்துரையைச் சுட்டிக் காட்டும் பேராசிரியர் அவர்கள், அந்த இல்லறமும் திருமண வாழ்க்கையும் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதற்கு வழங்கும் அறிவுரைகளும், அளிக்கும் விளக்கங்களும், எடுத்துக்காட்டும் மேற் கோள்களும், ஆய்ந்து தெளிந்து திடமாக வலியுறுத்தும் கொள்கைகளும் எவருமே மறுக்க இயலாதவைகளாகும்.

உலகம் அறிவியல் யுகத்தில் அடியெடுத்து வைத்து வியத்தகு விஞ்ஞான சாதனைகளை நிகழ்த்திவரும் இந்தக் காலத்திலும், நம்நாட்டு இளைஞர்கள் ஆதிக்கவாதி களால் தேக்கி வைக்கப்பட்டு, சனாதனப் பன்றிகள் உருண்டு புரண்டு கொண்டிருக்கிற மூடநம்பிக்கைச் சகதியில் காலை விட்டுக்கொண்டு அவதிப்படும் நிலை யிலிருந்து விடுபட்டு, பகுத்தறிவுச் சுடரொளிகளாகத் திகழ, சுயமரியாதை இயக்கம் அறுபது ஆண்டுக்காலத் திற்கும் மேலாகப் பாடுபட்டு வருகிறது. அய்யாவும் அண்ணாவும் நானும் இந்நூலாசிரியர் போன்றவர்களும் இந்த இயக்கத்தின் நூற்றுக்கணக்கான முன்னணியினரும் பட்டிதொட்டிகள் சிற்றூர், பேரூர், பட்டினக்கரைகள் எங்கணும் சென்று நிறைவேற்றி வைத்துள்ள சுய மரியாதைத் திருமணங்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கானவையாகும்.

இன்று சுயமரியாதைத் திருமணங்களை, கழகத் தலைவனாக இருக்கிற என் தலைமையில் நடத்திக் கொள்ள விழைவோர் பலராகலின், அனைவர் விழைவையும் ஏற்று நிறைவேற்ற இயலாத நிலையில், கழகத்தின் இலட்சியப் பணி நடைபெறுவதற்கு நிதி வழங்குவோரின் திருமணங்களுக்கே செல்லக்கூடியவனாக உள்ளேன். அதன்படி ஐயாயிரம் ரூபாய் நிதியினைத் தலைமைக் கழகத்தில் செலுத்தி, என்னை அழைப்போர் பலர். அதனினும் பலமடங்கு நாடெங்குமுள்ள கழக உடன்பிறப்புக்களின் சுயமரியாதைத் திருமணங்கள் கழக முன்னணியினரைக் கொண்டு நடைபெறுவதனால், தமிழின மானங்காக்கும் கொள்கை நாளும் பரவுகிறது என்பதில்தான் நான் மனநிறைவு கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியுடன் கடந்த காலத்தில் நடந்துவந்த பாதையைப் பார்க்கிறேன். வடமொழியும் வடமொழிப் புரோகிதரும், சமசுக்கிருத மந்திரங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத அளவுக்குத் தமிழர்கள் தமிழ்ப்பண்பாட்டுக்கு ஏற்பத் தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்லவும், அப்படி நடத்திடவும் சுய மரியாதை இயக்கத்தினர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

1946-ஆம் ஆண்டு என்று எனக்கு நினைவு - தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் சுயமரியாதை இயக்க நண்பரும் என் நெருங்கிய நண்பருமான ராஜு என்பவருக்குத் திருமணம். என் தலைமையில் நடைபெறு மென அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டது. அதே நாளில் தஞ்சாவூரில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தலைமையில் எனது மைத்துனர் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராம் அவர்களின் மணவிழா. அந்த நிகழ்ச்சிக்குக் கூட நான் செல்லாமல் என் வீட்டில் உள்ளவர்களை அனுப்பிவைத்துவிட்டுப் பாபநாசத்துக்கு நண்பர்களுடன் புறப்பட்டுவிட்டேன். அப்போதெல்லாம் கருப்புச் சட்டை அணிவது வழக்கம், திராவிடர்க் கழகத்தின் திட்டப்படி! நாங்கள் நாலைந்துபேர் பாபநாசம் திருமணப்பந்தல் முகப்பில் கருஞ்சட்டையுடன் நுழைந்தவுடன் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. "டேய்! கருப்புச்சட்டை பசங்க, யாரும் உள்ளே நுழையக் கூடாது. அய்யரை வச்சுத்தான் கல்யாணம் நடத்துறோம். நீங்க போங்க வெளியே!'' என்று கதர் சட்டை அணிந்த சில முரட்டு ஆசாமிகள் எங்களை விரட்டியடித்தனர். மணமகன் எங்கே என்று பார்த்தோம். கிடைக்கவில்லை. பந்தலிலிருந்து கிளம்பி, அந்த ஊர் குளக்கரைப் படித்துறையில் வந்து அமர்ந்து கொண்டோம், ஏமாற்றத்துடன். பிறகு என் நண்பன் தென்னனை, கருஞ்சட்டையைக் கழற்றச் சொல்லி, "நீ போய் திருமண வீட்டில் என்ன நடக்கிறது?'' என்று பார்த்துவா என்றேன். அவ்வாறே சென்ற தென்னன் திரும்பி வந்து, அய்யரை வைத்துத் திருமணம் நடைபெறு கிறதென்றும் மாப்பிள்ளை ராஜு மணவறையில் அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்றும் சொல்லவே; ஒரு அரை மணி நேரம் கழித்து மணமகன் ராஜுவே எங்களைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். அழுது புலம்பிய அவரை நாங்கள் சமாதானப் படுத்தினோம். காலைச் சிற்றுண்டி அருந்த அழைத்தார். ''நான் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிட்டேன். இனிமேல் பெண் வீட்டார் என் சொற்படிதான் கேட்க வேண்டும்.

காலை உணவருந்தியவுடன் மணவிழாப் பந்தலிலேயே நீங்கள் எங்களை வாழ்த்திப் பேச வேண்டும்'' என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு வயிற்றுப்பசி ஒருபுறம் - பேசவேண்டும் என்ற பசி மற்றொருபுறம். ஒப்புக்கொண்டு கிளம்பினோம். ராஜு, பந்தலில் பேசுவதற்கு மேடைபோடுகிற வேலைகளைக் கவனிக்கச் சென்றார். எங்களைப் பந்தியில் உட்கார வைத்துவிட்டுத்தான் சென்றார். ஆனால் பரிமாறுவதற்கு அதே முரட்டுக் கதராடைக்காரர்கள்தான் வந்தனர். அவர்கள் எங்கள் பக்கத்து இலைவரையில் இட்லி வைப்பார்கள். எங்களிடம் வரும்போது ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போய்விடுவார்கள். நாங்களும் சாப்பிட்டு முடித்தது போல் பாவனை செய்துவிட்டு, பேச்சுப் பசியையாவது தீர்த்துக் கொள்வோம் என்று பந்தலில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தோம். மணமக்களை வாழ்த்திப் பேசுவது என்ற பெயரால், மிக நீண்ட நேரம் நான் ஆற்றிய உரை, சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? ஏன் என்பதற்கான விளக்கங்களை விரிவாக வழங்குவதாக அமைந்தது. முகப்புக்குள்ளேயே வராதே என எங்களை விரட்டிய முரட்டுக் கதராடைக்காரர்களே முகமலர்ந்து என்னை அணுகி, முதலில் நடந்துவிட்ட தவறுகளுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.

இதுபோன்ற அனுபவம் - சுயமரியாதைத் திருமணங் களைத் தொடக்க காலத்தில் நடத்திக் கொண்டவர் களுக்கும், நடத்தி வைத்தவர்களுக்கும் ஏராளமாக இருந்ததுண்டு.

எதிர்நீச்சல் போடும் ஆற்றலைத் தந்தை பெரியார் அவர்களிடத்திலே கற்றுக்கொண்டு எஃகு உள்ளத்துடன் இடையூறுகளைக் கடந்து வந்ததால்தான், இன்றைக்கு ஆயிரக்கணக்கான திருமணங்கள் தமிழ்மொழி உணர்வுடனும், தமிழ் இனவுணர்வுடனும், தமிழர்களின் இல்லங்களில் நடைபெறும் காட்சியைக் காண முடிகிறது.

எனினும் இன்னமும் திராவிட இயக்கத்துடன் தொடர் புடையோர் அல்லது இயக்கத்தில் இருப்போர் சிலருடைய வீடுகளில் ஏதோவொரு தவிர்க்க முடியாத காரணத்தால் பழைய புரோகித முறைத் திருமணங்கள் நடைபெறுவதைக் காணும்போது சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் அறிவிலி" என்று இந்த நூலில் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் முத்தாய்ப்பாகக் குறிப்பிட் டிருப்பது எத்துணை பொருத்தமானது என எண்ணிடவே தோன்றுகிறது.

மணவிழா முடிந்து ஆரம்பமாகும் இல்வாழ்க்கை எப்படித் திகழ்ந்திடல் வேண்டும் என்பதற்கு வழி முறைகள் பலவற்றை இந்நூலில் பரக்கக் காணமுடிகிறது. ''ஒரு காலத்தில் மாறுபாடு எழினும் அதைக் காட்டிக் கொள்ளாது சிறிது காலம் கடத்தியோ, ஓரிருநாள் கழிந்தோ - அது குறித்துத் தான் எண்ணிப் பார்த்த பின், உரையாட முற்பட்டால் உடன்பாடு காண்பது எளிது. மாறுபாட்டைத் தடிக்க வைத்துக்கொள்வது - ஒத்துப்போகும் வாய்ப்பைக் குறைத்து, உடன்படக் கூடியவற்றிலுங்கூட வேற்றுமையான நோக்கம் கொள்ள வழிவகுக்கும்''.

குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.

இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற் றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவூலத்திலிருந்து ஒன்பான் மணிகளின் குவியலையே பொழிவதுபோன்று ஆதாரங்களையும், மேற்கோள்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கொண்டு வந்து காட்டி மணவிழாவுக்கு மட்டுமன்றி, மானத்தோடு வாழ்வதற்கும், இந்த இனம் உலகில் ஏறுநடைபோடு வதற்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய இந்த எழுத்துப் பேழையைத் தந்துள்ளார். இது எழிற்பேழை! எண்ணப் பேழை! இனமானப்பேழை! எழுச்சிப்பேழை! இளைஞர், பெரியோர் அனைவரின் கையிலும் இருந்திடவேண்டிய கருத்துப்பேழை! கொள்கைப் பேழை!

அன்புள்ள,

மு. கருணாநிதி

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog