தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) அணிந்துரை - 1
பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் 'தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்ற இந்நூல், அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. பண்பாடு' என்னும் முதற் பிரிவிலே முருக - ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
முருக-ஸ்கந்த இணைப்பு என்னும் கட்டுரை, தமிழரின் (திராவிடரின்) முருக வழிபாடும் ஆரியரின் (வடஇந்தியரின்) ஸ்கந்த சண்முக வழிபாடும் ஆதிகாலத்தில் வெவ்வேறு வழி பாடாக இருந்தவை; பிற்காலத்தில் இரண்டும் இணைந்து கலப் புற்று இருப்பதைக் கூறுகிறது. அதாவது, திராவிட-ஆரிய கலப்புத்தான் இக்காலத்து முருக - சுப்பிரமணிய வழிபாடு என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறது.
பரிபாடலில் முருக வணக்கம் என்னும் கட்டுரை, பரி பாடல் கூறுகிற முருக வழிபாடு, உலக இன்ப வாழ்க்கையைப் பெறுவதற்காகவே மக்கள் முருகனை வழிபட்டனர். வீடுபேற்றை (முத்தியைக் கருதி மக்கள் வழிபடவில்லை என்பதையும் அக்காலத்தில் முருகன் வீடுபேறு அளிக்கிற தெய்வமாகக் கருதப்படவில்லை என்பதையும் கூறுகிறது.
'கலைகளின் தோற்றம்' என்னும் கட்டுரை, கலைகள் ஆதி காலத்தில் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறது. மனித சமூகம் நாகரிகம் அடைந்த பிறகு அமைத்துக்கொண்ட அழகுக் கலைகள் ஏற்படுவதற்கு முன்னே, மனிதன் நாகரிகம் பெறாத காலத்தில், எந்தச் சூழ்நிலையில் கலைகளை வளர்த்தான் என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. பகுத்தறிவு விஞ்ஞான அடிப்படையில் ஆராய்கிற இந்தக் கட்டுரை சிந்தனையைத் தூண்டுகிறது.
“உலகப்படைப்புக் கதைகள்-கதை மூலங்களைப் பற்றி ஓர் ஆய்வு” என்னும் கட்டுரை, உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பது பற்றி பழங்கால மனிதரின் நம்பிக்கைகளும் கதைகளும் தோன்றின விதத்தை ஆராய்ந்து கூறுகிறது. ஆதியில் உலகத்தைப் படைத்தவள் தாய்தான் என்னும் நம்பிக்கை கொண்டு
அவளைப் பற்றி அக்காலத்து மனிதர் கற்பித்துக்கொண்ட கதைகளையும், ஆதியில் உலகத்தைப் படைத்தவன் தந்தைதான் என்னும் நம்பிக்கையோடு அவனைப் பற்றி அக்காலத்து மனிதர் கற்பித்துக்கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இக்கொள்கைகளைப் பற்றிப் பழைய எகிப்து நாட்டுக்கதைகளும் நம்பிக்கைகளும், பாபிலோனிய-சுமேரிய நாட்டு நம்பிக்கைகளும் கதைகளும் கிரேக்க - யூதர்களின் நம்பிக்கைகளும் கதைகளும், இந்திய தேசத்துப் பழைய நம்பிக்கைகளும் கதைகளும் இதில் ஆராயப்படுகின்றன.
இந்நூலின் இரண்டாம் பகுதியாகிய 'தத்துவம்' என்னும் பகுதியில் கீழ்க்கண்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 'மணிமேகலையின் பௌத்தம்', 'பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்', 'பரபக்க லோகாயதம்' என்னும் பொருள் பற்றி மூன்று விஷயங்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன.
மணிமேகலையின் பௌத்தம் என்னும் கட்டுரையில், மணிமேகலை காவியத்தில் சொல்லப்படுகிற பௌத்தமதக் கொள்கையைப் பற்றிக் கட்டுரையாசிரியர் ஆராய்கிறார். ஈனயான (தேரவாத பௌத்தத்திலிருந்து மகாயான பௌத்தம் பிரிந்ததையும் மகாயானத்திலிருந்து மாத்யமிகம், யோகாசாரம் முதலான வேறு பௌத்த மதப்பிரிவுகள் தோன்றியதையும் கட்டுரையாசிரியர் கூறுகிறார். மணிமேகலை காவியத்தில் கூறப்படுகிற அறுவகைச் சமய தத்துவங்களை ஆராய்கிறார். பௌத்தமதத் தத்துவங்களை எழுதிய 'நியாயப் பிரவேசம்' என்னும் தத்துவ நூலைப் பற்றியும் பேசுகிறார். நாகார்ச்சுனருக்கு முன்பு பௌத்த தத்துவ நூல்கள் இருந்தன என்பதும் அந்தப் பழைய நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு நாகார்ச்சுனர் தமது நியாயப் பிரவேச நூலை எழுதினார் என்பதும் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டிய விஷயம். இது இன்னும் ஆராய்ச்சியில் இருக்கிறது. நாகார்ச்சுனர் எழுதிய நியாயப் பிரவேசந்தான் பௌத்த மதத்தின் முதல் தத்துவ நூல் என்று கட்டுரையாசிரியர் இக்கட்டுரையை முடிக்கிறார்.
'பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள்' என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள் முதல்வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை. திரு நா. வானமாமலை அவர்கள், தமிழ்நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார். தமிழிலுள்ள புறப்பாடல்கள், மணிமேகலை காவியம், 'நீலகேசி ஆகிய நூல்களைக்கொண்டு இப்பொருள் பற்றி ஆராய்கிறார். மார்க்ஸ், எங்கல்ஸ் என்பவர்களுடைய கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்நாட்டு உலகாயதக் கொள்கையை ஆய்ந்துள்ளார்.
'பரபக்கலோகாயதம்' என்னும் கட்டுரை இந்நூலின் கடைசி கட்டுரையாகும். மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் என்னும் மூன்று தமிழ் நூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பொருளைப் பற்றி ஆய்வு செய்கிறார். 'தமிழ் நாட்டு லோகாயதம் மேலும் ஆராயப்படுதல் வேண்டும் என்று முடிக்கிறார். உலகாயதக் கொள்கையைப் பற்றிய இந்த இரண்டு கட்டுரைகளும் ஆராய்ச்சி மனப்பான்மையுள்ளவருக்குப் பெரிதும் பயன்படுவனவாகும்.
பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை. சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள், அறிவுக்கு விருந்தாக உள்ளன. இதுபோன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில. பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
சீனி வேங்கடசாமி
மயிலாப்பூர், சென்னை - 4
12-12- 1973
தொடர்புடைய மற்ற பதிவுகள்: