தமிழர் பண்பாடும் தத்துவமும் (அலைகள்)

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-alaigal 

 

 

பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர், ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருக – ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன. (நூலின் அணிந்துரையிலிருந்து…)

நா. வானமாமலை சங்க இலக்கியம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தி ஆகிய தமிழ்ப் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தில் சமூகத்தின் தத்துவ வரலாற்றை மூன்று கட்டுரைகளில் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்.

நா. வா. அவர்களின், மிக விரிவான வாசிப்புத் தளத்தை இக்கட்டுரைகளின் ஊடாகக் கண்டு கொள்ள முடிகிறது. மணிமேகலையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சூழலில் பௌத்தம் செயல்பட்ட வரலாற்றை விரிவாகக் கட்டமைத்துள்ளார். சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பொருள் முதல்வாதம் – உலகாயதம் என்ற தத்துவ அணுகுமுறை எவ்விதம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்…

… கலைகளின் தோற்றத்தை, உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம். உற்பத்தி உறவுகள் குறித்து பண்பாட்டு மானிடவியல் பின்புலத்தில் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. நா. வா. கலை வரலாற்றை இப்பின்புலத்தில் விளக்கிக் கொள்ள உதவும் கட்டுரையை உருவாக்கியுள்ளார். இன்றைய கால வளர்ச்சியில், இக்கட்டுரை மிகவும் அடிப்படையான எளிய செய்திகளைக் கூறுவதாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஆனால் 1970-களில், கல்லூரி மாணவனாக இருந்து, இடதுசாரி கண்ணோட்டத்தோடு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு, அக்காலங்களில் இக்கட்டுரையின் முக்கியத்துவம் அலாதியானது. எனது பட்டப்படிப்புக் காலத்தில் மீண்டும் மீண்டும் வாசிக்கும் கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரை இருந்தது. 1970 களில் மார்க்சியத் தத்துவம் சார்ந்து வாசிக்கும் வாசகனுக்கு வழிகாட்டியாக இக்கட்டுரை அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அண்மைக் காலங்களில் தொன்மங்களை எவ்வகையில் வரலாறாகக் கட்டமைப்பது என்பது குறித்த உரையாடல்கள் விரிவாக நிகழ்த்தப் பெறுகின்றன. இத்தன்மை சார்ந்த முன்னோடிப் பதிவாக நா.வா. அவர்களின் உலகப் படைப்புக் கதை மூலங்கள் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. பிரபஞ்ச இயக்கம், மனிதர்களின் படிப்படியான வளர்ச்சி, உலகப் படைப்பு குறித்த தொன்மங்களை உருவாக்குதல், இவற்றை மானிடவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளல் என்ற பல் தள அணுகுமுறை சார்ந்து இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியும். தொன்மங்கள் பற்றி அறிய விரும்பும் மாணவனுக்கு, அதன் வரலாற்றைக் கூறும் பாங்கை இக்கட்டுரை வழி நாம் புரிந்து கொள்ள இயலும்.

மாலினாஸ்கி, ஸ்பென்சர், மார்கன், எங்கெல்ஸ் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களை உள்வாங்கி, ராகுல்ஜி, சட்டோ பாத்தியாயா, கோசாம்பி ஆகியோரின் ஆய்வுகள் சார்ந்து, தமிழ்ச் சூழலில் செயல்பட்டவர் நா.வா. 1970 களில் ‘ஆராய்ச்சி’ வழி செயல்பட்ட நா. வா.வை அடிப்படையாகக் கொண்டுதான் என்னைப் போன்ற மாணவர்கள் பலர் உருவாகினர். எங்களை உருவாக்கிய நா. வா. அவர்களுக்கு என்றும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். (நூலைப் பற்றி பேரா. வீ. அரசு எழுதியுள்ள பகுதியிலிருந்து)

… பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உலகாயதத் தத்துவத்தின் தாக்கங்களையும், அத்தத்துவத்தின் வருணனையையும் சேகரித்துத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். உலகாயதர்களுடைய நூலெதுவும் பழங்காலத்திலிருந்து வாழையடி வாழையாகப் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 2 முதல் தொடங்கி கி.பி. 3 வரையுள்ள காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களில் காணப்படும் தத்துவக் கருத்துக்களையும் உலகக் கண்ணோட்டச் சிந்தனைகளையும் சேகரித்து ஆராய்ந்தால், பழந்தமிழ்ச் சிந்தனையாளர்கள் உலகாயதத்தையோ அதனைப் போன்ற கருத்துக்களையோ அறிந்திருந்தார்களா என்பதை அறியமுடியும். இவற்றுள், புறநாநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் பழந்தமிழர்களின் உலகியல் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்தால் உலகாயதத்தின் செல்வாக்கு இருக்கிறதா என்பதைக் காணலாம்.

தமிழில் உள்ள பௌத்த சமண சமய நூல்களில் பூர்வபட்சமாக உலகாயதம் விவரிக்கப்பட்டுள்ளது. மணிமேகலை பௌத்த நூல். நீலகேசி, சமணநூல். இவையிரண்டிலும் உலகாயதம் விவாதப் பொருளாக அமைந்துள்ளது. மணிமேகலையிலும் நீலகேசியிலும் அவ்வக்காலத்துத் தத்துவங்களின் வருணனைகளும், விவாதங்களும் இடம் பெறுகின்றன. இவை இரண்டிலும் பெளத்தனும், சமணனும் தங்கள் தங்கள் சமய நோக்கிலிருந்து உலகாயதம் அல்லது பூதவாதத்தை எதிர்க்கிறார்கள்.

நீலகேசியின் காலம் 5-ம் நூற்றாண்டு என்றும் அதன் உரையின் காலம் 9 -ம் நூற்றாண்டு என்றும் தமிழ் இலக்கிய வரலாற்றாசியர் கூறுவர். இவ்விரண்டு நூல்களில் பூர்வபட்சமாகக் கூறப்படும் உலகாயதம் பற்றிய செய்திகளை இந்நூல்களின் காலத்தில் வழங்கிய தத்துவக் கருத்துக்களாகவும், உரைகளில் வழங்கும் கருத்துக்களை உரையாசிரியர்களது காலத்துத் தமிழ்நாட்டுத் தத்துவ ஆசிரியர்கள் அறிந்திருந்த கருத்துக்கள் என்றும் ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு எதுவுமில்லை. எனவே புறநானூறு, பத்துப் பாட்டு, மணிமேகலை, நீலகேசி, மணிமேகலை பழைய உரை, நீலகேசி பழைய உரை ஆகிய சான்றுகளிலிருந்து கி.மு. 2-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுக்காலத்தில் உலகாயதம் வரலாற்று ரீதியாக மாறி வந்திருப்பதைக் குறித்து ஆராயமுடியும். அத்தகைய ஆராய்ச்சியை இக்கட்டுரையில் மேற்கொள்ளுவோம். (நூலிலிருந்து பக். 134 – 135)

நன்றி:https://vinavu.com/2019/04/05/book-review-thamizhar-panpadum-thathuvamum/

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

தமிழர் பண்பாடும் தத்துவமும் (அலைகள்) - பதிப்புரை

தமிழர் பண்பாடும் தத்துவமும் (அலைகள்) - பொருளடக்கம்

Back to blog