உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. செம்மொழிகளில் ஒன்றாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் இன்னொரு தொன்மையான மொழியான சமஸ்கிருத மும் செம்மொழி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு தொன்மையான மொழி என்ற கருத்தில் அம்மொழிக்கு அந்தச் சிறப்புக் கிடைத்துள்ளது என்றும், அம்மொழி எக்காலத்தும் மக்கள் மொழியாக இருந்ததில்லை என்றும் கூறப்படுகின்றது. அப்படியானால் எவ்வாறு அது செம்மொழியானது என்ற கேள்விக்கு, அதன் இலக்கியங்கள் பழமையானவை, உலக செம்மொழிக் காலத்தோடு ஒத்தவை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அது மக்கள் மொழியல்ல என்பது உறுதியாக்கப் பட்டுள்ளது. மக்கள் மொழியென்பது ஒரு சமூகத்தின் அனைத்து மக்களாலும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவது. ஆனால் சமஸ்கிருதம் மக்கள் மொழி அல்ல, இலக்கிய மொழி - அதாவது புலவர்கள், கவிஞர்கள், புராணிகர்களின் மொழி - அதாவது உழைக்கும் மக்களின் மொழி அல்ல.
ஒவ்வொரு இனக்குழு சமூகமும் அதன் மொழி வழியிலேயே அறியப்படுகிறது. தமிழ் இனம், தமிழ் மொழி மூலம் அறியப் படுகின்றது. சமஸ்கிருதம் ஆரிய இனக்குழுவின் மூலம் அறியப் படுகின்றது. ஆனால் இந்த ஆரிய இனக்குழு தமிழகத்தைச் சேர்ந்தது . அல்ல. வடக்கில் இருந்து, இன்னும் முன்னோக்கிச் சென்றால் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தது. இக்கருத்து ஆய்வாளர் களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்தை மறுத்து ஆரியர்களும் இந்தியப் பூர்வகுடிகளே என்ற எதிர்க் கருத்தை கட்டமைக்கும் வேலை நடந்து வருகிறது. அதற்கான அரசியல் காரணம் உண்டு.
மக்கள் மொழியாக இல்லாத ஒரு மொழி இந்தியச் சமூகத்தை இன்றுவரை ஆதிக்கம் செய்வது எவ்வாறு என்ற கேள்விக்கு, அம்மொழி எல்லாக் காலத்தும் அரசதிகாரத்தைச் சார்ந்தே வாழ்ந்து வருகிறது என்பதே பதிலாகும். அரசதிகாரம் மக்களைத் தன் ஆட்சி
எல்லைக்குள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி பயனடைவது. அது யாரையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
கட்டுப்படுத்துவதற்கு இரண்டு வழிமுறைகள் தேவைப்பட்டன. ஒன்று, அரசுப் படைகள் மூலம் ஒடுக்குவது, மற்றொன்று கருத்துகள் மூலம் மக்களைப் பயப்படுத்துவது. இந்த இரண்டு வழி முறைகளில் மக்களைப் பயப்படுத்துவது என்பது எக்காலத்தும் எல்லா இடங்களிலும் பயன்தரத்தக்கது. அரசுக்கு அஞ்சாதவர் களைக் கட்டுப்படுத்தவே அரசனுக்கு மேலான சக்தியாக கடவுள் உண்டாக்கப்பட்டது. அரசன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட் பட்டவன். கடவுள் எல்லாவிடத்தும் நிக்கமற நிறைந்திருப்பவர். இந்த இரண்டு அதிகாரங்களுக்கும் இந்தியாவில் தொன்று தொட்டு பயனில் உள்ளவை மக்கள் மொழியும் கடவுள் மொழியும் ஆகும். அதனால் தான் அரசதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு உயிர்வாழும் மொழியாக சமஸ்கிருதம் என்ற கடவுள் மொழி உள்ளது.
இந்தக் கடவுள் மொழியைப் புனிதப்படுத்துவதற்கு வேதங்கள் துணை செய்கின்றன. இந்த வேதங்களைப் பரப்புவதற்காகவே தமிழகத்தை ஆண்ட அரசர்கள் எவ்வாறெல்லாம் உதவி செய்தார் கள் என்பதற்கான சான்றுகளை அள்ளித் தருவதே 'தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு' என்ற இந்நூலின் சிறப்பாகும். தமிழர்களின் பழைய இலக்கியங்களான சங்கப் பாடல்களில் இருந்து இன்றைய தமிழகத்தின் அரசியல் பண்பாடு இலக்கியம் அனைத்திலும் விரவிக் கிடக்கும் சமஸ்கிருத மொழியாதிக்கத்தை ஆதாரங்களோடு முன்வைக்கின்ற நூலாக இந்நூல் அமைந்துள்ளது.
கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னை உலகின் மூத்தக் குடிகளுக்கு முதற்குடி என்று பெருமை பேசும் தமிழ் இனம் யாராலும் பேசப்படாத - பேசினாலும் புரிந்து கொள்ள முடியாத கோயில் கருவறைகளிலே நின்றபடியே மூத்திரம் கழிக்கும் ஒரு கும்பலின் தேவபாஷையின் அருளுக்காகக் கைக்கட்டி, வாய் பொத்திக் கிடப்பதைக் காணும்போது இந்தப் பாமரத் தமிழர்களை எண்ணி இரக்கப்படவே தோன்றுகிறது.
என்னவாயிற்று தமிழ் இனத்திற்கு ? தமிழ் அறிஞர்கள் எங்கு போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசர்கள் என்ன செய்தார்கள்? மொழிப் பற்றாளர்கள் மக்கள் பற்றாளர்களின் செயல்பாடுகள் பயனற்றதேன்? இவ்வாறு பல கேள்விகள் நம்மிடம் உள்ளன.
எல்லாவற்றிற்கும் ஒரே விடை அரசதிகாரம், என் பேத. மன்னன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்ற முதுமொழிக்கேற்ப காலம் தாலமாக அரசதிகாரம் - அது சிற்றரசு, பேரரசு - எதுவானாலும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்திற்கும் அம்மொழியின் மூலவர் சளான ஆரிய குறுங்குழுக்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளது. இன்று வரை அந்நிலையே தொடர்கிறது.
தமிழக ஆட்சி வரலாற்றில் களப்பிரர் காலம் (இருண்ட காலம் ?!) தவிர பல்லவர், சேர சோழ பாண்டியர், மராட்டியர், நாயக்கர், சேதுபதிகள், பாளையக்காரர்கள், நவாப்புகள், காலனி யாட்சியாளர்கள், காங்கிரசார், திராவிட ஆட்சியாளர் என இன்று வரை பார்ப்பனியமும் அவர்களது மொழியான சமஸ்கிருதமும் உச்சத்தில் வைத்தே மெச்சப்படுகின்றன.
இன்றைய இந்திய ஆட்சியாளர்களால் விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாக விவசாய உழுகுடிமக்களிடம் இருந்து சட்டத்தின் அச்சுறுத்தலால் எவ்வாறு பிடுங்கப்படுகிறதோ, இதைப் போன்றே தமிழக மக்களின் நிலங்கள், கிராமங்கள் அவர்களிடம் இருந்து கொடுமையாகப் பறிக்கப்பட்டு பிரம்மதேயங்கள், அக்கிரகாரங்கள், பார்ப்பனச் சேரிகள் என்று ஆரிய குறுங் குழுக்களுக்கு வழங்கப்பட்டன. இக்கொடுமைகள் அனைத்தும் அரசர்களாலேயே செய்யப்பட்டன. மக்களின் உழைப்பு அரசனால் சுரண்டப்பட்ட தைப்போலவே பார்ப்பனர்களுக்கும் இலவச உழைப்பாக தாரை வார்க்கப்பட்டது. இந்நிலை கடந்த காலமா? இல்லை, நிகழ்காலத்திலும் அதன் சரடு அவர்களின் முதுகில் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
எதற்கும் ஆதாரம் வேண்டாமா என்பவர்களுக்கு, இதோ இருக்கிறது ஏராளமான ஆதாரம் என்று எடுத்துக்காட்டப்பட்ட நூலாக 'தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு' என்ற இந்நூல் அமைந்துள்ளது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆய்வாளர்களின் கருத்துகள் என பல ஆதார மூலங்களைப் பயன்படுத்தி இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் முனைவர் சி. இளங்கோ. இவரது பணி தமிழக மக்களைச் சிந்திக்கத் தூண்டட்டும். வாழ்த்துகள்.
- பெ. நா. சிவம்