தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thamilar-thalaivar-thandai-periyar-vazkkai-varalaru 
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் அணிந்துரை

''தமிழர் தலைவர்'' என்னும் இந்நூலை விரைந்து படித்துப் பார்த்தேன். இதன் உள்ளுரை, வாழ்வுக்கோர் இலக்கியமாக விளங்கும் ஒருவர் வரலாறென்றுணர்ந்து மகிழ்வெய்தினேன்.

'அகமே புறம்" என்பது சான்றோர் மொழி. புறப்படம் வரைதல் எளிது; அகப்படம் வரைதல் எளிதன்று. புறத்தைக் கருவியாகக் கொண்டு அகப்படத்தை வரைதல் கூடும். இப்படத்தை வரையும் ஆற்றல் எழுத்தோவியப் புலவர்க்கு உண்டு.

இந்நூலாசிரியர் ஒரு தமிழ்ப்புலவர். அவர் இந் நூற்றலைவரின் அகநிலை காண ஒல்லும்வகை முயன்றுள்ளார்.

இந்நூற்றலைவர் இராமசாமிப் பெரியார். அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர்தம் புகழோ தென்னாட்டிலும், வடநாட்டிலும், பிறநாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர். ஈ.வெ.ரா.வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.

ஈ.வெ.ரா.வின் தொண்டு கல்விச்செல்வத்தினின்றும் அரும்பியதா? பொருட்செல்வத்தினின்றும் மலர்ந்ததா? இக்கால சூழ்ச்சியினின்றும் காய்த்ததா?

தோழர் இராமசாமியார் பல நூல் பயின்றரவரல்லர்; அவர் செல்வராயினும் எளிமையில் நின்று பழகியவர்; இக்காலச் சூழ்ச்சியே அவருக்குத் தெரியாது. அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். பின்னை, எதனின்றும் ஈ.வெ.ரா.வின் தொண்டு கனிந்தது?

ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது வளர்ந்து செல்லும் பேறு. இப்போது பலருக்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது? அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.

உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்; அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்து கொண்டே போகும்; அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும், வாய்மையும், மெய்மையும் செறிந்த அறத்தொண்டு.

உரிமைவேட்கை; அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடை மலை.

அறத்தொண்டு கனிந்த வாழ்வினர் இன்னாரென்று எப்படி அறிதல் கூடும்? அதற்குச் சில அறிகுறிகளுண்டு. அவை நட்பிடைக் குய்யம் வையாமை; கருத்து வேற்றுமை காரணமாகக் காழ்ப்பு கொண்டு பகைமை கொள்ளாமை; வருங்காலமுணர்ந்து கடனாற்றல்; காலத்துக்கேற்ற சீர்திருத்தஞ் செய்ய முனைதல் - முதலியன.

யான் 'தேசபக்தன்'' ஆசிரியனாயிருந்தபோது புதிய நண்பர் சிலரைப் பெற்றேன். அவருள் ஒருவர் தோழர் ஈ.வெ.ரா. அவரையும் என்னையும் நண்பராக்கியது அரசியல் உலகம். அவரும் யானும் ஒருபோது ஒன்றிய கருத்துடன் அரசியற்கொண்டு செய்துவந்தோம்; மற்றொரு போது இருவரிடையும் அத்துறையில் கருத்து வேற்றுமை மலையென எழுந்து நிற்கலாயிற்று. அந்நிலையில் இருவரும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் ''மலை'' மறைந்து போகும். இதனால் ஈ.வெ.ரா. நட்புத் திறனுடையார் என்பதும், கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பார் என்பதும் விளங்குதல் காண்க.

"தமிழ்நாடு தமிழர்க்கே'' என்றோரியக்கம் இப்பொழுது நாட்டிடைத் தோன்றியுள்ளது. அவ்வியக்கத்தை இராமசாமி பெரியார் நடத்தி வருகிறார். இது வருங்கால நிலையுணர்ந்து கடனாற்றுவதாகும்.

சீர்திருத்தத் துறையில் ஈ.வெ.ரா. செய்துவரும் பணி நாடறிந்த தொன்று.

இன்னோரன்ன சிறப்புகள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்றைக் கொண்ட இத்தமிழ் நூலை நாடு பொன்னேபோல் போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை.

தலைவர் இயல்கள் நேரிய முறையில் விளங்க நூலைத் திறம்பட இயற்றிய சாமி சிதம்பரனார்க்கும், நூல் வெளிவர அன்புடன் உழைத்த தோழரனைவர்க்கும் எனது வாழ்த்து உரியதாகுக. தமிழ் வெல்க! பெரியார் வாழ்க!!

 

சென்னை                                                                                                                                                           திரு.வி.க.

1.9.1939

Back to blog