சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 2
https://periyarbooks.com/products/suyamariyaadhai-iyakka-veeraanganaigal-part-2
வரலாற்றை வியக்கின்ற சமூகம் யதார்த்தத்தில் பின்னடைந்து போயிருக்கும் என்பார்கள் அய்ரோப்பிய வரலாற்றாசிரியர்கள். இந்திய தமிழ்ச்சமூகங்களும் அப்படியான நிலையில்தான் உள்ளது. ஒரே பெரும் ஆறுதல் இந்திய துணைக்கண்டத்திற்குள்ளாக வைத்து மதிப்பீடு செய்யும்போது தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு அறிவார்ந்த காலமாக சுயமரியாதை இயக்கம் தனது சிந்தனைப் பங்களிப்பையும் செயலூக்கமான வழிமுறை களையும் வழங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது.
பெண்கள் வெளி (Female Space) உருவாகாத இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசியக் கருத்தாக்கங்களை உடைத்தெறிந்து கொண்டு பெண்விடுதலை, சமூக விடுதலை பேசிய, எழுதிய, செயல்பாட்டில் இறங்கிய வியப்பூட்டக் கூடிய பெண் போராளிகளின் கருத்தாக்கங்கள் அடங்கிய தொகுப்பு இது.
தென்னிந்திய அளவில்தான் தொடங்கப்பட்ட இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் என்றாலும் அதன் சிந்தனைத் தொடர்பும், சமகாலம் குறித்த பார்வைகளும், விமர்சனங்களும் உலகு தழுவியதாய் இருந்ததை ரஷிய புரட்சிக்குப்பின்னர் ஜார்மன்னனின் உருப்படிகள் கண்காட்சியில் வைத்ததை போன்று ஸ்ரீரங்கநாதன் சிலைகளையும் அவனது உருப்படிகளையும் வைக்கவேண்டும் என்று நாம் நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் நாயகியாம் குஞ்சிதம் அவர்கள் உவமானப்படுத்துவதில் காணமுடிகிறது. சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகப் பெண்கள் என அனைவரும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்க்கோட்டில் நின்று அந்த இயக்கத்திலேயே எந்த ஆண்களுக்கும் சிந்தனை / செயற்பாட்டுத் தளத்தில் குறைவில்லாமல் ஜாதியையும், மதத்தையும், கடவுளையும் ஆணாதிக்கத்தையும் அடித்து வீழ்த்திய வரலாறு நம்முடையது என்பது சமகால பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கும் விடுதலை
இயக்கங்களுக்கும் செயலூக்க நம்பிக்கையை அளிக்கும் என்று கருதுகிறோம்.
நேற்றைய தலைமுறையினரும் இன்றையத் தலைமுறையினரும் இடைவெளியின்றி கற்க வேண்டிய இத்தகைய ஆவணத்தை தன் பல்வேறு பணியினூடாக தொகுத்தளித்த முனைவர் வளர்மதி அவர் களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் திராவிடர் இயக்கம் / இடதுசாரி இயக்கம் என சமூக மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய இரு இயக்கங்களாலும் நன்கறியப்பட்டவர் அம்மையார் அவர்கள். அவருக்கு நமது அறிமுகங்கள் தேவையில்லை. ஆகவே இங்கு நன்றியினை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். நூலின் முகப்பை வடிவமைக்க சுயமரியாதை இயக்கப் போராளிகளின் அரிய படங்களை எங்களுக்கு தந்துதவிய பெண்ணியச் சிந்தனையாளரும் கருப்புப்பிரதிகளின் உற்றத் தோழருமான வ. கீதாவிற்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலின் முதற்தொகுப்பை சமூக தளத்திற்கு கொண்டு செல்ல பேருதவியாய் இருந்த கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் நண்பர்களுக்கும், ஒளியச்சு செய்த பேபி, முகப்பை வடிவு செய்த விஜயன், எங்களது முயற்சிகளுக்கு உறுதுணை செய்யும் அமுதா, விஜய் ஆனந்த் (பெங்களூர்), அய்யனார், புனிதபாண்டியன், மதிவண்ணன், ஷோபாசக்தி - சுகன், கீற்று ரமேஷ், குமரன்தாஸ், பானுபாரதி - தமயந்தி என்கிற கருப்புப் பிரதிகளின் உளப்பூர்வ உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தோழமையுடன்
நீலகண்டன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: