சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/sigmund-freud-kanavugalin-vilakkam-bharathiputhagalayam
 
முன்னுரை

கனவு காண்பது மனித குலத்திற்கே பொதுவான செயல்பாடுதான் என்றாலும் இஸ்லாம், ஹிந்து மதம், புத்தம், கிறிஸ்தவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களைக் கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகிறது. அது ஒரு மார்க்க விஷயமாகக் கூட (Religious issue) கருதப்படுகிறது என்றால் மிகையாகாது.

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற எந்த முக்கியமானதொரு நிகழ்ச்சிக்கு முன்னோ அல்லது பின்னோ நம் வீட்டுப் பெரியவர்கள் அதன் தொடர்பாகக் கனவு கண்டதாகச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். நான்கூட என் தாத்தா இறந்து போவதற்கு முன் என் வீட்டு பீர்க்கங்கொடி பட்டுப் போவதாகக் கனவு கண்டு அதை என் பாட்டியிடம் சொல்ல, அவள் யாரோ இறப்பதற்கான அறிகுறி அது என உணர்ந்து அழுதாள். பிறகு சில நாட்களில் என் தாத்தாவும் இறந்து போனார்.

ஒரு கனவு கண்டுவிட்டால் அதை நாம் எல்லாரிடமும் சொல்லி விடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கென்று தகுதி படைத்த சிலர் உண்டு என்றும் நம்புகிறோம். அப்படி ஒரு சிலருக்கு அத்தகுதிகள் உண்டு என்பது உண்மையோ பொய்யோ, அப்படி நாம் நம்பி அந்த ஒரு சிலரிடம் மட்டுமே விளக்கம் கேட்கிறோம் என்பதே கனவுக்கு நம் வாழ்வில் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். எனவே முக்கியத்துவம் வாய்ந்த நம் கனவுகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது முதலில் அவசியமாகிறது. இதுவரை கனவின் விளக்கங்களாக தமிழ் உலகுக்கு வந்துள்ள எந்த நூலும் இந்த அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, கனவுக்கு அகராதி போட்டு அதன் அர்த்தத்தைச் சுருக்குவதாகவும் அற்புதமான கனவுகளைக் காண்பதற்குரிய தகுதி பெற்றவராக ஆசிரியர் தன்னைக் காண்பித்துக் கொள்வதற்காகவும்தான் உள்ளது.

ஆகவே, விளக்கம் அறிவதற்குத் தகுதி உள்ளவரைத் தேடும் அவசியமின்றி, நம்முடைய கனவுகளை அல்லது நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான பூர்வமானதொரு அடிப்படையைத் தருவதும் அந்த அடிப்படையைத் தந்த சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவரான சிக்மன்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) என்ற மேதையை அறிமுகப்படுத்துவதும் இந்த நூலின் நோக்கமாகும்.

நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். 'கனவுகளின் விளக்கம்' என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது. ஃப்ராய்ட் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறும் விளக்கங்கள் உண்மையில் அதிர்வூட்டுபவை. கனவுகளை இப்படியெல்லாம் பகுத்து அறிய முடியுமா என்கிற வியப்பைத் தரும் பக்கங்களே இந்நூலில் அதிகம். 'சைக்கோ அனலைசிஸ்' என்னும் உளப்பகுப்பாய்வு முறையைப் பிரயோகித்து எழுதப்பட்டுள்ள இந்நூலை நாகூர் ரூமி தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகப்புரிதலுக்கு இலகுவாக்குகிறார்.

 

 

ஆம்பூர்                                                                                                                                                             நாகூர் ரூமி

12.06.2003

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog