சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - சிறு குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/sapiens-a-brief-history-of-humankind
 
மொழிபெயர்ப்பாளரிடமிருந்து ஒரு சிறு குறிப்பு

 அன்பார்ந்த வாசகர்களுக்கு,

வணக்கம்!

சேப்பியன்ஸ் என்ற இந்நூலின் மொழிபெயர்ப்பு எனக்கு ஓர் அற்புதமான, இனிய பயணமாக இருந்தது. இந்நூலை மொழிபெயர்ப்பதிலும் சரிபார்ப்பதிலும் திருத்தியமைப்பதிலும் கடந்த நூறு நாட்களாக நான் செலவிட்டு வந்துள்ள நேரத்தை நான் உண்மையிலேயே மிகவும் ரசித்தேன். இப்பயணம் எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருந்ததோ, அதே அளவு சவலானதாகவும் இருந்தது. உலகம் நெடுகிலும் பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள எண்ணற்ற ஆராய்ச்சிகளின் வாயிலாக் கிடைத்துள்ள வரலாற்றுத் தகவல்களையும் அறிவியல் தகவல்களையும் அரசியல் தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதுதான் இந்நூலின் ஆசிரியரான திரு யுவால் ரொரியின் நோக்கமாகும். எனவே, இந்துவின் விவரிப்பு மிகக் கச்சிதமானதாகவும் வாசகர்களுக்கு சுவாரசியமூட்டக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக அந்தந்தத் துறைசார்ந்த ஏராளமான, அதே சமயம், பொருத்தமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இயற்பியல், செயற்கை அறிவு, சைபார்க், உயிர்மின்னணுவியல் போன்ற பல அறிவியல் துறைகளுக்குரிய தனித்துவமான வார்த்தைகளை அவர் பரவலாகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுக்கு இணையான மற்றும் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது நான் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல. எனவே, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கின்ற பொருத்தமான தமிழ் வார்த்தைகளை தான் பயன்படுத்தியிருக்கிறேன். சில தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், படிப்பதற்குக் கரடுமுரடாகவும் புரிந்து கொள்ளுவதற்குக் கடினமாகவும் இருக்கும்பட்சத்தில் அவற்றை நான் தவிர்த்திருக்கிறேன், தங்குதடையற்ற வாசிப்பிற்கு இடையூறாக இருந்ததாக நான் கருதிய சில வார்த்தைகளையும் நான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன். சில இடங்களில், ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளைப் புதிதாக ஒன்றிணைத்து அவற்றை தான் இந்நூலில் பயன்படுத்தியிருக்கிறேன். அப்படி ஒருசில வார்த்தைகள் ஓரிரு அத்தியாயங்களில் இடம்பெற்றிருக்கும், குறிப்பாக, தொழில்நுட்பம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களில் இதை நீங்கள் காண்பீர்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சில ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகள் பரவலாகப் புழக்கத்தில் இல்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளை நான் அப்படியே அவற்றின் ஆங்கில உச்சரிப்புடன் தமிழில் எழுதியிருக்கிறேன். அதேபோல, இந்நூலில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்கள் அனைத்தும் அந்தந்த மொழிகளில் (ஸ்பானிய மொழி, ஆங்கிலம், லத்தீன் போன்றவை) அவற்றுக்குரிய உச்சரிப்பின்படி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில பெயர்ச்சொற்கள் தமிழில் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில், அவற்றின் உச்சரிப்பு மூலமொழியிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், மக்கள் அவற்றை அப்படியே வாசித்துப் பழகிவிட்டதால் தான் அவற்றை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன். தீவிர வாசகர்களுக்காக, ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ள சிறப்பு வார்த்தைகளை (ஆங்கிலம் மற்றும் தமிழ்) உள்ளடக்கிய கலைச்சொல் பட்டியல் ஒன்றை இந்நூலின் முடிவில் நான் கொடுத்திருக்கிறேன், தகவல்கள் துல்லியமாகவும் வார்த்தைகள் எளிமையாகவும் வாசிப்பு தங்குதடையற்றதாகவும் இருப்பதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்,

இந்நூலின் மொழிபெயர்ப்பின்போது பல இடங்களில் எழுந்த சந்தேகங்களைத் தொகுத்து, இந்நூலின் ஆசிரியரான ஹராரிக்கு அவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து, அவர் அதற்கு அளித்த விளக்கங்களை மனத்தில் இருத்தி மொழிபெயர்த்துள்ளேன், ஹராரி அவர்கள் சமீபத்தில் மும்பைக்கு வருகை தந்தபோது நான் அவரை நேரில் சந்தித்துப் பேசி, அப்போதும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டது மொழிபெயர்ப்புக்குப் பெரும் உதவியாக இருந்தது.

இப்புத்தகம் தமிழ் வாசகர்களுக்கு சுவாரசியமூட்டுவதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இதன் மொழிபெயர்ப்பு நெடுகிலும் தன்னுடைய வழிகாட்டுதலாலும் பரிந்துரைகளாலும் எனக்குப் பேருதவியாக இருந்த, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பத்மஷ்ரி அவ்வை நடராசன் அவர்களுக்கு நான் இங்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு வாசகர் என்ற முறையில், இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு அவற்றைவிடச் சிறப்பான வார்த்தைகள் உங்களுக்குத் தெரிய வந்தால், அவற்றை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்தும் பட்சத்தில், தமிழறிஞர்களுடன் கலந்து பேசி, அவ்வார்த்தைகள் பொருத்தமானவையாக இருப்பதாக அவர்கள் கருதினால் அடுத்தப் பதிப்பில் அவற்றை நான் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

மனிதகுல வரலாற்றைப் பற்றிய சுவையான தகவல்கள் அறிவார்ந்த தமிழ் வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சியுடனும் உண்மையான அக்கறையுடனும் நான் மொழிபெயர்த்துள்ளபோதிலும், என்னையும் மீறி ஏதேனும் தவறுகள் எங்கேனும் இடம்பெற்றிருந்தால் நீங்கள் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அவற்றை நீங்கள் எனக்கு எனக்குத் தெரியபடுத்தினால், அடுத்தப் பதிப்பில் தான் அவற்றைத் திருத்திக் கொள்ளுகிறேன்.

உங்கள் வாசிப்புப் பயணம் இனிமையானதாகவும் உங்களுக்குக் குதுகலமூட்டுவதாகவும் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 நாகலட்சுமி சண்முகம்

Back to blog