சமயங்களின் அரசியல் - ஆசிரியர் உரை
தொ. பரமசிவன் பேராசிரியர் தொ. பரமசிவன் உரையாடல் மரபிலிருந்து கிளைத்து எழுந்த புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்தவர்.
தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு, ஆய்வாளர்கள் அயல்நாட்டு தத்துவங்களையும், சூத்திர விதிகளையும் நம்பிக்கொண்டு இருந்த வேளையில், இவரின் புதிய ஆராய்ச்சி முறையியல் அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இவர் எடுத்துக்கொள்ளும் ஆய்வுப்பொருள் முந்தைய ஆய்வாளர்களின் ஆய்வுப் பொருளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஆய்வுப் பொருளின் மீது இவர் நடத்தும் விசாரணை முறைகளும் விசாரணை வினாக்களும் வேறுபட்டவை.
அதுபோல, அந்த ஆய்வுக்குப் பயன்படுத்தும் தரவுகளும் மாறுபட்டவை. அந்தத் தரவுகள் பெரும்பாலும் பேச்சு வழக்கிலிருந்தும், கீழோர் மரபிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
பேரா. மு. ராகவையங்கார், மயிலை சீனி. வேங்கடசாமி, பேரா. நா. வானமாமலை ஆகியோரை தன் முன்னோடிகளாகக் கருதும் தொ. பரமசிவன், பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, இறுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்து, தற்போது இளைப்பாறி உள்ளார்.
எது அடையாளம் - மொழியா? நிலமா? பெரும்பான்மையின் சமுதாய நிலையா?
இடம்பெயரும் பறவைகளும், விலங்குகளும் போதுமான உணவு, பாதுகாப்பான உறைவிடம், ஏதுவான தட்பவெப்பம், நீர்நிலைகளின் அருகாமை எல்லாம் ஒற்றப்போகும் இடத்தில் நிலைகொள்ளும். அதற்குப் பிறகு தன் புழக்கத்திற்கான எல்லைகளை வரையறுக்கும். அதைத் தக்கவைத்துக்கொள்ளும் போட்டிதான் அதன் வாழ்க்கையின் ஒற்றைக் குறிக்கோள். ஒவ்வொரு பிரதேசத்தின் தேசிய விலங்கும் தேசியப் பறவையும் வெவ்வேறாக இருக்கலாம். ஆயின் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு சிங்கத்திற்கும், கழுகிற்கும் அனுதினம் இரையைத் தேடுவதும், ஒரு மானிற்கும், மயிலிற்கும் பிற விலங்கிடம் இரையாகாமல் தன்னைத் தற்காத்துக்கொள்வதும்தான் பல்லாயிர வருடப் பரிணாம வளர்ச்சி தந்திருக்கும் ஒரே படிப்பினை. ஆனால் மனிதன் ஒரு சமூக விலங்காக எப்படி பரிணமித்துள்ளான்?
"246 வகையான பாலாடைக்கட்டிகளை உண்ணும் தேசத்தை ஆட்சி செய்வதுதான் மானுடத்தின் ஆகப்பெரிய சவால்” என்று ஒரு ப்ரென்சு நாட்டு அதிபர் அங்கலாய்த்துக்கொண்டார். பாவம் அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை இரண்டாம் உலகப்போரின்போது தனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருக்கேகூட, 4600க்கும் மேற்பட்ட இனக்குழுக்களைக் கொண்ட நிலப்பிரதேசத்தை ஒற்றை தேசிய அடையாளத்திற்குள் அடைப்பதென்பது முடியாத செயல் என்று. அதுதான் இந்தியா. இங்கு இரண்டு மைல் இடைவெளியில் ஒரே பண்டத்தின் சமையல் பக்குவமும், ருசியும் வேறுபடும். இங்கு மாட்டின் மூத்திரத்தை மூலிகையென குடிப்பவன் சமுதாய அடுக்கில் உயர்ந்தவன். அதே மாட்டின் இறைச்சியை உண்பவன் தாழ்ந்தவன். காபி நாகரிகம், நீராகாரம் அநாகரிகம். முச்சந்திப் பிள்ளையாரைப் பார்த்ததும் கன்னத்தில் போட்டுக்கொள்பவன் மிகவும் பண்பட்டவன், மசானக்கொள்ளையில் அலகு குத்தி காவடியெடுப்பவன் கடைந்தெடுத்த கெட்டவன், வடவெல்லையில் குண்டுவீச்சால் உயிரிழந்தவன் இந்திய இராணுவன், அதுவே தென்பெண்ணையில் அத்துமீறி சுடப்பட்டால் அவன் தமிழக மீனவன்.
இந்தியாவில் வாக்கு வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால்: ஒருசேட்டைப்போல் அடகுக்கடை நடத்தவும், பாயைப் போல் கறிக்கடை நடத்தவும், சிலுவைக்காரரைப்போல் கல்வி நிறுவனம் நடத்தவும், நாடாரைப் போல் பலசரக்குக்கடை நடத்தவும், நாயரைப்போல் தேநீர்க்கடை நடத்தவும், தலித்தைப் போல் சாக்கடை அள்ளவும், கூர்க்காவைப்போல் காவல் காக்கவும், ஐயரைப்போல் மந்திரம் சொல்லவும் வேறொருவரால் முடியாது என்ற கற்பிதத்தை வலுவாக நம் பொதுப்புத்தியில் பதிய வைத்திருப்பதன் பின்னால் இருக்கும் நுன்னரசியலைப் புரிந்து கொண்டால்தான் முடியும். இதுபோன்ற பாகுபாடுகளை தகர்த்தெறியும் கலக இயக்கமாக சித்த மரபு கால்கொள்ளும் முன்னரே இஸ்லாமியப் படையெடுப்புகளுக்குப் பின் அந்த பொறுப்பு எப்படி சூஃபிக்களின் கையில் சென்றது என்பதைப் படிக்கும் பொழுது மதமாற்றங்களின் உண்மையான பின்னணி தெளிவுபடும்.
ஆனால் மதம், மொழி, இனம் மற்றும் அரசியல் நிலைப்பாடு ஆகிய எல்லாவற்றையும் தாண்டிய வணிகப் பின்புலங்களிலிருந்து தோன்றிய புத்தர், காந்தி, பெரியார் ஆகிய மூவரும் நுகர்வுக் கலாச்சாரத்திலுள்ள நச்சுத்தன்மையைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஏன் என்றால் மனித இனத்தின் பண்பாட்டு அசைவுகளை ஊன்றி கவனித்ததில் அவர்களுக்குப் புரிந்திருந்தது: தனி ஒருவனின் சிந்தனையிலிருந்து கருவாகி அதுவே ஒரு தனிப்பெரும் சித்தாந்தமாக உருவாகி, குடி கொண்ட இடத்தின் சமூகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மக்கள் இயக்கமாகவும், காலப்போக்கில் ஒரு நாள் ஒற்றைக் குடையின்கீழ் உடனிருந்த எல்லோரையும் மண்டியிட வைக்கும் நிறுவனமாக அவதரிக்கக்கூடிய மதமும், வணிகமும் அரசதிகாரம் என்ற நாணயத்தின் இரு முகங்கள் என்று.
வடக்கிலிருந்து கால் நடையாகவே தென்திசை நோக்கி நகர்ந்த சமணமும், பௌத்தமும் முன் வைத்த கடுமையான துறவு நெறியையும், புலால் மறுப்பையும், பெண் ஒடுக்குமுறையையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த சைவமும், வைணவமும் கலை வெளிப்பாடுகளாகத்தான் முதலில் தோன்றின. தமிழ் நாட்டில் வேர்கொண்ட பாசுபதம் தொடங்கி இந்தியாவின் ஒட்டுமொத்த அடையாளமாக போற்றப்பட்ட பாகவத மதத்தின் உருவாக்கம் வரை வடக்கிலிருந்து கிழக்கும், கிழக்கிலிருந்து மேற்கும், மேற்கிலிருந்து தெற்கும் நடைபெற்ற கலாச்சார பரிமாற்றங்கள் ஏராளம். அவற்றை கோயிலின் கருவறையில் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் இடையிலான போராட்டம், விலங்குகளுக்கும்கூட நடுகள் வழிபாடுடைய நாட்டார் மரபிலிருந்து நாட்டையே ஆளும் அரசனின் பெயர்கொண்ட ஆணாதிக்கத்தின் உச்சமாக பசுவின் புனிதத்தைப் பறைசாற்றும் ஆலயங்கள் தோன்றிய கதை ஆகியவற்றின் பின்னணியில் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு சிற்றூர்களைப் புறந்தள்ளி நகர்ப்புறங்களையே மையமாகக் கொண்ட இந்திய தேசியத்தை நிலைநாட்டும் கபட நாடகத்தை அரங்கேற்றும் பொருட்டு மாறிவரும் சூழலுக்கேற்ப புத்தாடை பூணுவதுபோல் வைதீகம் தமிழர் மரபிலிருக்கும் உருவ வழிபாட்டை மட்டும் ஏற்றுக்கொண்டு என்னென்ன படிநிலைகளைக் கடந்து இன்று அருஉருவத்தை வழிபடும் காவி தரித்த இந்துத்துவமாக உலா வருகிறது என்ற உண்மையை தரிசிக்க இது ஒரு அரிய வாய்ப்பு.
தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 'பண்பாட்டுப் பேரறிஞர்' பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் பிறவாப் பெருநிலை'யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை.... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும் போது இது நூலாகத் தெரியாது.... கடலாகத் தெரியும்!
அய்யா தொ.ப அவர்களின் சீரிய ஆராய்ச்சியின் பலனாக தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுக் கொடையாகவே சமயங்களின் அரசியல்' என்ற இந்த நூலைப் பார்க்கிறோம். இதை உங்கள் புத்தக சேகரத்திற்கு கொண்டு சேர்க்கும் சிறு பணியைச் செய்வதில் பதிப்பாளர்களாக பெருமகிழ்ச்சி அடைகிறோம்!
-ஆசிரியர்