சமணமும் தமிழும்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/samanamum-thamizhum-ntp
முன்னுரை

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் தான் கொண்டன. ஆனால், 'ஊழ்' இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!

பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940- ம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?" என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்திற்கும் வேற்றுமை தெரியா திருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள் "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக்குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லையென்றால், பாமர மக்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லையே.

முற்காலத்திலே, ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயிற்று. அது மட்டுமன்று. சமண சமயத்தின் மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதி முடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ் நூல்களைப் படிக்கும்போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும் போதும் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமணசமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமண சமய வரலாற்றை எழுத வேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந்நூலை எழுதினேன். இதனை எழுதும் போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண் மையில் காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு. ச.த.சற்குணர், B.A., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சாந்தியுறுவதாக.

வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல், எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுத வேண்டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள் ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காணவேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும்; ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஓத்திட்டுப் பார்த்து முடிவு காண வேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக் கெட்டிய வரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி 'ஊழ் இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்து விட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு கூற விரும்பவில்லை. ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமரர்களைப் பற்றியும் படியாத பணக் காரர்களைப் பற்றியும் கூறவில்லை நான். "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்.'' கல்வித் துறையிலே மிகவுயர்ந்த நிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந் தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லையென்றால், இந்நூல்களை ஏன் எழுதவேண்டும், ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

பத்து ஆண்டுகள் கடந்தன. இந்நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், என் நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம், வெளிவரும், வெளிவரும்,' என்று கூறினேனேயல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளியிடுமாறு வற்புறுத்தினார்கள். 'கிருஸ்துவமும் தமிழும்,' 'பௌத்தமும் தமிழும்,' எழுதியது தமிழ்நாட்டின் சமய வரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே, 'சமணமும் தமிழும்' வெளிவரவேண்டும். அதுமட்டுமன்று 'இஸ்லாமும் தமிழும்,' 'இந்து மதமும் தமிழும்' என்னும் நூல்களையும் எழுத வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கள் அந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ நான் கண்டதென்ன ! பெட்டி யினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. சில தாள்களே அரைகுறையாகக் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப் போயிற்று. மீ ண்டும் எழுத வேண்டியதாயிற்று. இயன்றவரையில் சான்று களையும், ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால் இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட் டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதி யில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு கள் கூறப்படுகின்றன. அப்பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறு சிறு ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங் களைந்து குணங்கொள்வாராக.

இந்நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி -அச்செழுத்துக்கள் அதிகம் இல் லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந்நூலின் பின்னிணைப்பில் சேர்ந்துள்ள "சமணசமயப் புகழ்ப்பாக்கள் பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உரைகளில் மேற்கொள்ளப்பட்டவை.

பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நூல் இப் போது முதன் முதலாக வெளிப்படுகின்றது. இந்நூல் வெளிவரும் வதற்குக் காரணராயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப் படுத்திய நண்பர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும், தமிழகத்தின் நன்றியும் உரியனவாகும்.

 

மலரகம்,

மயிலாப்பூர்,

சென்னை, 1-11-54                                                                                                   மயிலை சீனி. வெங்கடசாமி

Back to blog