சாதி, தேசம், பண்பாடு
தலைப்பு | சாதி, தேசம், பண்பாடு |
---|---|
எழுத்தாளர் | ந.ரவீந்திரன் |
பதிப்பாளர் | முகம் |
பக்கங்கள் | 256 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2014 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.200/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/saathi-thesam-panpaadu.html
என்னுரை
இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இன்று வரை நான் எழுதிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இவை எழுதப்பட காரணமாக அமைந்த சூழலைக் கூறுவது அவசியம். ஆரம்பத் தில் காலையடி மறுமலர்ச்சி மன்றச் செயற்பாடு வாயிலான தேடலில் வெறும் சமூக சீர்திருத் தங்கள் போதுமானவையல்ல, சமூக அமைப்பின் அடிப்படையே மாற்றப்பட வேண்டும் எனும் புரிதல் ஏற்பட்டது. அதற்கு அவசியப்பட்ட மார்க்சியக் கற்றலில் ஈடுபட்ட காலத்தில், அக்கற்றல் எந்தக் கட்சியிலும் இணைவதாயில் லாமல் எமக்கான சுயதேடலாகவே இருந்தது.
தற்செயலாய் சங்கானையில் தோழர் சண்முக தாசனின் கருத்தரங்கு ஒன்றுக்குச் சென்றிருந் தோம். பேச்சு முடிவில் இரண்டு கேள்விகள் எழுதிக் கொடுத்தோம். பதில் திருப்தியாக அமைந்தது. சண்முகதாசனிடம் அருகிலுள்ள எங்களூருக்கும் இது போன்ற விளக்கவுரைக் கூட்டத்துக்கு வர வேண்டும் என வேண்டினோம்.
அதற்கு அவர் தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தைக் காட்டி, அவர் உங்களூரில் இருந்தாரே, இப்போதும் அடுத்த கிராமம் ஒன்றில்தான் உள்ளார், அவரோடு தொடர்பு கொள்ளுங்கள், எப்போது நான் வந்து பேசுவது என்பதைச் சேர்ந்து பேசி முடிவு செய்யுங்கள் என்றார்.
ஒருபோதும் அவர் எங்களுருக்கு வரவில்லை . அதற்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. (சுப்பிரமணியம் தோழருடனான தொடர் பாடல் ஸ்தாபன வேலை முறையைக் கனகச்சித மாகக் கற்றுத் தந்தது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்களூரில் வாழ்ந்த மணியம் தோழரை அறியக்கூடிய சமூக அரசியல் அறிவு
எங்களிடம் வாய்த்திருக்கவில்லை. எமதூரை நன்கு தெரிந்து கொண்டவகையில், சிறந்த முறையில் எம்மை நெறிப்படுத்த முடிந்தது. அவரது வழிகாட்டலுடன் சங்கானைக் கிளையில் நாம் சேர்ந்து இயங்கி, கிராமத்தின் அரசியல் வளர்ச்சியின் ஒவ்வொரு படி முன்னேற்றத்திலும் நிச்சாமம் கிராமத் தினதும், சங்கானையினதும் போராட்ட அனுபவங்களுடன், எமது படிப்பைப் பட்டை தீட்டிப் பார்த்து, நமக்கான நடைமுறை மார்க்கத்தை வகுத்தோம், வளர்த்தோம்.
இது எழுபதுகளின் நடுக்கூறு. தரப்படுத்தல் யாழ்பாண மாணவர்களது உயர் கல்விக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து, ஆயுதங்களுடன் தமிழீழத்தைத் தேடத் தொடங் கிய நாட்கள். நாங்களும் (குறிப்பாக நான்) உத்தியோகப் படிப்பை உதறி அரசியல் விடிவைத் தீவிரமாகக் கற்றுக் கொண்டிருந்த வேளை. தமிழ்த் தேசியப் போலித்தனம் எமக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. மார்க்சிய வழிகாட்டலிலான தேசியப் பிரச்சனைத் தீர்வு மார்க்கம் பற்றிய தேடல் ஆழமாக இருந்தது.
அத்தகைய வளர்ப்பில், 1977 தமிழீழ அங்கீகாரத்துக்கான தேர்தல்! எங்களூர் அமிர்தலிங்கத்தின் கோட்டை. முன்னர் தேர்தலுக்கு முன்னும் வெற்றியின் பின்னும் அமிர்தலிங்கத் தின் பிரமாண்டமான கூட்டங்கள் தவறாமல் எங்களூரில் இடம் பெறும் (ஊருக்குள்ளே இளைஞர்கள் திரண்டு ஊர் வலங்கள் வேறு; நானும் முழங்கியிருக்கிறேன் - சிறுவனாக, எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம்; போடு புள்ளடி வீட்டுக்கு நேரே!). முதற்தடவையாக எங்களுரில் மிகுந்த முக்கியத்துவ மிக்க அந்தத் தேர்தலில் அவர்களது கூட்டமே நடக்கவில்லை.
ஊரில் காத்திரமாகச் செயற்படுகிற அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியில். அதற்காக நாங்கள் தனியே கூட்டம் நடத்திட வேண்டும் எனக் கட்சி கருதவில்லை. தேர்தலைப் பகிஷ் கரிக்கும்படி கட்சி கோரியிருந்தது. கிராமத்து வாலிபர் அமைப்பு பகிரங்கக் கூட்டம் நடாத்த முடிவு செய்தது; பகிஷ்கரிப்புக்கான கூட்டம் நடாத்துவது என்ற நமது வாலிபர் சங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியது கட்சி கூட்டத்துக்கு விருப்பங்கொண்டு தீவிரங் காட்டியவர்களால் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை.
தனிவளவு திருத்தப்பட்டுக் கூட்ட ஒழுங்குகள் தொடர்ந்தன. கூட்டணியினர் தங்களால் ஒரு சிறு கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலையில், நாங்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடாத்திடு வோமாயின், அது பாரிய இழிவு எனக் கருதினர். ஊர் முழுவதும் மிகப்பெரிய யுத்தக் களரியை எதிர் பார்த்தபடி ; கூட்டத்துக்காக எவரும் வரப்போவதில்லை, வேடிக்கை பார்க்கிறவர்கள் வரலாம்.
நிலைமையைப் புரிந்து கொண்டு மணியம் தோழரிடமும், நிச்சாமம் தோழர்களிடமும் ஆலோசனை பெற எங்கள் தோழர்கள் சென்று திரும்பினர்; கூட்டம் அவசியமற்றது என முன்னர் கூறிவந்தவர் மணியம் தோழர். குழப்பத்துடன் சென்ற தோழரிடம், 'இவர்கள் வெருட்டுவதால் கூட்டம் நிறுத்தப்பட வேண்டுமா?' எனக் கேட்டார். இல்லை, நடத்திக் காட்ட வேண்டும், என்று கூறிவிட்டு வந்த தோழர் மற்றும் நிச்சாமத்திலிருந்து திரும்பிய அனைத்துத் தோழர்களது கருத்து, கூட்டத்தைத் தீரமுடன் நடாத்துவது என்பதாய் இருந்தது.
எதிர்பார்த்தவாறே யுத்தக்களரி. நிச்சாமம் தோழர்களும் மணியம் தோழரும் வந்திருந்தனர். அவர்களின் பாதுகாப்புக் காக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைப் பார்த்து விட்ட தால், அதைப் பிரச்சனையாக்க வெறிக்கூட்டம் முயன்றது. எமது உறுதியும், நிச்சாமத்தின் வலுவான ஆதரவும் இறுதி யில் வெற்றிகரமாக அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு தொடர்ந்து நாங்கள் முன்னேற உதவியது.
தொடர்ந்து நாங்கள் உயிர்ப்புடன் இயங்கவும், அதற்கு ஏற்ப அர்த்தமிக்க பிரயோக அறிவியலாக மார்க்சியத்தைக் கற்கவும் முடிந்தது என்றால், அது நிச்சாமத்தினால் சுவீகாரம் எடுக்கப்பட்டு போஷிக்கப்பட்டதால் மட்டுமே சாத்திய மானது எனலாம். அவர்களது வீறு கொண்ட போர்க் குணத்துடனான அரசியல் அக்கறையும், ஆளுமையும், எங்களுடைய சொந்த விவகாரங்களில் நாங்கள் கரிசனை யின்றி அரசியல் வேலையென அலைந்தபோது, அதன் மீது கவனங்குவித்து, அவர்களே பல பிரச்சினைகளைத் தீர்த்து எங்களை இயங்கவிட்டது எனச் சொல்வதற்கு நிறைய உண்டு!
இத்தகைய பின்னணியில் இயல்பாகவே சாதியப் பிரச்சினைத் தீர்வு, தேசியப் பிரச்சினையும் சுயநிர்ணயமும் குறித்த கற்றல் என்பவை குறித்து நான் ஆழமாக ஈடுபடலானேன். "சுய நிர்ணய உரிமை என்றால் என்ன?" என்ற எனது கட்டுரை, செம்பதாகையில் தொடராக வெளியானது. ''சாதியமும், அதற்கு எதிரான போராட்டங்களும்," நூலுக்கான ஆய்வுத் தேடல் குழுவில் இடம்பெற்று பலரைச் சந்தித்து கள ஆய்வு
முயற்சிகளில் பல விடயங்களைக் கற்றதுடன் அதன் எழுத்து முயற்சியிலும் பங்கெடுக்க முடிந்தது.
கூடவே பல சந்தர்ப்பங்களில் கூறியவாறு, 1982 இன் பாரதி நூற்றாண்டில் பாரதி பற்றிய கற்றலும் ஆழம் பெற்றது. நடைமுறைப் பிரயோக அறிவியலாக மார்க்சியத்தை வரித்துக் கொண்டிருந்த எனக்கு பாரதி பல வியப்புகளைத் தருகிறவரானார். "பாரதியின் மெய்ஞ்ஞானம் அதன் வெளிப்பாடு. அந்நூலுக்கு கவிஞர் சி.சிவசேகரம் பெறுமதி மிக்க முன்னுரை ஒன்றை வழங்கியிருந்தார்; அது நூலுக்கு காத்திரமான ஏற்பினை ஏற்படுத்தியிருந்தது.
எனது கற்றல், செயற்பாடு, எழுத்து வேலை ஒவ்வொன்றையும் மிகுந்த கரிசனையுடன் கேட்டறிந்து அவ்வப்போது ஆலோ சனைகளும், வேண்டிய போது கடும் விமர்சனங்களும், உற்சாகமூட்டலும் என முற்றிலும் தனது ஆன்மா என்னில் கலந்து விடுவது போன்ற ஈடுபாட்டுடன் என்னை நெறிப் படுத்தினார் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம். இது சற்று அதீதமாக சொல்வதாகப் படலாம்; பல தோழர்களுடனும் இது போன்ற தொடர்பாடல் வாயிலாக அவர் பலரையும் வளர்த்தெடுத்துள்ளார். ஒவ்வொருவரது ஆற்றலையும் இனங்கண்டு இயக்கச் செயற்பாட்டுக்கு அவை வலுசேர்க்கும் வகையில் நடைமுறை வடிவம் பெறுவதற்கு ஏற்றதாக அவர் களது பங்களிப்பு உச்ச அளவில் வெளிப்படும் வண்ணம் தனக்குத் தெரிந்த அனைவருக்கும் வழிகாட்டியுள்ளார், தோழர் கே. ஏ. சுப்பிரமணியம். அந்த வகையில், என்னில் மட்டும் அதிக தாக்கம் வெளிப்படுவதாக உரிமை கோருவது சரியாகாது.
இருப்பினும் அவரைச் சந்தித்து, அவரது மறைவு வரையான பதினைந்து வருடங்களுக்கு மேலாக அவருடனேயே எனது தொடர்பாடல் மிக அதிகமாய் இருந்த வகையில், அவரது கருத்தியல் வீச்சு என்னிடம் மடை மாற்றப்பட்டிருந்தது என்பது ஓர் ஆழமான உண்மை . என் எழுத்தில் நான் கற்ற - பெற்ற அனுபவ வசனங்கள் வெளிப்பட்ட போதிலும், எனது விடயப் பரப்பின் அடிப்படை அவரது கருத்தியல் சார்ந்தது. எனது ஆய்வுக் களமாகத் தொடர்ந்து, தேசியம் , சாதியம், பாரதியியல் என்பவை அமைய வேண்டும் என தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் வலியுறுத்தியதின் பேறே எனது தொடர் தேடல்; அதன் ஒரு விளைச்சலாக ''சாதி, தேசம், பண்பாடு" எனும் இந்நூல்.
சாதியச் சமூகம் - தேசியப் பிரச்சினை - 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே, என்ற பாரதியின் சுதந்திரப் பள்ளுவில் வெளிப்படுமாறான பண்பாட்டு - அரசியல் முன்னெடுப்பு என்பன இணைக்கப்பட்ட தேடல் புதிய தளம் நோக்கிய சிந்தனைப் பெயர்வைச் சாத்தியமாக்கியது. இதனைச் சாதியச் சமூகத்தின் சுயநிர்ணயத் தீர்வுக்கு பிரயோகிக்கும் போது நமது சமூகத்தில் தேசியம் ஆளப்படும் சாதியினதும் ஒடுக்கப்படும் சாதியினதும் எனத் தெளிவாகப் பிளவுபட்டுள்ளமையை எடுத்துக் காட்டியது. இந்த இரட்டைத் தேசியக் கோட்பாட்டை நீண்டகாலமாக அதனுள் ஊடாடி நான் வந்தடைந்தேன்; அதை வெவ்வேறு களங்களில் ஆழமாக இயங்கும் தோழர்கள் எடுத்த எடுப்பில் ஏற்றுவிட முடியாது. அந்த வகையில் ஏற்க முடியாமலிருந்த தோழர்களின் கடும் விமர்சனங்களுடனேயே என் எழுத்து முயற்சியைத் தொடர வேண்டியிருந்தது.
அதனால் எல்லாம் துவண்டு போய்விடாமல் தொடர்ந்து எழுதுவதற்குப் பலர் தூண்டுதல் சக்தியாக இருந்தனர்; குறிப்பாக சவுத் விஷன் பாலாஜி! பல சிக்கல்களிடையே இப்போது இதையும் வெளியிடுகிறார். இது அவரது ஒரு வேலையும் என்பதால் நன்றிக்கு அப்பாலான சமூக மாற்றச் செயற்பாட்டின் கூட்டு வேலையாக இதனைக் கணித்து அது தொடர்பில் மேற்கொண்டு எழுதாது அமைகிறேன். இருந்த பல தயக்கங்களைத் தகர்த்து எனது இந்த நூலையும் துணிவுடன் அவர் வெளியிடுகிறார் எனச் சொல்வதே இங்கு போதும்!
முதலாவதாய் இடம் பெறும் கட்டுரையில் இரட்டைத் தேசியம் பற்றிப் பேச்சில்லை; அதை நோக்கிய வளர்ச்சிக்கான அருட்டுணர்வு வெளிப்படும். ஒரு வருடத்தின் பின்னர் 2001ல் எழுதிய இரண்டாவது கட்டுரையில் தனியே இரட்டைத் தேசியமே பேசுபொருள். அமைப்பு ஒன்றுக்கான கட்டுரை கேட்கப்பட்ட நிலையில் இதே சிந்தனையில் இருந்த வேகம் வெளிப்படுமாறான கட்டுரை அது. மேலே சொன்னவாறு, இந்தத் தேடல்களோடு அன்றி வேறு விவகாரங்களில் இருந்த தோழர்களுக்குக் கட்டுரை முழுமையாக ஏற்கமுடியாமல் பட்டது; பிரசுரிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.
மூன்றாவது கட்டுரை 2007 லண்டன் தலித் மாநாட்டுக்காக எழுதப்பட்டது. அது முழுமையாக தலித் பிரச்சினைகளை மையமாக வைத்த மாநாடு. அந்த வகையில் தலித் சிந்தனையாளர்களுடனான உரையாடலாகவே அந்தக் கட்டுரை அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட் அமைப்புக்கான எழுத்துரு எவ்வகையில் இருக்க முடியுமோ அவ்வாறே தலித் மாநாட்டுக்கான உரையாடல் அமைய முடியாது. இந்த அடிப்படையான வேறுபாட்டைக் கவனத்திற் கொள்ளாமை யினால் அந்தக் கட்டுரையும் அமைப்பின் கடும் விமர்சனங் களை முகங் கொண்டது. இரு கட்டுரைகளும் அச்சு ஊடகங் களைக் காணவில்லை. (முந்திய கட்டுரை இணையத்தளங் களிலும் வெளிவரவில்லை).
பின்னர் இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்' என்ற நூல் உட்பட, தொடர்ந்து பல்வேறு தளங்களில் இரட்டைத் தேசியம் பற்றி எழுதி வந்தேன். காத்திரமான விமரிசனங்கள் வெளிப்பட்டன. அதன் உத்வேகம் காரணமாக 5, 6 ஆகிய இரு இறுதிக் கட்டுரைகளும் ஆதவன் தீட்சண்யாவின் வேண்டும் தலின் பேரில் 'புதுவிசை' சஞ்சிகைக்காக எழுதப்பட்டன. உற்சாகமூட்டத் தக்க வகையிலான ஆரோக்கியமான விமரி சனங்களை புதுவிசை தோழர்களிடமிருந்து பெற முடிந்தது. இந்த விவகாரம் ஏனையவர்களால் இனிச் செழுமைப்படுத்தப் படும்; எனது முயற்சி வீணானது இல்லை என்பது காத்திர மாக வெளிப்பட்டிருப்பதன் பேறே இந்நூல்.
புதிய வடிவில் சிந்திக்க வேண்டிய விடயம் என்கிற வகையில் இவை என் சிந்தனையில் வளர்ந்த பிரகாரம் இங்கே ஒழுங்கு படுத்தித் தரப்பட்டுள்ளன. இவற்றில் நான்காவதாயுள்ள அம்பேத்கரும், எம்.சி.சுப்பிரமணியமும் என்கிற கட்டுரை இரட்டைத் தேசியம் பற்றிப் பேசாத போதிலும், இத் தொகுப்புக்கு அவசியமானது. இலங்கையின் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துக்கு முன்னோடியான சிறு பான்மைத் தமிழர் மகாசபைத் தலைவர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களது போராட்ட வாழ்வு இல்லையெனில் இந்தச் சிந்தனை முறைக்கு இப்போதும் வர முடிவது சாத்தியப் படாது காலங்கடத்தப் பட்டிருக்கலாம். அந்த அனுபவ வெளிப்பாடு என்கிற வகையில் ''மல்லிகை" 45வது ஆண்டு மலரில் வெளியான கட்டுரை இங்கு இடம் பெற்றுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் வீறுகொள்ள வைத்த அரசியல் பண்பாட்டு தத்துவார்த்த வீச்சுகள் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகள் வெளிப்பட வேண்டும். அந்த எழுச்சியின் முன்னணிச் சக்தியான நிச்சாமத்தில் என் ஆரம்ப அரசியல் கல்வி அமைய முடிந்தமையினாலேயே எந்தச் சலனங்களுக்கும் விட்டுக் கொடுக்காமல் என்னால் தொடர்ந்து இயங்கவும், எழுதவும் முடிகிறது. அந்த வகையில் மாபெரும் சக்தியான நிச்சாமத் துக்கு எனது இந்தச் சிறிய காணிக்கை!
ஆறு தலைப்புகளுடன் சாதி தேசம் பண்பாடு எனும் இந்நூல் அச்சாக்கப்பட்ட நிலையில் அதன் பிரதிகள் வழக்கம்போல பல தோழர்களிடம் வழங்கப்பட்டு விமரிசனங்கள் பெறப் பட்டன. அத்தகைய சூழலில் ஓசூர் சென்றபோது நூல் தொடர்பான கருத்தாடல் விமர்சன அரங்காக ஒரு சந்திப்பை ஏற்படுத்தும் நோக்கம் இருந்தது; இறுதி நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - ஓசூர் கிளையுடனான பொதுவான கருத்தாடல் நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயினும், நூலோடு தொடர்பான விடயங்களும் பேசுபொருளாக அமைந்ததுடன் நூலைப் படித்த தோழர்களது கருத்துகள் சார்ந்தும் கலந்துரையாடல் அமைந்தமையினால் நூலினை . மறுமதிப்பீடு செய்ய அச்சந்திப்பு உதவிகரமாய் அமைந்தது. பின்னர், பாலாஜி வீட்டில் ஒருநாள் அமர்வாகப் பிரதியை வாசித்த தோழர் களுடனான சந்திப்பு அமைந்தது. பாக்கியம், மருத்துவ மணி, அய்யாத்துரை, செந்தில்பாபு, நீதிராஜன், பிரதாப் ஆகியோர் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்தனர். மறு வரைவு செய்யவல்ல வகையிலான அடிப்படையான கேள்வி கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கட்டுரை களினுள் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் இனங்காணப் பட்டன. அனேகமானவை கவனத்திற் கொள்ளப்பட்டு திருத்தப்பட்டுள்ளன அல்லது சேர்க்கப்பட்டுள்ளன. மேலதிக விடயங்களை ஒரு பின்னுரையாக எழுதுவது அவசியம் எனத் தோழர்கள் அபிப்பிராயம் வெளியிட்ட வகையில் பின்னுரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் பின்னுரை இல்லையெனில் நூல் நிறைவு பெற்றிருக்காது என்பதை உணர்வோம். அந்த வகையில் ஒரு கூட்டு முடிவுக்கான வடிவில் இந்நூலை அமைப்பதற்கு உதவிய அனைத்துத் தோழர்களுக்கும் (பலரது பெயர்கள் இங்கு குறிப்பிடப் படவில்லை) நன்றி.
நூலின் ஏழாவது கட்டுரையாக அமைந்துள்ள ''மார்க்சியப் பிரயோகத்தில் தேசம் சாதி பண்பாடு" எனும் கட்டுரை 'பின்னுரை' தன்னுள் அடக்கி வைத்திருந்த விடயப்பரப்பு. அதன் முற்பகுதி " நுழைவாயிலாக ஒரு பின்னுரை" எனப் பிரிக்கப்பட்டு நூலின் முன்னால் தரப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்படக் காரணமாக அமைந்தவர் ஜெ.லெனின் மதிவானம். மிக நீண்டதாக 'பின்னுரை' அமைவது பொருத்தமாயில்லை எனப் படித்துப் பார்த்துக் கூறிய விமர்சனத்தின் பேரில் பிரிக்கப்பட்டு, வேறாக, நூலின் முகப்பில் இடம்பெறும் 'நுழைவாயிலாக ஒரு பின்னுரை'' அல்ல மேலேயுள்ள பந்தியில் பிரஸ்தாபிக்கப்படுவது (இரண்டினதும் சேர்ப்பு அங்கு பேசப்பட்டது). "'மார்க்சியப் பிரயோகத்தில் தேசம் சாதி பண்பாடு " கட்டுரையில் முதல் பகுதியாய் இடம் பெறும் "தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு' என்ற பகுதி தவிர்ந்த இரு பகுதிகள் இந்த நூலுக் காக எழுதப்பட்டன. அந்த முதல் பகுதி "மல்லிகை" 46வது ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது; அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும், லெனின் மதிவானத் துக்கும் - அவர்களுடனான உரையாடல்கள் இந்நூலாக்கத் தில் வகித்த பங்களிப்புக்காக எனது நன்றிகள். இந்நூல் முழுமையிலும் இடம்பெறும் 'இனக்குழு' எனும் சொல் (ஏழாவது கட்டுரையில் இரண்டாம் பகுதியிலிருந்து காட்டப் படுவது போல) இனமரபுக் குழு' என வாசிக்கப்பட வேண்டும். அதன் காரணம் ஏழாம் கட்டுரையில் உண்டு; முன்னர் அச்சாக்கப்பட்டவற்றை மாற்றவில்லை - நூலில் எங்கும் Race எனும் பொருளில் இனக்குழு என்ற சொல் கையாளப்படவில்லை என்பதனைக் கவனத்திற் கொள்ளவும்.
நூலாக்கத்தில் இயங்கியவாறுள்ள ஜெ.பாலாஜி, கணினி அச்சுப் பதிவாக்கும் நண்பர் மணிமாறன், அச்சக நண்பர்கள் மற்றும் விநியோகப் பங்காளிகளான தோழர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றிகள். வழக்கம் போலவே எனது குடும்பம், உறவினர்கள், தோழர்கள் அனைவரும் என் எழுத்து வேலைக்கு என்னை அனுமதித்து உதவிய வகையில், அனைவர்க்கும் நன்றி. எப்போதும் என் கருத்துகளைக் கடும் விமரிசனங்களோடும் உற்சாகப்படுத்தலோடும், விருத்தி செய்ய உதவுவது போல இந்நூல் தொடர்பிலும், தொடர் பாட உள்ள உங்களுக்கும் முன்கூட்டிய நன்றிகளுடன்,
ந.இரவீந்திரன்
16-05-2010
தொடர்புடைய மற்ற பதிவுகள்: