மதங்களின் வரலாற்றில் அவை உதித்தல், உதிர்தல், ஊடுருவல், உள்ளிருத்தல் போன்ற நிகழ்வுகளைத் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களின் நம்பிக்கைகள் மட்டுமன்றி சமூகப் பண்பாட்டுக் காரணிகளும் அரசியல் பொருளாதாரமும் தீர்மானிக்கின்றன. புனிதம், தீட்டு என்ற கற்பனைக் கோட்பாடு, புராணக் கதைகள் ஆகியனவற்றை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்துமதப் படிநிலைச் சாதியச் சமூகத்திலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்ற சாதிகள் அரசியல் பொருளாதாரச் செயல்பாடுகளோடு மதங்கள் சார்ந்த நிலைப்பாடுகளையும் கைக்கொள்கின்றன. இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன.
1) பார்ப்பனிய இந்து மதத்தை ஆதரித்தல்
2) அதைப் புறக்கணித்து மாற்று மதத்தைத் தழுவுதல். படிநிலைச் சாதியமைப்பை ஆதரிப்பவர் ஆரிய இனக்குழுவின் அசமத்துவ நால்வருணத்தில் சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய மூன்றில் ஏதாவதொரு அடையாளத்தைப் பிடிப்பதற்கு பார்ப்பனிய இந்து மதத்தை ஏற்கின்றனர். படிநிலைச் சாதியமைப்பைப் புறக்கணிப்பவர் சாதி, பாலினப் பாகுபாடின்மை, சுதந்திரம், சமத்துவம் போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் மதங்களைத் தழுவுகின்றனர்.
தங்கள் மீது இழிவுகளைச் சுமத்தியது பார்ப்பனிய இந்து மதம் என உணரும் தலித்துகளிடம் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்ற புகைச்சல் இருக்கிறது. மதமாற்றம் தலித்துகளுக்கு சிறைக் கொட்டடியிலிருந்து விடுபடும் ஆகப்பெரும் சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது; அதனால் அது பெருங்கொண்டாட்டமாக நிகழ்கிறது. இதனால் அவர்கள் கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவுகின்றனர். பௌத்தத்தைத் தலித்துகள் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை வீ.சித்தார்த் என்ற பெரியார்தாசனின் கூற்று தெரிவிக்கிறது. "பவுத்தத்தில் சாமியில்லை - சடங்கு இல்லை - சாதி இல்லை – மாயம் இல்லை - மந்திரம் இல்லை - பூஜை இல்லை - பிரார்த்தனை இல்லை - எல்லாவற்றுக்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை - இவைகளில் எதுவொன்றிருப்பினும் பவுத்தமில்லை” அவ்வாறென்றால் பௌத்தத்தில் இருப்பதுதான் என்ன? மேலும் சித்தார்த் கூறுகிறார்:
"பவுத்தத்தில் அன்பு உண்டு - அறிவு உண்டு - சமத்துவம் உண்டு - சமதர்மம் உண்டு - ஒழுக்கம் உண்டு - இரக்கம் உண்டு - வீரம் உண்டு - விவேகம் உண்டு - இவைகளில் எதுவொன்று இல்லாததும் பவுத்தமில்லை”.
இந்தக் கோட்பாட்டை விரிவாக எடுத்துரைத்ததோடு அதுவரை நிகழ்ந்துவந்த இந்து மதத்தை உதறிவிட்டு கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவும் போக்கை இந்து மதத்துக்கு எதிராகத் திட்டமிட்ட பகிரங்கமான போராட்டமாகவும் பௌத்தம் ஏற்பதை இயக்கமாகவும் மாற்றினார் அம்பேத்கர். அவர் கண்டெடுத்த பௌத்தம் உட்பட இதர சிந்தனைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்ட இந்துத்துவம் டிசம்பர் 06 அன்று பாபர் மசூதியை இடித்து முஸ்லீகளுக்கும் இந்துக்களுக்கும் மோதலை ஏற்படுத்துவதனூடாக அம்பேத்கரின் சிந்தனைகள் அழித்தொழிக்க எத்தனித்தது. இந்த முயற்சியில் இந்துத்துவம் தமிழகத்தில் தோற்றது. அதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு.
1) அம்பேத்கரின் பௌத்தச் சிந்தனையும் அவருடைய நூற்றாண்டு விழாவும்
2) அயோத்திசாரின் தமிழ்ப் பௌத்தச் சிந்தனைகளைக் கண்டெடுத்தல்
3) அம்பேத்கரை தென்னாட்டுப் பெரியார் எனக் காணும் சுயமரியாதை இயக்கம், இடதுசாரி, முற்போக்கு இயக்கங்கள் அவருடைய சிந்தனைகளை ஆதரித்தல். இவற்றின் காரணமாகப் பௌத்தம்தான் தலித்துகளை விடுவிக்கும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது.
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் தலித்துகள் தொடர்பான விவாதம் கூர்மையானது. இந்தக் காலகட்டங்களில் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சந்திரபோசு, ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன், கிருஷ்ணசாமி, வடக்கு மாவட்டங்களில் தொல். திருமாவளவன், மேற்கு மாவட்டங்களில் அதியமான் போன்ற தலைவர்களின் தலைமையில் தலித்துகள் தீவிரமாகச் செயல்பட்டனர். தலித்துகள் மீது இடைநிலைச் சாதிகள் ஏவிய வன்முறை, இதற்குத் தலித்துகளின் பதிலடி என இவ்விரு பிரிவினருக்கும் ஏற்பட்ட பகைமைக் கொதிப்பு விளைவித்த மோதலால் 1990களின் தமிழகத்தில் இரத்தக்கறை படிந்தது. இந்த மோதல் அறிவுத்தளத்திலும் எதிரொலித்தது. தலித் இலக்கியமும், ஆராய்ச்சிகளும் தீவிரப்பட்டன.
இவற்றைப் படைக்கும் தகுதி யாருக்கு உண்டு? தலித்துகளுக்கா? தலித்தல்லாதோருக்கா? என்ற விவாதம் சூடானது. இந்தப் போக்குகளில் மதம் குறித்த விவாதமும் தலைதூக்கியது. இந்து மதத்துக்கு எதிராகப் பௌத்தம் முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரின் "புத்தமும் அவர் தம்மமும்” நூலின் தமிழ் மொழியாக்கம் (1996), அயோத்திதாசரின் சிந்தனைத் தொகுப்புகள் (1999) ஆகியன வெளியிடப்பட்டன. இவை பௌத்தம் குறித்த உரையாடலைக் கூர்மையாக்கின. அம்பேத்கரின் பௌத்தம் தழுவுதலானது இந்து மதத்தின் சாதி, தீண்டாமைக்கு எதிரான போராட்டமென்றால் அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தமானது அதைத் தலித் வரலாறாக மாற்றியது. தலித் எழுத்தாளர்கள் ஏபி. வள்ளிநாயகம் எழுதிய "நாங்கள் இந்துக்கள் அல்லர்: பவுத்தர்கள்” டி. தர்மராஜனின் "நான் பூர்வ பவுத்தன்” ஆகிய நூற்கள் வெளியாயின.
பௌத்தர்களால் “தீண்டத்தகாதவர்”களாகக் கருதப்பட்ட கோயிலடிமைகளைக் கண்டபோது அதில் தலித் கண் களும் சிமிட்டுவதை உணர்ந்து 1899ஆம் ஆண்டு வெளி யிட்ட இன்றைய இரங்கோனில் மினுமினுக்கும் பௌத்தச் "சுயதேக்கன் கோபுர சரித்திர " நூல் வழி "நாம் இந்துக் கள் அல்லர்'' என அறிவித்த இரட்டைமலை சீனிவாசன் "இந்து மதத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட " பௌத்தத்தையும் மறுத்தார்.
கோ. ரகுபதி
தொடைபுடைய மற்ற பதிவுகள்: