ராகுல்ஜியின் சுயசரிதை - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/raguljiyin-suyasarithai-part-1-2 

பதிப்புரை

தத்துவம், வரலாறு, சமூகவியல், அறிவியல், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாவல், நாடகம், கட்டுரை, அகராதி, இலக்கணம், ஆய்வு, துண்டுப்பிரசுரம் என பரந்துபட்ட அளவிலும் பன்முகத்தன்மையுடனும் எண்ணற்ற நுற்களை எழுதிக் குவித்தவர் ராகுல்ஜி அவர்கள்.

உத்தரபிரதேசத்தில் அஜாம்கார் மாவட்டத்து சிற்றூரொன்றில் பிறந்த இவர் சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே ஊர் சுற்ற சென்றுவிட்டவர். கேதார்நாத் பாண்டே என்ற இயற்பெயர்கொண்ட அவர் காசிக்குச் சென்று சமஸ்கிருதம், அரபு, பார்சி மொழிகளைக் கற்றுக்கொண்டார். படிப்படியாக முப்பது மொழிகளைக் கற்றறிந்தார். பிராமண சமயத்தவரான இவர் இந்துமத நம்பிக்கையை கைவிட்டு ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் அதிலிருந்து வெளியேறி புத்த பிக்குவாக சிலகாலம் சமயப்பிரசாரம் மேற்கொண்டார். இப்படியாக பல உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஞான மார்க்கத்தில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்ட நிலையில், 1935ம் ஆண்டு ரஷ்யாவுக்கு சென்றுவந்த பின்னர் மார்க்சியத்தில் தீவிரமான பற்றுகொண்டார்.

இந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களூர், விஜயநகரம், அகமதாபாத், ஆக்ரா, லாகூர், குடகு போன்ற பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டதோடு நேபாளம், இலங்கை, திபெத், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சோவியத் ரஷ்யா, ஜப்பான், கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்.

'சதா திரிந்துகொண்டேயிருக்க வேண்டும்' என்ற எண்ணங் கொண்டிருந்த ராகுல்ஜி தன் அனுபவங்களை சுயவரலாறாக 'மேரி ஜீவன் யாத்ரா' என்ற நூலாக இந்தி மொழியில் எழுதினார். தமிழ் வாசகர்களுக்காக இந்நூலை இந்தியிலிருந்து செழுமையாக மொழி பெயர்த்து அளித்தவர் பன்மொழி அறிஞரான ஏ.ஜி.எத்திராஜலு அவர்கள். இந்நூலில் அவரது மொழிபெயர்ப்பு மேன்மையான முறையில் அமைந்துள்ளது.

ராகுல்ஜியின் சுயசரிதையை 1974ஆம் ஆண்டு தொடங்கி அவரது சிறு பிராயம் மற்றும் இளமைப் பருவம் எனத் தனித்தனி நூல்களாக என்.சி.பி.எச். வெளியிட்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து முழுமையான ராகுல்ஜியின் சுயசரிதை நூல்கள் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. இந்நூல் முதல் பாகம் இரண்டு புத்தகங்களாகவும் இரண்டாம் பாகம் ஒரு புத்தகமாகவும் என்சிபிஎச் வெளியீடாக 2005ம் ஆண்டு வெளியானது.

ராகுல்ஜியின் இளமைக் காலமான 1903ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரையிலான வரலாறு முதல் பாகத்தின் புத்தகம் ஒன்றாகவும், 1914ம் ஆண்டிலிருந்து 1944ம் ஆண்டு வரையிலான வரலாறு புத்தகம் இரண்டாகவும் வெளிவந்தன. தற்போது முதல் பாகத்தின் இரண்டு புத்தகங்களும் ஒன்றாகச் சேர்த்து ஒரே புத்தகமாகவும் இரண்டாம் பாகம் தனிப் புத்தகமாகவும் புதிய வடிவமைப்பில் மீள்பதிப்பு செய்யப்படுகிறது.

பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog