இராவண காவியம் (மூலமும் உரையும்) - உரையாசிரியரின் உள்ளக்கிடக்கை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/raavana-kaaviyam-moolamum-uraiyum
 
உரையாசிரியரின் உள்ளக்கிடக்கை

நினைத்துப் பார்க்கிறேன்!

- பேராசிரியர். ந. வெற்றியழகன், எம்.ஏ., பி.எட்

தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவண காவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நினைவாக, உரையோடு கூடிய நூல் வெளியிடல் வேண்டும் என்பதான சாரதா பதிப்பகத்தாரின் விருப்பத்தை, என்னிடம் தெரிவித்ததோடு, பொழிப்புரை எழுத என்னைத் தூண்டி, ஊக்கமும், உள்ளத் துணிச்சலும் கருத்துரையும் அவ்வப்போது எனக்கு அளித்து என்னை நெறிப்படுத்தி வந்த திருச்சி நாணயவியல் கழக நிறுவுநரும் 'பழங்காசு' - அறிவுரைஞரும் ஆகிய பண்பாளர் ப. சீனிவாசன் அவர்களின் பெருந்தகைமையை இப்பொழுது நான், நினைத்துப் பார்க்கிறேன்!

சிறப்பு வாய்ந்த 'இராவண காவிய நூலுக்குப் பொறுப்பு வாய்ந்த பொழிப்புரை வரையும் பணி செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, இதற்கு முன் வேறு எவரும் முன்வரவில்லை என்னும் ஒரே தகுதி மட்டும் எனக்கு உள்ளது என்பதையும் இந்த வேளையில் நான் அடக்கத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்!

இந்த உரை எழுதியதன் வாயிலாக, புலவர் குழந்தை அவர்களின் புகழ் பரப்பும் பணியில் எளியேனுக்கும் ஒரு சிறு பங்கு கிடைத்துள்ளது என்பதையும், அவர்தம் காப்பியத்துக்கு முதன் முதலில் பொழிப்புரை வரைந்த தொண்டன் என்று பேசப்படும் பெருமை எனக்கு அமைந்துவிட்டது என்பதையும் இந்தச் சமயத்தில் பெருமித உணர்வோடு நான், நினைத்துப் பார்க்கிறேன்!

இந்த உரை வரைவில், குறைபாடுகள் இருக்கலாம் என்பதையும் அன்பர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் பொறுப்புணர்வோடு திருத்தம் செய்ய அணியமாயுள்ளேன் என்பதோடு, எனது இந்த முயற்சிக்கு அனைத்துவகையிலும், உதவியும், உறுதுணையும் நல்கிய சாரதா பதிப்பகத்தார் உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் இருகை கூப்பிய வணக்கத்தோடு என் உளமார்ந்த நன்றியறிதலுடன் நான் பணிவோடு நினைத்துப் பார்க்கிறேன்!

Back to blog