"இராவண காவியம் எளிய இனிய தனித் தமிழில் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இயற்றப்பட்டது” என்று பேரறிஞர் அண்ணாவும்,
"இராவண காவியம் பெருங்காப்பிய நிலைகளைச் சிறிதளவும் வழுவவிடாமல் மரபுநிலைகளை மாண்புறக் காத்து நிற்கிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞரும் பாராட்டி உரைத்திருக்கின்ற ஓர் அருமையான காவியம் "இராவண காவியம்.”
இராவண காவியம் முதன் முதலாக 1946 இல் வெளிவந்து பிறகு, 1948 இல் அப்பொழுதிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பெற்றுப் பிறகு, 1971 இல் தமிழக அரசின் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால் அந்தத் தடை நீக்கப் பெற்று, 1971 இல் மறுபதிப்பு மிகுந்த பொலிவுடன் வெளிவந்தது. அதன்பிறகு,
எங்களது சாரதா பதிப்பகத்தின் பெருமுயற்சியினால் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது.
தடையை நீக்கிய தன்மானத் தமிழ்த் தலைவர் கலைஞரே 2006 ஆம் ஆண்டில் புலவர் குழந்தை அவர்தம் நூல்கள் அனைத்தும் பத்து இலக்கம் உருபாய் அவர்தம் குடும்பத்தார்க்குப் பரிசுத் தொகையாக வழங்கி நாட்டுடைமையாக்கியுள்ள இந்நேரத்தில் எங்கள் சாரதா பதிப்பகத்தின் வாயிலாக மீண்டும் புதுப்பொலிவுடனும் மிகப் பெரிய அளவுடனும் சிறந்த கட்டமைப்புடனும் வெளிவருகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தெளிவுரையினைப் பேராசிரியர் ந. வெற்றியழகனார் இயற்றியளித்துள்ளார்.
தொல்காப்பியத்திற்கு முதன் முதலாக இளம்பூரணனார் உரை இயற்றி அளித்ததனைப் போலும்; திருக்குறளுக்கு முதன் முதலாக மணக்குடவர் உரை இயற்றி வழிகாட்டியதனைப் போன்றும், இந்த இராவண காவியத்திற்குப் பேராசிரியர் ந. வெற்றியழகனார் முதன் முதலாக உரை இயற்றி வழங்கியுள்ளார் என்பது பாராட்டிற்குரிய செய்தியாகும்; இதனைப் போன்றே உரையுடன் கூடிய பதிப்பினை நாங்கள் வெளியிடும் பேறு பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்கின்றோம்.
நாங்கள் வெளியிட்ட இராவண காவிய மூலத்தினை மிக விரைவில் வாங்கி, எங்களை மறுபடியும் மூலமும் உரையும் சேர்த்து வெளியிட வைத்த தமிழ் மக்கள் இதனையும் பெற்று மறுபடியும் மிக விரைவாக மறுபதிப்பினை வெளியிடச் செய்வர் என்று நம்புகின்றோம்.
பதிப்பகத்தார்