புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்) - பதிப்புரை
'மண் பயனுற வேண்டும்' என்றார் பாரதியார். அப்படி மண் பயனுற புதிய நெறியினைக்காட்டி உலகம் போற்றும் உன்னத பெரியோர்களுள் ஒருவராக விளங்கியவர் தாம் தந்தை பெரியார். அவர் எதனையும் ஆராய்ந்து பார்த்து அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கச் செய்தார். ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற வைத்த சாக்ரட்டீஸைப் போல எதனையும் எதிர்க்கேள்விகள் மூலம் வினவி தெளிவு பெற்று அதன்படி வாழச்செய்தவர் பெரியார். பக்தி என்னும் மாய வலைக்குள் அகப்பட்டு மூடப் பழக்க வழக்கங்களில் ஊறிக்கிடந்த மக்களைத் தட்டியெழுப்பி அறிவின் திறத்தைச் சொல்லிச் சிந்தித்து எதனையும் ஏற்றுச் செயல்படும்படி வழிகாட்டியவர் தந்தை பெரியார். அவருடைய புரட்சிகரமான எண்ணங்களையும் செயல்களையும், எடுத்துக்காட்டிச் சிந்திக்க வைப்பதே புரட்சியார் பெரியார் என்னும் இந்நூல்.
கல்வித்துறையில் கால்பதித்து உயர் பட்டங்களையும் பதவிகளையும் தனதாக்கிக் கொண்டு தலைசிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவர் முனைவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள். இந்நாட்டு மக்கள் கல்வியில் கருத்தூன்றிப் படிப்பதற்குப் பெருந்தலைவர் காமராசருடைய மதியவுணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியவர். சென்னைப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக இந்தவர். தந்தை பெரியாரின் மீது தணியாத பற்றுக் கொண்டு சிந்திக்க வைத்தவர். அறிவுப்பூர்வமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். பெரியாரின் பெரும்பண்புகளை எடுத்துக்காட்டி அவருடைய புரட்சிகரமான எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் புரட்சியாளர் பெரியார் என்ற நூலை எழுதிப் பெரியாரின் வழியில் நின்றவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.
இலக்கியங்களுடன் அறிவுக்கு விந்தாகும் சிந்தனை நூல்களையும் வெளியிட்டுள்ள எமது பதிப்பகம் தந்தை பெரியாரைப் பற்றிய சிந்தனை வரிசையில் புரட்சியாளர் பெரியார் என்னும் இந்நூலையும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.
வாசக அன்பர்கள் வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறோம்.
பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: