புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்) - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/puratchiyaalar-periyar-ramaiya-pathippagam 
அணிந்துரை

தமிழக மெங்கும் பெரியார் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடும் நேரத்தில், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் புரட்சியாளர் பெரியார்' என்ற பெயரில், தமிழ் மக்களுக்கு ஓர் அரிய நூலை எளிய நடையில் உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு நற்பணி.

இந்நூல் பெரியார் அவர்கள் பிறந்தபோதும் அதற்கு முன்பும் நிலவிய சமுதாய, அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளை விளக்கி, சமுதாயத்தில் அன்றிருந்த குறைபாடுகளை எடுத்துக் காட்டி அவைகளை அகற்ற பெரியார் மேற்கொண்ட பணிகளையும், போராட்டங்களையும் நன்கு விளக்குகின்றது. பெரியார் அவர்களோடு பல ஆண்டுகாலம் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவருடைய அன்பையும் பெற்ற திரு.நெ.து.சு.அவர்கள் பெரியாரின் தனித் தன்மைகளைத் தனியாக ஓர் இயலில் நம் மனதைக் கவரும் வண்ண ம் எடுத்துச் சொல்கிறார்.

பெரியார் அவர்களின் பணிகள் பொதுவாக இந்திய நாட்டிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதனை நூலின் இறுதியில் தெளிவாக எடுத்துரைக்கிறார் திரு.நெ.து.சு. அவர்கள்.

இந் நூலாசிரியர் பெரியாரின் அயல்நாட்டு அனுபவங்களைப் பற்றியும் வியப்பூட்டும் கிளர்ச்சிகளைப் பற்றியும் தெளிவாக எடுத்து விளக்கியிருப்பது ஒரு சிறப்பு. பெரியார் அவர்கள் இந்நாட்டு அரசியல், சமுதாய வளர்ச்சியில் மாற்றங்களையும், விறுவிறுப்பையும் ஊட்டிய் ஒரு வியக்கத்தகு ஆற்றல் எனலாம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'பெரியார் அறக்கட்டளைத் திட்டத்தில் நெ.து.சு. அவர்கள் கடந்த ஏப்ரல் திங்களில், 2, 3, 4, ஆம் நாட்களில் நிகழ்த்திய மூன்று சொற்பொழிவுகளையும் அப்போது நேரில் கேட்டு மகிழ்ந்தவர்கள், அச்சொற்பொழிவுகளின் விரிந்த வடிவமாக வெளிவந்துள்ள இந்த நூலைக் கண்டு பெரிதும் போற்றுவர்.

நூல் முழுதும் சொற்பொழிவு நடையிலேயே அமைந்திருப்பதால், யாவரும் படித்து சுலபமாகப் புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளது. திரு.நெ.து.சு. அவர்கள் தமக்கே உரிய இந்த எளிய நடையால் தமிழ் மக்களைக் கவர்ந்து அவர்கட்குத் தேவையான பொது அறிவை ஊட்டி வருபவர்.

இந்தப் பணியின் சிறப்பினை உணர்ந்து நான் அவரை பெரிதும் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் மகிழ்வோடு வரவேற்றுப்படித்துப் பயன்பெறவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

 

20-9-1979                                                                                                                                                          தாமோதரன்.

Back to blog