புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு - என்னுரை

புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு - என்னுரை

தலைப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு

எழுத்தாளர் ஏ.எஸ்.கே.
பதிப்பாளர்

சிந்தனை வெளியீடு

பக்கங்கள் 160
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.100/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/puratchiyaalar-ambedkar-varalaaru.html

 

என்னுரை

''பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.'' என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபொழுதே டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னையைப் பற்றியும், ஒரு புத்தக வடிவத்தில் என் கருத்துகளை எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.

காரணம்: பெரியாரைப் போலவே டாக்டர் அம்பேத்கர் அவர்களும், பகுத்தறிவின் ஒரு சிகரமாவார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னையும் பகுத்தறிவின் அடிப்படையில் தான் தீர்க்க இயலுமே ஒழிய, மனிதாபிமானத்தினால் அல்ல.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத் தோன்றும், தாழ்த்தப்பட்டோர் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை பிற.

வறுமையிலிருந்தும், பொருளாதார அடிமையிலிருந்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற்றனர் என்றால், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் அடியோடு ஒழியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ருஷ்ய நாட்டின் 1917க்கு முன், ஜார் மன்னனுக்கு மக்கள் அடிமையாக இருந்து வந்தனர். லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது. ஜார் மன்னனாட்சி சடசடவென்றே முறிந்தது. மக்கள் அரசியல் விடுதலை பெற்றனர். அரசியல் விடுதலை பொருளாதார விடுதலையுடன் பின்னிப் பிணைந்திருந்தது. எனவே, அரசியல் விடுதலை பொருளாதார விடுதலையாகவும் பரிணமித்தது.

அதேபோல், இந்தியச் சமுதாய அமைப்பு, ஒரு கோபுரம் போல் உள்ளது. அடித்தட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கின்றனர். இந்த அமைப்பு, கோபுரம் போல் உள்ள பொருளாதர அமைப்பைக் கல்விக் கொண்டுள்ளது. பொருளாதார கோபுரத்தின் அடித்தளத்தில் தொழிலாள்கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் உள்ளனர்.

ரஷ்யப் புரட்சி போல், ஒரு மிகப் பெரிய புரட்சியின் மூலமாகத்தான் இக்கோபுரம் சடசடவென்று முறியும். அப்பொழுதுதான் அடித்தட்டிலுள்ள ஏழை எளிய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர இயலும். எந்த நாள் இது ஏற்படுகிறதோ, அந்த நாள்தான் தீண்டாமை என்ற பூதம் அடியோடு ஒழியும். இது என் அழுத்தமான கருத்தாகும்.

அப்படியானால், சமுதாயத்திற்கு புரட்சி ஏற்படும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற பிரச்னை எழுகிறது.

கைகட்டி, மவுனியாகத் தனியே இருக்க எண்ணினேன். எண்ணமிது என் சுவாமி, என்னை ஆதரிப்பாய் பராபரமே என்றிருந்தால், அடிமைச் சங்கிலிகளை முத்தமிட்டுக்கொண்டு இன்பக் கடலில் முழுகி இருக்க வேண்டும்.

"செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்”

என்றும்,

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றவை எல்லாம் பிற" என்றும்,

"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்" என்றும்,

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணிய ராகப் பெறின்''

என்றெல்லாம் வள்ளுவர் வாரி வழங்கியுள்ளதை ஒரு போதும் மறக்கலாகாது.

அரசியல் உரிமைகள், கல்வி, சுகாதார வசதிகள், பொருளாதார மேம்பாடு போன்றவைகளைப் பெற, தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.

எனையாளும் ஈசன் செயல் என்று இருந்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியாது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிரக்க, அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வரணாசிர தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும் வரை கை கட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாகடர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.

தாழ்த்தப்பட்ட மக்மகளின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.

கீழவெண்மணி சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை என்னில் ஏற்படுத்தியது, என் நீண்டநாள் நண்பராகிய தோழர் வி.பி. முருகையன் அவர்களுடன் பல நாட்கள் கலந்து பேசினேன். தோழர் வி.பி. முருகையன் அவர்கள் ஓர் தன்னலமற்ற தியாகி. என்னுடன் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். தன் வாழ்க்கை அத்தனையும் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்காக அர்ப்பணம் செய்த ஓர் உத்தமர்.

அவர் முயற்சியின் காரணத்தால், சென்னைக் கடற்கரையின் மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு அருகில், சுமார் 30 தோழர்கள் உண்ணாவிரதத்தைத் தோழர் வி.பி.எம். தலைமையில் மேற்கொண்டனர். காலம் சென்ற முன்னாள் சபாநாயகர் திரு. ஜே. சிவசண்முகம் பிள்ளை அவர்களும், உண்ணாநோன்பை ஆதரித்தார். கீழவெண்மணி எல்லா முற்போக்காளர் எண்ணத்திலும், விடுதலை இயக்கத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி இதுவோ, அதுவோ எழுதாத பத்திரிகைகள் இல்லை. அவர்கள் விடுதலையை ஆதரிக்காத அரசியல் கட்சி இல்லை. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியப் பிரதமரின் 20 அம்சத் திட்டமும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு முக்கிய இடத்தைத் தந்துள்ளது. இவை அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னை. இந்திய அரசியல் நாட்டுப் படத்தில் அழியா இடம் பெற்றுள்ளன என்பதுதான் இதன் பொருளாகும்.

இந்நிலை இன்று ஏற்பட்டுள்ளதற்கு முதல் இடம் டாக்டர் அம்பேத்கர் அவர்களைச் சாரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை,

எண்ணற்ற தமிழகத் தலைவர்களும் அரிய பெரிய பங்கை ஆற்றியுள்ளனர் என்பது சரித்திரமாகும். இவர்களில் தலைசிறந்தவர்கள்.

திரு. எம்.சி. ராஜா அவர்கள்,

திரு. என். சிவராஜ் அவர்கள்,

திருமதி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்,

திரு. கக்கன் அவர்கள்,

திரு. ஜே. சிவசண்முகம் அவர்கள்,

மாமதுரகவி திரு. முருகேச பாகவதர் அவர்கள்

திருமதி சத்தியவாணி முத்து அவர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நூலைத் திரு. எம்.சி. ராஜா அவர்களுக்கும், என். சிவராஜ் அவர்களுக்கும் அர்ப்பணம் செய்வதன் காரணம். அவர்கள் இயங்கி வந்த காலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக நெருக்கடியான காலம், பத்திரிகைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளும் இம்மி அளவும் இடம் கொடுக்காதிருந்த காலம், உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களையும், அவர்கள் தலைவர்களையும் அவதூறு செய்தே பத்திரிகையின் திருப்பணியாக இருந்த காலம் அது. டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் சேர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர்கள் திரு. எம். சி. ராஜா அவர்களும், திரு. என். சிவராஜ் அவர்களும் ஆவர். எனவே, என் அஞ்சலியை அன்னார்களுக்குச் செலுத்தும் முறையில் இந்நூலை அவர்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளனே.

நிற்க, இந்நூலை எழுத எண்ணற்ற தோழர்கள் உதவியுள்ளனர். அவர்களைப் பற்றி கூறாமற்போனால் யான் நன்றி கெட்டவனாவேன்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு"

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறை மிகச் சிறந்த முறையில் திரு. தனஞ்ஜெய்கீர் என்பவர் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். நான் பம்பாய்க்கு 1975 இல் சென்றிருந்தபோது அவரைச்சந்தித்துப் பேசினேன். டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நானும் ஒரு நூல் எழுதப் போகிறேன் என்றும், அதுவும் தமிழ் மொழியில் என்றும் கூறினேன். என் புத்தகத்தை மொழி பெயர்க்கலாமே என்றார். அப்படியே மொழி பெயர்த்தால் ஏறத்தாழ 800 பக்கங்களாகும். சாதாரண மக்கள் வாங்கி படிக்கும் விலைக்கு விற்க முடியாது என்றேன். ஆனால் “உங்கள் நூலைதான் அடிப்படையாக வைத்து டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன்" என்றேன்.

அதைத்தான் செய்துள்ளேன். எனவே என் முதற்கண் நன்றி திரு. தனஞ்ஜெய்கீர் அவர்களுக்கு உரித்தாகுக.

முதல் இடம் தோழர் வி.பி. முருகையன் அவர்களுக்கு - இந்நூலை எழுத அவர் அளவுகடந்த உற்சாகத்தை ஊட்டினார். அது மட்டுமின்றி பல பட்டங்கள் பெற்று, பல நூல்களைப் படித்துப் பாண்டித்தியம் பெற்று விளங்கும் தோழர் அன்பு பொன்னோவியம், இந்நூலை எழுத பல கருத்துகளை வழங்கி, பல அரிய நூல்களை எனக்குக் கொடுத்து உதவியுள்ளார். அன்னாருக்கு என் இதயபூர்வமான நன்றி.

துடிப்புள்ள இளைஞரும், செயல்திறம்மிக்கவரும், தொண்டால் பொழுதளக்கும் அருமைத் தோழருமான ஏ. கோவிந்தசாமி அவர்கள் பல அரிய நூல்களைத் தந்து உதவினார். அவருக்கும் என் நன்றி.

கீழவெண்மணி படுகொலையைப் பற்றி அதிகாரபூர்வமான முறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பத்திரிகையாகிய "உழவுச் செல்வம்' வெளியிட்டுள்ளதை அப்படியே தந்துள்ளேன்.”உழவுச் செல்வம்' மேற்கொண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கீழவெண்மணியைப் பற்றிய தலையங்கம், அரிஜனங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற தலைப்பில் தோழர்கள் பூபேஷ்குப்தா, எம். காத்தமுத்து (எம்.பி), பி.கே. கொடியன் (எம்.பி.) எழுதியுள்ள கட்டுரைகள் அப்படியே பிரசுரிகப்பட்டுள்ளன.

இதற்கு "உழவுச் செல்வத்திற்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கும் என் இருதய பூர்வமான நன்றி. தோழர் எஸ்.ஏ. டாங்கேயின் கட்டுரையையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழில் வெளியிட்டுள்ளது. அதையும் அப்படியே இந்நூலில் தந்துள்ளேன். இதற்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு என் நன்றி.

மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்ட சில முக்கியமான "ரோஸ்டர்களை'' (Rosters) அப்படியே ஆங்கிலத்தில் அனுபந்தங்களாகத் தந்துள்ளேன். காரணம், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தோழர்களுக்கு அது உதவும்.

தோழர்களே, கே. முருகேசன் அவர்களும், ஆர். பார்த்தசாரதி அவர்களும் படித்துப் பார்த்து, அவர்கள் ஏற்றுக் கொண்டு செப்பம் செய்து தந்தால் தான் நான் எழுதும் நூல் எதையும் அச்சகத்திற்கு அனுப்புவது என்ற நியதியை ஏற்படுத்தகி கொண்டுள்ளேன். ஆகவே வழக்கம்போல் இந்நூலும் அவர்கள் செப்பகத்துக்கும் ஒப்புதலுக்கும் பின்னர்தான் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு என் இருதய பூர்வமான என் நன்றி. பல்வேறு முறைகளில் உதவி புரிந்த தோழர் இரா. நந்தகோபால் அவர்களுக்கும் என் நன்றி.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வழக்கம்போல் நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டதற்கு என் நன்றி.

ஏ.எஸ்.கே. 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog