புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal 
அணிந்துரை

'தமிழர் எழுச்சி' எனும் திங்கள் இதழில் இந்நூலாசிரியர் ஓராண்டு காலமாக எழுதிய தொடர் கட்டுரைகளின் சேர்க்கையே இந்நூல், இது ஓர் ஆய்வுநூல் புதிய பார்வைகள் கொண்டது. இந்த ஆசிரியர் நம்மை வரலாற்றின் பின் நோக்கி ஈர்த்துச் செல்கின்றார்.

24-09-1932 அன்று காந்தியாருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏறத்தாழ 30 கட்டுரைகளில் அன்றைய அரசியல் வானில் நிலவிய பல்வேறு நிலைகளை ஆராய்கிறார். இந்தப் புனா ஒப்பந்தத்தின் அடிப்படை - ஒடுக்கப்பட்டவருக்கு தனித் தொகுதி அமைத்தல். ஏற்கனவே, ஆங்கிலேயர்களால் தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 71 தொகுதிகள், புனா ஒப்பந்தந்தின் மூலம் 148 தொகுதிகளாக உயர்த்தப்பட்டன. இந்த 148 தொகுதிகளும் மொத்தமுள்ள பொதுத் தொகுதிகளிலிருந்து ஒதுக்கப்படும். பொதுவாக இந்த நூலில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்குத் தொகுதி ஒதுக்கீடு தந்தது சரியா? தவறா? என்று ஆராயப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி வரதராஜன் அவர்கள் “மகாத்மா காந்தியாரால் அரிசனங்கள் என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 1935ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் செட்யூல்டு இனத்தினர் என்று குறிப்பிட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர்” என்று குறிப்பிடுகிறார். இது பற்றி விரிவாக சொல்லுகின்ற நூலாசிரியர்,

“நீதியரசர் சொல்வதைப் பார்த்தால், ஹரிஜன் என்பது ஒரு கெட்ட வார்த்தை - கொச்சை வார்த்தை - என்று குறிப்பிடுவது போலிருக்கிறது. இதன் பொருள் தமிழில் அரியின் புதல்வர்' என்பதாகும். இது வடமொழி. 'செட்யூல்டு' என்பது ஆங்கிலம். இதன் பொருள் தமிழில் அட்டவணைச் சாதியினர்' என்பதாகும்.

"அரிஜன் என்னும் வார்த்தையை ஒருவேளை காந்தியார் சொன்னது என்பதனாலேயே இவர்கள் வெறுப்பு காட்டுகிறார்களோ? கடவுளின் குழந்தை என்பது அப்படியென்ன கீழான வார்த்தை? காந்தியார் தன்னைத்தானே அரிஜன் என்றுதான் குறிப்பிட்டுக்கொள்கிறார் என்பதை இவர்கள் அறிவார்களா?

"மாயாவதி கூட இதுகுறித்துப் பேசும்போது 'நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், மற்ற சாதி இந்துக்களெல்லாம் மாட்டுக்குப் பிறந்தவர்களா?' என்று கேட்டார்.

“அது சரி, ஹரிஜன் என்றால் அதில் சீற்றமுற என்ன இருக்கிறது. இவர்கள் ஏன் ஹரிஜன் என்பதற்குக் கூட இவ்வளவு கோபப்படுகிறார்கள்.

"உண்மையில் 'ஹரிஜன்' பெயர் எப்படி உருவாயிற்று என்பது, 99 விழுக்காட்டினர் அறியாத ஒன்றாகும்.

“தீண்டப்படாதவர், என்னும் சொல் இழிவானது. இதற்குப் பதில் ஒரு நல்ல சொல் வேண்டும் என்று காந்தியார் வேண்டுகோள் வைத்தார். குஜராத்திக் கவிஞர் நரசிம்ம மேத்தா தனது கவிதையில் தீண்டப்படாதோரை 'ஹரிஜன்' என்று குறிப்பிட்டிருந்தார். இச்சொல்லை காந்தியாரிடம் சொன்னார்கள். காந்தியாருக்கு இச்சொல் பிடித்துவிட்டது. உடனே, இது நன்றாக உள்ளது என்று கூறி, தனது எங் இந்தியா' பத்திரிகையின் பெயரை 'ஹரிஜன்' என்று மாற்றினார். இதுதான் உண்மை.

"இதையறியாமல் ஒரு தலித் நண்பர், என்னிடம் வந்து, காந்தியார் ஹரியை வணங்குபவர், அதனால் அந்தப் பெயரை வைத்துவிட்டார்' என்று குறிப்பிட்டார். குஜராத் கவிஞரைப் பற்றிச் சொன்ன பிறகு தான் அமைதியானார்.

"காந்தியார் எது சொன்னாலும் எது செய்தாலும் குற்றம்! குற்றம்! குற்றமே! அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார்கள் ஒடுக்கப்பட்டோர் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது”. இவ்வாறு நூலாசிரியர் கூறுகிறார்.

நீதியரசர் எழுப்பிய வினாக்கள் அதற்கான விளக்கம், டாக்டர் கன்ஷிராமின் திரிபு வாதம், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் தலைவர் எம். சி.ராஜா குறிப்பிட்ட வாசகங்கள், அம்பேத்கரும் தேர்தல்களும், அம்பேத்கர் காங்கிரசின் தயவால் அமைச்சரானவகை, அம்பேத்கரின் அமைச்சர் பணி போன்றவைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஆசிரியர். 'ஒரு காலத்தில் அம்பேத்கர் பிரதமராக ஆகிவிடுவாரோ என்று நேரு பயந்தார்' என்றக் கூற்றை மறுக்கிறார்.

ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல அவரது சிந்தனை ஓட்டத்தின் காரணமாக அந்த புனா ஒப்பந்தம் நடந்த காலத்திற்கே - அதற்கு முன்னும் பின்னும் ஏற்பட்டிருந்த அரசியல் சூழ்நிலைக்கே - நேரில் சென்று பார்ப்பது போல ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

"இறுதியாக உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் காந்தியார் மேற்கொண்ட அணுகுமுறை புதுமையானது, நிலையானது, வழிகாட்டி எனத் தீர்ப்புரை சொல்லுகின்ற ஆசிரியர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்று நிரூபணம் செய்தது மட்டுமல்லாமல், வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுவதில், தான் ஒரு வல்லவர் எனவும் நிரூபணம் செய்கிறார்.

நான் வரலாற்று மாணவன் அல்லன். இருப்பினும் இந்த கட்டுரைகளைப் படிக்கின்ற பொழுது நமது தலைவர்கள் எவ்வாரெல்லாம் நடந்து சென்றார்கள்? எவ்வாரெல்லாம் மக்கள் நன்மைக்காகப் பாடுபட்டார்கள் என்று தெரிந்து மகிழ்கிறேன். அவரது எழுதுகோல் மென்மேலும் புதிய வரலாற்றுப் பயணங்களைப் படைக்கட்டும், அதைப் படித்துப் பார்த்து இன்புறுவோம்...

வாழ்த்துக்கள்.

நீதியரசர்.தி.நெ.வள்ளிநாயகம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog