உலகில் பிறந்தோர் கணக்கில் அடங்கார்; இருப்பவர் நானூறு கோடிக்கு மேல். அவர்களில் காலத்தின் பொன்னேடு களில் ஒளிர்வோர் சிலரே.
அச்சிலரில் ஒருவர் நம்மிடையே பிறந்தார்; நம்மிடையே வாழ்ந்தார்; நமக்காகப் பாடுபட்டார்; நமக்காகத் துன்பப் பட்டார்; நம் நிலை கண்டு பதறினார்; கதறினார். நம் நிலை என்ன? அரசியலில் அடிமை; சமுதாயத்தில் கீழோர்; பொருளியலில் வறியோர். இவற்றை மாற்றி, நம்மை மனிதர்களாக - ஒரு நிலை மனிதர்களாக, தன் உழைப்பில் வாழும் மானம் உடைய மனிதர்களாக--உருவாக்க அயராது உழைத்தார். தன் வீட்டுச் சோற்றை உண்டு - தன் பணத்தைச் செலவிட்டு தன் உடலை வாட்டி தன் உள்ளத்தை வைரமாக்கி - துறவிகளுக் கெல்லாம் துறவியாகப் புரட்சிப் பணியாற்றினார். அத்தகைய புரட்சியாளர் எவரோ?
அவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார். அவர் இயல்பாகவே, படிப்படியாகவே முழுப் புரட்சியாளர் ஆனார். அவர் வயதில் பெரியார்; அறிவில் பெரியார்; சிந்தனையில் பெரியார்; செயலில் பெரியார்; சாதனையில் பெரியார்; நாணயத்தில் பெரியார்.
பெரியாரைப் போன்று தொண்ணூற்று அய்ந்து வயது வாழ்ந்தவர் எங்கோ ஒருவரே. அவ்வயதில் ஊர் ஊராகச் சூறாவளிப் பயணம் செய்து கருத்து மழை பொழிந்த பெரியாருக்கு ஈடு அவரே.
அரசியலில், மக்கள் பெயரில் ஆட்சி நடப்பது மட்டும் போதாது. அது மக்களுக்காகவே நடக்க வேண்டும்' என்று இடித்துரைத்தவர் பெரியார். மக்கள் விழிப்பாக இராவிட்டால் அவர்கள் பெயரில் படித்தவர்களும் பணக்காரர்களும் தங்களுக்காக ஆட்சி செய்து கொள்ளும் நிலை உருவாகி விடும் என்று நம்மை முதலில் எச்சரித்தவர் பெரியார்.
'எல்லோரும் ஓர் குலம். ஆகவே அனைவரும் சேர்ந்து சமைக்கட்டும்; இணைந்து பரிமாறட்டும்; ஒரே பந்தியில் இருந்து உண்போம்' என்னும் சமத்துவக் கொள்கையைப் பொது மக்களிடையே நடைமுறைப்படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார்.
'வாழலாம்; எல்லோரும் வாழலாம்; அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற வாழலாம்; வாயடியும் கையடியும் மிகுந்த பேர்கள், இயற்கை வளத்தை தேவைக்குமேல் முடக்கிப் போட்டுக் கொள்ளாவிட்டால்' இக்கருத்தைப் பயிரிட்டதில் பெரியாரின் பங்கு பெரிது; மிகப் பெரிது; ஆழமானது.
பெரியாரின் தொண்டு நீண்டது; பன்முகங் கொண்டது; புரட்சிகரமானது; பயன் கருதாதது; சோர்வு அறியாதது; எதிர் நீச்சல் தன்மையது.
அறுபதாண்டு காலம், பொதுத்தொண்டில் பலபக்க புரட்சிகரமான தொண்டில் தந்தை பெரியார் ராமசாமியைப் போல் வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்தவர் எவரே உளர்.
பெரியார் ராமசாமியைத் தீவிர காங்கிரசுவாதியாக அறிந்தவர்கள் அநேகமாக மறைந்து விட்டார்கள் எனலாம். காந்தியடிகளின் தலைமையில் கதரைப் பரப்பிய ராமசாமி வரலாற்று நாயகராகி விட்டார். கள்ளுக்கடை மறியலை முதலில் தொடங்கிய பெருமைக்குரியவர் ராமசாமி என்பதும் அவரது மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மாவும் அம்மறியலில் பங்கு கொண்ட முதல் பெண்கள் என்பதும் சிலருக்கே நினைவுக்கு வரலாம். தீண்டாமை ஒழிப்புப் பணியின் ஒரு கூறாக கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதும் இருமுறை சிறைக் கொடுமைக்கு ஆளானதும் அதிலும் நாகம்மையும் கண்ணம்மாவும் பங்கு பெற்றதும் வரலாற்றின் ஒளி விளக்குகள் ஆகும். சாதிக் கலைப்பிற்கு வழியாக, கலப்பு மணங்களை ஊக்குவித்த பெரியாரைக் காண்போர் பலராவர்.
வெண்தாடி வேந்தராகச் காட்சியளித்த தந்தை பெரியார் பகுத்தறிவுப் பகலவன்; உயர் எண்ணங்கள் மலர்ந்த சோலை; பண்பின் உறைவிடம்; தன்மான உணர்வின் பேருருவம்; புரட்சியின் வற்றாத ஊற்று; தொண்டு செய்து பழுத்த பழம்; அச்சம் அறியா அரிமா; எவர்க்கும் எத்தீங்கும் விளைவிக்காத மனிதாபிமானத்தின் பேராறு.
தந்தை பெரியார், இந்திய தேசிய காங்கிரசைத் தமிழ்நாட்டில் பரப்பிய நால்வரில் ஒருவர் என்பது ஒரு நிலை. அப்பணியைத் திட்டமிட்டு மறைத்தும் குறைத்தும் வந்தவர் ஒரு சாரார். அவரைத் தேசத்துரோகியாகக் காட்ட முயல்கின்றனர். சாதியொழிப்பு, தன்மானப் பயிர், தமிழ் உணர்வு, தமிழர் என்ற நினைப்பு ஆகியவற்றை வளர்த்தவர் என்பது அடுத்த நிலை. பழைய இலக்கியங்கள், சமய நூல்கள் ஆகியவற்றைக் களையெடுத்து, பசுந்தாள் உரமாக்கியது அந்நிலையின் கூறாகும்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பணியினைத் திரித்துக் கூறி வருவோர் மற்றொரு சாரார். அவர்கள் பெரியாரை அழிவு வேலைக்காரர் என்று தூற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஏழைகளற்ற சமுதாயத்தை உருவாக்குவது அழிவு வேலையா? கொடுமைகளுக்கு ஆளாகி வரும் பெண்ணினத்திற்கு உரிமை கேட்பது மனிதாபிமானம் அல்லவா?
அரசியல் உரிமை பெற்றாலும் சாதி வேற்றுமைகள் ஒழிந்தாலும் வகுப்புரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் எல்லோருக்கும் வேலையும் மனித வாழ்வும் வந்துவிடாது என்பதை உணர்ந்த பெரியார், சமதர்மத்தின் தேவையை எடுத்துக் காட்டினார். அக்கோட்பாடு 1930இல் ஈரோட்டில் அரும்பிற்று; இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் அரும்பிற்று. 1931இல் விருதுநகரில் போதாயிற்று; மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் போதாயிற்று; சோவியத் ஒன்றியப் பயணம் அதை மலரச் செய்தது. சுயமரியாதை சமதர்மத் திட்டமாகக் காய்த்தது.
சுயமரியாதை இயக்கம், சமதர்ம இயக்கமாகவும் இயங்கிற்று. பகுத்தறிவுப் பணி, எல்லோரையும் வாழ்விக்கும் பணியாகச் செயல்பட்டது. திராவிடர் இயக்கத் தொண்டு பாட்டாளிகளின் தொண்டாக விளைந்தது.
பெரியாரைச் சமதர்ம ஞாயிறாகக் காண்பது நம் கடமை. அவர் பரப்பிய சமதர்ம ஒளியை மக்களிடம் காட்டுவது நம் பொறுப்பு. வழியிலே வந்த நெருக்கடிகள் சில. அவை திசை திருப்பிகள். நெடுந்தூரம் திசை தவறிப் போதல் ஆகாது.
பகுத்தறிவு இயக்கத்தின் விளைவு சமதர்ம இயக்கம். தன்மான வாழ்விற்கு உறுதியான கடைக்கால், சமதர்ம வாழ்க்கை முறையாகும். இத்திசையில் பெரியார் ஆற்றி வந்த அரிய தொண்டினை இந்நூலில் காணலாம். அத்தொண்டு இனித்தான் கனிய வேண்டும். எனவே பகுத்தறிவுவாதிகளாகிய நமக்கு சாதி வேற்றுமைகள் பாராத நமக்குச் சமதர்மச் சிந்தனையில் மறுமலர்ச்சி தேவை. அதில் முழு ஈடுபாடு தேவை.
தந்தை பெரியாரின் சமதர்மத் தொண்டினை மறந்து போவோமோ என்கிற அச்சம் பிறந்தது. அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் காணும் நிலை வந்துவிடுமோ என்ற அய்யப்பாடு தோன்றிற்று. வகுப்புரிமையின் தனிநாயகராக மட்டும் காட்டுவது முழு உண்மையாகாது. பெரியாரின் பெருந்தொண்டால், முழு மனிதனான எவராவது, அவரது முழு உருவையும் காட்டுவார்களென்று சமுதாயம் எதிர்பார்த்தது. அடுத்தடுத்துப் பெருக்கெடுத்து வரும் புதுப்புதுப் பொது விவகார வெள்ளத்தில் சமதர்மத் தொண்டு மூழ்கி விடுமோ என்று பலரும் அஞ்சினர்.
அந்நிலையில் பகுத்தறிவு சமதர்ம இயக்கத்தின் சார்பில், தோழர் கே. பஞ்சாட்சரம் அவர்களால் சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியிடப்படும் "அறிவுவழி'' என்னும் திங்கள் இதழில் பெரியாரும் சமதர்மமும்' என்னும் தலைப்பில் எழுதும்படி, அவர் அன்புக் கட்டளை இட்டார். காலத்தின் கட்டளையாக ஏற்றுக் கொண்டேன். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அப்படி எழுதினேன். இத்தோழருக்கு நம் நன்றி உரியதாகும். இந்நூலை வெளியிடும் புதுவாழ்வுப் பதிப்பகத்தாருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெ.து. சுந்தரவடிவேலு
7-11-1987