புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - பதிப்புரை

புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - பதிப்புரை

தலைப்பு

புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை)

எழுத்தாளர் குத்தூசி குருசாமி|அ.பென்னம்பலனார்|க.இராமகிருஷ்ணன்
பதிப்பாளர்

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்

பக்கங்கள் 2528
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை
விலை Rs.1,200/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/puthuvai-murasu-collections.html

 

பதிப்புரை

"புதுவை முரசு" வார ஏடு சுயமரியாதை இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் தன்மையில் புதுவையிலிருந்து 10.11.1930 அன்று கிழமை இதழாகத் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவந்தது. அதன் வெளியீட்டாளராக புதுவை ம.நோயல் அவர்கள் இருந்தார். தொடக்கத்தில் அதன் ஆசிரியராக புதுவை தேங்காய்த் திட்டு க.இராமகிருட்டிணன் அவர்கள் இருந்தார். அவரால் தொடர்ந்து ஆசிரியராக நீடிக்க இயலாத காரணத்தால், தோழர் எஸ்.குருசாமி அவர்கள் புதுவை முரசு இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இசைந்தார். ஆசிரியராக இசைந்ததற்கு இரண்டு காரணங்களைக் குருசாமி கூறியுள்ளார். “ஒன்று சுயமரியாதை இயக்கத்தினர் என் மீது கொண்டுள்ள அன்பு. இரண்டாவது சுயமரியாதை இயக்கத்திற்கு மற்றொரு பத்திரிகை கூடுதலாகத் தோன்றியிருப்பதால் அதை ஆதரிக்க வேண்டியது என்னுடைய கடமை" என்று 22.12. 1930 "புதுவை முரசி"ல் குருசாமி எழுதியுள்ளார்.

முதல் ஏழு இதழ்களுக்கு க. இராமகிருட்டிணன் ஆசிரியராக இருந்தார். முழக்கம் - 1 - ஓச்சு - 8. 29.12.1930 முதல் எஸ். குருசாமி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்போது குருசாமியின் துணைவி குஞ்சிதம் அம்மையாருக்கு ஆந்திராவிலுள்ள இராச மகேந்திரபுரம் என்ற ஊரில் பெண்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியர் பணி கிடைத்திருந்தது. எனவே குருசாமி அங்கிருந்தே ஆசிரியவுரை மற்றும் கட்டுரைகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். பாரதிதாசனும், புதுவை சிவப்பிரகாசமும் பிழைத்திருத்தம் செய்து கொடுத்தும், கட்டுரைகள், கவிதைகளைத் தொடர்ந்து அதில் எழுதிக் கொண்டும் இருந்தனர். ஏராளமான சுயமரியாதை இயக்கத் தோழர்களின் பேச்சுக்களும், கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை என். பி. காளியப்பன், செல்வி நீலாவதி, குஞ்சிதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார், எஸ்.இராமநாதன், பட்டுக்கோட்டை அழகர்சாமி, கி. ஆ. பெ. விசுவநாதன், சித்தர்க்காடு இராமையா, சாத்தன் குளம் அ. இராகவன், நாகர்கோவில் பி. சிதம்பரம் பிள்ளை, காரைக்குடி சொ. முருகப்பா, ஊ. அ. பூ. சௌந்தரபாண்டியன் மற்றும் பலரின் சொற்பொழிவுகளும், எழுத்துக்களும்; இங்கர்சாலின் கடவுள், மதம் போன்ற தலைப்புகளிலான சொற்பொழிவுகளின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. குருசாமியும், பாரதிதாசனும் போட்டி போட்டுக்கொண்டு சுயமரியாதை உணர்ச்சியைச் சூடேற்றும் வகையில் மிகவும் எழுச்சியான நடையில் எழுதிக் குவித்தனர். பாரதிதாசன் உரைநடையிலும் கவிதையிலும் கடவுளையும், மதங்களையும், கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் கண்டித்து அதிக அளவில் துடிதுடிப்புடன் எழுதியுள்ளார்.

“புதுவை முரசி”ல் இந்து மதத்தைத் தாக்கி எழுதிய அதே அளவிற்குக் கிறித்தவ மதத்தையும் தாக்கி எழுதினர். இதனால் ஆத்திரமடைந்த கிறித்துவப் பாதிரிகள் புதுவை முரசின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது மானநட்ட வழக்குப் போட்டனர். அந்த வழக்கு புதுவையிலும், பின்பு சென்னை உயர்நீதி மன்றத்திலும், பின்பு பிரஞ்சு தலைநகர் பாரிசிலும் நடைபெற்றது. இதனால் புதுவை முரசின் வெளியீட்டாளரான புதுவை ம.நோயல் அப்பொறுப் பிலிருந்து விலகிக்கொண்டார். குருசாமிக்கு அரசு வேலை கிடைத்ததால் 11. 5. 1931 முதல் அவரும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். ஆனாலும் கட்டுரைகளைப் புனைபெயரில் எழுதி வந்தார். 11.5.1931 முதல் 18.1.1932 வரை ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளிவந்தது. 23. 11. 1931 முதல் 21. 12. 31 வரை 4 இதழ்கள் வெளிவரவில்லை அதன்பிறகு 28.12.31 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது.

25.1.1932 முதல் எனக்குக் கிடைத்துள்ள கடைசி இதழ்2. 5.1932 வரை பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்கள் ஆசிரியராகவும், புதுவை எஸ். சிவப்பிரகாசம் அவர்கள் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளனர்.

என்னிடம் உள்ள எழுபது இதழ்களில் முதல் இதழில் முதல் ஆறுபக்கம் காணவில்லை. எவ்வளவோ முயன்றும் இதழ்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. கடைசி இதழிலும் சந்தா கட்டவும் ஏஜெண்டுகள் தேவை என்ற விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளதால் இதழ் தொடர்ந்து வெளி வந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

இதழ் தொகுப்பு என்ற முறையில் பெட்டிச் செய்திகளைக்கூட நான் விட்டு விடவில்லை. ஏனென்றால் அதிலும் இயக்கச் செய்திகள் ஏராளமாக உள்ளதால், விளம்பரங்கள் தவிர்த்து மற்ற எல்லாச் செய்திகளையும் தொகுத்துள்ளேன்.

ஆறு தொகுதிகளாகப் பிரித்து நூலாக்கியுள்ளேன். மொத்தம் 2496 பக்கங்கள் உள்ளன.

கணினியில் தட்டச்சு செய்து கொடுத்த மயிலாடுதுறை தோழர் இரா.சபாநாயகம், பிழைத்திருத்தம் செய்து உதவிய தோழர்கள் திருவாரூர். சா.ம. இராமமூர்த்தி, செஞ்சி சி.இராமச்சந்திரன், கணினியில் பிழைகளை நீக்கி நூலாக்கம் செய்து கொடுத்த மு.முனியசாமி, மேல் அட்டையை வடிவமைத்துக் கொடுத்த செல்வி வ. மலர் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ச் சமூக விழிப்புணர்வுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன்.

 

24.12.2009

தோழமையுடன்

வாலாசா வல்லவன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog