புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள்
மனித சமத்துவம் என்பது அறிவியல் கல்வியோடு இணைந்தது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக உழைப்புப் பிரிவினை நீக்கப் பட்டு எல்லோரும் உழைப்பாளிகளாக மாற வேண்டும். ஆனால் பலர் உழைக்கச் சிலர் உழைக்காமல் வாழும் நிலையே உள்ளது. இந்த வாழ்க்கை முறை பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடத்தில் நிலவி வருகிறது.
பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் முழுப் பயனையும் அடையாதிருக்கவே கடவுள், மதம் போன்ற கருத்துகள் உழைக்காத சிலரால் உருவாக்கப்பட்டன என்பதை அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உழைக்காத இந்தச் சிலரின் கூட்டமானது மக்களைப் பயப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயற்சித்து அதில் வெற்றி கண்டு வருகிறது. இவர்களுக்கு கடவுள், மதம் சார்ந்த கருத்துகளைப் பலப்படுத்திக் கொள்ள கூடுதலாகப் பேய், பிசாசு, ஆவி, பில்லிசூனியம், கைரேகை, ராசிபலன் போன்ற துணைக் கருத்துகளும் தேவைப்பட்டன.
இயற்கையின் செயல்பாட்டில் 'எதிர்வினைக் கோட்பாடு' உள்ளது போலவே மனித சமூகத்திலும் பழைய ஆதிக்கக் கருத்து களுக்கு எதிராக அறிவியல் கருத்துகள் முளைவிட்டு வளர்ந்து வந்துள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு சமூகத்தை வழி நடத்த அறிஞர்கள் பாடுபட்டு வந்துள்ளனர்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சமீப காலம் வரை நம்மோடு வாழ்ந்து மறைந்த தந்தை பெரியார், பொதுவுடைமைச் சிந்தனையாளர் சிங்காரவேலர் போன்றோர் தம் வாழ் நாள் முழுதும் மறுமலர்ச்சிக் கருத்துகளைப் பரப்புவதற்கு அதிகம் உழைத்துள்ளனர். மேலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் பலரும் அறிவியல் கருத்துகளைப் பரப்பியுள்ளனர். இவர்களில் சிலரைத் தவிர பலரை நாம் அறியாமல் உள்ளோம். டாக்டர் கோவூர் என்ற பகுத்தறிவு செயற்பாட்டாளரும் இன்றையத் தமிழகம் மறந்த ஒருவராக உள்ளார்.
டாக்டர் கோவூர் அவர்கள் தந்தை பெரியார், சிந்தனையாளர் சிங்காரவேலர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தமது வாழ்நாள் பணியாக மூடநம்பிக்கை கருத்துகளை எதிர்த்துப் போராடியவர் என்பதும் இன்றைய இளந்தலைமுறை வாசகர்கள் அறியவில்லை என்பது கவலைக்குரியது.
மதக் கருத்துகளின் ஆதிக்கமும் பக்திப் போதையும், மூடநம்பிக்கை முகமூடிகளும் பெருகிவரும் இன்றையத் தமிழகத்தில் மக்களை வழிநடத்துவதாகச் சொல்லிக் கொள்கின்ற அரசியல் அமைப்புகள், ஊடகங்கள் மக்கள் தலைவர்கள் பலரும் இந்தப் பேராபத்தை ஏன் உணரவில்லை என்றே வினாவிற்கு விடை தேட வேண்டியுள்ளது.
ஆளும் வர்க்கமான உடைமை வர்க்கத்திற்கு எதிரான செயல்பாடு என்பது அறிவியலை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்ட சமுதாயத்தை கட்டமைப்பதாகும். இந்தப் பணியில் தமது வாழ்நாளைச் செலவிட்டதோடல்லாமல் சாய்பாபா , பன்றிமலைச் சாமிகள், பாலயோகிகள் போன்றோரின் முகமூடி களைக் கழற்றியும், ராசிபலன் கூறுவோர், கிளி சோதிடக்காரர்கள், பேய், பிசாசு விரட்டும் பொய்யர்கள். போன்றோரை நேரடிச் சோதனை மூலம் அம்பலப்படுத்தியும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய அறிஞர் டாக்டர் கோவூர். இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தமது கருத்துக்கு ஆதரவானவர்களோடு இணைந்து செயல்பட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். எனவே அவரது கருத்துகள் அடங்கிய இரண்டு நூல்களை எமது அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
டாக்டர் கோவூர் அவர்களின் அனைத்துக் கட்டுரைகளும் (திரும்பக் கூறல் தவிர) இத்தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களின் புரிதலுக்காக நூல்களின் தலைப்பு உள்ளடக்கத்திற்கேற்ப வைக்கப்பட்டுள்ளது.
இந்நூலை மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ள த. அமலா அவர்களும் இதுபோன்ற நல்ல நூல்களையே தமிழக வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது பணி மேலும் தொடர வேண்டுமென்று விரும்புகிறோம். மேலும் இந்நூல் பணியில் பெரும் பங்காற்றிய முனைவர் சி. இளங்கோ மற்றும் நண்பர்களுக்கும் எமது நன்றிகள் உரியவையாகும்.
- பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: