பெரியாரும் பூனா ஒப்பந்தமும் - பதிப்புரை

பெரியாரும் பூனா ஒப்பந்தமும் - பதிப்புரை

தலைப்பு

பெரியாரும் பூனா ஒப்பந்தமும்

எழுத்தாளர் பெரியார்
பதிப்பாளர் காட்டாறு
பக்கங்கள் 152
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.125/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyarum-punaa-oppanthamum.html

 

பதிப்புரை

பூனா ஒப்பந்தக் காலம் என்பது, இந்திய வரலாற்றிலும், ஜாதி ஒழிப்பு வரலாற்றிலும் மிக முக்கியமானகாலகட்டம். தலித் மக்களுக்குரிய இரட்டை வாக்குரிமை - தனித் தொகுதி முறை என்ற அடிப்படை உரிமைக்காக நடந்த போர்க்களத்தில் தோழர் அம்பேத்கர், தமிழ்நாட்டின் இரட்டமலை சீனிவாசன், போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டனர் என்பதை நாம் அறிவோம்.

அந்தப் போர்க்களத்தில் தமிழ்நாட்டில் பெரியாரும், அவரது சுயமரியதை இயக்கத் தோழர்களும், பெரியாரின் அரசியல் திட்டங்களைச் செயல்படுத்திய நீதிக்கட்சித் தோழர் களும் தலித் மக்களின் இரட்டை வாக்குரிமைக்காக அம்பேத்கருடன் தோளோடு தோள் நின்றுள்ளனர். குறிப்பாக, சர்.ஏ.டி. பன்னீர் செல்வம், பொப்பிலி அரசர், சர் ஏ. இராமசாமி ஆகியோர், இலண்டன் வட்டமேஜைமாநாட்டில் கலந்துகொண்டு அம்பேத்கரின் தனித்தொகுதிக் கோரிக்கைக்குப் பெரும் துணையாக நின்றனர்.

வட்டமேஜை மாநாடுகளில் அம்பேத்கரின் முழக்கம் தொடங்கிய நாள் முதல் பூனா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட காலத்திலும், அவ்வொப்பந்தம் நிறைவேறும் காலத்திலும், நிறைவேறிய பிறகு சுமார் 10 ஆண்டுகள் வரை பெரியார் இரட்டை வாக்குரிமைக்காகத் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். ஆனால், பூனா ஒப்பந்தக் காலத்தில், அம்பேத்கருக்குப் பெரியார் ஒரு தந்தி கொடுத்தார் என்ற வரலாற்றுச் செய்தியைத் தவிர வேறு எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கவே இந்நூல். இதுவும் முழுமையானதல்ல. அடுத்தடுத்த பாகங்களும் வரலாம்.

கி.பி.1928 இல் இந்தியாவுக்கு வருகை தந்த சைமன்குழுவின் அறிக்கை தான் இரட்டை வாக்குரிமை என்ற உரிமை முழக்கம் எழுச்சி பெறுவதற்கு அடிப்படையாக இருந்தது. இந்தியா முழுவதும் அக்குழுவுக்கு எதிர்ப்பு இருந்த நேரத்தில், தாழ்த்தப் பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக அந்தக் குழுவை நான் வரவேற்றேன் என்கிறார் பெரியார். இதே காலத்தில் வடநாட்டில் சைமன் குழுவிடம் தனித்தொகுதி உரிமைக்குக் குரல் எழுப்பியவர் அம்பேத்கர்.

வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லும் இந்தியாவின் மக்கள் பிரதிநிதிகள் பட்டியலில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பார்ப்பனர்கள் இடம்பெற்றனர். அந்தப் பட்டியல் வெளியான நாளிலிருந்து பெரியார் தனது எதிர்வினைகளைத் தொடங்கி விட்டார்.

வட்டமேஜை மாநாட்டுக்கு அம்பேத்கர், தலித் மக்களின் பிரதிநிதியாகச் செல்லப் போகிறார் என்ற செய்தி வெளியான உடனேயே, மகாத்மாவான காந்தி, "தலித் மக்களின் பிரநிநிதியாக வருபவர்கள், தலித் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள் " என்று அறிக்கை வெளியிட்டார்.

“அம்பேத்கர் தலித் மக்களின் பிரதிநிதி அல்ல, காந்திதான் எங்கள் பிரதிநிதி" என்று சில தலித் அமைப்புகளின் தலைவர் களே இலண்டனுக்குத் தந்தி கொடுத்தனர். காந்தி அவர்களை இயக்கினார்.

சென்னையில் ஆதிதிராவிடர்கள் நடத்திய இரட்டை வாக்குரிமை ஆதரவுக் கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தோழர் பொன்னம்பலம் உரையாற்றிய போது, சில பார்ப்பன மாணவர்கள், ''காந்திக்கு ஜே!, அம்பேத்கருக்கு ஷேம்!" என்று கூச்சல் எழுப்பிக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்திய நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் அம்பேத்கரின் கோரிக்கை மிகப்பெரும் தவறு என கட்டுரைகளையும், தலையங் கங்களையும் வெளியிட்டன. அம்பேத்கரை "வகுப்புவாதி" என்றும், "தேசத்துரோகி" என்றும் எழுதின.

வட்டமேஜை மாநாடு முடிந்து பம்பாய் திரும்பும் போது அம்பேத்கரைக் கைது செய்வதற்காக, ஒரு அடி தடி வழக்குப் பதியப்பட்டு, அம்பேத்கருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற மற்றொரு தலித் தலைவரான எம்.சி. இராஜா இலண்டனில் தனித்தொகுதியை ஆதரித்தார். ஆனால், இந்தியா வந்த பிறகு, காங்கிஸ் மற்றும் இந்து மகாசபையின் தூண்டுதல்களால், இரட்டை வாக்குரிமையை எதிர்த்து நின்றார். பம்பாயிலேயே, அம்பேத்கருக்கு எதிராகப் போராட்டி மாநாடுகளை நடத்தினார்.

இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காங்கிரசும், இந்து மகாசபையும், எடுத்த - மேலே குறிப்பிட்டது போன்ற ஒவ்வொரு துரோகச் செயல்களுக்கும் பெரியார் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றியுள்ளார். இரட்டைவாக்குரிமைக்கு எதிர்நிலை எடுத்த எம்.சி. இராஜா, சகஜாநந்தம் போன்ற தலைவர்களின் கருத்துக் களுக்கும் எதிர்வினையாற்றியுள்ளார்.

13. 12. 1931 ஆம் நாள் ஐரோப்பியப் பயணத்தைத் தொடங்குகிறார் பெரியார். அதற்கு முதல் வாரம் வரை காந்திக்கு எதிராகவும், இந்து மகாசபைக்கு எதிராகவும், அம்பேத்கருக்கும், இரட்டை வாக்குரிமைக்கும் ஆதரவாகவும் பெரியார் நடத்திய எதிர்வினைகள் குடி அரசில் பதிவாகியுள்ளன.

ஐரோப்பியப் பயணத்தில் இருக்கும் போது குடி அரசுக்குத் தொடர்ந்து கட்டுரைகளை அனுப்பியுள்ளார். அவற்றிலும் இரட்டைவாக்குரிமைக்கான போர்க்குரல் ஒலிக்கிறது. பூனா ஒப்பந்தத்திற்காக, காந்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பிறகு,

"உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதா யிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர் களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்று தான் உறுதி யாக நாம் கூறுவோம்." (குடி அரசு - 18.09.1932)

என்று தலையங்கம் தீட்டியுள்ளார். இந்த வரிகள் தான் அம்பேத்கருக்கு அனுப்பிய தந்தியாகவும் வந்தன.

நாங்கள் அறிந்தவரை, இரட்டைவாக்குரிமைக்காகவும், அந்தப் போராட்ட நாயகர் அம்பேத்கருக்காகவும் அந்தக் கால கட்டத்தில், இந்திய அளவில் வேறு எந்தத் தலைவரும், வேறு எந்த இயக்கமும் இவ்வளவு தீவிரமான, தொடர்ச்சியான ஆதரவை வழங்கவில்லை.

அந்த வரலாற்றின் சில பகுதிகளை பெரியாரின் எழுத்துக்கள் வழியாகவே அறிவதற்காகவே இந்தச் சிறுமுயற்சி. இந்த முயற்சியை திராவிடர் இயக்க, தலித் இயக்கத் தோழர்கள் தொடர வேண்டும். இரட்டைவாக்குரிமை, பூனா ஒப்பந்த வரலாற்றை மற்ற ஏடுகளிலிருந்தும், ஆவணக் காப்பகங்களில் இருந்தும் தேடிப் பிடித்து பதிவு செய்ய வேண்டும். பார்ப்பனர் களின் துரோகங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

- காட்டாறு வெளியீடு

Back to blog