Skip to content

பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

https://periyarbooks.com/products/periyarum-piranaattu-naathiga-arignargalum 

பதிப்புரை

அன்பு நண்பர் ப. பூவராகன் (ப. செங்குட்டுவன் அவர்கள் இளமைக் காலந்தொட்டே மிகச் சிறந்த பகுத்தறிவாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் (B.SC.,) படிக்கும் போதே திராவிடர் மாணவர் கழகச் செயலளாராக இருந்தவர். அப்போது மு.க. சுப்பிரமணியன் அவர்கள் எம்.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் திராவிடர் மாணவர் கழகத் தலைவராக இருந்தவர். பெரியாரின் கொள்கைப்படி சாதிமறுப்புத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற இவர்கள் அடிக்கடி பேசுவார்கள். ஒருநாள் மு.க.சு "அப்படியானால் எங்கள் பெரியம்மா மகள் ஒருவர் இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று கேட்டுள்ளார். இரகுமாயி என்ற அந்தப் பெண்ணை பார்க்காமலேயே கொள்கைக்காகச் சரி என்று இவர் சொல்லிவிட்டார்.

பெரியார் தலைமையில் 28.8.57 இல் திருமணம் நடை பெற எல்லா ஏற்பாடும் நடந்து விட்டது. பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் காரணமாக பெண்வீட்டார் ஆந்திராவி லிருந்து வரவில்லை. திருமணத்திற்கு எல்லோரும் வந்து விட்டார்கள் பெரியாரும் வந்துவிட்டார்கள். வேறு வழியின்றித் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

பெரியார் தலைமையிலேயே வேறொரு நாளில் - 11.9.1957 இல் இரகுமாயியைச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். பூவராகன், இன்று வரையில் பெரியார் கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருப்பவர் இவர்.பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை அறிவியல் - பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் பார்வையுடன் விளக்க வேண்டும் என்பதற்காக ஏராள மான அறிவியல் நூல்களை எழுதி உள்ளார். மேலை நாட்டு நாத்திக அறிஞர்களான இங்கர்சால், பெர்ட்ரண்ட் ரசல், டார்வின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளார்.

அருமை நண்பர் செங்குட்டுவன் அவர்கள் தந்தை பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் என்ற தலைப்பில் மிக அருமையான நூலை எழுதிக் கொடுத்துள்ளார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களோடு, இங்கர்சால், பெர்ட்ரண்ட் ரசல், டாக்டர் ஆப்ரகாம் கோவூர் ஆகியோரின் பகுத்தறிவுக் கருத்துகள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை இந்நூலில் கூறியுள்ளார்கள். மிகச் சிறந்த பகுத்தறிவாளர் ப. செங்குட்டுவன் (ப. பூவராகன்) அவர்களின் இந்த நூலை வெளியிடுவதில் தமிழ்க் குடி அரசு பதிப்பகம் பெருமைக் கொள்கிறது. மெய்ப்புத் திருத்தம் செய்து கொடுத்த தமிழேந்தி அவர்களுக்கும் நன்றி. தமிழ் பெருமக்கள் இந்நூலை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

 

24.12.2009                                                                                                                                         வாலாசா வல்லவன்

Back to blog