பெரியார் காவியம் - பதிப்புரை

பெரியார் காவியம் - பதிப்புரை

தலைப்பு

பெரியார் காவியம்

எழுத்தாளர் இரா.மணியன்
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 464
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.220/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html

பதிப்புரை

பேராசிரியர் முனைவர் மணியன் அவர்கள் நாகை மாவட்டம், தரங்கை மாவட்டம் நத்தம் என்ற சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் 1-6-1932இல் 'இராமையா - சரசுவதி' தம்பதியர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருக்கு அண்ணனும் தம்பியும், இரு தங்கையரும் உண்டு. அவருடைய துணைவியாரின் பெயர் கமலாம்பாள்; முத்தும், மாலதியும் புதல்வியர், மதிவாணன் புதல்வர்; இளவரசி மருமகள்; மகனும் மருமகளும் வருமான வரித்துறையில் அதிகாரிகள்; இப்பொழுது ஆமதாபாத்தில் பணியாற்று கின்றனர். அங்குத் தம் பேரன் கவினுடன் பேராசிரியர் மணியன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இளவரசியின் தந்தையார், கவிஞர் கருணானந்தம் அவர்களின் மருமகன் எஸ். இராசரத்தினம் (இ.ஆ.ப) அவர்களாவார்.

பேராசிரியர் மணியன் மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் பயின்றபின் தருமை ஆதினக் கல்லூரியில் புலவர் பட்டமும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல் பட்டமும், சைதை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. பட்டமும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டமும், தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்றவர். இவ்வாறு பல்வேறு பட்டங்கள் பெற்ற மணியன் அவர்கள் பள்ளிகள் சிலவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றியபின், மணலி தமிழ்க்கல்லூரி, சென்னை சர் தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றி யுள்ளார். ஓய்வு பெற்றபிறகும், தஞ்சை நாவலர் நாட்டார் கல்லூரியில் மதிப்பியல் பேராசிரியராக மூன்றாண்டுக் காலம் பணியாற்றினார்.

1949 இல் இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர்களான கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோம சுந்தரம் ஆகியோருடன் இணைந்து திராவிட மாணவ முன்னேற்றக் கழகத்திற் செயற்பட்டார். பள்ளியில் படிக்கும் போதே பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டுச் சுயமரியாதைக்காரரான மணியன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றுத் திராவிட இயக்கத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். இவருடைய ஊர் நத்தத்தில் தி.மு.கழகக் கிளையை நிறுவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மயிலாடுதுறையில், கிட்டப்பா, கோ.சி.மணி, கவிஞர். கருணானந்தம் ஆகியோருடன் இணைந்து செயலாற்றித் தி.மு. கழகக் கிளைகள் தோன்றக் காரணமாக இருந்துள்ளார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே, பெரியார், அண்ணா ஆகியோரிடம் உரையாடி மகிழ்ந்துள்ளார். இவருக்குக் கல்லூரித் தோழர் திரு. கி.வீரமணி; அவருடைய துணையுடன், பலமுறை பெரியாரிடம் பேசி மகிழ்ந்துள்ளார்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பேராசிரியர், பெரியார் காவியம் பாடியதில் வியப்பொன்றுமில்லை. 1977இல் அண்ணாவைப் பாராட்டும் அண்ணா கோவை" என்ற நூலை 425 கட்டளைக் கலித்துறைப் பாக்களில் படைத்தவர் முனைவர் மணியன் அவர்கள். அண்ணாவின் மேடைத் தமிழ் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர், அந்த ஆய்வை நூலாகவும் 1998 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

1978 இல், வ.உ.சி.யின் வரலாறு, கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிட்டவர், 1995 இல் 'புறநானூறு ஓர் அழகோவியம்', 'பாட்டுத்தோட்டம்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். 2004 இல் "பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்" என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். 2006 இல் "கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்" என்ற ஒரு ஆய்வு நூலையும் வெளியிட்டார்.

இவர் சர் தியாகராயர் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது 1977இல், அண்ணா கோவை என்னும் நூல், பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் முனைவர் மணியன் அவர்களுக்குச் "செந்தமிழ்க் கவிஞர்'' என்ற விருதை வழங்கினர்.

1985 முதல் 1990 வரை, திருக்குறள் நெறி பரப்பு மையத்தின் சார்பில், வடசென்னைப் பொதுமக்களுக்குக் குறள் வகுப்புகளை அய்ந்தாண்டுக் காலம் நடத்திய பின் நடந்த விழாவில், திருக்குறள் முனுசாமி அவர்கள் பேராசிரியர், மணியன் அவர்கட்குத் "தமிழ்மாமணி" என்ற விருதை வழங்கினார்.

இவர் எழுதிய "பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்" என்ற நூலின் வெளியீட்டு விழா, முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. அப்பொழுது புரட்சிப் பாதைப் பதிப்பகத்தார் "முதுபெரும் புலவர்" என்ற பட்டத்தை வழங்கினர்.

2008 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் "மகாகவி பாரதியார் விருது" 2009 ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் மாண்புமிகு முதல்வர், கலைஞர் அவர்களால் பேராசிரியர் மணியன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது.

இத்தகைய பல்வேறு பெருமைகளைக் கண்ட முனைவர் மணியன் அவர்கள் எழுதிய "பெரியார் காவியம்” என்ற நூலை எமது சீதை பதிப்பகத்தில் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

இந்நூலுக்கு அணிந்துரைகள் நல்கிய முத்தமிழ் அறிஞர் முதல்வர், டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், பேராசிரியர். க. அன்பழகனார் அவர்களுக்கும், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்களுக்கும், பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்களுக்கும், நூலாசிரியர் சார்பிலும், சீதை பதிப்பகத்தின் சார்பிலும் நன்றிகலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

பெரியார் காவியம் - அணிந்துரை -1

பெரியார் காவியம் - அணிந்துரை -2

பெரியார் காவியம் - அணிந்துரை -3

பெரியார் காவியம் - அணிந்துரை -4

பெரியார் காவியம் - பொருளடக்கம்

Back to blog