பெரியார் காவியம் - அணிந்துரை -3

பெரியார் காவியம் - அணிந்துரை -3

தலைப்பு

பெரியார் காவியம்

எழுத்தாளர் இரா.மணியன்
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 464
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.220/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html

அணிந்துரை - 3

முதுபெரும் புலவர் முனைவர் இரா. மணியன் அவர்கள் பெரியார் காவியம் என்ற ஆயிரம் பாக்களைக் கொண்ட அரிய நூலைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.

புரட்சிகரமான தத்துவங்களைத் தந்த தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பல வகைகளிலும் மானுடத்தைச் சென்று அடைவது அவசியமாகும். அதன் மூலம் மனிதர்களை அழுக்குப் படுத்தும் இருள் அகன்று ஒளிமயமான ஒரு வாழ்வை உருவாக்க முடியும்.

பெரியார் வரலாறு என்பது ஏதோ "ஈரோடு ஈ.வெ.ராம சாமி" என்ற ஒரு தனி மனிதரைப் பற்றியதன்று.

அது விரிந்து பரந்து அனுபவத்தால் சம்பாதிக்கப்பட்ட தகவல்களின் மேல் சிந்தனைச் சம்மட்டிகளின் அடிகள் கொடுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட வாழ்வியல் சிற்பமாகும்.

புலவர் மணியன் போன்றவர்கள் தந்தை பெரியார் பற்றிப் படைக்கும் அய்யாவின் சிந்தனைகள் உலகை எட்டுவதற்கு இத்தகு படைப்புகள் பயன்படக்கூடும். அந்த வகையில் தமக்குள்ள அளப்பரும் புலமையாற்றலை அவர் சரியான பாதையில் எடுத்துச் சென்று இக் காவியத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

ஈரோட்டுக் காண்டம், பேராயக் காண்டம், சுயமரியாதைக் காண்டம், திராவிடர் காண்டம், காமராசர் காண்டம், அண்ணா காண்டம், கலைஞர் காண்டம் என ஏழு வகையில் பிரித்து இக் காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை நிரல்படுத்திப் படிப்போர் நெஞ்சில் நிலைப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளார் இக் கவிஞர்.

ஒரு புரட்சியாளரின் காவியம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் திட்டமிட்ட வகையில் தீட்டியுள்ளார்.

காவியங்கள் எல்லாம் இலக்கணம் அறிந்தோர் படிக்க வேண்டியது என்ற எண்ணத்தை மாற்றி, எளிய சொற்களில் இனிமைத் துண்டுகளாகச் செதுக்கிச் செதுக்கிக் கொடுத்து, சாதாரணமாக எழுத - படிக்கத் தெரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டு மகிழ்வடையச் செய்துள்ளார்.

நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து, காவியத் தலைவரின் வாழ்த்து என்று வகுத்த முதல் பாட்டிலேயே தமது காவியத்தில் ம (ன) ணத்தை வீசியிருக்கிறார்!

உலகத்தில் புகழ்பெற்று வளரு கின்ற

உயர்நாடு தமிழ்மக்கள் வாழும் நாடே

உலகமக்கள் பேசுகிற மொழிகளுள்ளே

உயர்ந்தமொழி தமிழ்மொழியே அய்யம் இல்லை!

உலகுபோற்றும் சான்றோருள் உயர்ந்து நிற்கும்

ஒருவரையே உரைக்குமாறு கேட்டுக் கொண்டால்,

உலகிலுள்ளோர் யாவருமே “பெரியார்” என்றே

உரைத்திடுவர் என்பதிலே அய்யம் உண்டோ?

இதன் மூலம் பெரியார் உலகப் பெரியார் என்பதை முதல் பாடலிலேயே தெளிவுப்படுத்தி விட்டார்.

''மண்டைச் சுரப்பை உலகு தொழும்!'' என்று புரட்சிக் கவிஞர் கூறியுள்ளதையும் இந்த இடத்தில் ஒப்பு நோக்குவது மிகப் பொருத்தமாகும்.

"இந்த இயக்கம் இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம். ஓர் இயந்திரத்தைச் சுழற்றும் போது முதலில் சுற்றும் சிறு வேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்தி, உலக மக்களையே ஒரு குடும்பச் சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின்போதுதான் அதன் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளியாகும்" என்று 1929 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறினார் - தொலைநோக்கோடு!

தந்தை பெரியாரின் சிந்தனைகளில் ஆழமாக மூழ்கியவர் என்பதால்தான் உலகப் பெரியார் என்று காவியத்தில் முதல் பாடலிலேயே நிறுவிட முடிகின்றது.

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார் கவிஞர்

தீண்டாமை, பெண்ணடிமை, தாழ்ந்த சாதி

தீமைதரும் மூடநெறி இவைகள் யாவும்

கூண்டோடு ஒழியவேண்டும் எனும்க ருத்தைக்

குடிஅரசில் பெரியாரே எழுதி வந்தார்.

வேண்டி நின்ற கொள்கைகளைப் பொதுக்கூட் டத்தில்

விரிவாக விளக்கமாகப் பெரியா ரைப்போல்

நீண்டநேரம் பேசிநெஞ்சில் பதிய வைத்து

நிலையான புகழ் பெற்றோர் யாரே உள்ளார்?

குடி அரசைத் தந்தை பெரியார் தொடங்கி சாதி, மதம், கடவுள் முதலான மூட நம்பிக்கைகளின் ஆணிவேர் வரை சென்று எதிர்த்துத் தாக்கியதை யார்தான் மறுக்க முடியும்?

இந்தத் துணைக் கண்டத்திலேயே இன்றுவரை, இராமா யணம், இராமன் என்பவற்றை முன்னிறுத்தி யாராலும் வெற்றி காண முடியாத பலமான நிலை தமிழ் மண்ணில் நிற்பதற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கப் பிரசாரமும், அதன் கருத்துப் பீரங்கிகளாக 'குடிஅரசு'ம், விடுதலையும், வெளியீடுகளும் திகழ்ந்ததும்தாமே! இவைகளைத் தான் பெரும் புலவர் மணியன் ஆழமாகப் பதிய வைத்துள்ளார்.

இன்றைக்குக் கூடத் தமிழ்த் தேசியமா, திராவிடத் தேசியமா என்ற சர்ச்சையை வீணாக எழுப்புவோர் உண்டு, தமிழ்த் தேசியம் என்றால் பார்ப்பனர்கள் வசதியாக உள்ளே நுழைய வாயில் கதவைத் திறந்து வைப்பதாகும். திராவிட தேசியம் என்கிற போது கிறுக்குப் பிடித்த பார்ப்பான்கூட அருகே வர முடியாது. நாம் வைக்கும் பெயரில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதி இருக்கக்கூடாது என்கிறார் தந்தை பெரியார்.

இது காவியத்தில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பனரைத் திராவிடரல் லாதார் என்று

பகுத்துரைத்தல் பொருத்தமாகும் என்று சொல்லித்

தீர்ப்புரையாய்ப் பார்ப்பனரல் லாதார் கட்சி

திராவிடரின் கட்சி என்றே பெரியார் சொன்னார்.

வேர்ப்பலாவின் சுளை போல இனித்த தந்த

வெண்தாடி வேந்தருரைத் திராவிடர்க்கு

ஆர்வமோடு யாவருமே அதனை ஏற்றார்,

அண்ணாவும் வழிமொழிந்தார் பெரியார் சொல்லை.

இப்படி ஆழமாகப் பாடியிருக்கும் புலவர்களைக் காணல் அரிது. ஆயிரமாவது பாடலைக் கண்ணீர் சமுத்திரமாய் முடித்துள்ளார்.

சிகிச்சைக்காக வேலூர்க்குப் பெரியார் சென்றார்

சிலநாட்கள் தானங்கே இருந்தார் அந்தோ!

அகிலத்தை விட்டகன்றார்; அய்யோ! அய்யோ!

அனைத்துலக மாந்தரெல்லாம் அழுதார் அன்று.

பகலவனாம் பகுத்தறிவாய் ஒளியை ஊட்டிப்

பார்போற்றித் தொண்டு செய்த பெரியா ரெங்கே

 தகவறியாக் கொடுமையுடை மரணத் திற்குத்

தரணிவாழ்வார் அனைவருமே இரையா வாரோ!

முதல் பாடலில் உலகப் பெரியார் என்னும் கருத்தை வெளிப்படுத்தி, இறுதிப் பாடலிலும் அனைத்துலக மாந்த ரெல்லாம் அழுதார் என முடித்துள்ளார்.

தந்தை பெரியார் இயக்கத்திலும், கொள்கையிலும் ஆழ்ந்த பற்றும், சிந்தனை வளமும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுத முடியும்.

பேராசிரியர் முனைவர் இரா. மணியன் அவர்களை அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே சக மாணவர் - திராவிடர் இயக்கப் பற்றாளர் - தோழர் என்ற முறையிலே நான் அறிந்தவன்.

கொள்கையில் மிகவும் ஊறியவர். அவரது அருமையான இலக்கியப் படைப்பு 'பெரியார் காவியம்'.

பெரியார் காவியத்தை அவர் திராவிடர் இயக்க இலக்கிய ஓவியமாகத் தீட்டியதற்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. நமது நன்றியும், பாராட்டும் பெரும் புலவர்க்கு உரித்தாகுக!

உலகத் தமிழர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!

 

கி.வீரமணி

Back to blog