பெரியார் காவியம் - அணிந்துரை -2
தலைப்பு |
பெரியார் காவியம் |
---|---|
எழுத்தாளர் | இரா.மணியன் |
பதிப்பாளர் | சீதை பதிப்பகம் |
பக்கங்கள் | 464 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2009 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.220/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html
அணிந்துரை - 2
என் அன்புக்குரிய நண்பரும், முதுபெரும் புலவருமான முனைவர் இரா. மணியன் அவர்கள், பகுத்தறிவுத் தந்தை பெரியாரைப் போற்றி, அவரது வாழ்க்கை வரலாற்றை விவரித்திடும் முறையில் பெரியார் காவியம்" என்னுமிந்த நூலை இயற்றியுள்ளதனைக் கண்டு மகிழ்ந்தேன். தென்னகத்தின் ஒளிப் பிழம்பாய், பகுத்தறிவு இயக்கத்தின் செழுஞ்சுடராய்த் தோன்றிய பெரியார், நம் நாட்டு மக்களான திராவிட இனத்தவரை ஆரியம் அடர்த்திடும் அறியாமை இருளில் ஆழ்த்தி, அடிமைப் படுகுழியில் வீழ்த்தி, கண்மூடித்தனத்திற்கு ஆளாக்கியதன் விளைவாக அவர்கள் கரையேறும் வழியறியாமலும், அந்தக் கருத்தின்றியும் செயலிழந்து சீரழிந்து கொண்டிருந்த நிலையில், அதைத் தன் பட்டறிவால் கண்டுணர்ந்து பகுத்தறிவால் ஆராய்ந்து தெளிந்து, அம்மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டியும், தன்மானம் பெறச்செய்தும், பகுத்தறிவு ஒளி கண்டு தலைநிமிர்ந்து வாழச் செய்தும், உரிமை வாழ்வு பெறும் வகையில் வருணாசிரமக் குழியிலிருந்து கரையேறி, இனவுணர்வு கொண்ட மனிதராக நடைபோடச் செய்வதே, தமது மனிதத் தன்மை காரணமாகத் தாம் ஆற்ற வேண்டிய ஒரே கடமை என்ற எண்ணத்தொடு செயற்பட்டவர் தந்தை பெரியார்.
திராவிடர் தம் வாழ்வில் நண்பகலும், காரிருளாய் இருண்டிருந்ததொரு காலச் சூழலில், தந்தை பெரியார் பொதுத் தொண்டில் ஈடுபட்டார். தன்மான இயக்கத்தைத் தோற்று வித்துப் பகுத்தறிவைப் பாமர மக்களிடம் பரப்பினார். விடிவெள்ளி முளைத்தது போன்று, அறிவு ஒளிக்கீற்று நாடெங்கும் பரவிற்று. பொழுது புலர்ந்தது எனக் கண்விழித்த மக்கள் பலர் பெரியாரைப் பின்பற்றி நடைபோடலாயினர்.
அறிஞர் அண்ணா கூறியது போன்று, தந்தை பெரியார் தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம். சமுதாயத்தில் பெரியதொரு மாற்றம் காண, தமது புதிய பார்வையால், சிந்தனைத் தெளிவால், துணிச்சலால் கால்கோள் நடத்தியவர் பெரியார். மழைவரக் கூடிய பருவம் பாராதும், பலனைக் கருதிப்பாராதும், எதிரில் கண்ட நிலத்தில் கலப்பையைத் தூக்கிக் கொண்டு உழவு செய்யத் தலைப்பட்ட தலைவர் பெரியார். பெரியார் பிடித்த முன்னேர்தான், அறிஞர் அண்ணா அவர்கட்கு, அவ்வழியில் பொதுத்தொண்டு ஆற்றுவதற்கான தன்னம்பிக்கையை அளித்தது என்று அவரே கூறியுள்ளார்.
பெரியார் இல்லையேல், அறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் மிக்க தொண்டு நமக்கு வாய்த்திருக்குமோ என்பது அய்யமே. அறிஞர் அண்ணாவின் அறிவுப் பணி வாய்த்திரா விடில், தந்தை பெரியாரின் குறிக்கோளும், தொண்டும், தியாகமும் இந்த அளவு பெரியதொரு வெற்றியைப் பெற்றிருக்குமா என்பதும் வினாவே.
வயதில் அறிவில் முதியார்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்;
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
என்று தந்தை பெரியாரைப் போற்றிப் பாடினார் புரட்சிக் கவிஞர்.
பெரியாரின் பேராற்றலைக் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூறுமிடத்து
பாராட்டிப் போற்றிவந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்!
ஈ.வே.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்
என்றார்.
சாதி, மத வேற்றுமைகளை எல்லாம் பொருளற்றதாக்கி, மனிதநேய அடிப்படையில் பகுத்தறிவை வளர்த்து, புதியதோர் உலகம் படைத்திடும் ஆவலால், புரட்சிக்கனல் மூட்டுவதற்கே, வீழ்ச்சியுற்ற தமிழினத்தின் வரலாற்று அடிப்படையில், தென்னாட்டவர் - திராவிடர் என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்தி, உரிமை நாட்ட முற்பட்ட தமிழர் இயக்கமான திராவிடர் கழகத்தைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படைப் பணியாற்றிய "தந்தை பெரியாரே, நான் கண்டதும், கொண்டதுமான ஒரே தலைவர்” என்றார் அறிஞர் அண்ணா.
ஆம். பெரியாரும் அண்ணாவும், அவர்தம் பெருந் தொண்டுக்குத் துணைநின்ற தளபதிகளுமே, திராவிடம் என்னும் ஆயிரம்கால் மண்டபத்தை நிறுவியவர்கள். மயிலாடுதுறைப் பள்ளியில் படித்த நாள்களிலேயே இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, தாம் படித்த பள்ளி முன்னாலேயே இந்தி மொழி நூலையெல்லாம் மூள் நெருப்பில் போட்டு எரித்தவர்தாம் நம் நூலாசிரியர் கவிஞர் மணியன்.
பின்னர் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தும் சென்னைத் தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய காலத்தும், அவர் திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றி அதனை மாணவர்களிடம் பரப்புகின்ற கடமையை ஆற்றி வந்தவர்.
தந்தை பெரியாரையும், அண்ணாவையும், திராவிட இனத் தோன்றல்களாகவும், தமிழ்மொழிப் பற்று வளர்க்கும் வழிகாட்டிகளாகவும் கொண்டு போற்றிடும் உணர்வுடன் செயற்பட்டவர்.
அவர் இந்த இயக்கத்திற்குத் தாம் ஆற்றவேண்டிய நிலை பேறுடைய தொண்டு இஃது என்று தீர்மானித்தவாறு, பல ஆண்டுகள் முன்னரே 'அண்ணா கோவை' என்னும் கவிதை ஏட்டை இயற்றினார். இலக்கண மரபு கெடாது, பாப்புனையும் தமிழாற்றல் மிக்கவர் கவிஞர் மணியன் என்பதனை அந்நூல் உணர்த்தும். |
அவ்வழியில் தற்போது, “பெரியார் காவியம்' என்னும் இந்தச் சொல்வளம் பழுத்துப் பொருட்சுவை பொங்கும் ஏட்டினைப் படைத்துள்ளார் மணியன். இந்நூல் ஏழு காண்டங்களும், ஏராளமான படலங்களும் கொண்டு, ஆயிரம் பாக்களைக் கொண்டதோர் அருமையான காவியமாகத் திகழ்கின்றது.
பெரியாரின் வாழ்க்கை வரலாறு விரிவானது. அண்ணாவின் அருமையும் கலைஞரின் சிறப்பும், இயக்கத்தின் வளர்ச்சியும் இடையிடையே ஏற்பட்ட திருப்பங்களும், தலைவர் களிடையே தோன்றிய மாறுபாடுகளையும், பிரிவுகளையும் நிகழ்வுகளையும் தவறாது இயம்புவது என்பதும், அதனைக் கவிதையாக வடிப்பது என்பதும் யாருக்கும் எளிதன்று.
அப்படிப்பட்ட விவரங்களை எழுத்தில் வடிக்கும்போது, இயற்றுபவர் அறியாமலேகூட, அவர் எழுத்து ஒரு பக்கச் சார்பாகவோ, உண்மைக்கு மாறாகவோ, எவர் மீதாவது பழி சுமத்துவதாகவோ அமைந்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட குறையேதும் ஏற்படாமல் ஓர் இயக்க வரலாற்றையே வடிப்பது, அதுவும் தகுதிமிக்க தொண்டாற்றித் தியாக வாழ்வினரான தலைவர்களைப் பற்றிப் பேசுவது, விவரிப்பது எவருக்கும் எளிதன்று.
ஆனால், கவிஞர் மணியன் இந்த விரிவான நூலில் எந்த விடத்தும் அப்படிப்பட்ட குறைக்கு இடம் தாராமல், நடுவுநிலை தவறாமல், மனச்சான்று குன்றாமல், நீதிக்குத் தலைவணங்கும் புலவராக, இந்தக் காவியத்தைப் படைத்துள்ளார்.
திராவிடர் இயக்கத்தின் பலப்பல வளர்ச்சிக் கட்டங்கள், புத்துணர்வு ஊட்டும் கொள்கைகள், திருப்பம் ஏற்படுத்திய தீர்மானங்கள், தி.மு.கழகம் தனித்துச் செயற்படத் தொடங்கிய சூழல், பெரியாரும், பிற தலைவர்களும் கொண்டிருந்த நட்பு; பெரியாரும் அண்ணாவும் கொண்டிருந்த உறவு, நட்பு, அன்பு, மாறுபாடு; தந்தை பெரியாரின் சுடுமொழி, அண்ணாவின் போற்றியுரை முதலான பல்வேறு கருத்துகளும் இந்நூலில் மிகவும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உண்மையைப் புலப்படுத்தும் அதே நேரத்தில் கசப்பையும் மிகைப்படுத்தாது, வெறுப்பையும் வளர்க்காது, பொதுவான கொள்கையைக் காக்கும் நோக்குடன் கவிஞரின் எழுத்து மலர்ந்துள்ளது கண்டு பாராட்டி மகிழ்கிறேன்.
நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கவிதைகளைப் படித்தேன். கவிதை நூல் என்றாலே கடின நடை என்றுதான் எவரும் கருதுவர். ஆனால், அதற்கு மாறாக, இது கவிதையோ, கருத்துரையோ என்று எவரும் வியக்குமாறு தெளிவான தமிழில் அமிழ்தான நடையில், உயர்வான உணர்வை இந்நூலில் வடித்துள்ளதனைக் காண்கிறேன்.
தந்தை பெரியாரை உணர்ந்திட,
அறிஞர் அண்ணாவை அறிந்திட,
இயக்கக் கொள்கைகளைத் தெளிந்திட,
கழக வரலாற்றைப் புரிந்திட,
செந்தமிழ் மொழிப் புலமையில் தேர்ந்திட,
கவிஞர் மணியன் ஏடு எவருக்கும்
துணையாகும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கரும்பு கடித்துச் சுவைப்பார்க்கு நுனி முதல் அடி வரை இனிக்குமன்றோ! அப்படித்தான் இந்த நூல் முழுவதும் பாடலும், பொருளும் சுவைப்பதனால், அதில் சில பாக்களை எடுத்துக்காட்ட விரும்பினாலும், நான் முற்படவில்லை. ஒருவகையில் தமிழ் ஆர்வலர்க்கும், கழகத் தோழர்கட்கும், தன்மானமுள்ள திராவிடர்கட்கும், இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் யாவுமே தமிழினிமைக்கு ஓர் எடுத்துக் காட்டு என்பேன்! இந்நூலைப் படிப்பவர் எவரும் மகிழ்வர் என்பதனால், அதுவேதான் முதுபெரும்புலவர் மணியனுக்கும் பாராட்டு என்பேன்! புலவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்!
அன்பன்,
(க. அன்பழகன்)