பெரியார் காவியம் - அணிந்துரை -1

பெரியார் காவியம் - அணிந்துரை -1

தலைப்பு

பெரியார் காவியம்

எழுத்தாளர் இரா.மணியன்
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 464
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.220/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html

அணிந்துரை -1

பேராசிரியர் முனைவர் இரா.மணியன் படைத்துள்ள “பெரியார் காவியம்" எனும் புதிய நூல் கண்டு பெரிதும் உவகையடைகிறேன்.

முனைவர் இரா. மணியன் தஞ்சை மாவட்டம் மயிலாடு துறையைச் சேர்ந்தவர். முன்னாளில் திராவிட முன்னேற்றக் கழக - சிற்றூர்க் கிளைக் கழகச் செயலாளராகத் திகழ்ந்த திராவிட இயக்கப் பற்றாளர், பின்னாளில், சென்னை தியாகராயர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி "அண்ணா கோவை", ''பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்", "புறநானூறு ஓர் அழகோவியம்'' முதலான பல நூல்களைப் படைத்துள்ள பேராசிரியர் இரா.மணியன் இந்நாளில் ஈரோட்டுக் காண்டம், பேராயக் காண்டம், சுயமரியாதைக் காண்டம், திராவிடர் காண்டம், காமராசர் காண்டம், அண்ணா காண்டம், கலைஞர் காண்டம் எனும் ஏழு காண்டங்களில் 55 படலங்களாக 1000 ஆசிரிய விருத்தப் பாடல்களைப் பாடி 'பெரியார் காவியம்" எனும் இந்நூலை யாத்துள்ளார்.

தந்தை பெரியார் அவர்களின் ஈடு இணையற்ற 95 ஆண்டு கால வரலாற்றை எளிய கவிதைகளாகப் படைத்துள்ளதுடன், ஒவ்வொரு கவிதையைத் தொடர்ந்தும் ''குறிப்பு” எனும் தலைப்பில் அவரளித்துள்ள விளக்கங்கள் பாடல்களின் கருத்துகளுக்கு மேலும் வலிவூட்டுகின்றன. சுற்றுப் பயணங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கிய பெரியார், "குடியரசு" பத்திரிகையைத் தோற்றுவித்து, அதன் மூலமும் சமூகநீதிச் சிந்தனைகளைத் தமிழகம் முழுவதும் விதைத்து வந்தார். அதனை இந்நூலாசிரியர்,

"தீண்டாமை பெண்ணடிமை தாழ்ந்த சாதி

தீமைதரும் மூடநெறி இவைகள் யாவும்

கூண்டோடு ஒழிய வேண்டும் எனும் கருத்தை

குடியரசில் பெரியாரே எழுதி வந்தார்"

- எனக் (123 ஆம் பாடலில்) குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பின், தந்தை பெரியார் அவர்களுக்கு தி.மு.க. அமைச்சரவையே காணிக்கை எனச் சட்டப் பேரவையில் அறிவித்தார். அந்நிகழ்வை,

"சட்டமன்றம் நடைபெற்ற போழ்தில் ஓர்நாள்

சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்” ஓர்

சட்டத்தைக் கொண்டுவந்து பெரியா ருக்குச்

சாகும்வரை ஓய்வூதியம் வழங்கு தற்குத்

திட்டமிட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

'தி.மு.க. அமைச்சரவை பெரியா ருக்கே

எட்டிவிட்ட காணிக்கை' என்று சொல்லி

ஏராளக் கைத்தட்டல் பெற்றார் அண்ணா.”

- (பாடல் எண் 789)

- என்று இக்காவியத்தில் பாடியுள்ள பேராசிரியர், "குறிப்பு" எனும் தலைப்பின்கீழ், "இச்செய்தி 21.06.1967இல் செய்தித் தாளில் வந்ததை மருத்துவமனையில் இருந்த பெரியாருக்கு வீரமணி வாசித்துக் காட்டினார். உடனே படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து, இச்செய்தி என் உடல் நோயையே குறைத்துவிட்டது என்று பெரியார் கூறி மகிழ்ந்தார்” எனும் அரிய வரலாற்று நிகழ்வையும் அருமையாகப் பதிவு செய்துள்ளார்.

இம்முறையில் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் திருப்பணியாகப் பெரியார் வரலாற்றை எளிய கவிதை நடையில் பாடியுள்ள பேராசிரியர் முனைவர் இரா.மணியன் மிகுந்த பாராட்டுக்குரியவர். அவரது கவித்திறனைப் போற்றித் தமிழக அரசின் சார்பில் 15.12.2009 அன்று நடைபெற்ற விழாவில் "பாரதியார் விருது" வழங்கிச் சிறப்பித்த இனிய நிகழ்வினை இவ்வேளையில் நினைவுகூர்ந்து, அவர்க்கு எனது உளமார்ந்த * நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

 

 (மு. கருணாநிதி)

Back to blog