பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு-நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/periyarin-nanpar-doctor-varatharajulu-naidu-varalaru 
நன்றி

வரலாற்று மறதிக்கும் சரியானவற்றைத் தேடாமல் விரும்பியவற்றை வரலாறாக்கிவிடும் வழமைக்கும் பெயர் பெற்றது தமிழ்ச் சமூகம். இத்தகைய மனோபாவம் கொண்ட சமூகம் ஆதாரம் சார்ந்த ஆவணப்பதிவில் கவனம் செலுத்தாதது ஆச்சரியமில்லை.

நவீன தமிழகத்தில் நிகழ்ந்த வகுப்புரிமைப் போராட்ட வரலாற்றுக்கு சரியான நூல் உண்டா? கோயில் நுழைவு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நிறைவேற்றம் ஆகியவை சந்தித்த எதிர்ப்புகளுக்கும் பதிவுகள் உண்டா? பெண்கள் சொத்துரிமை, சீர்திருத்தத் திருமணம் ஆகியவற்றின் சட்ட அங்கீகாரம் போன்ற சமூகப் பண்பாட்டு மாற்றங்களின் வரலாறுதான் தொகுக்கப்பட்டுள்ளனவா? சேரன்மாதேவி, வைக்கம், கல்பாத்தி போன்ற ஊர்களில் நிகழ்ந்த சமூக சமத்துவம் நோக்கிய போராட்டங்களுக்குத்தான் ஆவணப் பதிவுகள் உண்டா?

நவீன தமிழகத்தின் உள்கட்டுமானத்தையே மாற்றிய மேற்கண்ட சமூக மாற்றங்கள் கட்சி சார்ந்த நிகழ்வுகளாக மட்டுமே பொதுப்புத்தியில் நினைவு கூரப்படுகின்றன. குடுமி போய் கிராப் வந்தது கேவலம் மயிர் குறைந்த நிகழ்வா? ஒரு மனிதன் உணவகத்தின் உள் நுழைந்து உட்கார்ந்து சாப்பிட, கொதிக்கும் எண்ணெயை உடல் முழுவதும் வாங்கிப் பற்றி எரிய வேண்டியிருந்ததே! சிறுநீரில் புரண்ட மண் உருண்டை களின் அர்ச்சனைகளுக்குப் பிறகுதானே ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் சக மனிதன் உட்கார்ந்து சாப்பிட முடிந்தது. நாயும் பன்றியும் சுற்றித் திரியும் தெருக்களில் ஒரு மனிதன் உரிமையுடன் கால்வைத்து நடக்க, மலம் நாறிய பூட்டிய அறைக்குள் பல மனிதர்கள் பல காலம் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது. தலித் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் நுழைய முடியாத தெருக்கள் சென்னை பெரு நிலத்தின் வைக்கத்திலும் கல்பாத்தியிலும் விரிந்து கிடந்தனவே. இதன் வலிகளைச் சமூக வரலாற்றை வாசிப்பவன் உணர முடியாது. ஏனெனில் இவை துண்டு துக்காணிகளாக ஆங்காங்கே கிடைக் கின்றனவே தவிர வரலாறாக, பதிவாகவே இல்லை.

இத்தகைய சமூக மாற்றங்களையும் அவற்றுக்குக் காரணமான ஆளுமைகளின் பங்களிப்புகளையும் கோபம், வருத்தம், இனச்சாய்வு, கருத்தியல் திரிபின்றிச் சமகால ஆதாரங்களுடன் நடுநிலையோடு பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு சமூகத்தின் வரலாறு முழுமைப்படும். ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ வரலாற்றுக்குப் பங்களிப்பு செய்த பேராளுமை களின் பணிகளை ஆவணப்படுத்துவது வரலாற்றுக் கடமை. அவை சமூக அசைவுகளாகப் பார்க்கப்படாமல் கட்சி சாதனை களாகச் சுருங்கியமைக்கு அக்கடமையைச் செய்யாததுதான் காரணம்.

இக்கடமை நிறைவேற்றத்தின் ஒருபகுதியாக நவீன தமிழகத்தில் சேரன்மாதேவி குருகுலம், குலக்கல்வித் திட்டம், அரசியலை, மொழியை மக்கள் மயப்படுத்தியது போன்ற வற்றில் பெரும்பங்காற்றிய ஒரு பேராளுமையை ஆவணப் படுத்தி முன்வைக்கிறது இந்நூல். அவர் அரசியல், சமூகம், பத்திரிகைத் துறைகளில் முன்னணியில் நின்று உழைத்த போராளி டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு (1887 - 1957). அவரது அரசியல் பங்களிப்பை அருகிலிருந்து பார்த்த வ. உ. சிதம்பரம் பிள்ளை 1920களிலேயே அவரைத் 'தென்னாட்டுத் திலகர்' என்று கொண்டாடினார்; அவரது எழுச்சியைத் 'தேசிய சங்க நாதம்' எனப் புகழ்ந்தார். சமுகப் பங்களிப்பின் விளைபயனைக் கண்டு 'தமிழ்ப் பெரியார்' என்று 1930களிலேயே வியந்தார் வ.ரா. தமிழ்ச் சமூகம் போற்றிய வரதராஜுலு அவர்களின் வாழ்க்கைச் செயல்பாடு களைக் காலவரிசையில் சமகால, முதன்மை ஆதாரங்களுடன் தொகுத்து விவரிக்கிறது இந்நூல்.

வரலாற்று முக்கியத்துவமுடைய ஆளுமையின் வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கும் அரிய முயற்சியில் உதவியோர் பலர்.

தினமணி (17.7.2003) யில் அசோகபுரி வாழ் வரதராஜுலு வின் மகன்கள் பற்றிய செய்தி ஒன்று வெளி வந்திருந்தது. அதை நினைவில் கொண்டு, 2008 ஜனவரியில் விழுப்புரத்திற்கு மேற்கே இருந்த அவ்வூரை நண்பர் தியாகுவுடன் தேடிப் போகும் போது இருட்டிவிட்டது. வரதராஜுலுவின் காலமாகி விட்ட மகன்கள் இராமதாஸ், பிரதாப் வாழ்ந்த வீட்டை எப்படியோ கண்டுபிடித்தோம். அவ்வூர் மனிதர்களோடு பேசிப் புறப்பட இரவாகிவிட்டது. விழுப்புரத்தில் தங்கிவிட்டு காலை மீண்டும் அசோகபுரிக்குப் போனோம். அன்று பொங்கல் நாள். பலரைப் பார்த்தோம். சமாதியை நினைவூட்டும் வரதராஜுலுவின் நினைவிடம், இல்லம் ஆகியவற்றை நண்பர் புகைப்படம்கூட எடுத்தார்.

அசோகபுரியில் கிடைத்த விவரத்தை வைத்து வரதராஜுலுவின் முதல் மகன் கிருஷ்ணதாஸை 2008 ஜனவரி இறுதியில் சென்னை, தியாகராய நகரில் அவர் இல்லத்தில் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் அளிக்கும் ஆவணங்கள், செலுத்தும் அன்பு இவற்றுள் எது பெரிது என்றெனக்குத் தெரியவில்லை. கிருஷ்ணதாஸ் அவர்களின் மனைவி, மகன், மகள் ஆகியோரின் நிதானம் கலந்த அன்பு குறிப்பிட வேண்டியதாகும். இன்னொரு மகன் புதுவை வாழ் தயாநந்தனைப் பலமுறை முயன்று ஒருமுறை சந்தித்தேன். வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் தன் தந்தை பற்றிய பேச்சில் களைப்புற்றவராகத் தோன்றினார். தோற்ற மயக்கமோ!

வரதராஜுலுவின் உறவினராகவும், அவருடன் இறுதிக் காலத்தில் நெருங்கிப் பழகியவராகவும் கிருஷ்ணதாஸ் குறிப்பிட்ட மதனகோபால் (82) அவர்களைத் தாம்பரத்தில் தேடிப் போய்ச் சந்தித்தேன். எஸ்.ஐ.இ.டி. கல்லூரி பஷீர் அகமதுவின், வரதராஜுலுவுடனான தொடர்பை அவர்தான் எனக்குச் சொன்னார். அதற்குப் பிறகு பஷீர் அகமதுவின் எளிதில் கிடைக்காத வாழ்க்கை வரலாற்று நூலை ஆ.இரா. வேங்கடாசலபதியின் நண்பர் ஒருவர் தேடி, நகலெடுத்து கட்டடம் செய்து கொடுத்தார். அந்நூலில் வரதராஜுலு பற்றி ஒரு வரிகூட இல்லை.

வரதராஜுலு பிறந்த ஊரான ராசிபுரமும் போனேன். ஒரே ஒரு உறவினர் நீலா கிருஷ்ணனைப் (ஆண், வயது 67) பார்த்தேன். வரதராஜுலு வாழ்ந்த இடத்தில் அவர் மகன் கிருஷ்ணதாஸ் கட்டியிருந்த குலதெய்வக் கோவிலைக் காண்பித்தார். வேறு பயன் இல்லை. பின்னர் சேலம் சென்றேன். வரதராஜுலு வாழ்ந்த காந்தி வீதியைக் கண்டுபிடிக்க முடிந்த எனக்கு கிருஷ்ணதாஸின் வழிகாட்டுதல்கள் இருந்தும்கூட வீடு இருந்த இடத்தை உறுதி செய்ய முடியவில்லை. ஒரு கோடைக் கால மதியமும் மாலைப் பொழுதும் கால் கடுக்க மனம் சோர கழிந்ததுதான் மிச்சம்.

கஸ்தூரி என்னும் வழக்கறிஞர் வரதராஜுலு நாயுடுவின் வரலாற்றை எழுத முயன்றதாகவும் ஏறக்குறைய நூல் முடியும் தருணத்தில் காலமாகிவிட்டதாகவும் கிருஷ்ணதாஸ் இரண்டாவது சந்திப்பிலேயே சொன்னார். மூன்றாம் சந்திப்பில் முகவரி தந்தார். அந்தக் குடும்பத்தினரைத் தேடி சித்தார்த்தனுடன் ஒரு காலைப் பொழுதில் கோயம்புத்தூர் தெருவில் அலைந்தேன். கஸ்தூரியின் மகனைக் கண்டு பிடித்தேன். அவரும் வழக்கறிஞர். கஸ்தூரி தேடிவைத்த 'குப்பை களை (வார்த்தை உபயம்: மகன்) மாடி அறையொன்றில் காண்பித்தார். முறை அற்ற சேகரிப்புகள். பல அலமாரிகளில் பல கோப்புகளில் அழுக்கும் தூசும் பறக்கக் கிடந்தன. பழைய பேப்பர்காரனிடம் அவன் மறுக்க மறுக்கப் பலவற்றைத் தள்ளி விட்டுவிட்ட பெருமையில் மகன் இருந்தார். அவற்றிலும் ஒன்றும் தேரவில்லை.

அவருடனேயே உண்டு உறங்கி உறையும் நெருக்கமான நண்பர்கள் வரதராஜுலுவுக்கு உண்டாம். அவர்களுள் இருவர் சேலம் பவானி சிங்கும், சிதம்பரம் தண்டபாணி பிள்ளையும். வரதராஜுலு சிறை செல்லும்போதெல்லாம் தானும் சிறை செல்லத் துணிவாராம் பவானி சிங். (பவானி சிங் சிறையேகிய காலங்களை ஒப்பிட்டுப்பார்த்ததில் அப்படியில்லை எனத் தெரிந்தது). வரதராஜுலுவின் நண்பர் பவானி சிங் என ஓரிடத்தில் பெரியார்கூட குறிப்பிட்டுள் ளார். அவருடைய குடும்பத்தைத் தேடி 19 மே 2008இல் ஏர்க்காடு போனேன். மகன்களுள் ஒருவரைப் பார்த்தேன். பவானி சிங்கின் 1980கள் காலப் படம் ஒன்று கிடைத்தது. தண்டபாணி தொடர்பிலான தகவல்களைச் சேகரிப்பதில் ஆ.இரா. வேங்கடாசலபதி உதவினார்.

வரதராஜுலுவின் இந்து மகாசபைக் கால நண்பர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அகில இந்திய இந்து மகாசபையின் செயல்படும் தலைவராகப் பல காலம் இருந்தவர். இருவருக்கிடையிலான கடிதங்களையும் செய்திகளையும் தேடி 31 ஜூலை 2009இல் கல்கத்தா போனேன். பயணத் துணைவர் பஞ்சு. எஸ்.பி. முகர்ஜியின் அண்ண ன் மகனும், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான சித்த தோஷ் முகர்ஜி, வரலாற்றாய்வாளரும் அசுடோஷ் முகர்ஜி நினைவு நிறுவனச் செயலருமான டாக்டர் ரீனா பாதுரி ஆகியோரைச் சந்தித்தேன். கல்கத்தா தேசிய நூலகத்தில் சில நாள்களும், அவர்களுடன் பல மணி நேரங்களும் இருந்தேன். பல தகவல்கள் கிடைத்தன.

வரதராஜுலுவின் நாகர்கோயில் நண்பர் ஒருவரின் மகன் ராமதாஸ், திடீரென ஒரு நாள் கிருஷ்ணதாஸைத் தேடிக் கண்டு பிடித்துப் பார்த்தாராம். தகவல் அறிந்து அவரைத் தொடர்பு கொண்டதில் கிடைத்த படம் ஒன்று பின்னிணைப்பில் உள்ளது.

வரதராஜுலுவின் மகன் கிருஷ்ணதாஸ் அச்சிட ஒப்புதலுடன் வழங்கிய ஆவணங்களை ஆங்காங்கே குறித் துள்ளேன். அப்படி குறிப்பிடப்படாத ஆவணங்கள் பல்வேறு நூலகங்கள், பிரமுகர்கள், ஆய்வாளர்கள் வழி பெறப் பட்டனவாகும்.

அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (2007) நூலாக்கத்தின் போதே சலபதியின் ஆய்வு மாணவர் பேரா. திருநீலகண்டனைத் தொடர்பு கொள்ளத் தவறிவிட்டோம். 'முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே' என வருந்தினார் சலபதி. இந்த நூலுக்காக குடி அரசு தகவல்கள் பலவற்றைத் தயங்காது பகிர்ந்துகொண்டார் திருநீலகண்டன்.

பதினைந்தாண்டுகளுக்கு முன் வரதராஜுலு குறித்த ஆய்வுக்காகச் சென்னை வந்திருந்த பாளையங்கோட்டை பீட்டரை உ. வே. சாமிநாதையர் நூலகத்தில் சந்தித்திருந்தேன். என்னிடம் இருந்த பல தகவல்களைக் கொடுத்திருந்தேன். அதற்கான பதிலைப் போல இப்போது அவர் எனக்கு அளித்த குறிப்புகள் அநேகம்.

வரதராஜுலு ஆய்வில் மிகவும் பயன்பட்ட நூலகம் தில்லியின் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம். இந்தியாவில் சிறப்பாக இயங்கும் நூலகங்களுள் ஒன்று அது. 2009 மார்ச் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் இந்நூலகத்தில் இந்து மகாசபை தொடர்பிலான செய்தி களைத் திரட்டினேன். டாக்டர் மூஞ்சே, சாவர்கர் மற்றும் பலரது ஆவணங்களைப் பார்வையிட்டேன்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், பெரியார் திடல், மறைமலை அடிகள், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகங்கள் அடுத்துப் பயன்பட்டவை. வரதராஜுலு நடத்திய ஆந்திர பிரஜாவைத் தேடி ஹைதராபாத்தின் பல நூலகங் களுக்கும் என்னுடன் அலைந்தவர் அருணன். தன் ஆராய்ச்சியினூடாகக் கிடைத்த தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டார் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெர்னாட் பேட். ரெங்கையா முருகன், மா.ரா. அரசு, நம். சீனிவாசன், சுப. குணசேகரன், ந. சந்திரசேகரன், பெருமாள் முருகன் உருவாக்கும் மாணவர்களுள் ஒருவரான பெ. பாலசுப்ரமணியன் எனப் பலர் பெரிதும் சிறிதுமாக உதவினர்.

நாகம், அட்டைப் படம் உருவாக்கிய தி. முரளி, கீழ்வேளூர் பா. ராமநாதன் ஆகிய காலச்சுவடு நண்பர்களின் பொறுமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு ஆய்வே இக்காலத்தின் போக்கு. ஆ. இரா. வேங்கடாசலபதியின் உதவியின்றிச் சிறந்த ஆய்வெதுவும் முழுமை அடையாதென்பது என் அறிவறிந்த உண்மை. என் திருப்பதி அலுவலகம் தந்த நேரம் பெரியது. சலபதியும் திருப்பதியும் இந்நூல் உருவாகக் கர்த்தாவும் கருவியுமான இரு பதிகள்,

சென்னை 11

ஜனவரி 2012

பழ. அதியமான்

Back to blog