பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - முன்னுரை

பெரியாரும் நவீனப் பெண்ணியமும் - முன்னுரை

 

தலைப்பு

பெரியாரும் நவீனப் பெண்ணியமும்

எழுத்தாளர் பத்மாவதி விவேகானந்தன்
பதிப்பாளர்

விழிகள்

பக்கங்கள் 128
பதிப்பு முதற் பதிப்பு - 2011
அட்டை காகித அட்டை
விலை Rs.120/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyarum-naveena-penniyamum.html

 

முன்னுரை

பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும், அரசியல் மற்றும் பிற அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கையுடையதாகும். இளம் பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள் (Lesbians), வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள், இவர்கள் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே இதன் இலக்காகும். இதன்றி, இயல்பான அல்லது சற்றுக் குறைவான முயற்சியில் ஈடுபடுவது பெண்ணியம் ஆகாது (பெண்ணியம், முனைவர் இரா. பிரேமா, மூன்றாம் பதிப்பு, 2005) என பார்பரா ஸ்மித் (Barbara smith) விளக்கியுள்ளார்.

சார்லட் பன்ச் என்பவர், பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல சமூகத்தையே மாற்றி அமைக்க முயல்வதாகும் என்கிறார். அதாவது இவர் பெண்ணியத்தை, சமூக நிலை மாற்றக் கோட்பாடு (Transformation Politics of the Society) என்று விளக்குகிறார். தெரசா பிளிங்டன் (Teresa Billington) என்ற பெண்மணியும், பெண்ணியம் உலகையே மாற்றியமைக்கும் இயக்கம் என்று கூறியுள்ளார். பெண்ணியம் என்பது பெண்களின் நிலையை மாற்றுகின்ற இயக்கம் (A Movement of change in the position of women) என்கிறார் ரோஸலிண்ட் டெல்மர் (Rosalint Delmer) என்பவர். ரே ஸ்டான்சி என்னும் அம்மையார் பெண்ணியத்தின் மய்யச் செயற்பாடு சமுதாயத்தில் பெண்களின் நிலையை மாற்றுவதாகும் என்கிறார் (பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா).

பெண்களின் தொடக்க கால வரலாற்றை விரிவாக ஆராய்ந்து எழுதி இருக்கும் ரோஸலிண்ட் மைல்ஸ், பெண்கள் தாய்வழிச் சமூகத்தில் பெருமைக்குரிய வகையில் விளங்கியதையும், பின்னர் நிலவுடைமைச் சமூகத்தில் தந்தைவழிச் சமூகம் நிலைபெறுவதையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். தொடக்கக் காலத்தில் பெண்கள் தெய்வமாக வணங்கப்பட்டதையும், உலகின் முதல் மத குருவும், கவிஞரும் பெண்களே என்றும் விளக்குகிறார். அக்காலத்தல் பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்ததையும், உடல் ரீதியான சுதந்தரத்தைப் பெற்றிருந்ததையும், பெண்கள் போர்த் தளபதிகளாக, வீரர்களாக விளங்கியதையும், திருமண ஒப்பந்தச் சட்டங்களையும், அக்காலப் பெண்களின் சிறந்த மருத்துவ அறிவையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அரசியல் மதிநுட்பத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதைச் சான்றுகளுடன் விளக்கி எழுதியிருக்கிறார். நிலவுடைமைச் சமுதாயத்திற்குப் பின் வந்த முதலாளித்துவச் சமூகத்தில் பெண் கல்வியின் தேவை உணரப்பட்டது.

தமிழகத்தில் பெண்ணடிமை நீங்கி உரிமை பெறப் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் முதன்மையானவராவார். ஆங்கிலேயருக்கும், ஆங்கிலத்திற்கும் அடிமைப்பட்டு, மதம், ஜாதி எனப் பல்வேறு மூடத்தனங்களில் மூழ்கிக் கிடந்தபோது, தமிழர்களைத் தன்னுணர்வு பெறச் செய்யும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டவர் தந்தை பெரியார் ஆவார். ஜாதியத்திற்கு, இந்து மதத்திற்கு, புராண பொய்களுக்கு, பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக அவரது குரல் ஓங்கி ஒலித்தது.

மிதவாத, (சோசலிச) சம தர்மவாத, தீவிரவாதப் பெண்ணியவாதிகள் வெளியிட்ட அனைத்துவிதமான விஷயங்களையும் பெரியார் தமது காலத்திலேயே பேசியும், எழுதியும், நடைமுறைப்படுத்தியும் வந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. பெண் உரிமைக்கு எதிரான எதையும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அமெரிக்காவில் பெண்ணிய வரலாறு தொடங்கும் ஆண்டாகக் கருதப்படுவதற்குக் காரணமான செனகா பால்ஸ் மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தது.

பெண்களின் மகிழ்ச்சிக்கு எதிராக உள்ள எந்தச் சட்டமும், இயற்கைக்கும், உண்மைக்கும் மாறானதாகும். அதே போன்று அவளைத் தாழ்நிலையில் வைக்கும் சட்டங்களும், அவள் மனம் விரும்பியபடி சமூகத்தில் எந்த நிலையையும் அடைய முடியாமல் தடுக்கும் சட்டங்களும், இயற்கைக்கு மாறானவையாகும். அதனால் அவைகளுக்கு அதிகாரம் கிடையாது. பெண் ஆணுக்குச் சமமாகவும், மனித சமுதாயத்தின் மேன்மைக்காகவும் படைக்கப்பட்டுள்ளாள். அதனால் அவள் அவ்வாறே மதிக்கப்பட வேண்டும். பெண்களைக் கட்டுப்படுத்தும் எல்லாச் சட்டங்களும் அவளுக்கு உணர்த்தப்படுதல் வேண்டும். அவள் தன் நிலை குறித்துத் திருப்தியுடன் இருக்கிறாள் என்று தன்னைத் தாழ்வுபடுத்திக் கொண்டோ, அவள் எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கிறாள் என்ற அறியாமையையோ வெளிப்படுத்துதல் கூடாது. ஆண், பெண்ணை மதக் கூட்டங்களில் பேசவும், கற்பிக்கவும் ஊக்குவிக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேவிதமான நற்குணங்களும், நன்னடத்தைகளும் வேண்டும். அதை மீறுபவர்களுக்கு ஒரேவிதமான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். பெண்கள் பொதுக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளும்பொழுது அவள் தோற்றத்தற்கு முக்கியமளிப்பது கண்டிக்கப்படுகின்றது. அவள் வாழ்வின் எல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெற வேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரேவிதமான திறமைகளும், பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆணும், பெண்ணும் கடவுளால் ஒரேவிதமாகப் படைக்கப்பட்டவர்கள். பெண் ஆணுக்குச் சமமான உரிமைகளையும், கடமைகளையும் பெற வேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும், பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று, இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம் (பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் ச.முத்துச்சிதம்பரம், இ பக்.31-_37).

இத்தீர்மானத்தின் அனைத்து விதிமுறைகளையும் பெரியார் நடைமுறையில் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் அவர் சுயமாகச் சிந்தித்துப் பேசியவையே ஆகும். மிதவாதப் பெண்ணியத்தில் கூறப்படுவது போல் குடும்ப அமைப்பில் பெண் சுரண்டப்படுவதைப் பெரியார் முழுமையாக எதிர்த்தார். சமதர்ம, பெண்ணியவாதிகள் கூறியதுபோலப் பெண்களைச் சுயசிந்தனை உள்ளவர்களாக மாற்றி, ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் விளங்க வேண்டும் என்றார். சோசலிச நாடுகளில் இருப்பதுபோல் குழந்தைகளைத் தனியான காப்பகங்களில் விட்டு வளர்க்கலாம் என்று கூறினார். அப்படி இல்லாவிட்டால் குழந்தைகளை வளர்க்க வேலையாட்களை அமர்த்திக் கொள்ளலாம். நகைகள், புடவைகள் போனற் தேவையற்ற அலங்காரங்களுக்குச் செலவழிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தைக் குழந்தைகளை வளர்ப்பதற்குரிய ஆயாக்களுக்குக் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு, எப்போதும் குடும்பம், குழந்தை, வீட்டு வேலைகள் என்று இருக்கக் கூடாது. பெண்ணின் வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு என்பதில் சுருங்கிவிடக் கூடாது. குழந்தைகளை வரிசையாகப் பெற்றுப்போட்டுத் துன்பமடையாமல் ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தையே பெற்றுக் கொள்ளாவிட்டாலும் அதனால் ஒன்றும் நேர்ந்துவிடாது எனப் பிரச்சாரம் செய்தார். பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்கள் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிடுவதாகி வருகிறது. பெண் சிசுக் கொலையை எதிர்த்தார். பெண்கள் கல்வி கற்று, ஆண்களுக்கு நிகரான அனைத்து வேலைகளிலும் பணிபுரிந்து, தம் சொந்தக் காலில் நின்று, சுதந்திரமாக வாழ வேண்டும். தன் துணையைத் தானே விரும்பித் தேர்ந்தெடுத்து, மணம் புரிந்து கொள்வதுடன், குடும்ப வாழ்க்கையில் சிக்கல் இருந்தால் மண விலக்குப் பெற்று வாழ வேண்டும் என்றார். தேவைப்பட்டால் ஆண்களைப் போலவே மறுமணமும் செய்து கொள்ளலாம். ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய தீவிரப் பெண்ணியலாளர்கள் கூறம் பல கருத்துகளைத் தமது காலத்திலேயே துணிவுடன் பேசியவர் தந்தை பெரியார். குழந்தை பெற்றுக் கொள்வது பெண்ணின் உடல் நலத்தைப் பொறுத்த விஷயமாக இருப்பதால், அதைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்றார். பெண்ணின் விடுதலைக்குக் குடும்ப அமைப்பு தடையாக இருக்குமானால் அத்தகைய குடும்ப அமைப்பே தேவையில்லை என்றார். பெண்ணுக்கும் பாலுறவுச் சுதந்திரம் உண்டு என்றார். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலளவில் ஒன்றிரண்டு வேறுபாடுகளே இருக்கின்றன. ஆனால் உடையணிவதில் எவ்வித வேறுபாடுகளும் தேவையில்லை என்றார். பெண் விடுதலைக்கு எதிரான இந்து சமயத்தின் பிற்போக்குத் தன்மைகளை இடித்துரைத்தார். பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றி அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தந்தை பெரியார், பெண்களுக்கு அரசியலிலும், வேலை வாய்ப்பிலும் அய்ம்பது சதவீதம் இட ஒதுக்கிடு செய்யப்பட வேண்டும் என்றார். கோவில்களில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்ணியம் என்று பேசப்படும் வார்த்தைகள் எப்போது உருவானது, எப்படி உருவானது, இதனை முன்னெடுத்த மனிதர்கள் யார் என்ற வரலாற்றுத் தகவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

இவ்வாறு பெண்களின் அடிமைத்தனத்திற்கு எதிராகப் பெரியார் பேசாத கருத்துகள் எதுவும் இல்லை என்று கூறுமளவிற்குப் பெண் விடுதலைக்காகப் பேசியும், எழுதியும் வந்தவர் தந்தை பெரியார். தனது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியப் பணியாக, பெண் விடுதலையைக் கருதினார். உலகின் வேறு எந்தத் தலைவரும் பெண் விடுதலை குறித்துப் பெரியார் அளவிற்குப் பேசியும், எழுதியும், பணிபுரிந்தும் இருக்க இயலாது என்று கூறுமளவிற்கு உழைத்தவர் தனது வாழ்நாளின் இறுதியில் தமது இயக்கத்தையும், சொத்துக்களையும் ஈ.வெ.ரா. மணியம்மை என்னும் பெண்மணி யிடம் ஒப்படைத்துச் சென்றவர்; பெண் விடுதலை இல்லையேல் ஆண் விடுதலையும் இல்லை என்ற தெளிவான சிந்தனையை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வந்தவர்; சமதர்மம் போற்றிய தந்தை பெரியாரின் தியாகத்தை வெறும் சொற்களால் வடித்துவிட முடியாது. பெண்கள் பெரியாரின் தியாகத்தை ஒருபோதும் மறக்க இயலாது. பெரியார் விரும்பியது போன்ற ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்குவோம். அதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றியாகும்.

 

“உண்மை” மார்ச் 16-31 2012

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog