பெண்ணும் ஆணும் ஒண்ணு - நட்புரை
பெண்ணும் ஆணும் ஒண்ணு - நட்புரை
நட்புரை
வரலாற்றின் புது வரவு!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
தோழர் ஓவியாவின், "பெண்ணும் ஆணும் ஒன்று" என்னும் இந்நூல்,
"தியாகமே திணிக்கப்பட்ட குணமாய்
அடிமை உழைப்பே வாழ்வாய்
ஆணின் ஒட்டுண்ணி உயிராய்
இனியும் எத்தனை காலம் பெண்ணே?"
என்னும் வினாவோடு நிறைவடைகிறது. ஆனால் நமக்குள் பல வினாக்களைத் தொடக்கி வைக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்?' பல்லாண்டுகளுக்கு முன் வந்த நூல். அந்நூல் எழுப்பிய வினாக்கள் பலவற்றிலிருந்து நாம் இன்று வெளியில் வந்துவிட்டோம். குழந்தை மணம் இன்று எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே நடக்கிறது. கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. மனவிலக்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அய்யா வலியுறுத்திய கருத்தடையை இன்று அரசும், சமூகமும் ஏற்றுக் கொண்டு விட்டன.
சென்ற நூற்றாண்டை விட இப்போது பெண்கள் எவ்வளவோ முன்னேறியுள்ளனர். பெண் கல்வி, பெண்கள் வேலைக்குப் போவது என்பனவெல்லாம் இன்று அதிசயங்கள் இல்லை. எனினும், இன்னும் செல்ல வேண்டிய பாதை நீண்டதாகவே உள்ளது. அந்தப் பாதையின் திசையைத்தான் இந்நூல் நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிப்படுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது. சமமாக இருப்பது வேறு, ஒரே மாதிரியாக இருப்பது வேறு என்கிறார் அவர்.
சாதி வேறுபாடும், பால் வேறுபாடும் மட்டும்தான் இங்கு இருப்பதாகப் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால் நிற வேறுபாடும் சமூகத்தில் உள்ளது என்பதை நூல் சுட்டுகிறது. கருப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணம் நடப்பதில் உள்ள சிக்கல்கள் நூற்றுக்கு நூறு உண்மைதானே! கன்னங் கரேர் என்று இருக்கும் மாப்பிள்ளை கூட, செக்கப் செவேர் என்று இருக்கிற பெண்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது இன்றும் நாம் காணும் நடைமுறையாகத்தானே உள்ளது. எனவே சாதி, பால், நிறம், வர்க்கம் என்னும் எல்லா ஏற்றத் தாழ்வுகளும் பெண்களைப் பாதிக்கும் கொடுமையை என்னென்பது!
ஒவியாவின் பார்வை பல இடங்களில் நுட்பமாக இங்கு வெளிப்படுகின்றது. ஒரு திரைப்படத்த்தில் வரும் 'சின்னப் பயலே, சின்னப் பயலே' என்னும் பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால், மாபெரும் கவிஞர், பட்டுக்கோட்டைக்குக் கூட, சின்னப் பயலுக்குத்தான் அறிவுரை சொல்லத் தோன்றியுள்ளதே தவிர, ஒரு சின்னப் பெண்ணுக்கு அறிவுரை சொல்லத் தோன்றவில்லை போலும் என்று அவர் சொல்லும் போதுதான், அது என் மூளையிலும் உறைத்தது. இப்படி நுட்பமாய்ப் பார்க்க, ஒரு பெண்ணின் - அதுவும் ஒரு முற்போக்கான பெண்ணின் கண்கள் தேவைப்படுகின்றன.
கடவுள்களில் கூட, முருகன், கண்ணன் எல்லோரும் குழந்தைகளாகவும் வருகின்றனர். ஆனால் ஒரு பெண் தெய்வம் கூடக் குழந்தை வடிவில் காட்டப்படவில்லையே ஏன் என்று கேட்கிறார்.
இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய் விட்டன என்று பலரும் கவலைப்படுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் ஏன் அவை சிதைகின்றன என்பதை எண்ணுவதில்லை. நம் குடும்ப, சமூக அமைப்பு முறைகள் தான் அதற்கான காரணம் என்பதை நூல் எடுத்துக் காட்டுகின்றது. திருமணம் ஆனவுடன் பெண் மட்டும் தன் வீட்டைத் துறக்க வேண்டியுள்ளது. புதிய வீட்டில் போய் அங்குள்ள மனிதர்களை உடனடியாகத் தன் உறவாய் ஏற்க வேண்டியுள்ளது. இது இயற்கைக்கு மாறானதல்லவா? பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்த வன்முறையான திணிப்புதான் முரண்களுக்குக் காரணமாகிறது என்று அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நூலைத் தந்துள்ள தோழர், அதற்கு நட்புரை எழுதும் பெரியதோர் பெருமையை எனக்குத் தந்துள்ளார்.
இந்நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது, பல செய்திகளைப் புதிதாய் அறிந்துகொண்ட மாணவனைப் போல மகிழ்ச்சியும் ஊக்கமும் பெற்றேன். நன்றி ஓவியா!
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html