பெண்ணும் ஆணும் ஒண்ணு - என்னுரை

பெண்ணும் ஆணும் ஒண்ணு - என்னுரை

என்னுரை

 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்கின்ற இந்தக் கட்டுரைத் தொடர் 'தமிழ் இந்து' நாளிதழின் 'பெண் இன்று' என்ற இணைப்பில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 23.04.2017 முதல் 26.11.2017 வரை வெளிவந்தது. அதற்கு முதல் வாரம் வந்த என்னுடைய சிறப்புக் கட்டுரையும் இந்த தொகுப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 30 வாரங்கள் இந்தத் தொடர் வெளிவந்தபோது நிறைய தோழர்கள் இதனை நூலாகக் கொண்டு வரும்படி கேட்டார்கள். அந்த வேளையில் தோழமை மகன் தமிழ் நாசர், நண்பர் பிரபாகரன் அழகர்சாமி பெரியாரியச் சிந்தனையிலான நூற்களை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்கின்ற உயரிய இலக்கோடு 'நிகர்மொழி' என்கின்ற புதிய பதிப்பகத்தைத் தொடங்குவதாகவும், அதன் வாயிலாக இந்த நூலைக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொழில்நுட்ப அறிவும் பெரியாரியச் சிந்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற இளைஞராகிய பிரபாகரன் அழகர்சாமி வாயிலாக இந்த நூல் வெளிக்கொணரப்படுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என நான் மகிழ்ந்தேன். அதன்படி மூத்த தோழர் ஜெயகிருஷ்ணன் அவர்களுடைய அச்சக உதவியோடு இந்த நூலைக் கொண்டு வர முடிவாயிற்று.

என்னுடைய உரைகளும், 'புதிய குரலில்’ நான் எழுதியவையும் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே ஒன்றிரண்டு நூல்கள் வந்திருக்கின்றன. புலவர் சி. வெற்றி வேந்தன் அவர்களும் திருச்சி தோழர் அரசெழிலன் அவர்களும் 'பெண்ணுரிமைப் போர்' என்கின்ற நூலையும், 'மதமும் பெண்களும் என்கின்ற நூலையும் ஏற்கெனவே வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நூலாக முறைப்படுத்தித் தொகுத்து வெளிவரும் இரண்டாவது நூல் இது. அண்மையில் கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் எனது 'கருஞ்சட்டைப் பெண்கள்' நூல் வெளியிடப்பட்டது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இது மிக மிகத் தாமதம்தான்.

இந்தக் கட்டுரைகள் ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. 'தமிழ் இந்துவில் இக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தபோது நான் சந்தித்த பொதுமக்களிடம் இருந்து வெளிப்பட்ட பதில் வினைகள், நான் நினைத்ததை ஓரளவுக்குச் செய்ய முடிந்திருக்கிறது என்ற நினைப்பைத் தோற்றுவித்தன. மிகப் பெரிய தலைகீழ் மாற்றத்தைக் கோரி நிற்கும் இந்த இலட்சியப் பயணத்தில், இந்த நூல் ஒரு சிறிய செங்கல் அளவிலான படிக்கல்லாக உதவக்கூடும் எனில், அதுவே என் உழைப்பின் பலனாகும்.

இதற்கு மதிப்புரை வழங்க வேண்டும் என்று நான்கு முக்கியமான மனிதர்களிடம் நான் கேட்டேன். ஒருவர் அன்புத் தோழர் சுப.வீரபாண்டியன். இந்தக் கட்டுரை வெளிவந்து கொண்டிருந்த போது என்னை ஊக்குவித்த பல தோழர்களில் முதன்மையானவர். திடீரென அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு ''நான் ஏற்கெனவே இதுபற்றி 'ஒன்றே சொல்; நன்றே சொல்' நிகழ்ச்சியில் பேசிவிட்டேன் ஓவியா" என்று சொல்வார். இதைவிட இந்த எழுத்தை ஊக்குவிக்கும் வேறு செயல் எதுவாக இருக்க முடியும்? அவரிடம் தான் முதல் மதிப்புரையை நான் கேட்டேன். பல்வேறு அலுவல்களுக்கிடையே உடனே தன் மதிப்புரையை நல்கி உதவினார் தோழர். நூலை முழுமையாகப் படித்து, அதனுடைய சாராம்சம் எழுப்பியிருக்கும் உணர்வுகளைப் பதிவு செய்து, அவர் அனுப்பிய நட்புரை இந்த நூல் பணிக்கான வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தது.

மரியாதைக்குரிய மூத்த பத்திரிகையாளர் அய்யா ஜவகர் அவர்கள் என்னை தனது மூத்த மகள் என்று அன்போடு அரவணைக்கும் பாசமிக்கவர். நான் பல ஆய்வு நூல்கள் எழுத வேண்டும் என்கின்ற கட்டளையை பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். எந்தப் பணியையும் மிக நேர்த்தியாக முடிக்கக் கூடிய அவர், சில கேள்விகளையும் எழுப்பி தன்னுடைய மதிப்புரையைத் தந்தார்.

அவர் கூறியிருந்த திருத்தங்களில் முக்கியமானது குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்கின்ற நூலில் அறிஞர் ஏங்கெல்சு காதலைப் பற்றி எழுதியிருந்தது தொடர்பானது. மற்றொன்று குடும்ப வேலைப் பகிர்வு பற்றி மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோருடைய நிலைப்பாடு பற்றியது. மேலும் புரட்சி நடந்த பிறகு பல பொது சமையற்கூடங்கள் சோவியத் ரஷ்யாவில் அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கேற்றாற்போல் எனது கட்டுரைகளில் அவருடன் பேசிய பிறகு சில மாற்றங்களை செய்திருக்கிறேன். இந்த நூலின் மீது அவர் எடுத்துக் கொண்ட அக்கறைக்கும் அவர் அளித்த முக்கியத்துவத்திற்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

நான் சிறுவயதிலிருந்து அண்ணி என்று அன்புடன் அழைத்து வரும் தமிழகத்தின் மூத்த பெண்ணுரிமைப் போராளி போராசிரியர் சரசுவதி அவர்களிடம் மதிப்புரை கேட்டவுடன் உடனே வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். சமகாலத்தில் பெண்ணுரிமைத் தளத்திலும் ஈழ அரசியல் தளத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த பெண்மணி. என் பொதுவாழ்க்கைப் பயணம் பற்றி தொடக்க காலம் முதல் அறிந்தவர். களத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் முன்னுரை பெற்றது பெண்ணுரிமைக் குரல் கொடுத்து வெளிவரும் இந்த நூலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

'தமிழ் இந்து' ஞாயிறு இணைப்பான 'பெண் இன்று' இதழின் ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் அவர்கள்தான் என்னைத் தொடர்புகொண்டு அந்த இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். என்னை முதன்முதலாக ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது பெண்கள் விடுதலை குறித்து அவருக்கிருந்த முழுமையான பற்றுறுதியை என்னால் காண முடிந்தது. அதன்பின் சில முறை பொதுநிகழ்வுகளில் அவரை சந்தித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளருக்கான முறையான சுதந்திரத்தையும் அங்கீகாரத்தையும் அளித்து என்னுடைய கட்டுரைகளை அவர் வெளியிட்டார். அதன் பொருட்டும் அவருடைய முன்னுரைக்காகவும் அன்புக்காகவும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

'தமிழ் இந்து' நாளிதழின் 'பெண் இன்று இணைப்பிதழ் ஆசிரியர் குழுவுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி. மேலும் இக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் மீது வினையாற்றி ஆசிரியருக்கு மடல்கள் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றி. முக்கியமாக 'தமிழ் லெமூரியா' இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி இறுதியாக நக்கீரன் அலுவலகத்தில் இணைந்திருந்த தோழர் தருமராசன் அவர்கள் இக்கட்டுரைகளை வரவேற்ற முக்கியமான நண்பர். எதிர்பாராத விதமாக மரணமடைந்துவிட்ட அவரை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கிறேன். 'நிகர்மொழி' பதிப்பகத்துக்கும் நூலாக்கம் நிறைவுபெற ஒத்துழைத்த தோழமை மகன் தமிழ்நாசருக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் என் நன்றியும் வணக்கமும்.


புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/pennum-anum-onnu.html

Back to blog